வசூலில் புதிய சாதனை படைக்கு்ம் தி டார்க் நைட் ரைசஸ்

கிறிஸ்டோபர் நோலனின் கடைசி பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைசஸ் வசூலை வாரிக் குவித்துள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் 64 மில்லியன் டாலர்களை இந்த வார இறுதியில் குவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 537.3 மில்லியன் டாலர்களை இந்தப் படம் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டதால், வசூல் பாதிக்குமோ என முதலில் அச்சப்பட்ட படத்தின் வெளியீட்டாளர் வார்னர் நிறுவனம்.

ஆனால் ஒலிம்பிக் போட்டி தொடங்கிய அன்றும் கூட, நல்ல வசூல் தொடர்ந்துள்ளது.

சர்வதேச பாக்ஸ் ஆபீஸில், பேட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஐஸ் ஏஜ் 4-ம், மூன்றாவது இடத்தில் தி வாட்ச் படமும் உள்ளன. நான்காவது இடத்தில் ஸ்டெப் அப் ரெவால்யூஷனும், ஐந்தாவது இடத்தில் டெட் படமும் உள்ளன.

பொன்னியின் செல்வன் இம்முறை செல்வராகவன் கையில்

எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோரால் எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை இப்போது செல்வராகவன் கையில் எடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் பல பேர் முடிவெடுத்து சில காரணங்களால் முடியாமல் ‌போனது.

இந்த கதையை படம் எடுக்க முதலில் பிள்ளையார் சுழி போட்டவரே டைரக்டர் மகேந்திரன் தான். எம்.ஜி.ஆர்-ஐ வைத்து இப்படத்தை இயக்க முயற்சி செய்து திரைக்கதை, வசனம் என எல்லாவற்றையும் ரெடி பண்ணினார்.

ஆனால் அப்போது எம்.ஜி.ஆர்., பல படங்களில் நடித்துக் கொண்டு ஹை பீக்கில் இருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டார் மகேந்திரன். அதன்பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை எடுக்க முயற்சி செய்தார். அவராலும் முடியவில்லை.

சமீபத்தில் டைரக்டர் மணிரத்னம் இப்படத்தை எடுக்க முடிவு செய்து, திரைக்கதை எல்லாம் ரெடி பண்ணி ஹீரோக்களாக விஜய், விக்ரம், ஆர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கிறார்கள் என்று அறிவித்தார்.

சரி படமும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பட்ஜெட் பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால் மணிரத்னத்தின் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க ரொம்ப ஆர்வமாய் இருப்பதாக டைரக்டர் செல்வராகவன் தனது ட்விட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தை இயக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

இதில் ஹீரோக்களாக விக்ரம், ஆர்யா, ஜீவா ஆகியோரை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். இதில் விக்ரமிற்கு ராஜராஜசோழன் வேடமும், ஆர்யாவுக்கு கரிகாலன் வேடமும், ஜீவாவிற்கு வந்திய தேவன் வேடமும் பொருத்தமாக இருக்கும் எண்பதால் அவர்களுக்கு இந்த வேடங்களை கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

ஷங்கரின் ஐ-யில் நான் இல்லை - தீபிகா படுகோன்

ஷங்கர் இயக்கும், ஐ படத்தில் நான் நடிக்கவில்லை என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். நண்பன் படத்திற்கு ஷங்கர் இயக்கும் படம் ஐ.

இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இவர்களுடன் மலையாளர் நடிகர் சுரேஷ் கோபி, சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த முதல் பாடலை விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஏ.வி.எம்மில் படமாக்கிவிட்டார் ஷங்கர்.

இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு முக்கிய ரோலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை தீபிகா மறுத்துள்ளார்.

இதுகுறித்து தீபிகா படுகோன் கூறியுள்ளதாவது, கூகுள் அலர்ட் மூலம் எனக்கு இந்த செய்தி தெரியவந்தது.

இதுமுற்றிலும் தவறான செய்தி. ஷங்கர் படத்தில் நான் நடிக்கிறேன் என்பது வெறும் வதந்திதான்.

நான் அவரது ஐ படத்தில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி படத்தில் கெஸ்ட் ரோலில் அஜித்

ஸ்ரீதேவி நடித்து வரும் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில், ‌கெஸ்ட் ரோலில் நடிகர் அஜித் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவை கலக்கிய ஸ்ரீதேவி, பின்னர் இந்தி திரையுலகிலும் கால்பதித்து, அங்கும் முத்திரை பதித்தார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்ட ஸ்ரீதேவி, இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடிக்கிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்கா செல்லும் ஸ்ரீதேவி, அங்கு மொழி பிரச்னையால், ஆங்கில மொழியை திக்கி திணறி பேசி அங்குள்ளவர்களால் கிண்டல்களுக்கு ஆளாகிறார்.

பின்னர் அதை சவாலாக ஏற்று முறைப்படி ஆங்கிலத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இதுவே இப்படத்தின் கதை. கவுரி ஷிண்டே இயக்கும் இப்படத்தை பால்கி தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டனர் படக்குழுவினர். ஸ்ரீதேவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இப்படத்தை தென்னிந்தியாவிலும் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.

ஏற்கனவே இந்தி இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் ஒரு முக்கிய கேரக்டரில் தோன்றவுள்ளார். அதேப்போல் தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாக இருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் நடித்த கேரக்டரில் டாப் ஸ்டார் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது.

அதன்படி ஆரம்பத்தில் அமிதாப் ரோலில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியுடன் ஸ்ரீதேவி நிறைய படங்களில் நடித்துள்ளதாக அவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவார் என்பது படக்குழுவின் நம்பிக்கை. ஆனால் ரஜினியோ மறுத்துவிட்டாராம்.

