சினிமாவாகிறது அன்னா ஹசாரேயின் போராட்டம்

நாட்டில் பரபரப்பான சம்பவங்கள் ஏதுவும் நடந்துவிட்டால், உடனே அதை சினிமாவாக எடுத்துவிடுவார்கள். அந்தவகையில் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய அன்ன ஹசாரேயின் போராட்டத்தை சினிமாவாக எடுக்க இருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்கவும், வலுவான லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தியும் தொடர்ந்து 12நாளாக உண்ணாவிரதம் இருந்து, கடைசியில் அதில் வெற்றி பெற்று இந்திய வரலாற்றில் இடம்பெற்று விட்டார் காந்தியவாதி அன்னா ஹசாரே.

இந்நிலையில் ஹசாரேயின் போராட்ட‌த்தை பிரபல டைரக்டர்கள் சுமித்ரா பாவே மற்றும் சுனில் சுதாங்கர் ஆகியோர் மராத்தி சினிமாவாக தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு "அந்தோலன் ஆக் தாஹா திவாஸ்" (பத்து நாள் போராட்டம்) என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் கூறும் போது, "நாடு கண்ட, அரசியல் சார்பற்ற முதலாவது போராட்டம் இது தான்.

லஞ்ச ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களைச் சந்திக்கிற ஒரு மத்தியதர குடும்பத்தினை சுற்றி இந்தப் படம் செல்கிறது.

ஆத்ம பரிசோதனையையும், தனி மனித வாழ்வின் ஒழுக்கத்தினையும் இந்தப் படம் மையப்படுத்திக் காட்டும் என்று கூறினர்.

பாரதிராஜா படத்தில் இரட்டை வேடத்தில் பார்த்திபன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா இயக்க இருக்கும், "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தில், அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் பார்த்திபன்.

"பொம்மலாட்டம்" படத்திற்கு பிறகு வெள்ளித்திரையை விட்டு, சின்னத்திரையில் "தெக்கத்திச் சீமையிலே" சீரியலை இயக்கி வந்த பாரதிராஜா, மீண்டும் பட இயக்க இருக்கிறார்.

மதுரை மண்ணை பின்ணனி கதைக்களமாக கொண்டு, கிராமத்து மக்களின் வாழ்க்கையை பதிவு செய்ய உள்ளார். இந்தபடத்திற்கு "அன்னக்கொடியும் கொடிவீரனும்" என்ற பெயரும் வைத்துள்ளார்.

தற்போது இந்தபடத்திற்கான நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீசியன்கள் தேர்வு செய்யும் வேலை நடந்து வருகிறது.

இதில் புதுமுகங்களுடன் சேர்ந்து நடிகர் பார்த்திபனும் அப்பா, மகன் என இரட்டை வேடம் ஏற்க இருக்கிறார்.

இதற்காக தனது உடல எடையை குறைத்தும், ஹேர் ஸ்டைல், மீசை உள்ளிட்டவைகளையும் மாற்றி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் மதுரையில் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.

வேலாயுதம் பற்றி விஜய் பேட்டி

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்".

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை(28.08.11) மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் "வேலாயுதம்" படம் பற்றியும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்களுக்கு விஜய் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ரொம்ப நாளாக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிற படம் "வேலாயுதம்".

இப்படத்தை ரசிகர்களை கொண்டுதான் ஆரம்பித்தோம். அதுபோல் ஆடியோ ரிலீசையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த விரும்பினோம். அதற்காக நானும் தயாரிப்பாளர், டைரக்டர் ராஜா எல்லாரும் யோசித்தோம். ரசிகர்கள் மத்தியில் என்கிறபோது சரியான இடம் தேவை.

எனக்கு எல்லாமே ரசிகர்களாகிய நீங்கள் தான். என் எல்லா காரியங்களிலும் நீங்கள் தான் கூட இருக்க வேண்டும். உங்கள் முன்னாடி தான் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் நடக்க வேண்டும். அப்படி யோசித்த போதுதான் வேலாயுதம் ஆடியோவை மதுரையில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். நாளை 28ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த படத்தைபற்றி கேட்டால், எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் வேலாயுதம்.

ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமும் இந்தபடத்தில் இருக்கு.படத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும். வேலாயுதம் படத்தின் கதை பற்றி ராஜா சொல்ல வந்தபோது, படத்தின் கதைகேட்டு மிகவும் பிடித்து போனது.

மேலும் படத்தில் அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால், உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். படமும் ரொம்ப அழகாக வந்திருக்கிறது.

படத்தில் முக்கியமான விஷயம் ரயில் சண்டைக்காட்சி. இப்படிபட்ட சண்டைக்காட்சியில் நடிக்க ரொம்ப நாளா ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும். இந்த ரயில் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து சண்டைக்காட்சியை படமாக்கினோம்.

அதுஒரு புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்தது படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பற்றி சொல்ல வேண்டும். விஜய் ஆண்டனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே தெரியும். அதேபோல் வேலாயுதமும், வேட்டைக்காரனை காட்டிலும் பலமடங்கு வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா...?

படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும், எல்லாவற்றிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை ஏதாவது இருக்கும். அதுதான் நீண்டகாலம் நிலைக்கும் என்கிற எண்ணம் அவருக்கு உண்டு.

ரசிகர்களிடம் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்.

மொத்தத்தில் "வேலாயுதம்" படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.

இவ்வாறு விஜய் கூறினார்.

தனுஷ் நடிக்கும் மாரீசன்

"இம்சை அரசன் 23ம் ‌புலிகேசி", "அறைஎண் 305ல் கடவுள்", "இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன்.

அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்மரமாக இறங்கியிருந்தார். இதில் தனுஷை வைத்து படம் பண்ணபோவதாக முன்பு கிசுகிசுக்கள் வந்தது.

இப்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. அந்தபடத்திற்கு "மாரீசன்" என்று பெயரிட்டுள்ளனர். யு.டி.வி., நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கும் இப்படம் ரூ.30 கோடி செலவில் உருவாக இருக்கிறது.

கி.மு., 12ம் ‌நூற்றாண்டை தழுவிய கதை என்பதால் படத்திற்கு இவ்வளவு பட்ஜெட்டாம். சிம்பு தேவனின் கதையைக் கேட்ட யுடிவியின் இப்போதைய உரிமையாளர்களான வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர், இந்தக் கதை ஆங்கிலப் படங்களின் பாணியில் கச்சிதமாக உள்ளது.

தாராளமாக படமெடுங்கள் என பாராட்டினார்களாம். டிசம்பரில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் மாரீசன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுவரை தனுஷ் நடித்த படங்களிலே, மாரீசன் படம் தான் அதிக பொருட்ச்செலவில், அதாவது ரூ.30 கோடியில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக, "மதராசபட்டினம்" புகழ் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய், அடுத்து கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்தபடத்திற்கு "யோஹன் அத்தியாயம் ஒன்று" என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங் 2012ம் ஆண்டு துவங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு, மதராசபட்டினம் படத்தில் நடித்த எமி ஜாக்சனை நடிக்க வைக்க இயக்குநர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்.

தற்போது எமி ஜாக்சன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார்.

இந்தபடத்தை முடித்தை பின்னர் விஜய் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

மங்காத்தாவை வாங்கிய சிறுத்தை தயாரிப்பாளர்

அஜீத் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும், அவரது 50வது படமான மங்காத்‌தாவை, "சிறுத்தை" படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கியுள்ளார்.

க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, ஆன்டிரியா, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் "மங்காத்தா".

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில், வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. "மங்காத்தா" படத்தை துரை தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் இருந்த வரைக்கும், வந்த படங்களை எல்லாம் இவர்களே வாங்கி, ஒவ்வொரு படத்தையும் ஆஹா... ஓஹோ... என பிரம்மாண்டமாக வெளியிட்டனர்.

ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவும் இல்லை, வெளியீடவும் இல்லை.

மேலும் இதற்கு முன்னர், க்ளவுடு நைன் பேனரில் வெளிவந்த, "வ குவாட்டர் கட்டிங்" உள்ளிட்ட படங்களால், பெரும் நஷ்டம் அடைந்ததாக தியேட்டர் அதிபர்கள் புகார் கூறியுள்ளனர். இப்படி இருக்கையில் மங்காத்தாவை, க்ளவுடு நைன் பேனரில் வெளியீட்டால் பாதுகாப்பு இருக்குமா என விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தயங்கி வருகின்றனர்.

அதேசமயம், ரசிகர்களின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பும் படத்தின் ரிலீஸை தள்ளிப் போட முடியாத அளவுக்கு இருந்து வருகிறது.

இந்த பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு மங்காத்தா படத்தை வாங்கி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பேனரில் வெளியிடுகிறார் கே.இ.ஞானவேல் ராஜா. இவர் இதற்குமுன் பருத்திவீரன், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.

ஞானவேல் ராஜா பட பேனர் மூலம், மங்காத்தா படம் வெளியாக இருப்பதால், மங்காத்தா ரிலீஸ் பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்துள்ளது. இதனிடையே வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி, ரிலீசாவதாக இருந்த மங்காத்தா, ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நண்பன் ( 3 Idiots ) சூட்டிங் ஓவர்

"நண்பன்" பட சூட்டிங் முடிந்ததை அடுத்து, அப்படத்தில் பணியாற்றிவர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்திருக்கிறார் நாயகன் விஜய்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "3 இடியட்ஸ்" படத்தின் தமிழ் ரீ-மேக்கான, நண்பன் படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். நாயகியாக இலியானா நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நண்பன் பட சூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு ஹீரோ விஜய், தனது சொந்த செலவில் விருந்தளித்து மகிழ்ந்திருக்கிறார்.

சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக நிகழ்ச்சி நிறைவடைந்தது.

சிம்பு என்றைக்குமே என் நண்பரல்ல - ஜீவா

கோ படத்தில் வாய்ப்பை இழந்த நடிகர் சிம்புவுக்கும், நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கும் நடிகர் ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் இருந்து வருகிறது. நடிகர் சிம்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் கோ படத்தையும், நடிகர் ஜீவாவையும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜீவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிம்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை.

யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னால் மறைந்திருந்து குத்துவது ஆரோக்கியமான போட்டி அல்ல, என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கோ படத்தை அடுத்து நான் நடித்து திரைக்கு வந்துள்ள ரவுத்திரம் படமும் 70 சதவீதம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்து நான் நடித்து திரைக்கு வர இருக்கும் படம், `வந்தான் வென்றான். இந்த படம் அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு வரும்.

அதையடுத்து கவுதம் மேனன் டைரக்ஷனில் ஒரு படத்திலும், மிஷ்கின் டைரக்ஷனில், `முகமூடி என்ற படத்திலும் நடிக்கிறேன்.

இந்த படங்களை அடுத்து, டைரக்டர் ஜனநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன், என்றார்.

சிம்புதான் என் குரு - சந்தானம்

எனக்கு முதல்பட வாய்ப்பு கொடுத்த சிம்புதான் எனது குரு என்று காமெடி நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

காமெடியில் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு என பல முன்னோர்களையும் கலந்துகட்டி கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் அளித்துள்ள பேட்டியில், நகைச்சுவை நடிகர்கள் என்.எஸ். கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், வடிவேலு உள்ளிட்டோர் மிகப்பெரிய லைப்ரரி என்றும், அவர்களைப் பார்த்துதான் தினம் தினம் படித்து புதிது புதிதாக காமெடி செய்வதாகவும் கூறியுள்ளார்.

