பிறந்த நாளில் அஜீத் புது அறிவிப்பு

"பில்லா-2 வைத் தொடர்ந்து, விஷ்ணுவர்த்தன் படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜீத். மொத்த படத்தையும் முடித்து விட்டு, "சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இறங்கி விட்ட போதும், இன்னும் படத்திற்கான டைட்டில் வெளியிடப்படவில்லை. 

இதற்கிடையே, அப்படத்துக்கு, "வலை என்று பெயர் வைத்திருப்பதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, அஜீத்தின் மாறுபட்ட புகைப்படங்களை வைத்து, அவரது ரசிகர்கள் டிசைன் செய்து, இணைய தளங்களில் உலவவிட்டு வருகின்றனர். 

அதைப்பார்த்த விஷ்ணுவர்த்தன், அஜீத்  படத்துக்கு,"வலை என்று தலைப்பு வைக்கவில்லை என்று மறுத்துள்ளார். "சரி, என்ன தான் தலைப்பு வைத்துள்ளீர்கள்? என்று கேட்டால், "இரண்டு பெயர்களை யோசித்து வைத்திருக்கிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்து, அஜீத்தின் பிறந்த நாளான இன்று, அவர் மூலமாகவே வெளியிடப்படும் என்கிறார்.

காதல் தோல்வி பாடல்களுக்கு நயன்தாராவை நோக்கி படையெடுக்கும் இயக்குனர்கள்


எதிர்நீச்சல் படத்தில் தனுசுடன் ஒரு காதல் தோல்வி குத்தாட்டப்பாடலுக்கு யார் ஆடினால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்தபோது, நயன்தாரா சூப்பராக இருப்பார் என்று கருத்து சொன்னவர்கள், ஏற்கனவே அவர் ரஜினி, விஜயுடனெல்லாம் ஒரு பாட்டுக்கு அசத்தலாக ஆடியிருக்கிறார். 

இதற்கெல்லாம் மேலாக அவரும் நிஜவாழ்க்கையில் காதலில் தோல்வியடைந்தவர். அதனால் இந்த சுட்சிவேசனுக்கு அவர் ஆடினால் கனகச்சிதமாக இருக்கும் என்றார்களாம்.

அதன்பிறகுதான், தனுசின் ஒப்புதலோடு நயன்தாராவை புக் பண்ணியிருக்கிறார்கள். அவரோ, சத்தியமா நீ எனக்கு தேவையில்லை, பத்து நாளா சரக்கடிச்சு போதையே இல்லை என்ற அந்த வரிகளைக்கேட்டதும் விழுந்து விட்டாராம். 

குறிப்பாக சத்தியமா நீ எனக்கு தேவையில்லை என்ற வரிகள் பிரபுதேவாவைப்பார்த்து தான் சொல்வது போன்று நயன்தாராவுக்கு இருந்ததாம். அதனால், மறுபரிசீலனையின்றி ஓ.கே சொன்னவர், சம்பளம்கூட வேண்டாமென்று பெரிய மனதை காட்டியிருக்கிறார்.

ஆனால் இப்போதோ கோடம்பாக்கம் நயன்தாராவின் இமேஜை வேறுவிதமாக மாற்றி விட்டது. அதாவது, காதல் தோல்வி பாடல் என்றால் நயன்தாராவைத் தேடிச்செல்லுங்கள் என்கிறார்களாம். 

சிலர் ஒரு காதல் தோல்வி பாடல் இருக்கு ஆடுறீங்களா? என்கிறார்களாம். இதனால் கடுப்பில் இருக்கிறார் நயன். நாம ஒரு மாதிரியா நெனச்சா, ரியாக்ஷன் வேற மாதிரியா இருக்கே என்று தன்னை முற்றுகையிட்ட காதல் தோல்வி பாடல்களை விரட்டியடித்துக்கொண்டிருக்கிறாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான்-யுவன்ஷங்கர்ராஜா புதிய கூட்டணி


வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா இயக்கும் படம் மரியான். இந்த படத்தில் மீனவன் வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

நாயகியாக பூ பார்வதி நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இன்னும் சில பாடல்கள் மட்டுமே படமாக இருக்கும் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். 

கிட்டத்தட்ட அவரது ஒய்திஸ் கொலவெறி பாடல் பாணியில் அமைந்துள்ள அந்த கலக்கலான பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா பாடியிருப்பதுதான் சிறப்பு.

சமீபத்தில் தில்லு முல்லு என்ற படத்தில் எம்.எஸ்.வியுடன் இணைந்து இசையமைத்ததோடு, பாடல் காட்சியிலும நடித்துள்ள யுவன், இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் முதன்முறையாக பின்னணி பாடியிருப்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. 

இப்பாடல் மிகப்பிரமாதமாக வந்திருப்பதாக சொல்லி, எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகிறார் இயக்குனர் பரத்பாலா.

நான் ராஜாவாகப் போகிறேன் - சினிமா விமர்சனம்


"பாய்ஸ்" நகுல், "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் ஸோலோ ஹீரோ ஆனார்! அதைத்தொடர்ந்து வெளிவந்த "மாசிலாமணி", "கந்தகோட்டை" உள்ளிட்ட படங்களில் சோர்ந்து விழுந்த அவரை, எழுப்பி நிற்க வைக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படம் என்றால் மிகையல்ல!

இமாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லை பகுதியில் தன் தாய் சீதாவுடன், மாமா வாசு விக்ரமின் ஆதரவில் வாழும் ஜீவா எனும் நகுல், சதா சர்வகாலமும் தூங்கி வழியும் கேரக்டர். 

ஒருநாள் சிறுவர்களுடன் விளையாட்டுத்தனமாக மிலிட்டரி கேம்பிற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பதற்காக சின்ன தண்டனை பெறும் அவரை பார்க்கும் ஜவான் ஒருவர், சென்னையில் தன்னுடன் படித்த ராஜா மாதிரியே ஜீவாவும் இருப்பதாக சொல்லி கிக்பாக்ஸிங் புலியான ராஜாவின் வீடியோவையும் ஜீவாவிற்கு போட்டு காட்டுகிறார். 

அந்த வீடியோவைப்பார்த்தது முதல் தன் மாதிரியே இருக்கும் ராஜாவை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஜீவாவிற்குள் துளிர்விடுகிறது. அம்மா, மாமா ஆகியோர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ரயிலேறுகிறார் ஜீவா அலைஸ் நகுல்!

அப்புறம் ? அப்புறமென்ன...?! வழியில் போபாலில் ராஜாவை ஒரு தலையாக காதலித்து தோற்ற அவரது தோழி ரீகா எனும் அவனி மோடியையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, ஜீவா எனும் நகுல் தான் ராஜா என்பதும் தெரிய வருகிறது. 