இந்நிலையில் ரஜினிக்கு பதில் அந்த கேரக்டரில் இப்போது அஜித்தை நடிக்க பேச்சுவார்ததை நடத்தி வருகி்ன்றனர். இதனை படக்குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டாப்ஸ்டார் ஒருவ‌ரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றும், இதற்கான அறிவிப்பு முறைப்படி ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

தொடரும் விஜய்யின் துப்பாக்கி படத்திற்கான சிக்கல்

விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் தலைப்பிற்கான சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் படக்குழுவினர் கவலையடைந்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்து வருவதாகவும், அதனால் துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்று கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 25ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

துப்பாக்கி படத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தால் தொடர்ந்து படதலைப்பு தொடர்பான பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படாததால் துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய விஜய்

சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய்.

அங்கு சாலையில் காத்திருந்த போக்குவரத்து போலீஸார் காரை கையை காட்டி நிறுத்தி, அந்த காஸ்ட்லீகாரின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பலிம்‌ ரோல்களை அகற்றாமைக்காக அபராதம் போட்டுவிட்டனர்.

நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். பாவம்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே மேடையில் தோன்றிய ரஜினி, கமல்

தமிழ் சினிமாவில் இன்று ஒரு சரித்திர நிகழ்வு. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இந்த இன்ப அதிர்ச்சி நடந்தது கும்கி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான்.

மைனா படத்திற்கு பிறகு பிரபு‌சாலமன் இயக்கி இருக்கும் படம் கும்கி. இப்படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் ஹீரோவாக நடிக்க, கேரளத்து வரவு லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை கமல்ஹாசன் வெளியிட்டார்.

ஆடியோ வெயீட்டிற்கு பிறகு பேசிய கமல்ஹாசன், முதற்கண் என் அய்யனுக்கு வணக்கம். என்னை சிவாஜியின் ஒரு பிள்ளையாக பாவித்தற்கு நன்றி. நான் இங்கு வந்தது ஒரு கடமை. அவர் இறந்த பிறகும் பிரபு மற்றும் ராம்குமார் என்னை அவர்களது ‌சகோதரனாக பார்க்கிறார்கள்.

இங்கு சொன்னார்கள் விக்ரம் முதல் அடி நன்றாக வைத்திருக்கிறார் என்று, நான் சொல்கிறேன், முதல்அடியே அவர் அருவியில் வைத்திருக்கிறார்.அதில் அன்பு கொட்டுகிறது. மேலும் இந்த படத்தில் வெற்றியின் சாயல் தெரிகிறது. அதாவது மினிமம் கேரண்டி இந்த படம். இப்போதும் கர்ணன் வெற்றியை பார்த்தால் புரியும் அது மினிமன் கேரண்டி படம்.

இங்கு ரொம்ப முக்கியமானது ரஜினி வந்தது. ரொம்ப நியாமான ஆளு. இது எங்கள் வீட்டு விழா, எங்கள் இருவரது வீட்டின்‌ செங்கலில் சிவாஜி, பாலசந்தர், ஏ.வி.எம். பெயர் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுக்கு அவர்கள் கிடைத்த பாக்கியம்.

நான் சிவாஜிக்கு சவால் விட்ட படம் தான் தேவர் மகன். இந்த விழாவில் கலந்து கொண்டது தலை குனிந்து, முகம் சுளித்து கலந்து கொண்டதற்காக அல்ல, மனசு நிறைய வாழ்த்த வந்திருக்கோம். விக்ரமுக்கு ‌நிறைய பொறுப்பு இருக்கு. எப்போதும் பயம் கூடாது. தினம் கற்று கொண்டே இரு. நாங்கள் அப்படித்தான் கற்று கொண்டோம்.

நாங்கள் சிவாஜியிடம் கற்று கொண்டது நிறைய. மேலும் ஒன்று சொல்கிறேன். கலைஞர் எழுதிய வசனம், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி தடுமாற வேண்டாம். உன் பகுத்தறிவை கொண்டு செயல்படு என்று சொல்லி வாழ்த்துகிறேன். மேலும் இந்த படத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

ரஜினி பேசும்‌போது, எல்லோருக்கும் வணக்கம். நான் படவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள்.

டாக்டர்களும் விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். என்னிடம் ஒரு குறை உள்ளது. எது என்ன வென்றால், ஒரு விஷயத்தில் கமிட் ஆனா அது அப்படியே மைண்ட்டில் ஓடிட்டு இருக்கும். அதைவிட்டு வெளியில் வரமுடியாது. ரசிர்களாகிய உங்களால் தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். மீண்டும் உயிர் பிழைத்து வந்திருக்கேன்.

உங்களை பார்க்க ‌வெட்கமா இருக்கு. கடன் வாங்கிட்டு, கடன் கொடுத்தவன் வந்தா வேறு பக்கம் போற மாதிரி இருக்கு. உங்களுக்கு எல்லாம் நான் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. மூளை வேலை செய்தாலும், உடம்பு ஒத்துழைக்கணும். நான் சிங்கப்பூரில் மருத்துவமனையில் இருந்தபோது கமல் என்னை பார்க்க விரும்பினார், முடியவில்லை.

நான் இந்தியா வந்ததும் முதல் வேலையா அவருக்கு போன் செய்து நன்றி தெரிவித்தேன். ஒரு ஹாலிவுட் நிறுவனம் வந்து கமைல கூப்பிட்டு படம் பன்றாங்கன்னா, அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று ‌எல்லோருக்கும் தெரியும். கமல் இந்த விழாவுக்கு வருவார் என்று தெரியும்.

ஆனால் பிரபு என்னிடம் வந்து இந்த விழாவில் பங்கேற்கும்படி சொன்னபோது, நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் எனக்கு விழா அழைப்பிதழை கொடுத்துவிட்டு போனார். எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு. பின்னர் காலை பிரபுவுக்கு போன் செய்து நான் விழாவுக்கு வருவதாக சொன்னேன்.

இந்த விழாவில் பங்கேற்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. விக்ரமிற்கு எதிர்காலம் நல்லா இருக்கு. விக்ரம், எல்லாவற்றுக்கும் நீ பயப்படு, ஆனால் கவலைப்படாதே. பிரபு கவலைப்படுவார். என்னா தாத்தா பெயரை காப்பாற்றனுமே.

