ரேடியோ ஜாக்கியின் நக்கல் - நொந்துபோன பிரபலங்கள்

திருப்பதி பெருமாளின் பெயரைக் கொண்ட பெரிய எப்.எம் ரேடியோ ஜாக்கி விழாக்களை தொகுத்து வழங்கும்போது பெரிய பெரிய ஜீனியர்சுகளை கூட நக்கல் செய்வது சினிமா பிரபலங்கள் பலருக்கு பிடிக்கவில்லையாம். 

இப்போது நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைத்தால் அவர் காம்பியரிங் என்றால் வரமாட்டோம் என்கிற அளவுக்கு அவரது நக்கல் நையாண்டிகள் தொடர்கிறதாம். 

இதையெல்லாம்விட சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அவர், நமீ நடிகையை "தென்னகத்து சன்னி லியோன்" என்று சொல்லியிருப்பதுதான் புயலை கிளப்பி இருக்கிறது. 

"சன்னி லியோன் நீலப்பட நடிகை. அவருடன் ஒப்பிட்டு பேசலாமா?" என்று நமீ தரப்பு கொதித்து போயிருக்கிறதாம். விரைவில் ஆர்ஜே கோர்ட் படி ஏற வேண்டியது வரலாம் என்கிறார்கள். 

ராஜா ராணி - சினிமா விமர்சனம்


காதலிச்சு ஏதோ ஒரு வகையில் காதலர்கள் சேராமல் போய்விட்டால் அதன்பிறகு வாழ்க்கையே கிடையாது என நினைக்க கூடாது. அதற்கு பிறகு அமையும் வாழ்க்கையை, வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். 

காதல் ‌தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இருக்கு... காதலும் இருக்கு... என்ற கருத்தை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் ராஜா ராணி. இந்த கதையை புதுமுகம் அட்லீ, அவ்ளோ அழகாக சொல்லியிருக்கிறார்.

கதைப்படி ஜான் எனும் ஆர்யாவுக்கும், ரெஜினா எனும் நயன்தாராவுக்கும், பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வது கிடையாது. 

எலியும்-பூனையும் போல் எப்போதும் முறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருநாள் இரவு நயன்தாராவுக்கு திடீரென வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா, எப்படியோ அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்த்து கண்ணீர் விடும் ஆர்யா அவர் மீது பாசம் கொள்கிறார்.

எதனால் இப்படி வலிப்பு ஏற்பட்டது என்று நயனிடம், ஆர்யா விசாரிக்கையில் பிளாஷ்பேக் விரிகிறது. நயன்தாரா ஏற்கனவே சூர்யா எனும் ஜெய்யை காதலித்து, பதிவு திருமணம் செய்யும் வேளையில் ஜெய் திடீரென அமெரிக்காவுக்கு சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக வந்த தகவலால் அந்த அதிர்ச்சியில் இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக சொல்ல, நயன் மீது ஆர்யாவுக்கு இன்னும் அன்பு கூடுகிறது. 

இதுஒருபுறம் இருக்க ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி, மறுநாள் அவுட்டிங் போகும் போது எதிர்பாரா விதமாக நஸ்ரியா சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார். 

ஆர்யாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது பாசம் ஏற்படுகிறது. ஆனால் இந்த பாசத்தை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வ‌ொரு முறையும் ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இவர்களுக்குள் ‌ஏற்படுகிறது. 

இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க  கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என நான்கு பேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர். ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். 

ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் அசத்தி விட்டார் ஜெய். பயந்தசுபாவம் உடைய ஜெய்யை, நயன்தாரா போனில் கலாய்க்கும் போது அவர் அழுவது தொடங்கி, கடைசி காட்சியில் ஆர்யாவை, ஏய்... போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான ரோலை பக்காவாக பண்ணியிருக்கிறார் மனிதர். 

யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். ஜெய்யுடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, கணவர் எனும் பெயரில் இருக்கும் ஆர்யாவுடன் எப்போதும் முறைத்து கொண்டு திரியும் காட்சிகளிலும் சரி முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சூப்பர். அதிலும் வலிப்பு ஏற்படும் போது, கண்ணின் கருவிழியே தெரியாத அளவுக்கு கண்ணில் அவர் காட்டும் நடிப்பு சூப்பர்ப்...!!

ஏய் ரிங்கா ரிங்கா... எனும் பாட்டுக்கு நைட்டியை மடித்து கட்டி, வாயில் டூத்பிரஸ் உடன் ஆடியபடி அறிமுகமாகும் நஸ்ரியா, தொடர்ந்து பிரதர் பிரதர்... என ஆர்யாவை கடுப்பேற்றும் காட்சிகளிலும் சரி, பின்பு அதே ஆர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிக்கும் முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஆஸம்...!

வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. சந்தானம் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 

மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ ஸ்டைல் கதை என்றாலும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலாக கொடுத்து இருப்பதில் புதியவர் அட்லீ மிளிர்கிறார். 

‘‘உலகத்துல யாருமே மேட் பார் ஈச் அதரா பொறக்கிறது இல்ல; வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு’’,,‘‘நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போய்ட்டாங்கன்னா, நாமளும் போகணும்னு அவசியம் கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி லைப் மாறும்’’ போன்ற வசனங்களுக்கு தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது.

ஆஸ்பத்திரியில், நயன்தாராவை சேர்த்திருக்கும்போது, டாக்டர் வந்து ஆர்யாவிடம், மனைவி பெயர் என்ன என கேட்கும்‌போது தெரியாது என்று ஆர்யா சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். 

இதேபோல் ஜெய், நயன்தாராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பதிவு அலுவலகத்திற்கு வராமல், ‌சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறப்பது ஏன், அதற்கான காரணத்தை ஒரு சில காட்சிகளிலாவது டைரக்டர் காட்டியிருக்கலாம், 

அட்லீஸ்ட்  நயன்தாராவுக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கலாம் உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் அசத்தல் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ராஜா ராணி அழகிய ஓவியமாய் மிளிர்ந்து இருக்கிறது.

மொத்தத்தில், ‘‘ராஜா ராணி’’ - ரசிகர்களின் இதய அரண்மனையில் ‘மகுடம்’ சூடப்போவது நிச்சயம்!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்


முதன்முதலாக ‘சித்திரம் பேசுதடி’ என்னும் கலர்புல் காதல் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பின் ‘இது மிஷ்கின் படம்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே ‘‘அஞ்சாதே’’, ‘‘நந்தலாலா’’, ‘‘யுத்தம் செய்’’, ‘முகமூடி’ என.. பிலிம் பெஸ்டிவலில் மட்டுமே இடம்பிடிக்கும், நமக்கும் பிடிக்கும் படங்களை இயக்கி... மேலைநாட்டு படங்களுக்கு தமிழ்முலாம் பூசுவதை விடுவதாக இல்லை... என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!’

சென்னையின் நிசப்தமான ஓர் நள்ளிரவில் ரோட்டில் குண்டடிபட்டு உயிருக்கு போராடியபடி கிடக்கிறார் மிஷ்கின். அதை பார்க்கும் ஒன்றிரண்டுபேர் கண்டும் காணாமல் போய்விட, இளம் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் இலவச 108 ஆம்புலன்ஸ், இன்னும் பிற தனியார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எதற்கும் போன் செய்யாமல் குண்டடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் மிஷ்கினை தன் டூவீலரில் பின்பக்கம் அமர்த்தி வைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலாக கதவை தட்டுகிறார். யாரும் இவர் அபயக்குரலுக்கு காது கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர்.

உடனடியாக தன் வீட்டிற்கு மிஷ்கினை தூக்கி செல்லும்‌ அந்த மெடிக்கல் மாணவர், மிராக்கிளாக வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மிஷ்கினுக்கு தேவையான முதலுதவிகள் செய்து அவரது உடம்பை அறுத்து துப்பாக்கி தோட்டாவை வெளியில் எடுக்கிறார். 

