கோச்சடையான் ரிலீஸ் தள்ளிப் போக காரணம் என்ன?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கோச்சடையான் படம் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது தீபாவளிக்குப் பிறகே கோச்சடையான் ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது.

கோச்சடையான் படம் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படம் இந்தியிலும் தீபாவளி அன்றுதான் வெளியாக இருந்தது.

ஆனால் அன்றைய தினம் ஷாரூக்கான் நடித்த படம் வெளியாகிறது. அப்போது ஷாரூக்கான் நடித்த படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கும் என ரஜினிகாந்த் கருதினாராம்.

எனவே ஷாரூக்கான் படத்துடன் போட்டியிடுவதைத் தவிர்க்கவே கோச்சடையான் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளாராம் ரஜினிகாந்த்.

பில்லா 2-வில் காமெடியே இல்லை - புதிய தகவல்

விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் பில்லா2 படத்தில் காமெடியே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு காமெடி நடிகரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள்.

அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருக்கும் அஜித் காமெடியையோ, காமெடியர்களையோ நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்கிற ரகம் இல்லை.

அதனால்தானோ என்னவோ, பில்லா 2 படத்தை எந்த காமெடி காட்சிகளும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்களாம்.

ஆம்! விரைவில் வெளிவரப்போகும் பில்லா-2வில் காமெடியே இல்லை.

படத்தின் கதை முழுக்க முழுக்க மாஃபியாவை பற்றியது.

இதில் எதற்கு தேவையில்லாமல் காமெடியை நுழைக்க வேண்டும் என்பதால் இந்த முடிவினை எடுத்தாராம் சக்ரிடோலட்டி.

சினிமாவில் யாரும் செய்யாத காரியத்தை செய்த ஷாம்

படத்தின் கேரக்டருக்காக ஹீரோக்கள் சிலர் தாடி, நீண்ட தலைமுடி என்று வளர்ப்பார்கள், சிலர் மொட்டை அடிப்பார்கள், உடம்பை ஏத்துவதும் இறக்குவதும் தவிர, சில சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து கூட நடிப்பார்கள்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் ஷாம் ஒருபடி மேலே போய், கட்டையால் கண்ணுக்கு கீழே ஓங்கி அடித்தால் கண்கள் எப்படி வீங்குமோ அவ்வளவு பெரிதாக வீங்க வைத்து நடித்திருக்கிறார்.

12 பி, உள்ளம் கேட்குமே, லேசா லேசா, போன்ற பல்வேறு படங்களில் நடித்த நடிகர் ஷாம் தற்போது நடித்து வரும் புதியபடம் 6. வி.இசட் துரை இயக்கி வரும் இப்படத்தில் ஷாம் ரொம்பவே வித்தியாசமாக, ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

ஆறு கெட் அப், ஆறு மாநிலங்கள், ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஆறு அர்த்தம் கொண்ட சம்பவங்கள் தான் இப்படம்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஷாம் கூறியுள்ளதாவது, இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக 89 கிலோ எடையிலிருந்து, 72கிலோவாக எடையைக் குறைத்தேன்.

கிட்டத்தட்ட ஒருவருடம் தாடியும் நீண்ட முடியுமாக ஆறு மாநிலங்களில் சுற்றித்திரிந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இதையும் தாண்டி படத்திற்கு இன்னும் எபெக்ட் தேவை என டைரக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அப்போதுதான் இயக்குனர் துரையிடம், நான் கண்களை இப்படி வீங்க வைத்து வருகிறேன். அதற்கு ஒரு பத்து நாள் தூங்காமல் இருக்கவேண்டும் என்றேன். அவர், அது முடியுமா? ஆபத்தாச்சே? மற்ற இடமென்றால் பரவாயில்லை..