அவரது காதலி சாந்தினி என்ன ஆனார்? ராஜா - ஜீவாவாகக் காரணம்  யார் யார்...? அவர்‌களை ஜீவா அலைஸ் ராஜா எனும் நகுல் எவ்வாறு பழிதீர்த்தார்? காதலி சாந்தினியை கரம் பிடித்தாரா...? இல்லையா...? என்பது நான் ராஜாவாகப்போகிறேன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

‌ஒரே நகுல், ஜீவா - ராஜா என இருவேறு பரிமாணங்களில் வெகுளி பாத்திரத்திலும், வெகுண்டெழும் பாத்திரத்திலும் கிடைத்த கேப்பில் எல்லாம் நடித்து "நான் ராஜாவாகப்போகிறேன்" படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதிலும் கிக்பாக்ஸிங் நகுல் செம கிளாஸூங்கோ!

சாந்தினி, அவனி மோடி என இரண்டு நாயகியர். இருவரில் சாந்தினி ஹோம்லி, பேமிலி என்றால், அவனி மோடி கிளாமர் ப்ளேவர்... வாவ்., நடிப்பிலும் என்னமாய் மிரட்டுகிறார்கள் அம்மணிகள். சாந்தினி, அவனி மோடி மாதிரியே முஸ்லிம் பெண் தோழியாக வரும் ஜானகியும் நடிப்பில் நம்மை வருகிறார்.

நகுலின் முஸ்லிம் நண்பராக வரும் நிஷாந்த், அடியாள் கூட்ட தலைவராக வரும் "தூங்காநகரம்" இயக்குநர் கெளரவ், சீதா, ஆர்த்தி, கஸ்தூரி, வனிதா விஜயகுமார், செந்தி, ஒருபாடலுக்கு ஆடும் ஸெரீன் கான், நகுலின் அப்பாவாக வரும் மாஜி ஹீரோ சுரேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி, கிரேன், மனோகர், "மூணாறு ரமேஷ் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 

இவர்கள் எல்லோரையும் காட்டிலும் சிறப்பு தோற்றத்தில் பி.டி.கத்திரிக்காய் உள்ளிட்ட விஞ்ஞானத்தின் விநோதங்களையும், அதன் தீமைகளையும் பேசும் மணிவண்ணனின் சிறப்பு தோற்றமும், அவரது அநியாய மரணம் மற்றும் வில்லாதி வில்லனாக வரும் ஏ.வெங்கடேஷின் கெட்ட-அப்பும் பிரமாதம், பிரமாண்டம்!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, வெற்றிமாறனின் வசனம், ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஜோ‌தி பிரகாஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், புதியவர் பிருத்விராஜ் குமாரின் எழுத்து இயக்கத்திற்கு வலு சேர்த்துள்ளன. 

வழக்கமான தமிழ் சினிமா மாதிரியே இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி எனும் பெயரில் படம் பிடித்து காட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒருசில் சின்ன சின்ன போராட்டங்கள் மூலம், இலங்கை தமிழர் விவகாரத்தையும், பி.டி.கத்திரிக்காய், வேலி கருவேல் மரங்களின் விஞ்ஞான விபரீதத்தையும் இந்தப்படம் அளவிற்கு எந்தப்படமும் அழகாக அறிவுறுத்தியதில்லை... எனும் காரணங்களுக்காகவே "நான் ராஜாவாகப்போகிறேன்" சோடை போகவில்லை! நல்விலை போகும் எனலாம்

மொத்தத்தில், "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படத்திற்கு தமிழ் ரசிக மந்திரிகள் ஆதரவு நிச்சயம்! நிதர்சனம் எனலாம்!!

ஜூனில் திரைக்கு வருகிறார் தலைவா விஜய்


துப்பாக்கி மெகா ஹிட்டைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படத்தை மதராசப்பட்டினம் விஜய் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால், ராகினி நடித்துள்ளனர். 

முன்னதாக, இப்படத்துக்கு தலைவன் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். 

ஆனால் புதுமுக நடிகர் பாஸ்கரன் நடிக்கும் படத்துக்கு அதற்கு முன்பே அந்த தலைப்பை சூட்டி விட்டதால், ஏற்கனவே துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி பிரச்னை போல் இன்னொரு பிரச்னை வேண்டாமே என்று பின்வாங்கினார் விஜய். 

அதனால், தலைவனுக்குப்பதிலாக தலைவா என்று மாற்றினர்.

மேலும், தலைவா படப்பிடிப்பை மும்பையில் முகாமிட்டு நடத்தி வந்த டைரக்டர் விஜய், அதற்கடுத்து ஆஸ்திரேயா சென்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தி வந்தார். 

தற்போது அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. 

இதற்கடுத்து இறுதிகட்ட பணிகளை தொடங்கி மே மாதம் ஆடியோ ரிலீஸ் பண்ணி, ஜூனில் படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

உதயம் NH4 - சினிமா விமர்சனம்


"பொல்லாதவன்", "ஆடுகளம்" உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "உதயம் என்.ஹெச்-4".

பெங்களூரூக்கு படிக்கப்போகும் சென்னை மாணவர் சித்தார்த், உடன் படிக்கும் பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷின் மகள் அஷ்ரிதா ஷெட்டியை காதலிக்கிறார். 

ஒரு கட்டத்தில் சென்னைக்கு அம்மணியை கல்யாணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் நண்பர்கள் உதவியுடன் கடத்துகிறார். விடுவாரா அவினாஷ்? தன் பண பலத்தையும், படை பலத்தையும் துஷ்பிரயோகம் செய்து சித்தார்த் - அஷ்ரிதா ஜோடியை துரத்துகிறார் பெங்களூரூ என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மனோஜ் மேனன் எனும் கே.கே.மேனன். 

சட்டத்திற்கு அப்பால் சில விஷயங்களில் தனக்கு பெரும் உதவி செய்த அவினாஷூக்கு இவ்விஷயத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு உதவ முன் வருகிறார். அப்புறம்? அப்புறமென்ன? 

அன்று இரவு 12 மணிக்கு மேல் 18வயது பூர்த்தியாகும் அஷ்ரிதா ஷெட்டியை, அதற்குள் சித்தகர்த் கையில் இருந்து மீட்டு விட வேண்டுமென்ற கட்டளைக்கு கட்டுப்பட்டு என்.ஹெச் 4 எனப்படும் பெங்களூரூ - சென்னை நேஷனல் ஹைவேஸில் அந்த ஜோடியை துரத்து துரத்தென்று துப்பாக்கியும் கையுமாக துரத்துகிறார். 

இறுதியில் வென்றது சித்தார்த்தா? கே.கே.மேனனின் துப்பாக்கியா...? என்பது வித்தியாசமும் விறுவிறுப்புமான க்ளைமாக்ஸில், த‌ிகில்-சஸ்பென்ஸ் சரிவிகிதத்தில் கலந்து கலக்கலாக சொல்லப்பட்டிருக்கிறது.