அதுவும் ‘கேட்டமைன்’ என்னும் போதை மருந்தை உட்கொண்டு தனது மருத்துவ கல்லூரி பேராசிரியரின் செல்போன் ஆலோசனைப்படி மிஷ்கினுக்கும் சிலைன் குளூக்கோஸ் வாட்டரில் கேட்டமைனை செலுத்தி அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அவர் அருகிலேயே படுத்தும் உறங்குகிறார். 

விடிந்து எழுந்து பார்த்தால் ஆபரேஷன் முடிந்து அருகில் உறங்கிய அல்லதுமயங்கிக்கிடந்த மிஷ் ‘எஸ்’ஸாகி இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? மிஷ்கின் 14 கொடூர கொலைகள் செய்த உல்ப் (ஓநாய்) என்றும், அவரை போலீஸ்தான் துப்பாக்கியால் சுட்டது என்றும், அவர‌ை காப்பாறிய குற்றத்திற்காக அந்த இளம் மருத்துவ கல்லூரி மாணவ‌ர் ஸ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு தூக்கிப் போகிறது போலீஸ்!

மிஷ்கினை காப்பாற்றிய ஸ்ரீயின் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து மிஷ்கினை சுட்டு பொசுக்கவும் சொல்கிறது போலீஸ்! அவரை இவர் சுட்டாரா? அல்லது இவரை அவர் சுட்டாரா என்னும் மீதிக்கதையுடன், வில்லன் தம்பாவின் ரோல் என்ன? போலீசின் கோல் என்ன? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி, கண் தெரியாத ஒரு குடும்‌பத்திற்கு மிஷ்கின் இழைத்த கொடூரத்தையும், அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இவ்வளவும் செய்கிறார் என்னும் கதையும் கலந்துகட்டி ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள்! என்ன? விமர்சனத்‌தைப் படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதா..? படத்தை பார்த்தீர்கள் என்றால் இ‌தைவிட இருபது மடங்கு ரத்தவாடை, துப்பாக்கி சத்தம், சுடுகாட்டு நாற்றம், சைக்கோத்தனம் இன்னும், இன்னும், இன்னும் என்னவெல்லாமோ தெரியும்!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படக்கதையுடன் படத்தில், அந்தகண் தெரியாத குடும்பத்திற்கு தான் இழைத்த கொடூரக்கதையை மிஷ்கின் இமை கொட்டாமல் காமிராவை பார்த்தபடி 5 நிமிடத்திற்கு மேல் உருக்கமாக சொல்லி முடிக்கும் கதை சூப்பர்ப்! அதே மாதிரி ரயில் இன்ஜின் டிரைவரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக்கியபடி, ரயிலில் போலீஸ் எதிர்பாராமல், தம்பாவின் ஆட்கள் கண்ணிலும் மண்ணை தூவியபடி வந்து தன் உயிரை காப்பாற்றிய மாணவனை கடத்தி செல்லும் காட்சி மயிர் கூச்செரியும் ரகமென்றாலும், தன் உயிரை காப்பாற்றிய மிஷ்கின் சந்திக்க துடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னும் கேள்வியும் எழும்பாமல் இல்லை! 

அது மாதிரி குண்டடிபட்டு உயிர் போகும் நிலையில் மயங்கிக்கிடக்கும் மிஷ்கின் அறுவை சிகிச்சை, அதுவும் அப்பரண்டீஸ் மாணவனால் அரை குறையாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘எஸ்’ ஆவது நம்பமுடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதும், அந்த பார்வையற்ற குடும்பத்தின் ஒரு குழந்தையை தன் அஜாக்கிரதையால் தீர்த்துக் கட்டிய மிஷ்கின், அந்த குடும்பத்தை தூக்கிக்கொண்டே திரிந்து, அந்த சிறுமி கார்த்தியை தவிர்த்து மொத்த குடும்பமும் பலியாக காரணமானவனும் ஏன் என்பது புரியாத புதிர்! அதே மாதிரி, ஒரே குடும்பத்தில் எட்வர்டு, கார்த்தி என பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அது இந்து குடும்பமா? கிறிஸ்தவ குடும்பமா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது! 

தீபாவளி நேரத்தில் குழந்தைகள் விதவிதமான பொம்‌மை துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ‘ரோல் கேப்’ வெடிப்பது மாதிரி ‘ஓநாய்’ மிஷ்கினும், தம்பாவின் கையாட்களும் துப்பாக்கியும் கையுமாக திரிவது, நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறோமா? இந்தியாவில், சென்னையில் இருக்கிறோமா? என்னும் சந்தேகத்தை கிளப்புவதும் பலவீனம்!

இளையராஜாவின் பாடல்களே இல்லாத பின்னணி இசை, ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, மிஷ்கின், ஸ்ரீயின் நடிப்பு உள்ளிட்ட பிளஸ் பாய்ண்ட்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தூக்கி நிறுத்த முயன்றாலும், லாஜிக் மிஸ்டேக் கதையும், நம்பமுடியாத திரைக்கதையும், சுடுகாட்டு பின்னணியும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒருவழி ஆக்கிவிடுகின்றன.

ஆக மொத்தத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்‌’, ‘மிஷ்கினும் அவரது ரசிகர்களும்’ என்றால் மிகையல்ல.

சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை

அரசியலிலும் இருக்கும் பூ நடிகை இனி சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். காரணம் மகள்கள். 

அவர்கள் வளர்ந்து விட்டதால் அவர்களை பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் காரணம் சொன்னாலும், உண்மை அது இல்லையாம். மகள்களுக்கும் நடிக்கும் ஆசை வந்திருக்கிறதாம். 

அதை பூ நடிகையும், டைரக்டர் கணவரும் விரும்பவில்லையாம். அவர்கள் சினிமாவுக்கு நடிக்க வருவதை தடுக்கவே தான் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட தீர்மானித்து விட்டாராம்.

வம்பே வேண்டாம் - ஒதுங்கிய நடிகை

சினிமாவின் 100 வது பிறந்த நாள் விழாவில் வம்பு நடிகரையும், அவரை லவ்விக்கிட்டிருக்கும் பம்ளிமாஸ் நடிகையையும் ஆட வச்சு புரோகிராமுக்கு பவர் ஏத்த அந்த சேனல் முடிவு பண்ணிச்சாம். 

இதுக்காக வம்பு நடிகர்கிட்ட பேசினப்போ டபுள் ஓகே சொன்னாராம். ஆனால் பம்ளிமாஸ் நடிகை தரப்புல நாட்ஓகேவாம். 

"என் மகள் லவ் நியூசால அவ கேரியரே தடுமாற்றத்துல இருக்கு இந்த நேரத்துல இதெல்லாம் தேவையில்லை" என்று தாய்குலம் கண்டிசனா சொல்லிடுச்சாம். 

சும்மா எடுத்த போட்டோவையே நெட்டுல போட்டு கலாய்க்கிறாங்க. ஒண்ணா சேர்ந்து மேடையில ஆடினா வம்பு எந்த நேரத்துல என்ன பண்ணுமோன்னு பயந்துகிட்டு பப்ளிமாசும் "அய்யோ அவர்கூட நான் ஆடமாட்டேன்"னு சொல்லிட்டாராம்.

தளபதியை கடைசிக்கு தள்ளிய விழாக்குழு


நடைபெற்று வரும் சினிமா விழாவுக்கு தமிழ் சினிமாவின் சில முக்கிய கலைஞர்கள் அழைக்கப்படவில்லை. இருப்பினும் அழைக்கவே மாட்டார்கள் என்று நினைத்த அந்த தளபதி நடிகரை அழைத்திருந்தனர். 