கண்ணில் போய் ரிஸ்க் எடுக்க வேண்டுமா? வீக்கம் குறையாவிட்டால் வாழ்க்கை பூரா கண்தெரியாமல் போக நேரிடும். தவிர நீ ஒரு நடிகன். நடிகனுக்கு முகம் தான் முக்கியம் . அந்த அழகு இந்த படத்துக்கு பிறகும் வேண்டும். வேண்டாம் ஷாம் ரிஸ்க் என்றார்.

இருந்தாலும் இந்த படத்தில் என் முழு அர்ப்பணிப்பையும் காட்டி இருக்கேன். இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.

இடையில் ஒருநாள் இயக்குனருக்கு போன் செய்து இன்னும் நான்கு நாட்கள் கழித்து ஷூட்டிங் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்துவிட்டேன். எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாராக காத்திருக்க நான் போய் இறங்கினேன். என் கண்ணைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி. சில மணி நேரத்துக்கு என் கண்களைப் பார்க்கவே பயந்தார்கள்.

கடவுள் புண்ணியம் மீண்டும் என் கண்கள் பழைய நிலைக்கு ஒரு வாரம் கழித்து திரும்பியது. இல்லையென்றால் நினைத்துப்பார்க்கவே விபரீதமாக இருக்கிறது. இதில் ஒரு துளி மேக் அப் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. சினிமாதான் எனக்கு எல்லாம்.

அதற்காக ஷாம் எதையும் செய்வான் என்பதை இந்த 6 படம் உலகிற்கு சொல்லும். கேரக்டருக்காக மெனக்கெடும் விஷயத்தில் ரஜினி சார், கமல் சார் இருவருமே என் வழிகாட்டிகள். எந்திரனில் ரஜினி சார் பட்ட கஷ்டங்களைப் பார்த்து பிரமித்தேன்.

அதே போல, கமல் சார் ஒவ்வொரு படத்திலும் கேரக்டருக்காக எத்தனையோ ரிஸ்குகளை எடுத்தவர். அவர்கள் வழியில் பயணிக்க முயற்சிக்கிறேன் என்றார்.

மேலும் படத்திற்காக தாடியும் மீசையுமாக உடல் மெலிந்து காணப்பட்ட அவரை காண அவர்கள் அம்மாவுக்கும் மனைவிக்கும் தாங்க முடியவில்லை. அம்மா பல நேரம் அழுதே விட்டார்கள் என்பதால் ஆறு மாதம் யாரையும் பார்க்காமல் இருந்துள்ளார்

ஷாம். மனைவியையும் அம்மாவையும் பெங்களூருக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் சென்னைக்கும் ஷூட்டிங்குக்கும் நடுவே மாதங்களை ஓட்டியுள்ளார்.

ஷாமின் இவ்வளவு பெரிய ரிஸ்க்கிற்கு முதலில் பாராட்டுகள், அப்படியே அவரது படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

ஜூலை 13-ல் அஜித்தின் பில்லா-2 ரிலீஸ்

அஜித் நடித்த பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடிப்பில், சக்ரி டோல்ட்டி இயக்கத்தில், ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள படம் பில்லா-2. இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன.

கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்தது. இது பட குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது.

இம்மாத இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2.

வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று கூறியுள்ளார்.

விக்ரமின் கரிகாலன் டைரக்டர் மாற்றம்

விக்ரம் நடிக்க இருக்கும் கரிகாலன் படத்தின் டைரக்டர் கண்ணன் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் ஒப்புக்கொண்ட படம் கரிகாலன்.

சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விக்ரமுடன் ஜரின்கான், அஞ்சலி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகினர்.

எல்.ஐ.கண்ணன் இப்படத்திற்கான டைரக்ஷ்ன் பொறுப்பை ஏற்று இருந்தார். படம் தொடங்கிய சிறிது காலத்திலேயே படத்தின் தலைப்பும், கதையும் என்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படவே விக்ரம் தாண்டவம், டேவிட், ஐ என்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார்.

இந்நிலையில் படத்திற்கு சிக்கல் எல்லாம் தீர்ந்து துவங்க இருந்த நிலையில், இப்போது டைரக்டரை மாற்றிவிட்டார்களாம்.