சினிமா உலகில் உங்களது குரு யார் என்று கேட்டால், சட்டென்று சிம்புதான் என் குரு என்று பதில் அளிக்கிறார் சந்தானம்.

ஏன் என்று கேட்டால், சிம்புதான் எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தார். அவர் கொடுத்த வாய்ப்புதான் என்னுடைய வளர்ச்சிக்கு அஸ்திவாரம் ஆகி விட்டது.

எனவே அவர்தான் என்னுடைய குரு, என்று பெருந்தன்மையுடன் கூறுகிறார்.

சந்தானத்திடம் இருக்கும் இன்னொரு பெருந்தன்மை, தனக்கு பட்டம் எதுவும் வேண்டாம் என்பதுதான்.

உலகத்தையே சிரிக்க வைத்த சார்லின் சாப்ளின், ஹெர்ட்லி ஆகியோருக்கெல்லாம் பெயருக்கு முன்னால் எந்த பட்டங்களும் இல்லை; நானும் அவர்கள் ஜாதி என்று கூறுகிறார் சந்தானம். பலே... பலே...!

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி

நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்துக்கு மாறியுள்ள நடிகை நயன்தாராவுக்கு, இதுவரை உள்ளே நுழைய அனுமதி கிடைக்காத இந்து கோயில்களில் இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, தனக்கு ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வரும் நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தனக்காக தன் காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, சமீபத்தில் கிறிஸ்த்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. வேத விற்பன்னர்கள் முன்னிலையில் சுத்த பரிகாரமும் செய்துள்ளார்.

நயன்தாரா இதற்கு முன் பல இந்துக் கோயில்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் குருவாயூர், காளஹஸ்தி, பத்ராசலம் போன்ற கோயில்களுக்கு மட்டும் அவர் செல்லவில்லை. காரணம் பிற மதத்தினருக்கு இந்த கோயில்களில் அனுமதியில்லை.

ஆனால் இப்போது நயன்தாரா இந்துவாக மாறிவிட்டதால், திருமணத்துக்கு முன் கோயில்களுக்குச் சென்று வருகிறார். நேற்று பத்ராச்சலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோயிலில் நடந்த, ஸ்ரீராமராஜ்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நயன்தாரா.

இந்த விழாவில் இளையராஜா, பாலகிருஷ்ணா போன்றவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாராவுக்கு சிறப்பு மரியாதையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

அடுத்து குருவாயூர் கோயிலுக்குச் செல்கிறார் நயன்தாரா. கடந்த இரு வாரங்களுக்கு முன் நயன்தாராவின் காதலர் பிரபுதேவா, இந்தக் கோயிலுக்கு தனியாக சென்று வழிபட்டார்.

இந்த முறை நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்று சிறப்பு பூஜைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

சூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ

டி.வி., நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி விஜய் டி.வி.,யில் ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரஜின்.

இப்போது சுற்றுலா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்பபடத்தின் சூட்டிங் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாகவே நடந்து வருகிறது. சூட்டிங்கிற்கு நடிகர் பிரஜன் தனது மனைவி சான்ட்ரா ஜோஸ் வந்திருந்தார்.

இந்நிலையில் வழக்கமாக இன்று சூட்டிங் தொடங்க இருந்தபோது நடிகர் பிரஜனும், அவரது மனைவியும் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து படத்தின் தயாரிப்பு மேலாளர் பாரதி, குன்னூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டில் பிரஜனும், அவரது மனைவியும் காணாமல் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜயகாந்த் மகன் படத்தில் காமெடியன் யார்?

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கப்போகும் புதிய படத்தில் காமெடி ட்ராக்கில் யாரை போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.

டைரக்டர் பூபதி பாண்டியன் சொன்ன கதையில் காமெடி அதிகமாக இருப்பதால், அவரது கதையை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் விரைவில் தந்தை வழியில் கதாநாயகன் ஆகவிருக்கிறார்.

இதற்காக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கதை கேட்டு வருகின்றனர்.