ஆனால், விஐபிக்கள் அமரும் வரிசையில், அவருக்கு கடைசியில்தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த சில நடிகர்கள் அவரை முன்னாடி வரிசைக்கு வருமாறு அழைத்தபோது அதை அவர் மறுத்து விட்டார்.

மேலும், விழாவைப்பொறுத்தவரை கவனிக்கப்படாதவராக இருந்த தளபதி நடிகருக்கு இன்னொரு வருத்தமான நிகழ்வும் அங்கு நடந்தது. அதாவது, நூற்றாண்டு கண்ட சினிமாவில் பெரும்பாலான முக்கிய கலைஞர்கள் சம்பந்தப்பட்ட க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. 

ஆனால் தற்போது கூடுதலான இளவட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் தளபதி சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம்கூட அதில் இடம்பெறவில்லை. 

அதனால் மேடையில் பேச அழைக்கும்போதுகூட சோர்வான முகத்துடனேயே பேசிவிட்டு இறங்கிச்சென்றார் நடிகர்.

இதே போன்றுதான் த‌ல நடிகருக்கும் நான்காவது வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேலும், வெளிமாநிலத்தைச்சேர்ந்த சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு தரப்படவில்லை. என்றாலும் அதை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆடியன்ஸ் போன்று விழாவுக்கு வந்து விட்டு வெளியேறினர்.

நடிகையை தேடும் தயாரிப்பாளர்கள்

வெடி நடிகர் நடித்து சர்ச்சைக்குள் சிக்கிய படம் இன்னும் வெளிவராத நிலையில் உள்ளதாம். 

அந்த படத்தில், அவருடன் அந்நிய நடிகை ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள், அந்த நடிகையை தேடி ஓடுகிறார்களாம். 

எல்லா தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களில், ஒரு பாடலுக்கு அந்நிய நடிகையை ஆட வைக்க ஆசைப்படுகிறார்களாம்.

ஆனால் அந்த நடிகை இன்னும் சம்மதம் சொல்லாமல், தலைமறைவாக இருக்கிறாராம்

யா யா - சினிமா விமர்சனம்


‘டைமிங்’ நடிகர்கள் ‘மிர்ச்சி’ சிவாவும் சந்தானமும் இணைந்து கலக்கி கலகலக்க வைத்து, களகளத்து, களைத்து, கலைந்து போயிருக்கும் படம்தான் ‘யா... யா...’

அதாகப்பட்டது, அம்மா ரேகா, ராமராஜன் ரசிகை என்பதால் மகன் சிவாவுக்கு ராமராஜன் எனப்பெயர் சூட்டி அவரது முறைப்பெண் ‘காதல்’ சந்தியாவுக்கு கனகா எனப்பெயர் (நல்லவேளை ‘கரகாட்டக்காரன்’ கனகா எனப் பெயர் சூட்டவில்லை..) சூட்டி இவருக்கு அவர், அவருக்கு இவர் என வளர்த்து ஆளாக்குகின்றனர். 

ஆனால், ‘போனால் அரசு வேலைக்குத்தான் போவேன்..’ என்று வைராக்கியத்துடன் வேலை வெட்டி எதற்கும் போகாம அப்பா காசிலும் அடுத்தவங்க பணத்திலும் குவாட்டர், கட்டிங், சைடிஸ் என ஜபர்தஸ்துடன் வாழுகின்ற சிவா, தன் பெயரை தோனி என மாடர்னாக மாற்றிவைத்துக் கொண்டு கீதா-தன்ஷிகா பின் காதல் கத்திரிக்காய் என்று அலைகிறார்.

மற்றொரு பக்கம் சந்தானத்தின்  அப்பா ராஜ்கிரண் ரசிகர் என்பதால் அவருக்கு ராஜ்கிரண் எனப் பெயர்சூட்டி வளர்த்து ஆளாக்க, வெட்டி ஆபீசராக திரியும்‌ அவரும் ஷேவாக் என்னும் கிரிக்கெட் பிளேயர் மீதுள்ள அபிமானத்தில் பெயர் மாற்றத்துடன் தோனியின், அதாங்க ராமராஜன் என்னும் சிவாவின் நண்பராக அவருக்கு தன்ஷிகாவுடனான காதலுக்கு உதவுவதுபோல் சில சுயலாபங்களுக்காக உபத்திரவம் செய்கிறார். 

கூடவே, சிவாவின் மாமன் மகள் ‘காவலர்’ சந்தியாவை (‘காதல்’ சந்தியாவேதன் படத்தின் இவர் பெண் கான்ஸ்டபிள்...) ‘லவுஸ்’ வயப்படுகிறார். (நல்லவேளை ‘ராஜ்கிரண்’ சந்தானத்திற்கும் ராமராஜனின் முறைப்பெண் கனகா மாதிரி மீனா, சங்கீதா என இரண்டு அத்தை, மாமா மகள்கள் இல்லை..)! அப்புறம்? அப்புறமென்ன? சந்தானம் அவருக்கு பின்னால் இருக்கும் தேவதர்ஷினி உள்ளிட்டவர்களின் தடை பல கடந்து சிவா - தன்ஷிகாவின் காதல் கைகூடியதா? சந்தானம் - சந்தியாவின் திடீர் காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா?! என்பது க்ளைமாக்ஸ்!

‘மிர்ச்சி’ சிவா ராமராஜன் ‘அலைஸ்’ தோனியாக நிறைய பேசுகிறார். நிறைய குடிக்கிறார். கொஞ்சமாக காதலிக்கிறார். கொஞ்சம் கொஞ்சம் சந்தானம், சந்தியா, டாக்டர் சீனிவாசன், அப்பா இளவரசு, அம்மா ரேகா, உடன்பிறப்பு ஸ்டெபி உள்ளிட்டவர்களையும் சேர்த்து நம்மையும் கலாய்த்து கலகலப்பூட்டுகிறார். 

ஆங்காங்கே ‘கடி’க்கவும் செய்கிறார். இனியும் சிவா, இது மாதிரி கதைகளில் ‘காமெடி’, ‘கடி’ படங்களில் நடிப்பதைக் குறைத்து கதையம்சம் நிறைந்த படங்களில், பேச்சைக்குறைத்து நடிப்பது நலம் பயக்கும்!

சந்தானம் ராஜ்கிரண் ‘அலைஸ்’ ஷேவாக் ‘அலைஸ்’ சச்சினாக (அது ‌எப்போ?) பேசும் வசனங்கள் கண்டு தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. ‘புலிக்கு முன்னாலேயே போன மானும், பொண்ணுங்க பின்னாடி போன ஆணும் தப்பி பிழைத்ததா சரித்திரம் கிடையாது...’ என்னும் வசனத்தில் தொடங்கி, ‘புல்லா  தண்ணி அடிச்ச பசங்களைகூட நம்பிடலாம். ஆனா புள்ள பூச்சியாட்டம் இருக்கும் பொண்ணுங்களை நம்பமுடியாது என்பது வரை படத்திற்கு இருநூறு, முந்நூறு காமெடி ‘பன்ச்’ வசனங்களை எங்குதான் சந்தானம் கவ்வி பிடிக்கிறாரோ?! எல்லாமே காமெடி சரவெடி!

‘பவர் போன ஸ்டார்’ சீனிவாசன், தனுஷ், அஜீத், விஜய், கமல், ரஜினி கெட் அப்புல வந்து பயமுறுத்துகிறார். ரசிகர்கள் பாவம்!

தன்ஷிகாவின் கவர்ச்‌சி சந்தியாவின் நடிப்பு முதிர்ச்சி இரண்டும் படத்திற்கு பெரும்பலம். ரேகா, ஸ்டெபி, தேவதர்ஷினி, இளவரசு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.. அதில் சிவாவுக்கு ரூட்டு போட்டு சீனிவாசனை பிக்அப் பண்ணும் தேவதர்ஷினியின் ‘பல்’லும் சொல்லும்‌ திகிலூட்டுகின்றன என்றாலும் காம நெடியில்லா காமெடி!