கண்ணனுக்கு பதிலாக ஏற்கனவே படத்திற்கு கதை, வசனம் எழுதி வரும் காந்தி கிருஷ்ணாவே படத்திற்கான டைரக்ஷ்ன் ‌பொறுப்பையும் ஏற்று இருப்பதாக கூறப்படுகிறது.

வெங்கட்பிரபுவின் ஹீரோயின் வேட்டை

"மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபு, அடுத்து இயக்கும் படம், "பிரியாணி! இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்காக, கடந்த சில மாதங்களாகவே அவர், ஹீரோயின் வேட்டை நடத்தி வருகிறார்.

கடைசியாக கிடைத்த தகவல்படி, சமந்தாவை, "புக் பண்ணி விட்டதாக கூறப்பட்டது. சமந்தாவிடம் பேசி இருக்கிறோம்.

ஆனால், கால்ஷீட் தருவது பற்றி இன்னும் எந்த முடிவும் அவர் சொல்லவில்லை.

"அதனால், அனுஷ்கா, காஜல் அகர்வால் தவிர, வேறு சில முன்னணி நடிகைகளிடமும் கால்ஷீட் கேட்டு வருகிறோம். விரைவில் யார் என்பது முடிவாகும் என்றார்.

"பிரியாணி சாப்பிட்டால் எப்படி திருப்தியாக இருக்குமோ, அதேமாதிரி இந்த படம், படம் பார்ப்பவர்களுக்கு முழு திருப்தியை கொடுக்கும்.

அந்த அளவுக்கு காதல் - காமெடி - ஆக்ஷன் என, அனைத்தும் கலந்த கலவையாக உருவாகிறது என்கிறார்.

சகுனி - விமர்சனம்

ரயில்வே சுரங்கபாதைக்காக அநியாயமாக அரசாங்கத்தால் அபகரிக்கப்படும் தனது பூர்வீக வீட்டை மீட்பதற்காக சென்னை வரும் காரைக்குடி இளைஞன், அந்த அரசாங்கத்தை, ஆளும் கட்சியையே ஆட்டி வைத்து எதிர் கட்சியாக்கும் சர்வ வல்லமை பொருந்தியவனாக மாறுவதுதான்... "சகுனி" படத்தின் மொத்த கதையும்!

காரைக்குடியில் அரண்மனை போன்ற பூர்வீக வீட்டில் அடுப்பெரியாத நேரமே இல்லை... எனும் அளவிற்கு சதா சர்வகாலமும் அன்னதானம் போட்டே அழிவு நிலைக்கு விந்துவிட்ட குடும்பம் ஹீரோ கார்ததியினுடையது! மிச்சமிருக்கும் அரண்மணை மாதிரியான பெரிய வீட்டையும் அரசாங்கம், ரயில்வே சுரங்கபாதை அமைக்க வேண்டும்... என அநியாயமாக அபகரிக்க பார்க்க, அதை காக்க தன் தாத்தாவின் அட்வைஸ்படி தனியொரு ஆளாக சென்னை வரும் கார்த்தி, அடாவடி முதல்வர் பிரகாஷ்ராஜூக்கு எதிராக தன் ஆட்டோ நண்பர் சந்தானத்துடன் சேர்ந்து கொண்டும், பிரகாஷ்ராஜின் அரசியல் எதிரி கோட்டா சீனிவாஸராவுடன் சேர்ந்து கொண்டும் செய்யும் சகுனி ஆட்டங்களும், அரசியல் மாற்றங்களும் தான் "சகுனி" படத்தின் லாஜிக் பார்க்க முடியாத மேஜிக்கான கதை, களம் எல்லாம்! இந்த சகுனி ஆட்டத்தோடு அத்தை மகள் பிரனீதாவுடனான காதல் சதுராட்டம், சந்தானத்துடனான காமெடி ஆட்டம் இத்யாதி, இத்யாதிகளை எல்லாம் கலந்துகட்டி கமர்ஷியல் கலர்புல்லாக சகுனியை திரைக்கு எடுத்து வர முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள்.என். ஆனால் மீதி தோல்விதான் சகுனி படத்தின் பின்பாதி என்பது ஏமாற்றம்!