"பாய்ஸ் சித்தார்த் தனக்கு இதுநாள் வரை இருந்த சாக்லெட் பாய் இமேஜை தகர்த்தெறிய "உதயம் என்.ஹெச்-4" படத்தை சரியான சந்தர்ப்பமாக்கிக் கொண்டிருக்கிறார். புத்திசாலித்தனமாக பேலீஸின் மூவ்களை முன்கூட்டியே கணித்து அவர் செய்யும் மூவ்மெண்ட்டுகள் பிரமாதம். பிரமாண்டம்! ஆக்ஷ்ன் அதிரடிகளும் சூப்பர்ப்!!

ரித்திகாவாகவே வாழ்ந்திருக்கும் அறிமுக நாயகி அஷ்ரிதா ஷெட்டியின் நடை, உடை, பாவனைகள், நிச்சயித்து திருமணம் செய்தவர்களையும் காதலிக்க வைக்கும்! 

அம்மணி அத்தனை ஹோம்லி குல்கந்து! பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷ், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கே.கே.மேனன், சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அஜெய், கலை, கார்த்தி, தீபக் மற்றும் சித்தார்த்தின் உறவினர்களாக வரும் வக்கீல் பாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், ரம்யா உள்ளிட்டோரும் உதயத்தின் உருப்படியான உத்தரங்கள்! அதாங்க தூக்கி நிறுத்தும் தூண்கள்!!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் "யாரோ இவன்..., "ஓரக்கண்ணாலே... உள்ளிட்ட பாடல்களும், வேல்ராஜின் ஒளிப்பதிவும், நடிப்பும்(ஒரு சில சீன்களில் மப்டி போலீஸ் கான்ஸ்டபிளாக மனிதர் கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார் பலே... பலே!) சூப்பர்ப்!

ஹீரோவின் நண்பர், ஹீரோ சித்தார்த், ஹீரோயின் அஷ்ரிதா என ஆளாளுக்கு அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் கதை சொல்வது ஓ.கே, சூப்பர்ப்! அதற்காக அஷ்ரிதா, சித்தார்த்தை துரத்தி அடித்துவிட்டு, தன்னை தூக்கி செல்லும் என்கவுன்டர் மேனனிடம் கதை சொல்வதும், அதற்கு காதலித்து திருமணம் செய்த அவர், அப்பா-அம்மா தான் முக்கியம் என அட்வைஸ் பண்ணுவதும் ரொம்ப ஓவர்! 

இதுமாதிரி ஒருசில குறைகள், க்ளைமாக்ஸ் நெருக்கும் போது ஹைவேஸில் நடைபெறும் இழுவையான ஆக்ஷ்ன் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், வெற்றிமாறனின் எழுத்திலும், தயாரிப்பிலும், மணிமாறனின் இயக்கத்திலும் "உதயம் என்.ஹெச்.4" அவர்களது விளம்பர வாசகங்களில் இடம் பெறும் டயலாக் மாதிரியே "செம ஸ்பீடு, ஹைஸ்பீடு" எனலாம்!

ஆகமொத்தத்தில், "உதயம்", தமிழ் சினிமாவுக்கு "புதிய உதயம்!"

100 கோடியை தாண்டுகிறதாம் கோச்சடையான் பட்ஜெட்

ரஜினி நடித்துள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். சவுந்தர்யா இயக்கியுள்ள இப்படத்தில் கோச்சடையான், பாணா என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. 

அப்பா மகன் என நடித்துள்ள அவரது இளமையான கெட்டப்புக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்களாம். ஆரம்ப கால ரஜினியைப்போலவே அவர் மிகவும் துடிப்பாக இருப்பாராம். 

இதில் படைத்தளபதியாக வரும் கோச்சடையானுக்கு நன்றாக பரதம் ஆடவும் தெரியுமாம். அதனால் அவர் பரதம் ஆடுவது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளதாம். 

மேலும், தற்போது இறுதிகட்டப்பணிகள் நடந்து வரும் அப்படத்தை ஜூன் மாதத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். 

ஆங்கிலத்தில் வெளியான அவதார், டின் டின் படங்களைப்போன்று அனிமேஷன் படமாக உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் பட்ஜெட் தற்போது ஏற்கனவே திட்டமிட்ட 100 கோடியையும் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.

கோச்சடையானின் புதிய ஸ்டில் வெளியீடு


ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் படத்தின் டைரக்டரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா. 

எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். 

மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில், 3டியில் தயாராகும் முதல் இந்திய படம் இதுவாகும். 

இதில் ரஜினிக்கு அப்பா - மகன் என இரண்டு வேடம். இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். 

இவர்களுடன் ஷோபனா, ஜாக்கி ஷெராப், ருக்மணி, சரத்குமார், ஆதி, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து டப்பிங், சவுண்ட், அனிமேஷன் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஏற்கனவே கோச்சடையான் படத்தின் இரண்டு ஸ்டில்களை வெளியிட்டு இருந்த செளந்தர்யா இப்போது மூன்றாவதாக ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். 

அதில் இரண்டு ரஜினிகள் படம் இடம்பெற்றுள்ளது. கோச்சடையானில் ரஜினியை மிக மிக இளமையாக, காட்டியுள்ளனர். இணையதளங்களில் இந்த ஸ்டில்தான் வேகமாக பரவி வருகிறது.

வாலு டைட்டில் பிரச்னை வலுக்கிறது - குழப்பத்தில் சிம்பு


கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிம்பு நடித்து வரும் படம் வாலு. இந்த படத்தில் அவருடன் ஹன்சிகாவும், சந்தானமும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். 

தற்போது வேட்டை மன்னன் படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, அதற்கு முன்னதாக வாலு படத்தைதான் வெளியிட இருந்தார். 

ஆனால், திடீரென்று அதே டைட்டிலை நாங்களும் பதிவு செய்து வைத்திருக்கிறோம் என்று ஒரு படநிறுவனம் கொடி பிடித்ததால், அதிர்ந்து போன சிம்பு, வாலு படவேலைகளை அப்படியே போட்டுவிட்டு வேட்டை மன்னனில் இறங்கி விட்டார்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக வாலு படத்தில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால் அந்த வாலுவில் சிம்புதானே இருக்க வேண்டும் என்று பார்த்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. காரணம், சிம்பு படம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு நடிகரின் படம் இருந்தது. 

அதன்பிறகுதான் ஓ... இது இன்னொரு வாலு படமா? அப்படின்னா இதே டைட்டிலில் இன்னும எத்தனை படங்கள் வரப்போகிறதோ தெரியவில்லையே என்று சிம்புவைப்போலவே இப்போது ரசிகர்களும் குழம்பிப்போயிருக்கின்றனர்.

ஆக, இரண்டு படநிறுவனங்களுமே நாங்கள்தான் வாலு டைட்டிலை பதிவு செய்து வைத்துள்ளோம் என்று கோரசாக சொல்லியபடி கொடி பிடித்து வருகின்றனர். 