விஜய் எபினேசரின் இனிய இசை, வெற்றியின் அழகிய ஒளிப்பதிவு என எல்லாம் இருந்தும் ஐ.ராஜசேகரின் எழுத்தும் இயக்கமும் வெறும் காமெடியை மட்டுமே நம்பி இருப்பது சற்றே திகட்டுகிறது!

மொத்தத்தில் ‘யா... யா...’ - ‘சும்மா ‘வாய்யா’ - சிரிச்சுட்டு ‘போய்யா’!’ என்னும் அளவிலேயே இருக்கிறது!

மூன்று தலைமுறைகள் நடிக்கும் படம்


இந்திய சினிமாவில் முதன் முறையாக மூன்று தலைமுறைகள் இணைந்து நடிக்கும் படம் ஒன்று தெலுங்கில் தயாராகி வருகிறது. 

படத்தின் பெயர் மனம். இயக்குபவர் நம் தமிழ்நாட்டுக்காரரான விக்ரம் குமார். படத்தில் அக்னினேனி நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோர் முறையே தாத்தா, மகன், பேரனாகவே நடிக்கிறார்கள். 

படத்தை தயாரிப்பதும் நாகார்ஜுனாவின் அண்ணபூர்னா ஸ்டூடியோதான்.

விக்ரம் குமார் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்தார். கல்வி விழிப்புணர்வு பற்றி இவர் இயக்கிய ஒரு மவுனப்படம் தேசிய விருதுகளை அள்ள இயக்குனர் ஆனார். 

இஷ்டம் என்ற முதல் தெலுங்கு படத்தை இயக்கினார். அதில்தான் ஸ்ரேயாவை அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு இந்தியில் 13பி என்ற படத்தை இயக்கினார். 

அந்தப் படம்தான் தமிழில் யாவரும் நலம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது டைரக்டர் செய்து வரும் படம்தான் மூன்று தலைமுறைகள் நடிக்கும் மனம்.

அக்னினேனி நாகேஸ்வரராவின் 90 வது பிறந்த நாளான நேற்று (செப்படம்பர் 20) படத்தின் முதல் போட்டோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிப்பிலும் நயன்தாராவுடன் போட்டி போட்ட நஸ்ரியாநயன்தாராவைப் போலவே, கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருப்பவர், நேரம் பட நாயகி நஸ்ரியா நசீம். 

இவர் அசப்பில் நயன்தாராவைப் போன்றே இருப்பதாக கருதும் இயக்குனர்கள், நஸ்ரியாவிடம் கால்ஷீட் கேட்டு துரத்துகின்றனர். 

இதில், ஏற்கனவே நயனிடம் கதை சொல்லி வைத்திருந்த சில இயக்குனர்களும், நஸ்ரியா பக்கம் சாய்ந்து விட்டதால், செம அதிர்ச்சியில் உள்ளார் நயன்தாரா. 

அதனால், ராஜாராணி படத்தில் நடித்த போது, நயன்தாரா, நஸ்ரியாவுக்கிடையே கடும் நடிப்புப் போட்டியும் நடந்தது.

இதுபற்றி நஸ்ரியா கூறுகையில்,நயன்தாராவுக்கும், எனக்குமிடையே நடிப்பு போட்டி நடந்தது உண்மை தான். 

ஆனால், மார்க்கெட்டில், அவரை நான் போட்டியாக நினைக்கவில்லை. 

ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற முறையில், அவர் மேல் எனக்கு மரியாதை உள்ளது என்கிறார்.

மருதநாயகத்தை தூசு தட்டுகிறார் கமல்


1997ல் கமல் தொடங்கிய படம் மருதநாயகம். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகத்தை பற்றிய அந்த வரலாற்றுப்படத்தை தனது கனவு படமாகவும் சொன்னார் கமல். 

அதனால் இங்கிலாந்து நாட்டு ராணியை சென்னைக்கு அழைத்து வந்து பிரமாண்டமாக படத்தை தொடங்கினார். 

ஆனால் பின்னர் ஏற்பட்ட பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டார் கமல்.

ஆனால் விஸ்வரூபம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார் கமல். 

இந்த பாகத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது. அதனால் இந்த சூட்டோடு மருதநாயகம் படத்தையும் தூசு தட்டுமாறு கமலின் அபிமானிகள் அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். 

சிலர் பைனான்ஸ் உதவி செய்யவும் முன்வந்துள்ளார்களாம். 

அதனால் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு மருதநாயகம் வேலைகளில் கமல் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

சினிமாவா? கல்யாணமா? நடிகையின் தவிப்புகையில் படங்கள் எதுவும் இல்லாமல் சும்மா சுத்திக்கிட்டிருக்கும் நமீ நடிகையை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வீட்டுல கம்பல் பண்றாங்களாம். 

உதவியாளர் மாதிரி எப்போதும் கூடவே இருக்கும் அந்த உறவுக்கார மொளுமொளு இளைஞர்தான் மாப்பிள்ளையாம். 

ஆனா நான் எப்படியும் ஸ்லிம்மாகி அடுத்து ஒரு ரவுண்ட் சினிமால வந்துடுவேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு அம்மா அப்பாவையும், அந்த இளைஞரையும் சமாதானப்படுத்தினாராம் நடிகை. 

அந்தப் பையனோட உறவுக்காரங்களோ எத்தனை நாளைக்குத்தான் அவளுக்காக வெயிட் பண்ணி அவ பின்னாடி சுத்திக்கிட்டிருப்பேன்னு சொல்லி அந்தப் பையனுக்கு வேறு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம். 

பையனும் நடிகைகிட்டேருந்து பிரிஞ்சு சொந்த ஊருக்கே கிளம்பிட்டாராம். இதனால நமீ நடிகை கல்யாணமா? சினிமாவான்னு தவிச்சிக்கிட்டிருக்காராம்

மூடர் கூடம் - சினிமா விமர்சனம்சுயமாக சிந்திக்கத் தெரியாத 3 பேர். அரசு சீர்திருத்தப்பள்ளியில் படித்ததால் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காமல் அலையும் ஒருவர். இந்த 4 பேரும் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் சந்திக்கிறார்கள்.

சாப்பாட்டுக்கே வழியில்லாத இவர்களுக்கு காவல்துறை ஆய்வாளர் ரூபாய் ஐநூறு கொடுத்து நான்கு பேரையும் பிரித்து எடுத்துக் கொள்ளும்படி  சொல்கிறார். இதில் இருந்து இவர்கள் கூட்டணி தொடர்கிறது.

வயிற்று பிழைப்பிற்கு என்ன செய்வதென்றே தெரியாத இவர்கள், கூட்டணியில் ஒருவரான ராஜாஜின் உறவினரான ஜெயபிரகாஷ் வீட்டுக்கு கொள்ளை அடிக்க செல்கிறார்கள். அங்கு அவரோ சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் செல்ல தயாராக இருக்கிறார்.

அங்கு செல்லும் ராஜாஜ் கூட்டாளியான நவீன், குபேரன், சென்றாயன் ஆகியோர் ஜெயபிரகாஷ் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களது திட்டத்தில் இவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா என்பது மீதிக்கதை.

சென்றாயன் படம் முழுக்க தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல் முகபாவனை மற்றும் பேச்சு ஆகியவற்றால் தன் கதாபாத்திரத்தில் பலிச்சிடுகிறார்.

நவீன் படித்தவன் என்பதை மற்ற 3 பேருக்கும் அறிவுரை கூறும்போதும் தன் செயலிலும் காண்பிக்கும் காட்சிகள் அழகு.