கார்த்தி, லவ், ஆக்ஷ்ன், சென்டிமெண்ட், பாலிட்டிக்ஸ் என சகலத்திலும் சரி விகிதத்தில் புகுந்து புறப்பட்டு தன் ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார் பலே, பலே!

கதாநாயகி ப்ரனீதாவும் முந்தைய படங்களை காட்டிலும் பிரமாதம் என்றாலும் இரண்டு பாடல்கள், ஒன்றிரண்டு சீன்களே வருவதால் ஒட்ட மறுக்கிறார். இதனால் ப்ரனீதா மட்டுமல்ல கார்த்தி - ப்ரனீதா காதலும் கூட எக்ஸ்ட்ரா பிட்டிங்காக எக்கி, தொக்கி நிற்பது படத்தின் பெரிய பலவீனம்!

சந்தானம் ரஜினியாகவும், கார்த்தி கமலாகவும் பண்ணும் அலப்பறைகள்... முன்பாதி படத்தை போவதே தெரியாமல் போக வைத்திருக்கிறது. அதே "பெப்", பின்பாதியில் இல்லாமல் ஒரே பில்-டப்பாக இருப்பது மைனஸ்!

முதல் அமைச்சர் பதவிக்காக முறைபடி முதல்வராக வேண்டியவரை தீர்த்து கட்டுவதில் தொடங்கி, தன் ஆசை நாயகி கிரணையும் போட்டு தள்ள முயல்வது வரை பிரகாஷ்ராஜின் சாணக்யதனம், சில இடங்களில் சகுனி கார்த்தியையும் பிட் செய்து விடுகிறது பேஷ், பேஷ்!!

கார்த்தி, பிரனீதா, எதிர்கட்சி தலைவர் கோட்ட சீனிவாஸராவ், இட்லிசுட்டு வட்டிக்கு விட்டு, சகுனி கார்த்தி தயவால் சென்னை மேயராகும் ராதிகா, ப்ரனீதாவின் அம்மாவும், கார்த்தியின் காரியக்கார அத்தையுமான ரோஜா, பிரகாஷின் ஆசை நாயகி கிரண், பிரகாஷின் கைத்தடி மற்றும் கார்த்தியின் விசுவாசி சித்ராலட்சுமணன், தாத்தா வி.எஸ்.ராகவன் என்று எக்கச்சக்க நட்சத்திர பட்டாளம்! ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு பளிச் என்று மின்னியிருக்கின்றனர்!

அதேமாதிரி ஜி.வி.பிரகாஷின் இசை, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் ஏனோ தெரியவில்லை. இயக்குநர் சங்கர் தயாள்.என்.னின் எழுத்து-இயக்கத்தில் "சகுனி" முன்பாதி அளவிற்கு பின்பாதி சரியாக இல்லை!

மொத்தத்தில் சரியாநி...? சாரி! "சகுனி!!

ரீமேக் ஆகிறது சகலகலா வல்லவன் - கமல் வேடத்தில் சூர்யா

1982-ம் வருடம் ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் சகலகலா வல்லவன்.

இப்படத்தில் கமல் கிராமத்துவாசி, பட்டணத்துவாசி என இரு வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.

இப்படத்தில் இசைஞானி இசையமைப்பில் ‘நேத்து ராத்திரி யம்மா, தூக்கம் போச்சுடி யம்மா’, ‘இளமை இதோ இதோ..’ போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது.

80-களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய இந்த படத்தை தற்போது ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற சூர்யா வேறு ஒரு நிறுவனம் மூலமாக ஏ.வி.எம். நிறுவனத்தை அணுகியிருக்கிறார்.