இதையடுத்து, இந்த பிரச்னையை தீர்க்க, தயாரிப்பாளர் சங்கத்தை நாடுவதா? இல்லை கோர்ட்டுக்கு செல்வதாக என்று இரண்டு நிறுவனங்களுமே கையை பிசைந்து கொண்டு நிற்கின்றன.

கெளரவம் - சினிமா விமர்சனம்


அழகியதீயே’மொழி’ அபியும்நானும்’ உள்ளிட்ட வெற்றி திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ராதா மோகன் - தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் தான் கௌரவம்’. 

கலை படமாகவும் இல்லாமல் கமர்ஷியல் படமாகவும் இல்லாமல் டாக்குமெண்ட்டரி படங்கள் டைப்பில் தற்போது தமிழகத்தில் இல்லாத ஜாதியத்தையும் இரட்டை டம்ளர் முறைகளைப் பற்றியும் பேசும் “கௌரவம்’ 1970-80களில் வெளிவந்திருந்தால் மேற்படி ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணிக்கு கௌரவமாக இருந்திருக்கும்.

கதைப்படி. சென்னைவாசியான இளம் ஹீரோ அல்லு சிரீஷ் ஏதோ வேலை விஷயமாக டி.வெண்ணூர் கிராமத்தை காரில் கடக்கும்போது, அவருக்கு தன்னுடன் இன்ஜினியரிங் படித்த சண்முகத்தின் ஞாபகம் வருகிறது. 

தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த சண்முகத்திற்கு டி.வெண்ணூர் தான் சொந்த ஊர் என்பதால் நண்பனைத்தேடி அந்த ஊருக்குள் போகிறார். அங்கு நண்பனின் ஒன்றுவிட்ட அண்ணன் குமரவேல், சண்முகம் ஊர் பெரியவரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டதாக கூறி அல்லு கிரீஷை சண்முகத்தின் வயசாளியும், நோயாளியுமான அப்பாவிடம் அழைத்து போகிறார். 

அவரோ அல்லு சிரீஷின் கையை பற்றிக்கொண்டு, ஊர் பெரியவரும், உயர் ஜாதிக்காரருமான பசுபதி ஐயாவின் மகளை இழுத்துக் கொண்டு சண்முகம் ஓடிப்போய்விட்ட பிறகு என்னை கூப்பிட்டு அனுப்பிய பசுபதி ஐயா, இன்று முதல் எனக்கு அவள் மகளும் அல்ல, உனக்கு அவன் மகனும் அல்ல... என்று சத்தியம் செய்துவிட்டு வேறு வேலையை பார்ப்போம் என்றார். 

அதுமுதல், பெரிய மனுஷன் அவர் சொல்படி கேட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.., என்றாலும் அவ்வப்போது பிள்ளை நினைப்பு, வாட்டி வதைக்கிறது... நீதான் தம்பி என் பிள்ளையை தேடி கண்டுபிடித்து தரணும்.... என்கிறார். 

அல்லுசிரீஷ் சென்னை திரும்பி தன் நண்பனை கூட்டிக் கொண்டு மீண்டும் டி.வெண்ணூர் போகிறார். அங்கு கம்யூனிசவாதி நாசரின் மகளும் இளம் வக்கீலுமான கதாநாயகி யாமி கௌதமின் துணையுடன் சண்முகம் ஜோடியை தேடும் படலத்தில் குதிக்கிறார். 

பசுபதி ஐயாவின் மகனாலும், ஓடிப்போன பெண்ணின் கணவராக காத்திருந்த முறை மாமன் மற்றும் உள்ளூர் போலீஸாலும் மிரட்டல்களுக்கு உள்ளாகிறார். அப்புறம்? அப்புறமென்ன?... சண்முகத்துடனும் தன்னுடனும் படித்த ஒட்டுமொத்த இன்ஜினியர்களையும் அந்த ஊருக்கு வரவழைத்து மீடியாக்களின் உதவியுடன் போராட்டம் நடத்துகிறார். 

ஒரு கட்டத்தில் பசுபதி ஐயா குடும்பத்தாரால் சண்முகம் ஜோடி கவுரவ கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. விழுவாரா ஹீரோ? வில்லன்களை பொளந்து கட்டுகிறார். பசுபதியின் மகனை கூண்டில் ஏற்றுகிறார். பசுபதி ஐயா தற்கொலை செய்து கொள்கிறார். 

நாசரின் மகளும் நாயகியுமான இளம் பெண் வக்கீலுமான யாமி கௌதமுடன் இடையிடையே டூயட் பாடி இறுதியில் ஹீரோ தன் காதலை சொல்கிறார். ஜாதி வெறியால் ஒரு காதல் மடிந்த இடத்தில் ஓர் புதிய காதல் உதயமாகிறது. 

இதுதான் “கௌரவம்’ படத்தின் மொத்த கதையும் இந்த கதையை எத்தனை மெதுவாகவும் மெருகின்றியும் எடுக்கமுடியுமோ அத்தனை வெறுப்பேற்றும்படியும் விறுவிறுப்பின்றியும் இயக்கியிருக்கிறார் ராதாமோகன்! படத்தின் பல காட்சிகள் இது ராதாமோகன் படமா? சாதா மோகன் படமா? என்றே கேட்க தூண்டும் விதத்தில் இருப்பது பலவீனம்.

கதாநாயகர் அல்லு சிரீஷ்., நாயகி யாமி கௌதம் இருவர் நடிப்பில் நாயகி யாமி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார் என்றால், நாயகர் மூன்றாம் வகுப்பில் கூட தேறமறுத்து நம்மை தேற்ற மறுக்கிறார். பசுபதி ஐயாவாக பிரகாஷ்ராஜ், அவரது மனைவி, மகன், வளர்ப்பு மகன்., ஓடிப்போன பெண்ணின் முறைமாமன் எல்லோருமே பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே! 

விஜியின் வசனங்களும், எஸ்.எஸ். தமனின் இசையும் கௌரவம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன என்றால் ப்ரீதாவின் ஒளிப்பதிவு பலவீனத்தை கூட்டியிருக்கிறது.

ராதாமோகன் - பிரகாஷ்ராஜ் கூட்டணி தமிழகத்தில் இப்பொழு இல்லாத ஜாதி கொடுமைகளை ஒழிக்கிறேன் பேர்வழி என தங்களுக்கென நிரந்தரமாக நிரம்பியிருந்த ரசிகர்கள் கூட்டத்தை ஒழித்து கட்டியிருப்பதைதான் கௌரவ கொலை என குறிப்பிட வேண்டும்!

 கௌரவம்’ - சாதாரணம்"!

கெளதம்மேனனை கைது செய்ய இடைக்காலத்தடை


தமிழில் தான் இயக்கிய விண்ணைத்தாணடி வருவாயா படத்தை இந்தியில் பிரதீக்-எமிஜாக்சனை வைத்து ஏக்திவானாதா என்ற பெயரில் ரீமேக் செய்தார் கெளதம்மேனன். 