குபேரன் அடர்ந்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் இருந்தாலும் இவர் செய்யும் செயல்கள் அனைத்தும் சிரிப்பை ஏற்படுத்துகிறது.

ராஜாஜ் அப்பாவியான தோற்றத்தில் அழகாய் நடித்திருக்கிறார்.

மற்றும் படத்தில் வரும் ஜெயபிரகாஷ், ஓவியா, ஜெயபிரகாஷின் மகனாக வரும் சிறுவன், பொம்மை திருட வந்த திருடன், ஜெயபிராகாஷ் உடன் போனில் பேசும் குழநதை ஆகிய அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை கச்சிதமாய் செய்திருக்கிறார்கள்.

நடராஜன் சங்கரனின் பின்னணி இசை படத்திற்கு வலுவூட்டுகிறது.

இயக்குனர் நவீன் குறைந்த நட்சத்திரங்களை கொண்டு ஒரே அறையில் பெரும்பான்மையான காட்சிகளை இயக்கி இருக்கிறார். இருப்பினும் காட்சிகளை திறம்பட நகர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது. மூடர் கூடம் மொத்தத்தில் பொழுதை போக்கும்.

பிரியாணியை ஆற வைத்த இயக்குனர்

வெள்ளந்தியா சிரிக்கும் சீட்டுக்கட்டு பட இயக்குனர் சமைத்த பிரியாணியை பொங்கலுக்கு பரிமாறலாம் என தயாரிப்புக்குழு ஆறப் போட்டுவிட்டது. 

இதன் பின்னணியில் இயக்குனர் நடந்துகொண்ட விதம்தான் தயாரிப்பு குழுவை கடுப்பேற்றியதாக கூறப்படுகிறது. 

இவருக்கும் பருத்தி வீரனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புதான் பிரியாணி ஆற வைத்திருக்கிறதாம். 

இதனால் இயக்குனர் பெரும் மனக்கஷ்டத்தில் உள்ளாராம். 

தனது மனசை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வதற்காக மாலைநேர மஜாவில் கலந்துகொண்டு மனசை தேற்ற ஆரம்பித்துள்ளாராம். 

தயாராகிறது முதல்வன் இரண்டாம் பாகம்


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷாகொய்ராலா, ரகுவரன் ஆகியோர் நடித்த படம் முதல்வன். ஒருநாள் முதல்வர் என்ற கருத்தை மையமாக வைத்து புதுமையான முறையில் இயக்கியிருந்தார் ஷங்கர். 

அதனால் தமிழகத்தில் அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால், அதே படத்தை இந்தியிலும் நாயக் என்ற பெயரில் அனில்கபூரை நாயகனாக வைத்து இயக்கினார் ஷங்கர். 

ஆனால், தமிழில் வெற்றி பெற்ற அளவுக்கு இந்தியில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. 

இந்த நிலையில், தற்போது விஸ்வரூபம் -2, ஜெய்ஷிந்த்-2, சிங்கம்-2 என ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகங்கள் கோடம்பாக்கத்தில் உருவாகி வருகின்றன. 

இருப்பினும், முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுப்பது பற்றி இன்னமும் ஷங்கர் யோசிக்கவில்லை. 

ஆனால், அப்படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தை தயாரித்த பட நிறுவனம் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம்.

நாயக் ரிட்டர்ன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை இந்தி இயக்குனர் ஒருவரே இயக்குகிறாராம்.அதற்கான கதை விவாதம் நடந்து வரும் நிலையில், ஹீரோ -ஹீரோயினி தேர்வும் நடைபெறுகிறதாம்.

நடிகையை தவிக்க விட்ட டான்ஸ் மாஸ்டர்

தாடிக்கார டான்ஸ் மாஸ்டர் தற்பொழுது இயக்கம் எல்லாம் பாலிவுட்ல இருந்தாலும் தம் பங்குக்கு சவுத் நடிகைகளை அறிமுகப்படுத்த தவறுவது இல்லையாம். 

இப்படி அறிமுகப்படுத்தற ஹீரோயினுங்க காதல் பார்வை வீசிக்கிட்டே இருந்தா பிரச்னையில்லாம தப்பிக்கலாமாம். 

கொஞ்சம் பார்வைய திருப்பினா பெண்டு கழல்ற அளவுக்கு டான்ஸ் மூவ்மென்ட் கொடுத்து தவிக்கவிட்றாராம். 

சமீபத்துல செவன்த் சென்ஸ் நடிகை தவிச்சாராம். அடுத்து சாருமான நடிகை சிக்கி இருக்காராம். இவர் கதி என்ன ஆகுமோன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்களாம்.

காமெடியன் அலம்பல், கதாநாயகன் அப்செட்


கோலிவுட்டில் உள்ள பெரும்பாலான கதாநாயகர்கள், அந்த ஐந்தெழுத்து காமெடியனை நம்பிதான் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். 

தங்களது நடிப்புக்காக, கதைக்காக படம் ஓடவில்லை என்றாலும், அந்த நடிகரின் காமெடிக்காகவாவது படம் ஓடாதா என்று நினைக்கிறார்கள். 

இதனால் அவர் படத்துக்குப்படம் லட்சங்களை உயர்த்திக்கொண்டே போனாலும், கேட்டதை கொடுத்து ஆளை பிடியுங்கள் என்று படாதிபதிகளை விரட்டி விடுகிறார்கள்.

இந்த நிலையில், சகுனி நடிகர் மட்டும் மேற்படி காமெடியன் மீது சென்ற படத்திலிருந்தே வெறுப்பில் இருந்து வருகிறார். 

என்ன காரணம்? என்று விசாரித்துப்பார்த்தால், இயக்குனர் ஒரு காட்சியை சொல்லி, டயலாக்கை சொன்னால், காமெடியனோ தன் பங்குக்கு அதிகப்படியான லொள்ளு வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு ஹீரோவை டம்மி பீசாக்கி விடுகிறாராம்.

இதனால் நான் ஹீரோ, என்னை இவர் டம்மி பண்ணுவதா? என்று பல சமயங்களில் போர்க்கொடி பிடித்து விடுகிறாராம் ஹீரோ. இந்த புகைச்சல் காரணமாத்தான் தற்போது நடித்து வரும் அந்த காமெடி இயக்குனரின் படத்துக்கு அவரை வேண்டாம் என்று சொன்னாராம் ஹீரோ. 

ஆனால், இயக்குனர் விடவில்லை. அவர் எனது செண்டிமென்ட் காமெடியன். எனது முதல் படத்திலிருந்தே அவர் இருக்கிறார். அவரை வைத்துதான் எனது காமெடியும் ஒர்க்அவுட்டாகி வருகிறது என்று அவரது முக்கியத்துவத்தை சொல்லி கூட்டணியில் சேர்த்துக்கொண்டாராம்.

அதனால், இப்போது காமெடியனின் அலம்பம் ரொம்ப ஓவராகவே இருக்கிறதாம். அதைப்பார்த்து அப்செட்டாகவே இருக்கிறாராம் ஹீரோ.

சீரியசான நடிகரை சிரிப்பு நடிகராக்கிய கேரளத்து பைங்கிளி


சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தபோதே அப்பட நாயகியுடன் அந்த இரண்டெழுத்து நாயகனுக்கு காதல் புகைச்சல் இருப்பதாக செய்தி பரவியது. 

ஆனால், அதையடுத்து எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது அந்த நான்கெழுத்து நடிகையுடன் காதல் பத்திக்கொண்டதாக மைக் வெச்சு ஒலிபரப்பாத குறையாக ஆளாளுக்கு பரப்பி விட்டுக்கொண்டு திரிந்தார்கள். 

ஆனால், அதற்கு நடிகைமறுப்பு சொன்னபோதும் எந்தவித ரியாக்சனும் இல்லாமல் இருந்தார் மேற்படி நடிகர்.