இந்த படத்திற்காக நீ ரொம்ப உழைத்து இருக்கிறாய். கடவுள் இருக்கார், உன் தாத்தா இருக்கார், கண்டிப்பா நீ நல்லா வருவ. இங்கிருக்கும் இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லி கொள்கிறேன். வருடத்திற்கு ஒரு படம் பண்ணாதீங்க. குறைந்தது 3 படமாவது கையில் வைத்திருங்க.

ஏன்னா ஒரு படம் சரியாக போகவில்லை என்றால் ரொம்ப கஷ்மா இருக்கும், அதனால் 3 படம் கையில் இருந்தால் ரொம்ப நல்லது. இந்தபடத்தில் உழைத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

முன்னதாக நடிகர் பிரபுவுக்கு முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 7.1 சவுண்ட் தொழில்நுட்பம்

இதுவரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த 7.1 சவுண்ட் தொழில்நுட்பம் முதன்முறையாக தமிழ்படம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அது அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்து வரும் ஆதிபகவன் படம் தான். ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.எம்.ஸ்டூடியோ தான் இந்த தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் புகுத்துகிறது.

இதுகுறித்து அமீர் கூறியுள்ளதாவது, சினிமாவின் வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்களும் முக்கிய காரணம்.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாக்களில் ஏற்கனவே 7.1 சவுண்ட் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இப்போது தான் தமிழில் முதன்முறையாக புகுத்தப்பட இருக்கிறது.

அதுவும் முதல்படம் என்னுடைய ஆதிபகவன் படம் என எண்ணும்போது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

முகமூடி போட்டு மறைக்கப்படும் டெக்னீஷியன்கள்

முகமூடி ஆடியோவை சத்யம் சினிமாவில் விஜய்-புனித்ராஜ்குமார் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் மூலம் ஒரு சில நாட்களுக்கு முன் காலையில் ரிலீஸ் செய்துவிட்டு அன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரீவியூ திரையரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் முகமூடியின் எழுத்தாளரும், இயக்குநருமான மிஸ்கின்.

இது எனது கனவுப்படம், சின்னவயது முதல் நான் கனவு கண்டிருந்த கதை இது. ஸ்கூல்டேஸில் நான் பாடப்புத்தகங்களை படித்ததைவிட காமிக்ஸ் புத்தகங்களை படித்து வளர்ந்தவன். இப்படி ஒரு கதையை படம் பண்ண வேண்டும் என்றதும் இந்த கதையை கோடம்பாக்கத்தில் என்னிடம் கேட்காத ஹீரோக்களே கிடையாது.

விஜய், விஷால், சிம்பு என்று பல ஹீரோக்களுக்கும் இந்த கதையை நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் அது ஜீவா நடிக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. அவர் நான் எதிர்பார்த்ததைவிட பிரமாதமாக நடித்து இருக்கிறார். இந்தபடத்திற்கு பின் அந்த தம்பிக்கு பெரிய பிரேக் கிடைக்கும். சூப்பர் ஹீரோவின் டிரஸ்ஸை மாட்டிக்கொள்வதற்கே தனி பலம் வேண்டும்.

அந்த உடையை 92 நாட்கள் மாட்டிக்கொண்டு ஜீவா பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்தார் மனிதர். அவரை மாதிரியே இந்தப்படத்திற்காக நாயகி பூஜா ஹெக்டே, சகநட்சத்திரங்கள் நரேன், நாசர், செல்வா உள்ளிட்டவர்களும், இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் சத்யா உள்ளிட்ட ஒவ்வொருவரும் அவர்களது இணை, துணை உதவியாளர்களும் முகமூடிக்காக உழைத்திருக்கின்றனர்.

அத்தனை பேருக்கும் இந்த தருணத்தில் நன்றி! என்று அப்படி, இப்படி பேசிக்கொண்டே போன மிஷ்கினை மடக்கி விவரமான நிருபர் ஒருவர், எல்லாம் சரி, இதுவரை வெளிவந்த இந்த படத்தின் பப்ளிசிட்டிகளில் நடிகர் ஜீவாவின் பெயர், உங்களது பெயர், தயாரிப்பாளர்களின் பெயர் தவிர மற்றவர்களின் பெயர்கள் முகமூடிக்குள்ளேயே மறைக்கப்பட்டிருப்பதின் காரணம் என்ன...? என எக்குதப்பாக கேட்க மனிதர் அலட்டிக்கொள்ளாமல், நான் ஜீவாவின் முகமூடி என்று கூட போட வேண்டாம் என்று தான் சொன்னேன்.

ஜீவா தரப்பு தான் அதை கேட்கவில்லை. அவ்வளவு ஏன் என் பெயரை கூட நான் விரும்பவில்லை, ஆனால் தனஞ்செயன் கேட்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த மாதிரி படங்களுக்கு ரசிகர்கள் வருவது தான் சரியாக இருக்கும் என்றார் மிஷ்கின்.

உடனே அவரை முந்திக்கொண்டு யு.டி.வி. தென்னிந்திய தலைமை அதிகாரி தனஞ்ஜெயன் எங்களுக்கும் எல்லோரது பெயரையும் பத்திரிக்கை விளம்பரங்களில் போட வேண்டும் என்று ஆசை தான்!

ஆனால் விளம்பரங்களை அத்தனை பெரிசாக கொடுக்காதே‌, இத்தனை சிறியதாக ‌கொடு என்று தமிழ் திரையுலகில் சகட்டுமேனிக்கு சகலரும் சொல்லுவதால் விளம்பரங்களில் பல டெக்னீஷியன்களின் பெயர்களை இடம் பெற செய்யமுடியவில்லை என்றார்.

அதற்காக முகமூடி படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா, இசையமைப்பாளர் கே இவர்களது பெயர்கள் எல்லாம் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது ரொம்பவே ஓவருங்க தனஞ்ஜெயன்!