அந்த படத்தை தயாரிக்க தன்னுடன் ஜெயராமன் என்பவரையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டார். அந்த வகையில் 13.58 கோடியில் தயாரிக்கப்பட்ட அப்படத்துக்கு ஜெயராமன் குறைந்த அளவே முதலீடு செய்திருந்தாராம். 

ஆனால், அப்படத்தில் தான் பெற்ற லாபத்தில் ஜெயராமனுக்கு சேர வேண்டிய லாபத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டாராம் கெளதம்மேனன்.

அதனால் இதுகுறித்து புகார் செய்தார் ஜெயராமன். ஆனால் இந்த பிரச்னையில் தான் கைதாகலாம் என்று நினைத்த கெளதம்மேனன் முன்கூட்டியே முன்ஜாமீன் வாங்கி விட்டாராம். 

அதையடுத்து இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 26-ந்தேதி வரை கெளதம்மேனனை கைது செய்ய இடைக்காலத் தடைவிதித்தார். 

அதோடு, போலீசாரின் விசாரணைக்கு கெளதம்மேனன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவளித்துள்ளார்.

புனே சர்ச்சில் ஆர்யா- நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது



பிரபுதேவாவை விட்டு பிரிந்த நயன்தாராவை ஆர்யாவுடன் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு புனேயில் உள்ள ஒரு சர்ச்சில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றதாம். 

இதனால் மீடியாக்களில் வெளிவந்த செயதிகள் இன்று உண்மையாகி விட்டது என்று அந்த ஏரியா மக்களெல்லாம் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.

ஆனால் அங்கு சென்றபிறகுதான் ஆர்யா-நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொண்டது ராஜாராணி படத்துக்காக என்பது தெரிந்திருக்கிறது. 

அதையடுத்து இந்த செய்தியை கூடியிருந்த மக்கள் நிஜம் என நினைத்து விடக்கூடாது என்பதற்காக, இது படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சி என்றும் மைக்கில் பட டைரக்டரான அட்லீகுமார் கூறி குழம்பிய ரசிகர்பெருங்குடி மக்களை தெளிவுபடுத்தி அனுப்பியிருக்கிறார்.

ஆனால் இந்த காட்சியை தொடர்ந்து மூன்று நாட்களாக அதே சர்ச்சில் படமாக்கினார்களாம். 

அதுவும் படப்பிடிப்பு போலவே தெரியா அளவுக்கு அமைக்கப்பட்ட செட்டில் ஆர்யா-நயன்தாரா இருவரும் நிஜ மணமக்களே தோற்றும் போகும் அளவுக்கு மிக யதார்த்தமாக நடித்தார்களாம். 

அதிலும் நயன்தாராவுடன் மணக்கோலத்தில் தான் நடித்த காட்சிகளை ஒரு ஆல்பம் போட்டே வாங்கி விட்டாராம் ஆர்யா.

ஜூன் 27-ல் சைந்தவியை கைப்பிடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்


வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். 

ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காள் மகனான இவர், சிக்குபுக்கு ரயிலே பாடலின் ஆரம்ப வரிகளை பாடி சினிமாவுக்கு அறிமுகமானர். 

அதையடுத்து ரஹ்மானின் சில பாடல்களில் குழந்தை குரலில் அப்போது பாடிய பிரகாஷ்குமார், அதையடுத்து, சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின்னர் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார். 

தற்போது 25 படங்கள் வரை இசையமைத்துள்ள அவர், பாரதிராஜாவின் அன்னக்கொடி, விஜய்யின் தலைவா உள்பட பல மெகா படங்களுக்கு தற்போது பிசியாக இசையமைத்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமாரும், பாடகி சைந்தவியும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்தபோதே நண்பர்களாம். 

அப்படி தொடங்கிய பழக்கம், பின்னர் சினிமாத்துறைக்குள் வந்தபோது காதலாக மாறியிருக்கிறது. 

காதலுக்கு இருவரது பெற்றோரும் பரிபூரண சம்மதம் சொல்லி விட்டதால், திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. 

இந்நிலையில், தற்போது ஜூன் 27-ந்தேதி சென்னையில் அவர்களது திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92 . மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மெல்லிசை மன்னர்கள் என பெயர் பெற்ற விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 

ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, சங்கமம் ஆகிய படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. 

மிகச்சிறந்த வயலின் இசைக்கலைஞரான இவரது பங்களிப்பில் உருவான எங்கே நிம்மதி என்ற பாடல் நீடித்த புகழைப்பெற்ற பாடலாகும். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றவர் ராமமூர்த்தி.

ரசிகர்களுக்கு அஜீத்தின் வேண்டுகோள்


பல நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. 

தியேட்டர்களில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற விசயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை யூஸ் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அஜீத் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். ரசிகர் மன்றத்தில் அரசியல் நுழைகிறது என்று தெரிந்ததும் உடனடியாக மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார். இருப்பினும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும்போது தாங்களது சொந்த பணத்திலேயே கட்அவுட்கள் வைத்து வருகிறார்கள்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அஜீத். எனக்கு கட்அவுட்கள், போஸ்டர்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அப்படி செலவு செய்யும் பணத்தை, படிக்க வசதி இல்லாமல், சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சென்டிமென்ட் வேடத்தில் சந்தானம்

சந்தானம் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு, தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில், அவர் நடித்து வருகிறார். 

ஹீரோவுக்கு நண்பனாக வந்து, அனைவரையும் கலாய்த்து, தன், ஒன் லைன் வசனங்களால், தியேட்டர்களில் குபீர் சிரிப்பலையை ஏற்படுத்துவது தான், இவரது வேலையே.

ஆனால், "555 என்ற படத்தில், இந்த காமெடி கலாட்டாவிலிருந்து சற்று, பிரேக் எடுத்து, சென்டிமென்ட் கேரக்டருக்கு தாவியுள்ளார், சந்தானம். இதில், ஹீரோ பரத்துக்கு, அண்ணனாக நடிக்கிறாராம், சந்தானம். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு, உணர்ச்சிமயமான காட்சிகளில், பிய்த்து உதறியுள்ளாராம். 

"இந்த படம், சந்தானத்துக்கு, ஒரு புதிய அடையாளத்தை கொடுக்கும் என்கின்றனர்,படக் குழுவினர்.

சம்பளம் வாங்காமல் நடித்த நயன்தாரா

விரைவில் வெளியாகவுள்ள ஒரு தமிழ் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும், நடனமாடியுள்ளார், நயன்தாரா. இதில், விசேஷம் என்னவென்றால், இந்த நடனத்துக்காக, சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தாராம், அவர்.

ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகைகள் கூட, ஒரு நாள் கால்ஷீட்டுக்கு, லட்சக் கணக்கில், சம்பளம் கேட்கும் இந்த காலத்தில், மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, சம்பளம் வாங்காமல், ஒரு பாடலுக்கு நடித்து கொடுத்தது, கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் தயாரிப்பாளருடன் உள்ள, நட்பு காரணமாகவே, நயன்தாரா, இந்த விஷயத்தில், தாராளமாக நடந்து கொண்டதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன. 