அதன்பிறகு இப்போது காதல் என்னும் நிக்கா, ராஜா ராணி படங்களில் நேரம் பட நாயகியுடன் இணைந்து மேற்படி நடிகர்,இந்த முறை முன்பு மாதிரி விளையாட்டாக இல்லாமல் படு சீரியசாகவே காதல் வலை வீசி வந்தாராம். ஆனால், அம்மணி கழுவுற மீனில் நழுவுற ரகம் என்பதால் சிக்காமலேயே டேக்கா கொடுத்து வந்திருக்கிறார்.

இருப்பினும் என்றாவது ஒருநாள் சிக்காமலா போகும் என்று தொடர்ந்து தூண்டிலை போட்டே வைத்திருந்திருக்கிறார் நடிகர். அப்படியிருக்கும்போதுதான், மேற்படி நடிகருடன் நேரம் நாயகியை மீண்டும் இணைக்க ஒரு கதையுடன் சென்றிருக்கிறார் கோலிவுட் இயக்குனர் ஒருவர். 

ஆனால், மொத்த கதையையும் கேட்ட நடிகை, இந்த கதைக்கு மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் சூப்பரா இருப்பார் என்று படத்தை அவர் பக்கம் திருப்பி விட்டாராம்.

இந்த விசயம் இரண்டெழுத்து நடிகரின் காதுகளுக்கு சென்றபோது கடுப்பாகி விட்டாராம். நம்மளை கடுப்பேத்தினது மட்டுமில்லாம, சிரிப்பு நடிகராக்கிட்டு போயிட்டுதே அந்த நடிகை என்று சிலிர்த்துக்கொண்டு நிற்கிறாராம் நடிகர்.

24 மணிநேரத்தில் 10லட்சம் பேர் பார்த்த கோச்சடையான் டீசர்


விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் கோச்சடையான் படத்தின் டீசரை 24 மணிநேரத்தில் 10லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கோச்சடையான். 

3டி அனிமேஷன் படமாக அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்களை போன்று இப்படம் தயாராகியுள்ளது. ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். 

தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இவரோடு சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது கிராபிக்ஸ் சேர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

ரஜினி உடல்நிலை சரியில்லாமல் போய் பின்பு அதிலிருந்து மீண்டு நடித்துள்ள படம் என்பதாலும், எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளிவரும் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் எப்போது வெளிவரும் என்று மிகுந்த ஆவல் ஏற்பட்டது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று கோச்சடையான் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் டீசரை வெளியிட்டார் சவுந்தர்யா. 

பிரமாண்ட அரண்மனை அதனைத்தொடர்ந்து குதிரை ஏற்றத்தில் ரஜினி வருவது போன்றும் ருத்ர தாண்டவம் ஆடும் சிவன் போன்று காலை உயர்த்தியபடியும் ரஜினியின் பல்வேறு காட்சிகள் அந்த டீசரில் ‌இருந்தது. மேலும் இப்படத்தில் ரஜினியை மிகவும் இளமையாக காட்டியுள்ளனர். 

இந்த டீசர் வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 10 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தொடர்ந்து இன்னும் ஏராளமானபேர் ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

வெளியானது ரஜினியின் கோச்சடையான் டீசர்


ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீசர் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். 

அவரது இளைய மகள் சவுந்தர்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்துள்ளார். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். 

இவர் தவிர சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மீடியா ஒன் குளாபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

அனிமேஷன் படமாக அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் மோசன் கேப்ட்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய 3டி திரைப்படம் இதுவாகும். 

இப்படத்தின் முதல் டிரைலரை சமீபத்தில் நடந்த கேனன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக வெளியிட இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை. 

இந்நிலையில் கடந்தவாரம், கோச்சடையான் படத்தின் முதல் டீசர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என செளந்தர்யா கூறியிருந்தார். அதன்படி இன்று(செப்.,9ம் தேதி) முதல் டீசரை ‌இணையளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி டீசரில், நிறைய ஹீரோக்கள் இருக்கலாம், நிறைய சூப்பர் ஹீரோக்கள் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும் தான் என்ற அடைமொழியுடன் ஒரு பெரிய கோட்டை சுவரின் கதவை உடைத்து கொண்டு வருகிறார் ரஜினி. ரசிகர்கள், இதுவரை பார்த்திராத ரஜினியாக முற்றிலும் வித்தியாசமாக வருகிறார் இந்த கோச்சடையான்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு கோச்சடையான் படத்தின் முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறோம் என்று படத்தின் இயக்குநர் செளந்தர்யா தனது டுவிட்டரில் கூறியிருக்கிறார். 

மேலும் படத்தின் ஆடியோ ரிலீஸ் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிரைலரில் கூறப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் கோச்சடையான் படம் வெளியாக இருக்கிறது. 

தீபாவளி அல்லது டிசம்பரில் கோச்சடையான் படம் வெளியாகும் என தெரிகிறது.

தீபாவளிக்கு மோதத் தயாராகும் படங்கள்


இந்த ஆண்டு வருகிற நவம்பர் 2ந் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. ஒரு காலத்தில் தீபாவளி என்றால் புத்தாடை, பலகாரம், பட்டாசுக்கு அடுத்த இடத்தில் இருந்தது சினிமா. 

தீபாவளி அன்று தன் அபிமான நடிகரின் படம் ரிலீசானால்அதிகாலையிலேயே தியேட்டர் வாசலில் பட்டாசு கொளுத்தி முதல் ஷோவை முண்டியடித்து பார்த்து வியர்வையுடன் தியேட்டருக்குள் நுழைந்து கைதட்டி, விசிலடித்து படம் பார்த்து திரும்பிய காலமெல்லாம் இப்போது இல்லை. 

தீபாவளிக்கு ரசிகர்கள் சினிமாவை பெரிதாக எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த சில வருடங்களாவே தீபாவளிக்கு பெரிதாக படங்கள் ரிலீசாகவில்லை. ஒரு காலத்தில் தீபாவளிக்கு பத்து படங்கள் 12 படங்கள் வரை ரிலீசாகும். அதில் நான்கைந்தாவது பெரிய ஹீரோக்கள் நடித்த படமாக இருக்கும். 

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் தீபாவளிக்கு ரிலீசானால் ரசிகனுக்கு அது டபுள் தீபாவளியாக இருக்கும். அதன் பிறகு ரஜினி, கமல் படம் ஒரே தீபாவளிக்கு ரிலீசானால் அது ரசிகர்களுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி இருக்கும். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜீத், விஜய் படங்கள் வெளியானால் தியேட்டர்கள் கொண்டாட்டமாக இருக்கும். இப்போது அது எல்லாமே மாறிவிட்டது. இப்போது ஒரு சில டாப் நடிகர்களுக்கு மட்டுமே கொண்டாட்டமான ஓப்பனிங் இருக்கிறது. 

மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் நன்றாக இருப்பதாக மவுத்டாக் வந்தால் மட்டுமே தியேட்டருக்கு கூட்டம் திரள்கிறது. இப்படி காலம் மாறிவிட்டதால் சினிமா தீபாவளி கொண்டாட்டமும் குறைந்து விட்டது.

இதை எதிரொலிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு படங்கள் வெளிவருவது குறைந்து விட்டது.  ஒன்றிரண்டு பெரிய படங்களும் சில சிறிய படங்களும் மட்டுமே ரிலீசாகிறது. 

பெரிய ஹீரோக்களும் தீபாவளிக்கு தங்கள் படம் ரிலீசாக வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லை. இப்படித்தான் கடந்த சில ஆண்டுகள் கடந்தது. 

ஆனால் இந்த ஆண்டு அந்த நிலையில் பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இதுவரை 5 படங்கள் வெளிவரப்போவதாக அறிவித்துள்ளார்கள். 