ஜெயம் ரவி படத்தில் ஜான் சீனா, ஸ்டோன் கோல்டு ஸ்டீவ் ஆஸ்டின்

பொதுவாக நம்மூர் சினிமாக்களில் வெளிமாநில, வெளிநாட்டு ஹீரோயின்க‌ள் தான் அதிகளவு இறக்குமதியாவர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

ஹீரோயின்கள் மட்டுமல்லாது, வில்லன்களை கூட வெளிமாநிலத்தவரையும், வெளிநாட்டவரையும் நடிக்க வைக்க ஆரம்பித்துள்ளனர்.

பேராண்மை படத்தில் எஸ்.பி.ஜனநாதன், ரொணால்டு கிக்கிங்கரையும், 7ம் அறிவு படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஜானி டிரய் நுகுயென்னையும் நடிக்க வைத்தனர்.

அந்தவரிசையில் இப்போது இன்னும் ஒரு ஹாலிவுட் நடி‌கரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அது கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில், ஜெயம் ரவி - த்ரிஷா நடிக்க இருக்கும் பூலோகம் படத்தில் தான்.

பூலோகம் படத்தில் ஜெயம் ரவி பாக்ஸராக நடிக்கிறார். அதனால் இப்படத்தில் டபிள்யூ.டபிள்யூ.இ., ஸ்டார்களான ஜான் சீனா அல்லது ஸ்டோன் கோல்டு ஸ்டீவ் ஆஸ்டின் ஆகிய இருவரை நடிக்க கல்யாண் கிருஷ்ணா முயற்சி செய்து வருகிறார்.

இரண்டு ஸ்டார்களுக்கும் உலகம் முழுக்க, அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இருவரில் ஒருவரை நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ரீ-மேக்காகும் தில்லு முல்லு - ரஜினி வேடத்தில் சிவா

ரஜினி காமெடியில் கலக்கி, சூப்பர் ஹிட்டான தில்லு முல்லு படம் இப்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ரஜினி நடித்த வேடத்தில் சிவா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரது நடிப்பில் 1980களில் வெளிவந்த படம் தில்லு முல்லு.

ரஜினி இரண்டு கெட்டப்புகளில் தேங்காய் சீனிவாசனிடம் மாறி மாறி நடித்து காமெடியில் அசத்தியிருந்தார்.

மேலும் இப்படத்தின் க்ளைமாகஸ் காட்சியில் நடிகர் கமலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.

ரஜினி முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி சூப்பர் ஹிட்டான படம் இது. இப்படம் இப்போது மீண்டும் ரீ-மேக் ஆக இருக்கிறது.

இதில் ரஜினி நடித்த வேடத்தில் செ‌ன்னை 600028, தமிழ்படம், சரோஜா, கலகலப்பு படங்களின் நாயகன் சிவா நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து சிவா கூறியுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் நடித்த தில்லு முல்லு படத்தில் நான் நடிக்க இருப்பது உண்மைதான்.

அவர் நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அதேசமயம் அவர் பெயரை கெடுக்காமல் நடிக்க வேண்டும் என்று எண்ணும்போது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஷங்கர் படத்தில் பவர் ஸ்டார் - ஒரு ஷாக் நியூஸ்

இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தில் பிஸியாக பரபரப்பாக பேசப்படும் ஒரே ஸ்டார் என்றால் அது பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் தான்.

எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர் தலையை கோதி விடும் ஸ்டைலும், எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் அதை அசால்ட்டாக எடுத்து கொள்ளும் மனபக்குவம் கொண்டவர், தனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க, பேஸ்புக்கில் 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க என்று சிரிக்காமல் ‌சொல்பவர் இந்த மனிதர்.

தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், முதன்முறையாக சந்தானத்துடன் கைகோர்த்து இருக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கிய மணிகண்டன் என்பவர் இவர்களை வைத்து "கண்ணா லட்டு திண்ண ஆசையா" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ராமநாரயணன் இப்படத்தை தயாரிக்கிறார். பவர்ஸ்டார், சந்தானம் ஆகியோருடன் சேது என்ற மற்றொரு ஸ்கின் டாக்டரும் நடிக்கிறார்.

படத்தின் கதைப்படி இவர்கள் மூவரும் ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள். ஆனால் அந்தப்பெண் இவர்கள் மூவரில் யாரை காதலிக்கிறாள் என்பதை கலகலப்பாக சொல்ல போகிறாராம் டைரக்டர்.

தற்போது இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார் பவர்ஸ்டார்.

இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர், விக்ரமை வைத்து இயக்கும் "ஐ" படத்தில் ஒரு முக்கிய ரோலில் சந்தானத்துடன் சேர்ந்து பவர் ஸ்டாரும் நடிக்கிறார். என்ன நம்பமுடியவில்லையா...? நம்பாவிட்டாலும் அதுதான் நிஜம்!

இதுகுறித்து பவர்ஸ்டார் நம்மிடம் கூறியதாவது, ஷங்கர் படத்தில் நடிப்பது உண்மை. எப்படி இப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டால் எல்லாம் கடவுளின் அருள் என்றார்.

சரி படத்தில் உங்கள் ரோல் என்ன என்று கேட்டபோது, சாரி! இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஷங்கர் படம், இப்போது 3 நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன்.

இன்னும் 2நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றார் ரொம்ப அடக்கமாய். மேலும் தான் நடித்துள்ள "ஆனந்த தொல்லை" படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், தீபாவளி அன்று தான் என் படம் ரிலீஸ் ஆக வேண்டும்.

அப்போது தான் ரசிகர்களிடம் அது ரீச்சாகும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றார் சிரிக்காமல்...!

எது எப்படியோ, பவர்ஸ்டார் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!!

சதம் அடித்தார் யுவன் ஷங்கர் ராஜா

இசைஞானி இளையராஜாவின் இளைய வாரிசான யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தன்னுடைய 16 வயதில் அறிமுகமானார்.

தனது இளைமை துள்ளும் இசையால் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்துள்ளார்.