ஆனால், ஏ.வி.எம்.நிறுவனமோ இப்படத்தை தாங்களே ரீமேக் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்படத்தில் நடிக்க சூர்யாவையே ஒப்பந்தம் செய்துள்ளது ஏ.வி.எம்., இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலவரத்தில் தொடங்கிய விஜய் பிறந்த நாள் விழா

விஜய தனது 38வது பிறந்த நாளை இன்று (22.06.2012) கொண்டாடினார். வருடா வருடம் ரசிகர்களோடு பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளித்து மகிழ்வார்.

அதே போல் இந்த வருடமும் சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு காலை 11 மணிக்கு சென்றார், அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மொத்தம் 40 குழந்தைகளுக்கு அணிவிக்க இருந்தார்.

சரியான இட வசதி இல்லாததாலும், நெருக்கடி மிகுதியாக இருந்ததாலும் 5 குழந்தைகளுக்கு மட்டுமே மோதிரம் அணிவித்தார்.

இதற்கிடையே விஜயின் பாதுகாவலராக வந்தவர்கள் மற்றும் அங்கு இருந்த ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால் மருத்துவமனை கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப் பட்டன. பிறகு அங்கு இருந்த போலீசார் வந்ததும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது, இப்பிரச்சனை காரணமாக விழாவின் பாதியிலே விஜய் சென்று விட்டார்.

புனேயில் நடைபெறும் துப்பாக்கி படப் பிடிப்பில் கலந்து கொள்ள விமான நிலையம் சென்று விட்டார்.

மேலும் இன்றைய ரசிகர்கள் நிகழ்ச்சி மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்சிகளை அவர் தந்தை எஸ்.எ.சந்திரசேகர் சாலி கிராமத்தில் உள்ள அவர் திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நடத்தி வருகிறார்,

4 இயக்குனர்கள் நடிப்பில் உருவாகும் இசை

இயக்குனராக அறிமுகமாகி, நடிகரானவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் இயக்கி, நடித்து வரும் இசை வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால் முதன்முறையாக இசையமைப்பாளர் பணியையும் எஸ்.ஜே.சூர்யா ஏற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த படத்தில் அவருடன் சேர்த்து மொத்தம் 4 இயக்குனர்கள் நடிக்கவுள்ளனர்.

இது குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறுகையில் இசை திரைப்படம், சினிமா தொடர்புடைய கதையாகும். இதனால் படத்தில் நான்கு இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அதில் இயக்குனர் விஸ்வநாதன் ஒரு ரோலில் நடிப்பதாகவும் மற்ற இயக்குனர்கள் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் இசை படத்தின் ஒரு பாடலில் இந்தி நடிகை ஆட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு

அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவருடைய எந்த படம் வெளிவந்தாலும் அதை முதல்நாளில், முதல்ஷோவில் பார்த்துவிடுவார்.

அந்தளவுக்கு அஜித்தின் தீவிர வெறியரான அவர் இப்போது ஒருபடி மேலே போய் அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். என்ன சொல்றீங்க என்று கேட்கிறீர்களா...!

அட அமாங்க! அவர் இப்போது நடித்து வரும் வாலு படத்தில் தான் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.

புதுமுகம் விஜய் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் வாலு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கூடவே காமெடியில் சந்தானம் கலக்க வருகிறார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. படத்தின் கதைப்படி சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் அஜித்தின் பில்லா-2 படத்தை முதல்நாளில் போய் தியேட்டரில் பார்க்கிறார்.

இந்தக்காட்சியை சென்னை கமலா தியேட்டரில் வைத்து எடுத்தனர். அப்போது தான் சிம்பு அஜித்தின் பில்லா-2 கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து இருக்கிறார்.

பிறகு ஹன்சிகாவுடன் அமர்ந்து படத்தையும் பார்க்கிறார். இதைதான் படமாக்கி இருக்கிறார்கள்.