இந்த படத்தில், நயன்தாராவின் நடனம், பெரிதும் பேசப்படும் அளவுக்கு உள்ளதாம்.

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அமலாபால்


சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யும், பூ போன்ற படங்களை இயக்கியவர் சசி. எப்போதும் தனக்கென மென்மையான பாணியில் படம் எடுத்தவர், முதன்முறையாக ஆக்ஷ்னுக்கு மாறியுள்ளார். 

தற்போது பரத்தை வைத்து 555 என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் பரத், அரவிந்த் என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியராக நடித்துள்ளார். 

555-வில் அரவிந்த் என்ற பரத்துக்கு இரண்டு ஜோடி. ஒருவர் மும்பை மாடல் எரிகா பெர்னாண்டஸ், இன்னொருவர் மிர்திகா. கேரளாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர் மிர்திகா. 

அங்கு பேஷன் டிசைன் படித்து கொண்டிருந்தவருக்கு கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டைரக்டர் சசி, முறைப்படி அவர் அப்பா, அம்மாவிடம் பேசி அனுமதி பெற்று தன் படத்தில் நாயகியாக்கியுள்ளார். 

விஷயம் என்னவென்றால் மிர்திகாவை பார்த்தால் ஒருசாயலில் அமலாபால் போன்றே இருக்கிறார் என்று எல்லோரும் சொல்லி வருகிறார்கள். இதைப்பற்றி அவரிடம் கேட்டால் நான் அமலா பாலை பார்த்தது இல்லை, கேள்விபட்டிருக்கிறேன். 

எனக்கே ஆச்சரியமா இருக்கு என்கிறார். இவரைப்பற்றி கூடுதல் செய்தி என்னவென்றால் சரளமாக தமிழ் பேசுகிறார், கூடவே நன்றாக டான்சும் ஆடுகிறார். மேலும் தனது இனிமையான குரலில் தமிழ் பாடல்களை பாடியும் அசத்துகிறார். 

ஆக இனி மைனா அமலாபால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் மிர்திகா என்று அனைவரும் அவர் பக்கம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கோலிவுட்காரர்கள். 

ஒருவேளை அப்படி நடந்தால் அதற்கு டைரக்டர் சசிக்கு தான் கோலிவுட்காரர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

பெயரிடப்படாத அஜீத் படங்கள்

பெரும்பாலும், படங்களை துவங்கும்போதே, அப்படங்களின் பெயர்களை அறிவித்து விடுவது வழக்கம். சமீபகாலமாக, டைட்டில் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. 

குறிப்பாக, அஜீத் நடித்து முடித்துள்ள படத்துக்கு, "வலை என்று பெயர் வைத்திருப்பதாக மீடியாக்கள் தான் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

ஆனால், சம்பந்தப்பட்ட படக்குழுவிடமிருந்து இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அந்தப் படத்தைத் தொடர்ந்து, அஜீத் தற்போது நடித்து வரும், புதிய படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. 

"வெற்றி கொண்டான் என்று அப்படத்துக்கு பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியான போதும், "புரொடக்ஷன் நம்பர் -4 என்றபெயரிலேயே, அப்படத்தின் விளம்பரங்கள் வெளியாகின்றன.

திருட்டு சி.டி.யில் சேட்டை படம் - நடிகர் ஆர்யா புகார்


நடிகர் ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் சேட்டை. இதில் நடிகைகள் ஹன்சிகா, அஞ்சலி நடித்துள்ளனர். 

இந்த படத்தின் திருட்டு சி.டி.வெளியாகி உள்ளதாகவும் அதனை தடுக்க வேண்டும் என நடிகர் ஆர்யா, பட தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு அளித்தனர். 

தயாரிப்பாளர் தனஞ்செயன் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 

சேட்டை படம் கடந்த 5-ந் தேதி வெளியாகி 250 தியேட்டகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் காட்சிகளை திருட்டுத்தனமாக பதிவு செய்து திருட்டு சி.டி.யில் விற்பனை செய்கிறார்கள். 

பர்மாபஜார், அண்ணாநகர் ரவுண்டானா, பூக்கடை, பூங்காநகர், சிந்தாதிரிப் பேட்டை, மேற்கு மாம்பலம், ரிச்சி தெரு ஆகிய பகுதிகளில் இந்த பட சி.டிக்கள் கிடைக்கின்றன. 

மேலும் 3 இணைய தளங்களிலும் சேட்டை படத்தை வெளியிட்டுள்ளனர். எனவே திருட்டு சி.டி.விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

பின்னர் நடிகர் ஆர்யா நிருபர்களிடம் கூறியதாவது:- 

ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும் திருட்டு டி.வி.டிக்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. 

ஒவ்வொரு முறையும் இதுபோன்று போலீசாரிடம் புகார் அளிக்கும் போது மட்டுமே புதுப்படங்களில் திருட்டி சி.டி.விற்பனை கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார். 

இதைத் தொடர்ந்து ஆர்யாவிடம் நடிகை அஞ்சலி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், காமெடி பண்ணாதீர்கள் என்று மட்டும் கூறி வேகமாக சென்றார். 

ஆனால் நிருபர்கள் அவரை அனுகி மீண்டும் அஞ்சலி பற்றி கேட்டனர். அது அஞ்சலியின் தனிப்பட்ட விவகாரம் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி எல்லாம் என்னிடம் பேசிக் கொள்வதில்லை. இந்த பிரச்சினையில் இருந்து அஞ்சலி மீண்டு வருவார் என்றார்.

பாட்ஷா படத்தின் ரீ-மேக்கில் நடிகர் விஜய்


நடிகர் விஜய் பாட்ஷாவாக மாறப்போகிறார். ஆம்! பாட்ஷா படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார்; அப்படின்னா ரஜினியின் பாட்ஷா ரீ-மேக்கா என்று நீங்கள் கேட்பது புரிகிறது; 

இது ரஜினியின் பாட்ஷா கிடையாது, ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த பாட்ஷா ஆகும். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் கடந்தவாரம் வெளியாகி இருக்கும் படம் பாட்ஷா. 

சீனு வைத்லா இயக்கியுள்ள இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகளவில் ரூ.24 கோடி வசூல் செய்து இருக்கிறது. தொடர்ந்தும் நல்ல வசூல் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கு பாட்ஷா படத்தின் ரீ-மேக் உரிமையை பி.வி.பி. நிறுவனம் வாங்கியுள்ளது. இதில், நடிகர் விஜய் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதுமட்டுமின்றி பாட்ஷாவில் நடித்த காஜலே விஜய்யுடன் மூன்றாவது முறையாக ஜோடி போட இருப்பதாகவும், தலைவா படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தெலுங்கு பாட்ஷா படத்தில் அனைத்து விதமான கமர்ஷியல் அயிட்டங்களும் இருக்கிறது. 