தனது தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் இசையமைப்பதோடு இல்லாமல் பல்வேறு பாடல்களும் பாடியும் அசத்தி வருகிறார்.

இவரது சாதனைக்கு மணிமகுடமாய் தற்போது தனது 100 வது படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

அந்தப்படம் வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி, நடிக்கும் பிரியாணி படம்.

இது யுவன் இசையமைக்கும் 100வது படம் என்பதால் ரொம்ப விஷேமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரீமேக் ஆகும் ரஜினி, கமல் படங்கள்

கே.பாலசந்தர் இயக்கத்தில், பெண் பித்தராக கமல் நடித்த படம், "மன்மத லீலை! ரஜினிகாந்த் முதன்முதலாக, மீசையை எடுத்து நடித்த படம், "தில்லுமுல்லு! இவ்விரு படங்களையும், கே.பாலசந்தரின் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, "ரீமேக் செய்கிறார்.

இரண்டு படங்களுமே, எந்த காலத்துக்கும் பொருந்தக் கூடிய கதைகளில் உருவானவை என்பதால், இந்த, "ரீமேக் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சொல்லும் புஷ்பா கந்தசாமி, இந்த படங்களை இயக்க, சில பிரபல இயக்குனர்களிடம் பேசி வருகிறார்.

அதேபோல், ரஜினி, கமல் வேடங்களில், எந்தெந்த நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது.

பில்லா-2 -- சினிமா விமர்சனம்

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கதைகளில் கூட அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர், அஜீத்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்படி வெளிவந்திருக்கும் படம்தான் பில்லா 2.

தடுக்கி விழுந்தாலும் தமிழனாய் விழுவோம் தவறி எழுந்தாலும் தமிழனாய் எழுவோம்... என்றெல்லாம் பக்கம் பக்கமாய் டயலாக் பேசி சென்டிமெண்ட் டச் பண்ணும் மற்ற தமிழ் ஹீரோக்கள் கூட செய்யத் தயங்கும் இலங்கை அகதி கேரக்டரில் இதில் எண்டரி ஆகும் அஜீத்துக்குத்தான் என்ன துணிச்சல்.?!

வாவ்., கள்ளத்தோணி மூலம் கடல் கடந்து இலங்கை அகதியாக இந்தியாவிற்கு எண்ட்ரி ஆகி., இராமேஸ்வரம் அகதிகள் முகாமிற்குள் எண்ட்ரி போட்டுவிட்டு "எஸ்" ஆகும் அஜீத், அதன்பிறகு எடுக்கும் அவதாரங்கள் எல்லாம் எக்குத்தப்பாக அவரை எங்கெங்கோ எடுத்து செல்வது தான் ஆச்சர்யம்! அதிசயம்!! லாரியில் மீனும், மீனுக்குள் வைரங்களையும் கடத்தும் அஜீத்., அடுத்து போதை பொருட்கள், அதற்கடுத்து ஆயுதங்கள் என கடத்தி இந்தியாவில் இருந்து இண்டர்நேஷனல் வரை எதிராளிகள் எல்லோரையும் தீர்த்துக்கட்டி குறுகிய காலத்திலேயே பெரிய டானாக., "டர்ன்" ஆவதுடன் தனது அக்கா மகள் ஜாஸ்மினாக வரும் பார்வதி ஓமனக் குட்டனை வில்லன்களிடத்தில் பறி கொடுத்து, பலி கொடுத்துவிட்டு, வில்லி சமீரா எனும் புருணா அப்துல்லாவை நல்லவர் என்று நம்பி மோசம் போய் பின்பு புத்திசாலித்தனமாக அவரைத் தீர்த்துகட்டி, மெயின் வில்லன் திமித்ரி எனும் வித்யாத்ஜாம்வெல்லையும் தீர்த்து கட்டுவதும் தான் பில்லா 2 படத்தின் மொத்த கதையும்!

அகதியாக, அமைதியாக எண்டரியாகும் அஜீத் அதற்கு முந்தைய காட்சியிலேயே அதாவது டைட்டிலுக்கு முந்தைய ஒரு ரீலிலேயே ஏழெட்டு வில்லன்களை எக்குத்தப்பாய் கத்தி, கை துப்பாக்கி உதவியுடன் தீர்த்து கட்டிவிட்டு "என் வாழ்க்கையை ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன், ஒவ்வொரு நொடியும் நானா திட்டமிட்டடு செதுக்கினது டா... என்னை யாரும் அவ்வளவு எளிதில் தீர்த்துகட்டிட முடியாது..." என கர்ஜிப்பதில் தொடங்கி "எனக்கு நண்பனாக இருக்க எந்த தகுதியும் வேண்டாம்.

ஆனால் எதிரியா இருக்க நிறைய தகுதிகள் வேண்டும்... அது உன்கிட்டே இல்லை..." என ஒவ்வொருவராய் தீர்த்துகட்டுவது வரை ஒவ்வொரு சீனிலும் ஒரு பெரும் கடத்தல் மன்னனாகவே வழ்ந்திருக்கிறார் பலே!

அதே சமயம் இலங்கை அகதியாக அறிமுகமாகும் அஜித்., அந்த ஈழத்தமிழர்களுக்காக ஏதேதோ செய்யத்தான் "டான்" ஆகிறார் எனப் பார்த்தால், அடுத்தடுத்து அதை கடத்துவது, இதை கடத்துவது, அவரை போட்டு தள்ளுவது, இவரை தீர்த்துக் கட்டுவது... என கிரிமினல் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறாரே ஒழிய, ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாதது ஏமாற்றத்தையே தருகிறது.

மற்றபடி "இது ஆசை இல்ல பசி என்பதும், போராளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்வதும், "இதுவரை காட்டி கொடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க..." தான் என்று பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் பார்க்கும் போது., ஏதோ எடுக்க நினைத்து அது சென்சாரில் ஏதேதோ ஆகியிருப்பது புரிகிறது! அப்பட்டமாகவும் தெரிகிறது.