கூடவே படத்தில் அஜித் ‌தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும், அவரை பற்றி பஞ்ச் டயலாக் கொடுத்து புகழ்ந்து தள்ளியுள்ளாராம்.

ஜூலை 1ல் வெளியாகிறது விஜய்யின் துப்பாக்கி டிரைலர்

நண்பன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய்யின் துப்பாக்கி படத்தின் டிரைலர் ஜூலை 1ம் தேதி வெளியாக இருப்பதாக டைரக்டர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதியபடம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் மட்டும் சமீபத்தில் வெளியானது.

படத்தின் போஸ்டர்களே ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் படத்தின் டிரைலரை சீக்கிரத்தில் வெளியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனராம்.

இதனால் படத்தின் முன்னோட்ட டிரைலரை விஜய் பிறந்தநாளில் வெளியிட ‌சொல்லி அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதனையடுத்து டைரக்டர் முருகதாஸ் துப்பாக்கி படம் டிரைலர் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் பிறந்தநாளில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது.

எனவே அன்றைய தினம் படத்தின் டிரைலரை வெளியிடுவது சாத்தியப்படாது. ஆகையால் ஒரு பத்து நாள் கழித்து, அதாவது ஜூலை 1ம் தேதி டிரைலரை வெளியிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவாரம் தள்ளிபோகிறது பில்லா 2

விநியோகஸ்தர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க அஜித்தின் பில்லா-2 ரிலீஸ் மேலும் ஒருவாரம் தள்ளிபோகிறது. மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜித்து நடித்துள்ள படம் பில்லா-2.

டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பதை அடிப்படையாக கொண்டு, பில்லாவின் இரண்டாம் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டனும், புரூனா அப்துல்லாவும் நடித்துள்ளனர். சக்ரி டோல்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் பில்லா-2 படத்தை வருகிற ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் அன்றைய தினம் கார்த்தியின் சகுனி படமும் ரிலீஸ் ஆக உள்ளது. பொதுவாக ஒருவார கலெக்ஷ்ன் தான் படங்களுக்கு முக்கியமான விஷயம்.

அப்படி இருக்கையில் இரண்டு முக்கிய ஹீரோக்களின் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் வசூல் ரீதியாக சிக்கல் ஏற்படும் என்று விநியோகஸ்தர்கள் கருதுகிறார்களாம்.

அதனால் பில்லா-2 படத்தை ஒரு வாரம் தள்ளி அதாவது ஜூன் 29ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்று - ஜுலையில் படப்பிடிப்பு

இளையதளபதி விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கியில் நடித்து வருகிறார். இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

தொடர்ந்து விஜய், இய்ககுனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது இப்படத்தில் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவுள்ளதாக இயக்குனர் கவுதம்மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது தான் இயக்கியுள்ள நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு ஜூலை முதல் வாரத்திலும், படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என்றும், ஜெய் -ரிச்சா நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தையும், தங்க மீன்கள் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருவதாகவும் கவுதம் கூறியுள்ளார்.

அக்னி நட்சத்திரம் ரீ‌-மேக்கில் ஆர்யா-விஷால்

மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் 1988-ல் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் அக்னி நட்சத்திரம்.

படம் மட்மல்லாது இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் இப்போது மீண்டும் ரீ-‌மேக் செய்யப்பட இருக்கிறது.

இதற்கான உரிமையை ரமேஷ் என்பவர் வாங்கியுள்ளார். இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், அக்னிநட்சத்திரம் படத்தை ரீமேக் செய்யவுள்ளேன்.

இதில் நடிப்பதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் இரு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே தமிழ் ரீ‌-மேக்கில் ஆர்யா-விஷால் ஆகிய இருவரும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இருவரும் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தனர். அந்தப்படத்தில் இருவரது காம்பினேஷனும் அருமையாக அமைந்தது.