அஜீத் நயன்தாரா நடித்துள்ள ஆரம்பம், ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம், கார்த்தி காஜல் அகர்வால் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா, சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு, விக்ரம் பிரபு நடித்துள்ள இவன் வேற மாதிரி ஆகியவை அந்த 5 படங்கள்.

இதுதவிர விஸ்வரூபம்-2 தீபாவளி ரிலீஸ் என்று கூறப்படுகிறது. வில்லங்கம் எதுவும் இல்லை என்றால் தீபாவளி ரிலீஸ் உறுதி என்கிறார்கள். ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 

அதே நேரத்தில் ரஜினியின் கோச்சடையானை தீபாவளிக்கு கொண்டு வருகிறோம் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது. அதை நோக்கியே பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இரண்டில் ஒரு படம் கட்டாயம் ரிலீசாகும் என்றும், இரண்டுமே ரிலீசானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி இரண்டு படங்களும் ரிலீசானால் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு அட்டகாச தீபாவளியாகத்தான் இருக்கும்.

இதிலும் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. முன்பு ஒரு படம் தமிழ்நாடு முழுவதும் அதிகபட்சம் 150 தியேட்டர்களில் ரிலீசாகும், 200 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுவதையே பெருமையாக சொல்வார்கள். இப்போது அப்படி இல்லை கியூப், பிஎக்டி, ஹெச்டி போன்ற டிஜிட்டல் டெக்னாலஜி வந்து விட்டதால் சின்ன படங்களே 300 தியேட்டர்களில் ரிலீசாகிறது. 

அந்த வகையில் பார்த்தால் ரஜினி படம், அஜீத் படம், கமல் படத்துக்கு இருக்கிற தியேட்டர்கள் போதாது பிறகு எப்படி மற்ற படத்தை ரிலீஸ் செய்ய முடியும். 

அதனால் எப்படிப் பார்த்தாலும் இரண்டு பெரிய படங்கள், மூன்று சிறிய படங்கள் என 5 படங்களுக்குள்தான் ரிலீசாகும் என்கிறார்கள். அதோடு இதுபோன்ற கலெக்ஷனை அள்ளும் காலங்களில் தியேட்டர்காரர்கள் யு சான்றிதழுடன் வரிவிலக்கு பெற்ற படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.

அப்போதுதானே அம்புட்டு காசையும் அவர்களே அள்ள முடியும். இல்லாவிட்டால் 30 பர்சென்டை கவர்மெண்டுக்கு கொடுக்க வேண்டுமே. இத்தனை சிக்கல்களையும் மீறி சினிமா பட்டாசு எப்படி வெடிக்கப்போகிறது என்பது தீபாவளி  அன்றைக்குத்தான் தெரியும்.

இசையுடன் நடிப்பிலும் கலக்கும் வெற்றி ஆண்டவர்மியூசிக் போட்டுக்கிட்டே சினிமாலேயும் நடிக்குற வெற்றி ஆண்டவர் இப்போ ஒரு முஸ்லிம் பெயர் கொண்ட படத்தில் நடிச்சிக்கிட்டிருக்கார். அவரோட வரவு செலவு கணக்கையெல்லாம பார்க்குறது அவரோட மனைவிகுலம்தான். 

சமீபத்துல ஒரு புரட்யூசரும், டைரக்டரும் வெற்றிய ஹீரோவா போட்டு படம் எடுக்காலாமுன்னு அவரை சந்திச்சு கதையை சொல்லியிருக்காங்க. "கதை பிடிச்சிருக்கு நான் நடிக்கிறேன். 

சம்பளத்தை அவுங்ககிட்ட பேசிக்குங்க"ன்னு மனைவிகுலம் பக்கம் கைகாட்டியிருக்காராம். 

டீ, காப்பி கொடுத்து பிரமாதமா உபசரிச்ச மனைவிகுலம். "அவரை ஹரோவாக்குறதுக்கு நிறைய கோடி செலவழிச்சிட்டோம். 

அதனால அவரு நடிக்கிறதுக்கு, மியூசிக் போடுறதுக்கு, நான் காஸ்டியூம் டிசைன் பண்றதுக்கு எல்லாத்துக்கும் பேக்கேஜா இரண்டு கோடி கொடுத்திடுங்க"ன்னு சொல்லியிருக்காரு, அதைக்கேட்டு போன வேகத்துல ஓடி வந்துட்டாங்களாம் தயாரிப்பும், டைரக்டரும்.

விஸ்வரூபம் -2 வுக்கு இப்போதே எதிர்ப்பு


கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம். இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சொல்லி அப்படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் தடை கோரின. 

அதையடுத்து தமிழக அரசு தலையிட்டு படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததோடு, சில காட்சிகளை கத்தரித்து வெளியிட அனுமதி கோரியது.

அதேபோல், இப்போது கமல் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் -2 படத்திலும் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், கமல் தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லீம்களை காயப்படுத்தி வருகிறார் என்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், டாம் 999, மெட்ராஸ் கபே போன்ற படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன என்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

அதோடு, விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாமல், சமூக ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் படத்தை எடுத்து, ஏற்கனவே காயம்பட்டுள்ள முஸ்லீம்களின் காயத்துக்கு இந்த முறை கமல் மருந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில், பின்லேடன் கெட்டப்பில் கமல் நடித்திருப்பது போன்ற போட்டோக்கள் இணையதளங்களில் வெளியான பிறகே இதுபோன்ற எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விடிய விடிய நீச்சல் குளத்தில் மிதந்த நடிகை


நடிகர்களின் மானேஜர்கள் தயாரிப்பாளர்கள் ஆகும் காலம் இது. த்ரிஷாவின் மானேஜர்தான் களவாணி படத்தை தயாரித்தார், பல தெலுங்கு நடிகைகளின் மானேஜர் சதீஷ்தான் நான்தாண்டா படத்தை தயாரிக்கிறார். 

இந்த வரிசையில் அடுத்து வருகிறார் சுனேனாவின் மானேஜர் டி.ரமேஷ் பாபு. இவர் தெலுங்கு தமிழில் எடுத்து வரும் படம் "தோடா அட்றாசக்கை" (தலைப்புக்கு இம்புட்டு பஞ்சமாய்யா). 

ஆர்யன் ராஜேஷ் ஹீரோ. மோனிகா சிங் ஹீரோயின். த்ரில்லர் படம். போனசாக கவர்ச்சியும் உண்டு. பெரும்பகுதி ஷூட்டிங்கை ஐதராபாத், ஊட்டியில் முடித்து விட்டு கவர்ச்சி காட்சிகளை சென்னையில் படமாக்கினார்கள்.

ஈசியார் ரோட்டில் உள்ள ஒரு ரெசார்ட் நீச்சல்குளத்தில் மூன்று நாட்கள் ராத்திரி விடிய விடிய இஷா என்ற மும்பை கவர்ச்சி நடிகையை நீச்சல் குளத்தில் மிதக்க வைத்து ஷூட்டிங் நடத்தினார்கள். பாவம் இஷா ஷூட்டிங் முடிஞ்சு  ஜுரத்தோடு மூக்கை சிந்திக்கொண்டே மும்பைக்குத் திரும்பினார்.

எகிறும் பட்ஜெட் - தவிப்பில் தயாரிப்பாளர்

எங்கே, எப்போது என்று கேட்டுக்கொண்டே சினிமாவுக்கு வந்தவர் அந்த இளம் இயக்குனர். 

முதல் படமே ஹிட்டாக தமிழ் சினிமாவின் தூணே நான்தான் என்கிற மாதிரி நடந்த கொள்கிறாராம். 