ஏற்கனவே விஜய் நடித்த சில ரீ-மேக் கமர்ஷியல் படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட்டாகியுள்ளதால், இப்படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

மணிரத்னம் படத்துக்கு இளையராஜா இசையமைக்க சான்சே இல்லையாம்


மணிரத்னத்தின் முதல் படமான பகல் நிலவு தொடங்கி அவரது மெகா ஹிட் படங்களான மெளனராகம், நாயகன், அக்னிநட்சத்திரம், தளபதி என்று பல படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. 

ஆனால் 1990-களில் அவர்களது நட்பில் விரிசல் விழுந்ததையடுத்து ஏ.ஆர்.ரகுமானை தனது ரோஜா படத்தில் அறிமுகம் செய்தார் மணிரத்னம். அதன்பிறகுதான் இளையராஜா-மணிரத்னத்தின் பிரிவு நிரந்தரமானது.

இந்த நிலையில், மும்பையில் இளையராஜா இசையமைத்து வந்த ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்திருக்கிறார் டைரக்டர் மணிரத்னம். 

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக பிரிந்து செயல்பட்ட அவர்கள் இணையும் முதல் சந்திப்பு இது. அதனால் மணிக்கணக்கில் இருவரும மனம் விட்டு பேசியதாககூட கூறப்படுகிறது.

இதையடுத்து, மீண்டும் அவர்கள் இருவரும் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான சூழல் உருவாகியிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள். 

ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று இளையராஜா தரப்பை விசாரித்தபோது, மீண்டும் மணிரத்னத்துடன் இளையராஜா இணைய சான்சே இல்லை. 

நீண்டகாலத்துக்கு பிறகு சந்தித்ததால் மரியாதை நிமித்தமாக பேசியிருக்கிறார்கள்அவ்வளவுதான் என்கிறார்கள்.

யூகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தார் கமல்


ஹாலிவுட் படங்களுக்கு இணையாக, "விஸ்வரூபம் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்த கமல், அப்படத்தை டி.டி.எச்.,சிலும் வெளியிட்டு, புதிய சாதனை நிகழ்த்த இருந்தார். 

எதிர்பாராத விதமாக அப்படம் சர்ச்சைக்குரிய தடைகளை சந்தித்ததால், அந்த முயற்சியை கைவிட்டார்.

அதன் பின், தியேட்டர்களில் மட்டுமே, அப்படம் வெளியானது. அதையடுத்து இப்போது, "விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார், கமல். 75 சதவீத படப் பிடிப்பு முடிந்து விட்டதாம். அப்படத்தை ஆகஸ்டு 15ல் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், "விஸ்வரூபம்-2வை டி.டி.எச்.,சில் வெளியிட கமல் முடிவு செய்திருப்பதாக, யூகங்களின் அடிப்படையில் செய்திகள் பரவின. 

ஆனால், அந்த செய்தியை மறுத்துள்ள கமல், "இப்போதைக்கு படப்பிடிப்பில் மட்டுமே, என் கவனம் உள்ளது. படத்தை ரிலீஸ் செய்வது குறித்த முடிவுகளை பின்னர் தான் திட்டமிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். 

சேட்டை - சினிமா விமர்சனம்


ஆரம்பம் முதல் இறுதி வரை படம் முழுக்க மோஷன் போவதை பற்றி மட்டுமே பேசியிருக்கும், காட்சிப்படுத்தியிருக்கும் யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸின் மோசமான படம் தான் "சேட்டை" என்றால் மிகையல்ல!

பின்ன என்னங்க?! ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, நாசர், ஷாயாஜி ஷிண்டே, சித்ரா லட்சுமணன், ஹன்சிகா, அஞ்சலின்னு பெரிய பெரிய நடிகர், நடிகையையெல்லாம் வச்சுகிட்டு, படம் முழுக்க சந்தானத்துக்கு வயிற்றை கலக்குவதையும் அவர் கண்டவன் வீட்டில் கக்கா போவதையும், கார்பன்டை ஆக்சைடு கேஸ் ரிலீஸ் செய்வதையுமே காட்சிப்படுத்தி நம்மை கஷ்டப்படுத்தி தியேட்டரை நாறடித்து விடுகிறார்கள் என்றால் பாருங்களேன்! இதில் "டில்லி பெல்லி எனும் இந்திப்படத்தின் ரீ-மேக் என்ற பில்-டப் வேறு! 

"கோ மாதிரி பத்திரிகையாளர்களின் பராக்கிரமம் பேசும் படங்கள் வந்த தமிழ் சினிமாவில், இது மாதிரி பத்திரிகையாளர்களை பழிக்கு பழிவாங்கும் கதைகளும் வெளிவருவது கொடுமை! 

ஆர்யா, பிரேம்ஜி ஆ‌கியோரது நடிப்பு, அஞ்சலி, ஹன்சிகாவின் இளமை துடிப்பு உள்ளிட்டவைகளை, சந்தானத்தின் அதிர்வேட்டுகள் அமுக்கிவிடுவதால் அவைப்பற்றியெல்லாம் நோ கமெண்ட்ஸ். 

ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மூவரும் ஒரே தமிழ் தினசரியில் நிருபர், புகைப்பட நிருபர், கார்ட்டூனிஸ்ட்களாக வேலை பார்க்கும் தோஸ்துகள், அஞ்சலி ஆங்கிலப்பத்திரிகை நிருபர். ஹன்சிகா, ஆர்யாவை தான் சார்ந்திருக்கும் மேல்தட்டு நாகரீகத்துக்கு அழைத்து போகத்துடிக்கும் ஏர்ஹோஸ்டஸ். 

அவர் கையில் தரப்படும் ஒரு பார்சலை ஆர்யா மூலம் நாசருக்கு தரச்சொல்கிறார். ஆர்யாவோ, சந்தானத்திடம் தருகிறார். சந்தானமோ, பிரேம்ஜியிடம் தருகிறார். கூடவே இலியானா சிக்கன் சாப்பிட்டதால் நிக்காமல் போகும் தன் மலத்தையும் ஒரு டப்பாவில் பிடித்து, போகும் வழியில் லேபில் டெஸ்ட்க்கு கொடுத்துவிட்டு போக சொல்கிறார். 

பார்சல் மாறுகிறது! நாசர் வருகிறார். ஆயை ஆராய்ச்சி பண்ணி ஆர்யா, சந்தானத்தை அடித்து உதைத்து தன் வைர பார்சலை கொடுத்து விட சொல்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? 

அந்த பார்சலில் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரம் இருப்பது தெரிந்ததும் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மூவரும் அதை காசாக்கி கரையேற நினைக்கின்றனர். விடுவாரா நாசர்? இறுதியில் ஜெயித்தது அந்த மூவரா? நாசரா...? என்பது க்ளைமாக்ஸ்!