சீன் பை சீன் எதிர்படுபவர்களை எல்லாம் துப்பாக்கியும் கையுமாக போட்டுத்தள்ளும் அஜீத் போன்றே பார்வதி ஓமனக்குட்டன், புருனா அப்துல்லா, மனோஜ் கே. ஜெயன், அப்பாசியாக வரும் சுதான்ஷூ பாண்டே, திமித்ரி-வித்யாத், செல்வராஜ்-இளவரசு, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.

அதிலும் படமுழுக்க பாடல் காட்சிகளிலும் சரி, படக்காட்சிகளிலும் சரி கவர்ச்சி உடையில் வரும் இளம் பெண்கள் படத்தின் பெரும்பலம். ஒரு "ஏ" சர்டிபிகேட் படத்திற்கு இதைவிட வேறென்ன பெரும் பலமாக இருக்க முடியும்.?!

அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்களைக் காட்டிலும் ஆர்.டி.ராஜசேகரின் அழகிய ஒளிப்பதிவும், யுவன் சங்கரராஜாவின் இனிய இசையும், சக்ரி டோலட்டியின் 1980களை காட்சிப்படுத்தியிருக்கும் எழுத்து இயக்கமும் இரா. முருகன், முகம்மது ஜாபரின் நச் டச் வசனங்களும் படத்தை பல மடங்கு பிரமாண்டபடுத்தி காட்டியிருக்கின்றன என்றால் மிகையில்லை!

80களில் செல்போனே இல்லாத காலத்தில் வில்லன் திமித்ரி தன் பிஸினஸ் பார்ட்னர்களுக்கு லைவ்ஸ்கிரீனில் தன் ஆயுத ஆலையை காண்பிப்பது உள்ளிட்ட ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் "பில்லா-2", இல்ல, "நல்லா" என்று ரசிகர்களை கதற விடாத அளவில் இருப்பது ஆறுதல்!

ஆகமொத்தத்தில் “பில்லா இருக்கு நல்லா.?! அப்பாடா!!

பிரபுதேவா வழியில் இயக்குநராகிறார் நயன்தாரா

சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகி இப்போது இயக்குநராக மாறியிருக்கும் பிரபுதேவாவை போன்று அவரது மாஜி காதலி நயன்தாராவும் நடிகையை தொடர்ந்து இயக்குநராகும் ஆசையில் இருக்கிறார்.

அதற்கான வேலையை இப்போதே தொடங்கிவிட்டார் நயன்தாரா. ஆம்! விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித், ஆர்யா, டாப்ஸி, ஆகியோருடன் நயன்தாராவும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதுடன், உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறாராம் நயன்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக வருவது, படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது, க்ளாப் அடித்து ஷாட் துவக்கி வைப்பது என்று உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் நயன்தாரா செய்து வருகிறாராம்.

படம் இயக்குவதை உதவியாளராக இருந்து கற்றுக்கொண்டு பிறகு டைரக்டராக எண்ணியுள்ளார்.

விரைவில் புதுப்படம் ஒன்றையும் நயன்தாரா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமீர்கான் படத்தில் ஒரு பாட்டில் ரஜினி நடிக்கிறார்

ஷாரூக்கானின் ரா-ஒன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்து போன நடிகர் ரஜினி, அடுத்தப்படியாக அமீர்கான் படத்தில் ஒரு பாடலில் தோன்ற போகிறாராம்.

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினி இப்போது தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் அமீர்கான் தான் நடிக்கவுள்ள புதியபடமான தலாஷ் என்ற படத்தில் ரஜினியை ஒரு பாடலில் நடிக்க வைக்க எண்ணியுள்ளதாகவும், இதற்காக அவருக்கு பெருந்தொகை அதாவது இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் பெருந்தொகை செலவில் இந்தப் பாடல் காட்சி பிரம்மாண்டமாக படமாகப் போகிறார்களாம்.

மேலும் இந்தப்பாட்டில் ரஜினியுடன் அமிதாப், தர்மேந்திரா போன்ற பாலிவுட் பிரபலங்களும் தோன்ற இருக்கிறார்களாம்.

ஏற்கன‌வே அமீர்கான் தன்னுடைய தூம்-3யில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர் அஜித்

சினிமாவில் அஜித் நுழைந்தபோது எப்படி இருந்தாரோ, அதேப்போல இப்போதும் மாறாமல், பெரிய நடிகர் என்ற பந்தாவும் இல்லாமல் இருக்கிறார் என்று பில்லா-2 ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியுள்ளார்.

அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா உள்ளிட்ட பலரது நடிப்பில், சக்ரி டோல்டி இயக்கத்தில், ஒய்டு ஆங்கிள் மற்றும் ஐ.என்.இ இணைந்து தயாரித்து பிரமாண்டமாய் உருவாகி இருக்கும் படம் பில்லா-2. இப்படம் ஜூலை 13ம் தேதி முதல் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதன்பின்னர் தினமலருக்கு பேட்டியளித்த இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியதாவது, பில்லா-2 படத்தில் ஒளிப்பதிவு செய்தது ரொம்ப சவாலாக இருந்தது. எல்லா மனிதனும் கொள்ளைக்காரனாக பிறப்பதில்லை.

அதுபோலத்தான் பில்லா-2விலும் அஜித் சாதாரண மனிதனாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாற்றப்பட்டார். அதற்கான சூழ்நிலை அமைந்தது எப்படி என்பதே இப்படத்தின் மையக்கரு.

அதை ரொம்ப அழகாகவும், அருமையாகவும் படமாக்கியுள்ளோம். ஆசியாவிலேயே முதன்முறையாக இந்தபடத்தில் தான் எபிக் எனும் 5கே ‌ரெசல்யூசன் காமிராவை பயன்படுத்தியுள்ளோம்.

இதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்த பிரத்‌யேகமான லென்ஸ் வரவழைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

பில்லா-2வின் பெரும்பகுதியை ஐதரபாத், கோவா, ‌மும்பை மற்றும் ஜார்ஜியாவில் படமாக்கினோம்.