மேலும் இருவரும் நல்ல நண்பர்களும் கூட, அதனால் அக்னி நட்சத்திரம் ரீ-மேக்கிற்கும் இவர்கள் காம்பினேஷன் நன்றாக இருக்கும் என்பதால் இவர்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் பாலிவுட்டை அசத்த வருகிறார் ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட்டிலும் கால் பதித்து அங்கேயும் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தார்.

தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணம், குழந்தை என்று ஆன பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்ட ஸ்ரீதேவி இப்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இங்கிலீஸ் விங்கிலீஸ் என்று பெயர் வைத்துள்ளனர். டைரக்டர் பால்கி இப்படத்தை தயாரிக்க, கவுரி ஷிண்டே இப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் கதைப்படி நடிகை ஸ்ரீதேவி சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்கா செல்ல அங்கு மொழி பிரச்னையால், ஆங்கில மொழியை திக்கி திணறி பேசி அங்குள்ளவர்களால் கிண்டல்களுக்கு ஆளாகிறார்.

பின்னர் அதை சவாலாக ஏற்று முறைப்படி ஆங்கிலத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.

ஆங்கில மொழியை திக்கி திணறி பேசும் காட்சிகளில் அப்படியே அச்சு அசாலாக நடித்து உள்ளாராம் ஸ்ரீதேவி. தற்ப‌ோது படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது.

முதற்கட்டமாக இப்படத்தின் சில ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. படப்பிடிப்பை வேகமாக முடித்து செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

இந்தியிலும் ரீமேக்காகிறது விஜய்யின் துப்பாக்கி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் புதிய படம் துப்பாக்கி. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படத்தை அப்படியே இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்; இதற்கான முதற்கட்ட பணியையும் அவர் தொடங்கி விட்டாராம்.

இந்தியில் விஜய் நடிக்கும் வேடத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் எனத் தெரிகிறது.

அக்ஷய் நடித்து இந்தியில் வெளியான ரவுடி ரத்தோர் படம் ஹிட்டானதால், இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் துப்பாக்கிக்கும் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே தான் இயக்கிய கஜினியை, இந்தியில் ரீமேக் செய்தவர் முருகதாஸ். அந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

காகா ராதாகிருஷ்ணனை மறந்து போன தமிழ் சினிமா

தமிழ்,தெலுங்கு,ஹந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காகா ராதாகிருஷ்ணன். சிவாஜியையே நாடகத்திற்கும் சினிமாவிற்கும் அழைத்து வந்தவர் இவர் தான்.

தன்னுடைய 6 வ‌யதில் நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில் சேர்ந்தார். பிறகு மங்கையர்கரசி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் தொடர்ந்து நல்லதம்பி, வண்ணசுந்தரி,‌ மனோகரா, , தேவர் மகன், இருவர், காதலுக்கு மறியாதை, உதவிக்கு வரலாமா, உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, ஹலோ, ரோஜாவனம், விண்ணுக்கும் மண்ணுக்கும், மனதை திருடிவிட்டாய், மானஸ்தன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், இதய திருடன், உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று இரவு இறந்த இவருக்கு இன்று மதியம் 1மணி வரை, வெறும் 4 நான்கு திரையுலகினர் மட்டுமே வந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக ஒருவரும், தென்னிந்திய நடிகர்சங்கம் சார்பாக ஒருவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஒரு பத்திரிக்கையாளர், ஒரு பிஆர்ஒ, இரண்டு புகைப்பட கலைஞர்கள், ஒரு சில மீடியா என்று மிகவும் குறைந்த அளவிலேயே திரையுலகினர் கலந்து கொண்டனர்.

இன்றைய இளைய நடிகர்களாவது மரியாதை செலுத்தி இருந்தால் அவருக்கு மரியாதையாக இருந்திருக்கும். ஆனால் என்னவோ ‌1மணி வரை யாரையும் காணோம்.