அவரிடம் இயக்குநர் பூபதி பாண்டியன் சமீபத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடிக் கதையை சொன்னாராம். கதை பிடித்திருந்தபோதிலும் காமெடி டிராக்கில் யாரைப் போடுவது என்பதில் பெரும் குழப்பமாகி விட்டதாம்.

மேலும் இப்போதே அதிரடி கதையில் சண்முகப் பாண்டியனை இறக்க கேப்டன் தரப்பு சற்றே தயங்குகிறதாம். அறிமுகமாகும் படம் அருமையாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர்.

இதனால் பூபதி பாண்டியன் கதையை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

28ம் தேதி மதுரையில் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேலாயுதம் படத்தின் ஆடியோ ரிலீஸ், மதுரையில் வருகிற 28ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் வேலாயுதம்.

விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீசை, முதல்வர் ஜெயலலிதாவை வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.,

ஆனால் முதல்வர் மறுத்துவிட்டார். இதனால் வேலாயுதம் படத்தின் ஆடியோ ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில் வேலாயுதம் படத்தின் ஆடியோவை, மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலாயுதம் பட பூஜையை, சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடத்தினோம்.

இப்போது படத்தின் ஆடியோவை, மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை மதுரையில் இந்த விழா நடக்கிறது. ரசிகர்கள் இந்த விழாவை சிறப்பித்துத் தரவேண்டும், என்று கூறியுள்ளார்.

வேலாயுதம் படத்தின் ஆடியோவை சோனி மியூசிக் வெளியிடுகிறது.

இறுதிகட்ட படப்பிடிப்பில் சிம்புவின் ஒஸ்தி

தரணி இயக்கத்தில், சிம்பு நடித்து வரும் "ஒஸ்தி" படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

"தில்", "தூள்", "கில்லி", "குருவி" ‌போன்ற ஹிட் படங்களை இயக்கிய தரணி, தற்போது முதன்முறையாக சிம்புவை வைத்து "ஒஸ்தி" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் இந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "தபாங்" படத்தின் ரீ-மேக் ஆகும். படத்தில் சிம்பு கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக ரிச்சா நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் சூட்டிங், இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஓசூர், பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட படங்களில் நடந்துவரும் "ஒஸ்தி" படத்தின் சூட்டிங்கை 90 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனால் மிக வேகமாக படத்தின் சூட்டிங்கை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு ஒஸ்தி படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.

சத்தமில்லாமல் நடந்த மங்காத்தா இசை வெளியீடு

அஜீத்தின் "மங்காத்தா" பட பாடல் எப்ப வரும், எப்ப வரும் என்று ஏங்கி போய் இருந்த ரசிகர்களுக்கு, ஒரு வழியாக இன்று ரிலீசானது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிப்பில், ‌வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத் நடித்திருக்கும் 50வது படம் "மங்காத்தா".

அஜீத்துடன் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜீத் இதுவரை நடித்திராத, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த சில மாதங்களாகவே தள்ளிக்கொண்டே போனது.

ஆரம்பத்தில் அஜீத் பிறந்தநாளில் ஆடியோவை ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால் சில பல பிரச்சனைகளால் ஆடியோவை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இருப்பினும் அஜீத் பிறந்த நாளன்று ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக "விளையாடு மங்காத்தா..." என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்தனர்.

இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்‌பை பெற்றிருக்கிறது. ஆனாலும் படத்தின் மொத்த பாடலும் எப்போதும் ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று (10.06.11) காலை தனியார் ரேடியோ நிலையம் ஒன்றில், மங்காத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா மிக எளிமையாக நடத்தப்பட்டு உள்ளது.