அதிலும் ஜார்ஜியாவில் மைனஸ் 10 டிகிரி குளிரில் படம் பிடித்தது ரொம்ப சவாலாக அமைந்தது. பில்லா-2வில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் ஒரு நல்ல அனுபவம்.

சினிமாவிற்கு வந்தபோது அவர் எப்படி இருந்தாரோ அதுபோல இப்பவும் இருக்கிறார். கதைக்கு எது தேவை, எப்படி நடிக்க வேண்டும், எந்தமாதிரி டிரஸ் போடவேண்டும் என்று படக்குழுவில் யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பவர். ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தாவே அவரிடம் கிடையாது என்று கூறியுள்ளார்.

பில்லா-2வின் கதை - ஈழத்தமிழர்களுக்கு உதவும் தல

தல அஜித் 1980-களில், பீக்கில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் ஆவார். தல நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார்.

அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அளவில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்! நெசந்தானா தல...?

இதனிடையே ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2விற்கான ரிசர்வேஷன் தொடங்கி இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி இன்னும் ஒருவார காலத்திற்கு செ‌ன்னை உள்ளிட்ட மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் பில்லா-2-க்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளதாம்.

மேலும் சென்னையில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நான் ஈ - விமர்சனம்

தெலுங்கில் இதுவரை தான் இயக்கிய அத்தனை படங்களையும் ஹிட் படமாக்கிய டோலிவுட் முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் முதல் நேரடித் தமிழ் படம் தான் "நான் ஈ"!

இது இயக்குநரின் முதல் தமிழ்படம் மட்டுமல்ல... ஹாலிவுட்டுக்கே சவால் விடும் முத்தாய்ப்பான படமும் கூட!

கதைப்படி, நாயகர் நானி(படத்தில் இவரது பாத்திரத்தின் பெயரும் இதேதான்...) கதாநாயகி சமந்தாவை உருகி உருகி காதலிக்கும், சமந்தாவின் எதிர்வீட்டு பேச்சுலர் இளைஞர்!நாயகி சமந்தாவுக்கும் நானி மீது காதல் உண்டென்றாலும் அதை வெளிப்படையாக காட்டாமல் நானியை இரண்டாண்டுகளாக கலாய்த்து வருகிறார்.

அரிசி,‌ கோதுமை, தீக்குச்சி, பென்சில்முனை உள்ளிட்ட சின்ன சின்ன தானியங்கள், பொருட்களில் எல்லாம் சிற்பங்கள் செதுக்கி அவற்றின் மூலம் உலகளவில் விருதுகளை பெறும் குறிக்கோளை உடைய சமந்தாவிற்கு தன் நண்பர்கள் உதவியுடன் தான் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவிபுரிந்து உறுதுணையாக இருக்கும் பழக்கமும் உண்டு!

இந்நிலையில் சமந்தாவின் தொண்டு நிறுவனத்திற்கு உதவி புரியும் சாக்கில் சமந்தாவை அடைய திட்டம் தீட்டுகிறார் பெரும் கோடீஸ்வரரும், தொழில்அதிபருமான வில்லன் சுதீப்! அப்புறம்? அப்புறமென்ன...?

வில்லன் சுதீப்பின் திட்டத்திற்கு தடையாக திரியும், தெரியும் நாயகர் நானியை தன் ஆட்கள் மூலம் கடத்தி வந்து காலாலேயே மிதித்து கொள்கிறார் சுதீப்.

அதன்பிறகு "ஈ"-யாக மறுபிறவி எடுக்கும் நானி, வில்லன் சுதீப்பை சமந்தா உதவியுடன் போட்டு தள்ளுவது தான் "நான் ஈ" படத்தின் கரு, கதை, களம், எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... எல்லாம்!

கரண்ட் கட் ஆன தன் காதலி சமந்தா வீட்டுக்கு மொட்டை மாடி டிஷ்-ஆண்டனாவில் சில்வர் பேப்பர்களை பரப்பி அதில் டார்ச் அடித்து அதன் மூலம் ‌ஒளி வெள்ளத்தை பாய்ச்சுவதில் ஆரம்பிக்கும் நானியின் ஹீரோயிசம், படத்தில் நானி இறந்து ஈ ஆன பின்பும் செய்யும் சாகசங்களை நம்ப வைக்க சரியான காரணியாகிவிடுகிறது.

இது மாதிரி விஷயங்க‌ள் தான் ஹீரோ இறந்து "ஈ" யாகிவிட்டார் "ச்சீ" என்று எண்ணத்தூண்டாமல் நம்மை ஒரு "ஈ"-யை ஹீரோவாக ரசிக்க வைக்கிறது என்றால் மிகையல்ல!

சமந்தாவை உள்நோக்கத்துடன் சுதீப் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து வந்து விருந்து கொடுப்பது, அந்த விருந்தில் சமந்தாவின் கவனம் முழுவதும் அங்கு யதேச்சையாக வரும் நானியின் மீதே இருப்பது, அதனால் வில்லன் விஸ்வரூபம் எடுப்பது, நாயகர் நானியை கொல்வது, நானி "ஈ"-யாக மறுபிறவி எடுத்து வில்லன் சுதீப்பை தூங்க விடாமல் சித்ரவதை செய்வது, சுதீப்பின் காரை கவிழ்த்துவிட்டு உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என எச்சரிக்கை வாசகம் எழுதுவது, ஈ, எறும்பு கூட நுழைய முடியாத அளவிற்கு வில்லன் சுதீப் தன் வீட்டை பாதுகாப்பு செய்து பலப்படுத்துவது, சமந்தா உதவியுடன் "ஈ" அந்த பாதுகாப்பையும் மீறி சுதீப் வீட்டிற்குள் போய் அவருக்கு தொடர் தொந்தரவு தருவது என படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

லாஜிக் பார்க்க வேண்டிய கதைகளி‌லேயே லாஜிக் இல்லாமல் காட்சிகளை பதிவு செய்யும் நம்மூர் முன்னணி, பின்னணி, நடுஅணி(?) இயக்குநர்களுக்கு மத்தியில் புனர் ஜென்மம், மறுபிறவி, ஈ - ரிவெஞ்ச்... என்று லாஜிக் இல்லாத கதையில், சீன் பை சீன் லாஜிக் மீறாமல் படத்தின் காட்சிகளை லாஜிக், மேஜிக்காக இயக்கி இருக்கும் இயக்குநர் ராஜ ‌மெளலி இஸ் கிரேட்! கங்கிராட்ஸ்!! கீப் இட் அப்...!!!

