ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்


முதன்முதலாக ‘சித்திரம் பேசுதடி’ என்னும் கலர்புல் காதல் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பின் ‘இது மிஷ்கின் படம்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே ‘‘அஞ்சாதே’’, ‘‘நந்தலாலா’’, ‘‘யுத்தம் செய்’’, ‘முகமூடி’ என.. பிலிம் பெஸ்டிவலில் மட்டுமே இடம்பிடிக்கும், நமக்கும் பிடிக்கும் படங்களை இயக்கி... மேலைநாட்டு படங்களுக்கு தமிழ்முலாம் பூசுவதை விடுவதாக இல்லை... என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!’

சென்னையின் நிசப்தமான ஓர் நள்ளிரவில் ரோட்டில் குண்டடிபட்டு உயிருக்கு போராடியபடி கிடக்கிறார் மிஷ்கின். அதை பார்க்கும் ஒன்றிரண்டுபேர் கண்டும் காணாமல் போய்விட, இளம் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் இலவச 108 ஆம்புலன்ஸ், இன்னும் பிற தனியார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எதற்கும் போன் செய்யாமல் குண்டடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் மிஷ்கினை தன் டூவீலரில் பின்பக்கம் அமர்த்தி வைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலாக கதவை தட்டுகிறார். யாரும் இவர் அபயக்குரலுக்கு காது கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர்.

உடனடியாக தன் வீட்டிற்கு மிஷ்கினை தூக்கி செல்லும்‌ அந்த மெடிக்கல் மாணவர், மிராக்கிளாக வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மிஷ்கினுக்கு தேவையான முதலுதவிகள் செய்து அவரது உடம்பை அறுத்து துப்பாக்கி தோட்டாவை வெளியில் எடுக்கிறார். 

அதுவும் ‘கேட்டமைன்’ என்னும் போதை மருந்தை உட்கொண்டு தனது மருத்துவ கல்லூரி பேராசிரியரின் செல்போன் ஆலோசனைப்படி மிஷ்கினுக்கும் சிலைன் குளூக்கோஸ் வாட்டரில் கேட்டமைனை செலுத்தி அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அவர் அருகிலேயே படுத்தும் உறங்குகிறார். 

விடிந்து எழுந்து பார்த்தால் ஆபரேஷன் முடிந்து அருகில் உறங்கிய அல்லதுமயங்கிக்கிடந்த மிஷ் ‘எஸ்’ஸாகி இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? மிஷ்கின் 14 கொடூர கொலைகள் செய்த உல்ப் (ஓநாய்) என்றும், அவரை போலீஸ்தான் துப்பாக்கியால் சுட்டது என்றும், அவர‌ை காப்பாறிய குற்றத்திற்காக அந்த இளம் மருத்துவ கல்லூரி மாணவ‌ர் ஸ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு தூக்கிப் போகிறது போலீஸ்!

மிஷ்கினை காப்பாற்றிய ஸ்ரீயின் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து மிஷ்கினை சுட்டு பொசுக்கவும் சொல்கிறது போலீஸ்! அவரை இவர் சுட்டாரா? அல்லது இவரை அவர் சுட்டாரா என்னும் மீதிக்கதையுடன், வில்லன் தம்பாவின் ரோல் என்ன? போலீசின் கோல் என்ன? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி, கண் தெரியாத ஒரு குடும்‌பத்திற்கு மிஷ்கின் இழைத்த கொடூரத்தையும், அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இவ்வளவும் செய்கிறார் என்னும் கதையும் கலந்துகட்டி ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள்! என்ன? விமர்சனத்‌தைப் படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதா..? படத்தை பார்த்தீர்கள் என்றால் இ‌தைவிட இருபது மடங்கு ரத்தவாடை, துப்பாக்கி சத்தம், சுடுகாட்டு நாற்றம், சைக்கோத்தனம் இன்னும், இன்னும், இன்னும் என்னவெல்லாமோ தெரியும்!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படக்கதையுடன் படத்தில், அந்தகண் தெரியாத குடும்பத்திற்கு தான் இழைத்த கொடூரக்கதையை மிஷ்கின் இமை கொட்டாமல் காமிராவை பார்த்தபடி 5 நிமிடத்திற்கு மேல் உருக்கமாக சொல்லி முடிக்கும் கதை சூப்பர்ப்! அதே மாதிரி ரயில் இன்ஜின் டிரைவரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக்கியபடி, ரயிலில் போலீஸ் எதிர்பாராமல், தம்பாவின் ஆட்கள் கண்ணிலும் மண்ணை தூவியபடி வந்து தன் உயிரை காப்பாற்றிய மாணவனை கடத்தி செல்லும் காட்சி மயிர் கூச்செரியும் ரகமென்றாலும், தன் உயிரை காப்பாற்றிய மிஷ்கின் சந்திக்க துடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னும் கேள்வியும் எழும்பாமல் இல்லை! 

அது மாதிரி குண்டடிபட்டு உயிர் போகும் நிலையில் மயங்கிக்கிடக்கும் மிஷ்கின் அறுவை சிகிச்சை, அதுவும் அப்பரண்டீஸ் மாணவனால் அரை குறையாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘எஸ்’ ஆவது நம்பமுடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதும், அந்த பார்வையற்ற குடும்பத்தின் ஒரு குழந்தையை தன் அஜாக்கிரதையால் தீர்த்துக் கட்டிய மிஷ்கின், அந்த குடும்பத்தை தூக்கிக்கொண்டே திரிந்து, அந்த சிறுமி கார்த்தியை தவிர்த்து மொத்த குடும்பமும் பலியாக காரணமானவனும் ஏன் என்பது புரியாத புதிர்! அதே மாதிரி, ஒரே குடும்பத்தில் எட்வர்டு, கார்த்தி என பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அது இந்து குடும்பமா? கிறிஸ்தவ குடும்பமா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது! 

தீபாவளி நேரத்தில் குழந்தைகள் விதவிதமான பொம்‌மை துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ‘ரோல் கேப்’ வெடிப்பது மாதிரி ‘ஓநாய்’ மிஷ்கினும், தம்பாவின் கையாட்களும் துப்பாக்கியும் கையுமாக திரிவது, நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறோமா? இந்தியாவில், சென்னையில் இருக்கிறோமா? என்னும் சந்தேகத்தை கிளப்புவதும் பலவீனம்!

இளையராஜாவின் பாடல்களே இல்லாத பின்னணி இசை, ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, மிஷ்கின், ஸ்ரீயின் நடிப்பு உள்ளிட்ட பிளஸ் பாய்ண்ட்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தூக்கி நிறுத்த முயன்றாலும், லாஜிக் மிஸ்டேக் கதையும், நம்பமுடியாத திரைக்கதையும், சுடுகாட்டு பின்னணியும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒருவழி ஆக்கிவிடுகின்றன.

ஆக மொத்தத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்‌’, ‘மிஷ்கினும் அவரது ரசிகர்களும்’ என்றால் மிகையல்ல.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...