"பில்லா-2" பட சூட்டிங்கிற்காக அஜீத் ஐதராபாத்தில் இருப்பதால் அவர் இல்லாமல், டைரக்டர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டு மங்காத்தா படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

நன்றி மறவாத கமல்

கமலிடம் பி.ஆர்.ஓ.,ஆக பணிபுரிந்த கிளாமர் ‌கிருஷ்ணமூர்த்தி, மரணம் அடைந்த செய்தியை கேள்விப்பட்டு, அவரது இறுதிசடங்கில் கலந்து கொண்டார் நடிகர் கமல்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், எனது குருநாதர் பாலசந்தருக்கு பி.ஆர்.ஓ., ஆக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எனக்கும் பி.ஆர்.ஓ., வாக இருந்ததை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது.

உண்மையில் நல்ல மனிதர். அவருடைய இறந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தார் உட்பட யாரையும் படுத்தாமல் நல்ல சாவு ஏற்பட்டு இருக்கிறது.

என்னதான் நல்ல சாவு என்றாலும், அவருடைய இறப்பு இழப்பு தான். நேற்று இரவுவரை கூட என்னைபற்றிய செய்திகள், பத்திரிக்கைகளில் வந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

நேற்று வரைகூட, அவர் என்னுடைய பி.ஆர்.ஓ., ஆக இருந்து இருக்கிறார். தன்னிலை உணர்ந்த மனிதர். அவருடைய இழப்பை ஈடுசெய்ய முடியாது.

அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‌ கொள்கிறேன் என்றார்.

கமல் தவிர, டைரக்டர்கள் ராமநாரயணன், சிலந்தி ஆதிராஜ், கலைப்புலி சேகரன், ருக்மங்காதன் உள்ளிட்ட பல்வேறு திரைநட்சத்திரங்களும் கிளாமர் கிருஷ்ணமூர்த்திக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சினேகா தொடங்கி வைத்த புது திட்டம்

ஒரு நாள் முழுக்க அதாவது 24 மணிநேரம், காலைக் கூட மாற்றாமல் நின்ற இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். இப்படி நிற்பவர்களுக்கு பரிசாக ரூ 1 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் டிவி இலவசம்...!

இப்படியொரு பரிசுத் திட்டத்தை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் நடிகை சினேகா.

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக எலக்ட்ரானிக் பொருள் விற்பனை நிலையங்களை நாடு முழுக்க திறந்து வருகிறது. சென்னையிலும் இந்த கிளையைத் திறந்துள்ளது.

அனைத்து முன்னணி நிறுவனங்களின் டிவி, ப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட அத்தனை எலெக்ட்ரானிக் தயாரிப்புகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த கடையை அமைத்துள்ளது ரிலையன்ஸ்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது இந்த நிறுவனம். சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமை முன்னணி நடிகை சினேகா தொடங்கி வைத்தார்.

இந்தக் கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த திட்டப்படி, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவன அலுவலக வாயிலில் 1 நாள் முழுக்க 24 மணி நேரமும் நின்றுகொண்டே இருப்பவருக்கு ரூ 1 லட்சம் மதிப்புள்ள நவீன டிஜிட்டல் டிவி பரிசாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தை நடிகை சினேகா முறைப்படி அறிவித்தார்.

இப்போதே பலரும், "1 நாள்தானே, நின்றுவிட்டுப் போகலாம்" என்று ரிலையன்ஸ் முன்னாள் திரள ஆரம்பித்துள்ளார்களாம்!

ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து

ஆட்சி மாற்றம் பற்றி நடிகர் அஜீத் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருக்கும் மங்காத்தா படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது.

இதையொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார்.

என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது, ரெகுலரான விஷயம்தானே?

நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது.

அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார்.

ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை.

நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க.

உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

மாப்பிள்ளை விவகாரம் : அம்மா - மகள் மோதல்

அம்மா -மகள் என்று இல்லாமல் தோழிகளை போல் ஒன்றாக சுற்றி வந்தவர்கள் த்ரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும். பார்டியாகட்டும், பொது நிகழ்ச்சிகள் ஆகட்டும் இருவரும் ஒன்றாகத்தான் தெரிவார்கள்.