தமிழ்-தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான அறிவியல் திகில் படமாக நான் ஈ-யை உருவாக்கியிருக்கும் இயக்குநர் எதிர்பார்த்ததை அப்படியே தந்திருக்கின்றனர் நாயகர் நானி, நாயகி சமந்தா, வில்லன் சுதீப், தேவதர்ஷினி மற்றும் சந்தானம் உள்ளிட்ட சகலரும். அதிலும் சுதீப், ரகுவரன், பிரகாஷ்ராஜ், கிஷோர் உள்ளிட்ட அத்தனை வித்தியாசமான வில்லன்களையும் கலந்து செய்த கலவையாக படம் முழுக்க கலக்கி இருக்கிறார்.

மரகதமணியின் பின்னணி இசை, கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ், மிரட்டல்களும் கலந்துகட்டி படத்தை பிரமாண்டபடுத்தியிருக்கின்றன. அதிலும் நானியின் உடலில் இருந்து ஈ முட்டைக்குள் அவரது ஆன்மா அடைக்கலமாகி, மீண்டும் உயிர் பெற்று வரும் காட்சிகள் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் கலக்கல் காட்சிகள்!

ஆக மொத்தத்தில் "நான் ஈ", இந்த "ஈ"-யை மற்ற தமிழ் சினிமாக்கள் பலவற்றைமாதிரி ஓட்ட வேண்டியதில்லை, வெற்றிகரமாக ஓடிவிடும்! ஹீ...ஹீ "ஹிட்" ஈ!!

விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி படத்தில் இளையதளபதி விஜய் பிசியாக உள்ளார். அந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக விஜய் கௌதம் மேகன் எடுக்கும் யோஹான் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு நாயகி தேடும் படலம் நடந்து வருகிறது.

விஜய் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தி படங்களில் கவனம் செலுத்த மும்பையில் குடியேறியுள்ள ஸ்ருதியை கௌதம் மேனன் தமிழகத்திற்கு அழைத்து வர முயற்சி செய்து வருகிறார்.

தற்போது கவுதம் மேனன், ஜீவா-சமந்தாவை வைத்து "நீ தானே என் பொன் வசந்தம்" படத்தை எடுத்து வருகிறார். விஜய்யும் துப்பாக்கியில் பிசியாக உள்ளார்.

இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் யோஹான் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.

மீண்டும் வருகிறார் டாக்டர் நடிகை

இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தில் வலுவான கிராமத்து பெண் ரோலில் நடித்து பெரும் பாராட்டை பெற்றவர் தனன்யா.

இவர் எம்.பி.பி.எஸ்., மருத்துவம் படித்தவர். இவர் அம்மா, அப்பா, மாமா, பெரியப்பா என்று ‌ஒட்டு மொத்த குடும்பமும் ஐதராபாத்தில் பெயர் பெற்ற மருத்துவர்கள்.

இப்படி டாக்டர் குடும்பத்தில் இருந்து ‌வந்தவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வர, படிப்பை முடித்த பிறகே அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

தற்போது இவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் வெயிலோடு விளையாடு படத்தில் அழகான ரோலில் நடித்து வெளுத்து வாங்கி இருக்கிறாராம்.

படத்தில் வாலிபால் விளையாடும் மாமன் மகனாக அங்காடித்தெரு மகேஷ் மற்றும் ஒரு புதுமுகம் நடித்துள்ளனர்.

இவர்களில் யாரை தனன்யா விரும்புகிறார், யாரை பழிவாங்குகிறார் என்பதை திருவேணி என்ற கேரக்டரில் படம் முழுக்க ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

மேலும் இப்படத்தில் டைரக்டர், வாலிபால் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது கூடுதல் சிறப்பு அம்சம்.

விஸ்வரூபத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.45 கோடி சம்பளம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாய் தயாராகி வரும் படம் விஸ்வரூபம். இந்த படத்தின் மூலம் கமல் ஹாலிவுட் களத்தில் கால்பதிக்கவுள்ளதால் இந்த படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல்வேறு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தயாராகும் இந்தபடத்தின் வியாபாரம் மட்டும் ரூ.120 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கின்றனராம்..

அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கு சம்பளமாக மட்டும் ரூ.45 கோடி வரை தரப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவின் மன்மதன்- 2 : நயன்தாரா காதல் கதையா?

தமிழ் சினிமா ஏற்கனவே மெகாஹிட் ஆன படங்களின் 2ம் பாகம் எடுப்பது புது பேஷன் ஆகி விட்டது. அந்த வகையில் சிம்பு நடித்த மன்மதன், மெகாஹிட் ஆனதுடன், அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயர் வாங்கி கொடுத்த படமாகும்.

தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மன்மதன்- 2 என்ற பெயரில் சிம்பு எடுக்கவுள்ளார். இதற்கான கதையை அவரே உருவாக்கி உள்ளாராம்.

தற்போது இந்த படம் நயன்தாராவின் காதல் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சிம்புவும் நயன்தாராவும் காதலித்து, பின்னர் பிரிந்து விட்டனர். அப்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர்.

பின்னர் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கும் தயாரானார்கள். தற்போது அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இந்த கதையை தான் மன்மதன்-2 படத்தில் சிம்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, இலியானா, தமன்னா உள்பட 6 கதாநாயகிகள் நடிக்க வைக்க சிம்பு முயற்சித்து வருகிறார் என்பது ஹைலைட் விஷயம் ஆகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...