அன்னை இல்லத்து வாரிசு நடிக்க அவர் இயக்கும் படத்துக்கு அவர் சொன்ன நாளும், பட்ஜெட்டும் காலியாகி விட்டதாம். ஆனால் படம் முக்கால்வாசிதான் முடிந்திருக்கிறதாம். 

இன்னும் 20 நாள் ஷூட்டிங் நடத்தணும் 5 கோடி கூடுதல் பட்ஜெட் ஆகும்னு தயாரிப்பு வவுத்துல புளிய கரைச்சிருக்காராம். 

பணத்தை போட்டு படத்தை முடிச்சிடலாமா இல்லை விஷயத்தை வெளியில சொல்லி தீர்வு காணலாமா என்று தயாரிப்பு தரப்பு தீவிர யோசனையில இருக்காங்களாம்.

தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்


‘‘கற்றதுதமிழ்’’ திரைப்படத்தின் இயக்குநர் ராம், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ‘தங்கமீன்கள்’. 

காசு கொடுத்தால் தான் கல்வி எனும் இன்றைய நிலையை எள்ளி நகையாடியிருக்கும் இப்படத்தில், தனியார் பள்ளி கல்வி டீச்சர்களுக்கும், மிஸ்களுக்கும், மேடம்களுக்கும் மட்டுமல்ல, தங்களது குழந்தைகளின் தரம், திறம் தெரியாமலே படி, படி என படுத்தி எடுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான திரைப்ப(பா)ட‌மாக அமைந்திருக்கிறது ‘தங்கமீன்கள்’ என்றால் மிகையல்ல!

கதைப்படி ரோகிணி -‘பூ’ ராமு தம்பதிகளின் வாரிசு ராம். ராமின் செல்லமகள் ‘செல்லம்மா’ எனும் சிறுமி சாதனா! ரிட்டர்யர்டு ஹெட்மாஸ்டர் அப்பாவான ‘பூ’ ராமுவின் பணத்திலும், வீட்டிலும் காலம் தள்ளும் ராம், மகள் கேட்பதை எல்லாம் வாங்கித்தர நினைப்பதுடன் விரும்புவதை எல்லாம் செய்யவும் நினைக்கிறார். 

மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்றே மந்தமான குழந்தையான செல்லம்மாவை மேலும், மேலும் செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கி விடப்போகிறான் மகன் ராம் எனும் பயத்தில் அடிக்கடி ‘பூ’ ராமு, ராமிடம் பேத்திக்காக பேச, அதுவே அப்பா - பிள்ளையிடம் பிரிவை உண்டாக்குகிறது. 

அதன் விளைவு மொத்த குடும்பத்தில் இருந்தும் ராம் பிரிந்து கேரளா - கொச்சிக்கு வேலைக்கு போகிறார். அப்பாவும், மகளும் பிரிவு தாங்காமல் அடிக்கடி போனில் புலம்பி அழ, தியேட்டரில் நாமும் சேர்ந்து அழுவது மாதிரியான உருக்கமான காட்சிகள் ஒரு பக்கம் உலுக்கி எடுக்கிறது. 

மற்றொரு பக்கம், இன்றைய காசு கல்வியும், அதன் கண்டிப்பும், தன் மகளின் வாழ்க்கையை பாழ் பண்ணி விடும் என நம்பும் ராம், அவளை, அவள் விரும்பும் எவிட்டா மிஸ் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விட்டு மகள் விரும்பும் கல்வியை தருகிறார். மக்களுக்கு பாடம் நடத்துகிறார்! இதுதான் ‘தங்கமீன்கள்’ படத்தின் ஜொலி ஜொலிக்கும் மொத்த கதையும்.

இதனூடே மகள் விரும்பும் உயர் ஜாதி நாய்க்காக ராம், நாயாய், பேய்யாய் நாக்கு வெளித்தள்ள ஏழுமலை, ஏழுகடல் தாண்டும் சுவாரஸ்ய காட்சிகள், தனியார் பள்ளி டீச்சரின் கண்டிப்பு, அதனால் சக மாணவர்கள் செல்லம்மா சாதனாவை ‘‘டபிள்யூ’’ என பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் கலாட்டா, ஆஸ்திரேலியா ரிட்டன் ராமின் தங்கை குடும்பத்தின் அலட்டல், இல்வாழ்க்கைக்குப் போன எவிட்டா மிஸ்ஸின் மாற்றம், செல்லம்மாவால் அவருக்கு கிடைக்கும் ஏற்றமும்... என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களை கலந்து கட்டி தங்கமீன்களை தகதகவென ஜொலிக்கவிட்டிருக்கும் ராமின் துணிச்சலுக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’ அடித்தே ஆக வேண்டும்!

இயக்குநராக மட்டுமல்லாமல் இக்கதையின் நாயகராகவும் ராம் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்! கடன் கேட்டுபோன இடத்தில் ஐந்தாறு முறை அலையவிட்டு அல்லல்படுத்துவதுடன், அட்வைஸூம் பண்ணும் நண்பனை ராம் எச்சரிக்கும் இடத்தில் ஆகட்டும், டபிள்யூவை சிம்பிளாக குழந்தைக்கு புரியும்படி எழுத கற்றுத்தராது, அதையே அவளது பட்டப்பெயராக காரணமாகும் டீச்சரிடமும், ஸ்கூல் பிரின்ஸ்பாலிடமும் நியாயம் கேட்டு ராம் போராடும் இடத்திலாகட்டும், மனிதர் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். 

அதேமாதிரி மகளை பிரிந்து வாடும் இடங்களில் கரையாதோர் நெஞ்சையும் கரைக்கும் இடங்களில் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறார். ராமுக்கு நிறைய விருதுகள் நிச்சயம்!

சிறுமி செல்லம்மாவாக சாதனா, அப்பாவி மகளாகவும், அப்பாவின் மகளாகவும் அசத்தி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கே குளத்தில் விழுந்து தங்கமீன் ஆகிவிடுவாரோ எனும் திகிலுடனேயே நம்மை படம் பார்க்கும் இவரது பாத்திரம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாத்திரமென்றாலும் ‘பலே’ சொல்ல வைக்கும் பாத்திரம் என்றாலும் மிகையல்ல! அம்மணிக்கும் விருதுகள் நிச்சயம்!

இன்னிக்கு ராத்திரி பூரி சுடுறாங்க எங்க வீட்டுல... அதனால நாளைக்கு வீட்டுல கோவிச்சுகிட்டு செல்லலாமுனு இருக்கேன் எனும் பேபி நித்யஸ்ரீ சஞ்சனாவில் தொடங்கி, ஸ்டெல்லா மிஸ்ஸாக கர்ண கொடூரமாக வரும் லிஸி வாரியார், எவிட்டா மிஸ் பத்மபிரியா, ராமின் மனைவியாக, செல்லம்மாவின் தாய் வடிவாக வரும் ஷெல்லி கிஷோர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியராக, செல்லம்மாவின் தாத்தாவாக வரும் ‘பூ’ ராம் அவரது மனைவியாக, செல்லம்மாவின் பாட்டியாக வரும் நடிகை ரோகிணி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘தங்கமீன்கள்’ படத்தின் பெரும்பலம்!

யுவன்சங்கர்ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், அர்பிந்து சாராவின் ஓவிய ஒளிப்பதிவும், ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடை‌யேயான உணர்வுப்பூர்வமான பாசத்தையும், பணகல்வி தரும் மோசத்தையும் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல இயக்குநர் ராமிற்கு பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றன! வயசுக்கு வர்றதுன்ன என்னம்மா? உள்ளிட்ட ஒரு சில வசனக்கோளாறுகள், குறைபாடுகள் இருந்தாலும்‘தங்கமீன்கள்’ ஜொலிக்கும் உணர்வுப்பூர்வமான ‘வைரமீன்கள்’!!
Related Posts Plugin for WordPress, Blogger...