இப்படி இணக்கமாக இருந்த இருவருக்கும், இப்போதும் கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தமோதலுக்கு காரணம் த்ரிஷா பற்றிய திருமணம் செய்திதானாம்.

இருதினங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை த்ரிஷா திருமணம் செய்ய இருப்பதாகவும், செப்டம்பரில் இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் த்ரிஷாவின் தாயார் உமா ‌கூறியிருந்தார்.

ஆனால் இந்த செய்தி வெளியான அன்றிரவே தனது டிவிட்டர் வலைதளத்தில் இதனை மறுத்துள்ளார் த்ரிஷா. இதற்கு காரணம் மாப்பிள்ளை யார் என்பதில், த்ரிஷாவுக்கும், உமாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் தான்.

காதல் திருமணம்தான் செய்வேன் என்று அடிக்கடி கூறிவரும் த்ரிஷா, இப்போது தனது மனதுக்கு பிடித்தமான ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளாராம்.

ஆனால் உமாவோ, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். அதனால் தான் த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என்றும் உமா பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்திருக்கிறார்.

இதில் கடுப்பான த்ரிஷா, மீண்டும் தன் திருமண செய்திக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

த்ரிஷா திருமணத்தால் அம்மா-மகளுக்கு இடையே புகைச்சல் ஏற்பட்டு இருக்கிறது.

வேலாயுதத்தை பார்த்து கப் சிப் ஆன விஜய்

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் வேலாயுதம் படத்தை போட்டுப் பார்த்த நடிகர் விஜய், தனது கருத்து எதுவும் சொல்லாமல் கப் சிப்பாகி விட்டாராம்.

டைரக்டர் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தை பார்த்துள்ளார் விஜய். படம் முடிந்ததும் அமைதியாகக் கிளம்பி சென்றுவிட்டாராம் விஜய். பக்கத்திலிருந்த டைரக்டர் ராஜாவிடம் கூட எதுவும் சொல்லவில்லையாம்.

விஜய் கருத்து எதுவும் சொல்லாததால், டைரக்டர் ராஜா ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டாராம். என்னடா இது... படம் பிடிக்கவில்லையா? என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விஜய் தன்னிடம் பேசியதாக டைரக்டர் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன், கூறியிருக்கிறார்.

அப்போது, படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டதால் விஜய் எதுவும் பேசவில்லையாம். படம் மிகப் பெரிய வெற்றிபெறும் என விஜய் கூறியதோடு, உன்னை வெகுவாகப் புகழ்ந்தார்," என்று கூறியுள்ளார் எடிட்டர் மோகன்.

இதுபற்றி டைரக்டர் ராஜா கூறுகையில், விஜய் மிக எளிமையான இனிய மனிதர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. இந்த படத்தில் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்தப் படம் திகட்டாத விருந்தாக அமையும், என்றார்.

ஓடி ஒளிய நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா : வடிவேலு

நிலமோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய்தியை அடுத்து, வடிவேலு தான் எங்கும் ஓடவில்லை என்றும், தலைமறைவாக இருப்பதற்கு நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா என்று கூறியுள்ளார்.

தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூர் பகுதியில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20லட்சத்திற்கு வாங்கியதாகவும், அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் வடிவேலு வாங்கியுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் என்பவர் புகார் கொடுத்திருந்தார்.

இந்தவழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு தலைறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் வடிவேலோ நான் எங்கும் ஓடவில்லை, போலீசார் எப்போது கூப்பிட்டாலும் விசாரணைக்கு வருவேன் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நிலமோசடி செய்ததாக என் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் நான் தலைமறைவாகிவிட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல்லணும்னா, இதில் ஏமாந்தவனே நான் தான்.

வாங்கிய இடத்தை பறிகொடுத்து போய் நிற்கிறேன். 2002-ல் அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன்.

அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன்.

அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால் விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.

உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். ஆனால் மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க.

நான், என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். எனக்கு படிப்பறிவு குறைவு, பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன்.