இந்த கதையையும், காட்சிகளையும் விட அடிக்கடி சந்தானம் வயிற்றை பிடித்து கொண்டு ஆசன வாயால் பேசும் காட்சிகள் தான் அதிகம் என்பதால் படம் முழுக்க போரடிக்கிறது. நாரடிக்கிறது!

எஸ்.எஸ்.தமனின் இசை, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, ஆர்.கண்ணனின் இயக்கம் என எல்லாம் இருந்தும் படம் மொத்தமும், மலமும் மலம் சார்ந்த இடமும்மாக இருப்பது கொடுமை!

ரீமேக் ஆகிறது முத்துராமன், ஸ்ரீகாந்த் நடித்த காசேதான் கடவுளடா


தமிழில் 1972-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய காமெடி படம் 'காசேதான் கடவுளடா'. இதில் முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா போன்றோர் நடித்து இருந்தனர். 

இப்படத்தில் இடம்பெற்ற “ஜம்புலிங்கமே ஜடாதரா” பாடல் இப்போதும் டெலிவிஷன்களில் ஒளிபரப்பாகி வருகிறது. 

காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா என்ற பாடலும் பிரபலம். எம்.ஜி.ஆர்., சிவாஜி கால கட்டத்தில் சிறிய நடிகர்கள் மற்றும் காமெடியர்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் பெரிய சாதனை படைத்தது. 

ஏவி.எம். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் மீண்டும் ரீமேக் ஆகிறது. இதற்கான உரிமையை விஸ்வாஸ் சுந்தர் வாங்கியுள்ளார். இப்படத்தை பி.டி. செல்வகுமார் இயக்குகிறார். இவர் 'ஒன்பதுல குரு' படத்தை டைரக்டு செய்தவர். இது சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

'காசேதான் கடவுளடா' ரீமேக் படத்துக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. தேங்காய் சீனிவாசன் வேடத்தில் வடிவேலு அல்லது சந்தானத்தை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. வசனத்தை கிரேஸிமோகன் எழுதுகிறார்.

அஜீத்தின் புதியபடம் தொடங்கியது


சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. நடிகர் அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் படமான வலை(அதிகாரப்பூர்வ ‌‌தலைப்பு அல்ல) படத்தில் நடித்து முடித்துவிட்டார். 

அதற்கு அடுத்தப்படியாக விஜயா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவன அதிபர், மறைந்த நாகிரெட்டியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராகிறது. 

இப்படத்தில் அஜீத் தான் ஹீரோ, தமன்னா தான் ஹீரோயின். கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா தான்  இயக்குகிறார். 

அஜீத், தமன்னாவுடன் விதார்த், பாலா, முனீஸ், சுஹைல், சந்தானம், அபிநயா, நந்தகி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக இப்படம் கடந்த ஏப்-2ம் தேதி துவங்க இருந்தது. 

அன்றையதினம் அஜீத், இலங்கை தமிழர்களுக்காக தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றதால், இப்படத்தின் பூஜை 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

அதன்படி ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை ‌ஆரம்பமானது, அதனைத்தொடர்ந்து சில காட்சியும் படமாக்கப்பட்டது. 

ஏப்-20ம் தேதி வரை ஐதராபாத்தில் முதற்கட்ட ஷூட்டிங் நடக்கிறது. 

சூர்யா நடிப்பில் தயாராகும் கஜினி Part 2


சூர்யா, அசின், நயன்தாரா இணைந்து நடித்து 2005-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'கஜினி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். சேலம் ஏ.சந்திரசேகரன் தயாரித்தார். 

இப்படம் அமீர்கான், அசின் ஜேடியாக இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. படம் வசூலில் சக்கை போடு போட்டது. 

எனவே இதன் இரண்டாம் பாகத்தை 'கஜினி பார்ட்-2‘ என்ற பெயரில் எடுக்க தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் முயற்சி மேற்கொண்டு உள்ளார். 

இந்த படத்தில் சூர்யா நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா உலகில் மனித நேயம் குறைந்து வருகிறது. கஷ்டப்படுகிற தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்க ஆள் இல்லை. 

சூர்யா ‘கஜினி-2’ படத்தில் நடித்து சேலம் சந்திரசேகருக்கு கைகொடுக்க வேண்டும் என்றார். 

சேலம் சந்திரசேகரனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:- ‘கில்லாடி’ படம் ரிலீசானதும் ‘கஜினி-2’ பட வேலைகள் துவங்கப்படும். 

இதற்காக ‘கஜினி-2’ படபெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். ஏற்கனவே கஜினி படத்தில் சூர்யா பிரமாதமாக நடித்து இருந்தார். 

அமீர்கானைவிட சூர்யாதான் கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருந்தார். எனவே அவர்தான் ‘கஜினி-2’ படத்தில் நடிக்க வேண்டும். அவரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் ஒருநாள் - சினிமா விமர்சனம்


கேரளாவில் வெற்றி பெற்ற ‘டிராபிக்’ என்ற மலையாள படமே தமிழில், ‘சென்னையில் ஒரு நாள்’ ஆகியிருக்கிறது. ஹிதேந்திரனின் இதய தானம் சம்பவம்தான் கதையின் கரு.

ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் விபத்தில் சிக்குகிறான். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.

அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள். 

யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலை. ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.

தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார். இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற போலீசார் அனைவரும் பின்வாங்கும்போது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.

அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில், காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’

போலீஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி, படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.

தானம் பெற்ற இதயத்தை வேலூருக்கு மின்னல் வேகத்தில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு மிகுந்த போலீஸ் கார் டிரைவராக சேரன். போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதையே நினைத்து வருந்தும்போது அவர் முகத்தில் காட்டிய உணர்ச்சிகளை, பயங்கர வேகத்தில் காரை ஓட்டிச் செல்லும்போதும் காட்டியிருக்கலாம்.

செல்வாக்கு மிகுந்த நட்சத்திர நடிகராக பிரகாஷ்ராஜ், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவருடைய மனைவியாக ராதிகா. பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா ராதிகாதான்.

மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா. உருக்கி விடுகிறார்கள். மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில், படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.

விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டாக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள்.

கதையை அதன் போக்கில் நகர்த்தி செல்லும் அம்சங்களாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளன. வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஷஹித் காதர்.

பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் மகள் இதய நோயாளி என்பதை ஆரம்ப காட்சிகளில் காட்டியிருக்கலாம் அல்லது உணர்த்தியிருக்கலாம். அதேபோல் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை, இன்னும் சிரத்தை எடுத்து படமாக்கியிருக்கலாம்.

ஆஸ்பத்திரியில் சச்சின் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், காதலி பார்வதி கலங்கிய கண்களுடன் அங்கு வருவதும், அவரை ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா பார்ப்பதும், சச்சின் இறந்தபின் பார்வதியிடம், ‘‘அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?’’ என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பதும், சோகமும் சுகமும் கலந்த கவிதை.

மொத்தத்தில் ‘சென்னைக்கு ஒருநாள்’ போகலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...