என் குல தெய்வமான அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு, மோசடி சொத்தை வாங்கி கொடுத்து என்னை ஏமாற்றி விட்டனர். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன்.

நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, அப்படியே போனாலும் ஒண்ணு சென்னைக்கு போவேன், இல்லேன்னா மதுரைக்கு போவேன்.

போலீஸ் தேடலுக்கு பயந்து போய் ஒளிய, நான் என்ன எனகவுன்டர் குற்றவாளியா...? நான் எங்கும் ஓட மாட்டேன். போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன் என்றார்.

மீண்டும் வருகிறார் கவுண்டமணி

காமெடி கிங் என்று ரசிகர்களால் அழைக்கபெறும் கவுண்டமணி, நீண்ட ஓய்வுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். 1980-90களில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் கவுண்டமணி.

டைரக்டர் பாரதிராஜாவின், "16 வயதினிலே" படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். தனக்கென்று ஒரு ஸ்டைல், லொள்ளான பேச்சு உள்ளிட்டவைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அதிலும் நடிகர் செந்திலுடன் இவர் சேர்ந்து பண்ணிய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. கவுண்டமணி-செந்தில் காமெடிக்காவே "கரகாட்டக்காரன்" உள்ளிட்ட பல படங்கள் 100நாட்களையும் தாண்டி தியேட்டர்களில் ஓடி, வசூலையும் குவித்தது.

காமெடியில் கொடிகட்டி பறந்த கவுண்டமணி, கடந்த சில ஆண்டுகளாகவே நடிக்காமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம் அவரது உடல்நிலை ஒத்துழைக்காதது தான். இந்நிலையில் கவுண்டமணி மீண்டும் நடிக்க இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உடல்நிலை சீரான நிலைக்கு வந்துவிட்டதாகவும், மீண்டும் நடிக்கக்கூடிய அளவுக்கு அவருக்கு தெம்பு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில இளம் இயக்குநர்கள் கூட சமீபத்தில் அவரை சந்தித்தாகவும், சில படங்களில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

அப்படின்னா, கூடியவிரைவில் ரசிகர்கள் அனைவரும் கவுண்டமணியை புதுதெம்புடன், அதே லொள்ளுடன் திரையில் காணலாம் என்று சொல்லுங்கள்...!

டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்

தி பிலிம் கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் சார்பாக டி.டி.பிரதாபன் எஸ்.நந்தகோபால் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் "மல்லுக்கட்டு".

நடிகர் தனுஷின் தம்பி வருண் (தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் தம்பி மகன்) என்ற புதுமுகம் நாயகராக நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் சமீபத்தில் நடந்தது.

விழாவில் கவிஞர் வாலி, டி.ராஜேந்தர், கலைப்புலி எஸ்.தானு, கலைப்புலி ஜி.சேகரன், நடிகர்கள் கார்த்தி, விமல், இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரபுசாலமன், கஸ்தூரி ராஜா, சற்குணம் உள்ளிட்ட இன்னும் பல திரையுலக வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்டு பேசினார்.

அதில் டி.ஆரின் பேச்சு ஹைலைட்டாக அமைந்திருந்தது.

அதன் சாரம்சம் வருமாறு, ஒருவன் ஸ்டார் ஆவதும் போர் ஆவதும் அவனவன் பிறந்த ஸ்டாரை அதாவது நட்சத்திரங்களை பொருத்துதான் அமையகிறது என்று அஸ்வினி, பரணி, கார்த்திகை .... என்று 27 நட்சத்திரங்களை வரிசையாக ஒப்புவித்த டி.ஆர்., தன் பாணியில் அடுக்கு மொழியிலும் பேசி அனைவரையும் கவர்ந்ததுடன், 25 ஆண்டுகளாக தான் ஜோசியத்தை ஆராய்ச்சியில் இருந்து வருவதாகவும் கூறி அசத்தினார் டி.ஆர்.,

பாருடா...?
Related Posts Plugin for WordPress, Blogger...