பலருக்கு கிடைத்த கலைமாமணி விருது கூட இவருக்கு கிடைக்கவிலை‌ என்ற ஏக்கமும் இவருக்கு இருந்திருக்கிறதாம். எதிர்காலத்திலாவது இது போன்ற மூத்த நடிகர்களுக்கு மறியாதை செய்ய நாம் க‌டமைப்படுவோமாக.

மீண்டும் திரைக்கு வருகிறார் காமராஜ்

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழகத்தின் முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மக்களின் ஆதரவைப் பெற்ற அத்திரைப்படம், பத்திரிகைகள், ஊடகங்கள், சினிமா விமர்சனங்களின் ஏகோபித்த பாராட்டினையும், தமிழக அரசின் அந்த ஆண்டிற்கான சிறப்பு விருதினையும் பெற்றது.

இப்போது அத்திரைப்படம், நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, மேலும் பல புதிய காட்சிகளோடு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது.

காமராஜர் இந்திய விடுதலைக்காக காந்தியின் வழி நின்று ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்து பொற்கால ஆட்சியை தந்தவர்.

இரண்டு முறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து சர்வதேச புகழ் பெற்றவர். காந்தியவாதியான இவர் இறுதிக்காலம் வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர் அவர் மறைந்த போது அவரிடமிருந்த சொத்து ரூ.110 தான்.

தற்போது தேசமெங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கியுள்ளன. அதில் பெருவாரியாக இளைஞர்களே பங்கேற்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளின் ஊழல், ஆடம்பர மற்றும் அதிகார மோகம், நேர்மையற்ற செயல்பாடுகள் நம் இளைஞர்களிடையே மாற்று அரசியல் குறித்த சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காமராஜரின் நேர்மை, எளிமை, அரசியல் ஆளுமை, நிர்வாக செயல்பாடுகள் குறித்து இன்றைய இளைஞர்கள் அறியும் போது அது அவர்களுக்கு சிறந்த அரசியல் வழிகாட்டியாக அமையும். தேசத்தை வழிநடத்த உதவும்.

இதற்கென தற்போது புதிதாக 15 காட்சிகள் கணினி வரைகலை துணையுடன் படமாக்கப்பட்டு வருகிறது. காமராஜரின் ரஷ்யப்பயணம் இணைக்கப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டிடிஎஸ் ஒலி அமைப்பு, புதிய பரிமாணத்துடன் இசைஞானி இளையராஜாவின் ஆத்மார்த்தமான இசை என பிரமாண்டமாக உருவாகி வருகிறது 'காமராஜ்' திரைப்படம்.

அ.பாலகிருஷ்ணன் தயாரித்து, இயக்கும் இத்திரைப்படம், காமராஜரின் 110-வது பிறந்த தினமான ஜுலை 15 - ல் திரைக்கு வருகிறது.

ஓடும் ரயிலில் இருந்து குதித்த கார்த்தி - அனுஷ்கா

அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக டூப் போடாமல், ஓடும் ரயிலில் இருந்து நடிகர் கார்த்தியும், நடிகை அனுஷ்காவும் குதித்துள்ளனர். சகுனி படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ்பாண்டியன்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சுராஜ் இயக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். வில்லனாக பையா மிலிந்த் சோமன் நடிக்கிறார். கூடவே இன்னொரு பிரதான வில்லனாக சுமனும் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் ரயில் சண்டைக்காட்சியை வைத்துள்ளார் டைரக்டர். இதற்காக ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கிருஷ்ணராஜ சாகர் அணை அருகே சுமார் 15 நாட்கள் இந்த சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர்.

ரயிலில் சென்று கொண்டிருக்கும் கார்த்தியை ஹெலிகாப்டரில் மிலிந்த் சோமனும், அவரது அடியாட்கள் டாடா சுமோவிலும் பின் தொடர்கிறார்கள். அவர்களை எதிர்த்து கார்த்தி ஓடும் ரயிலின் மேற்கூரையில் நின்று சண்டை போடுகிறார்.

ஒரு கட்டத்தில் கார்த்தியும், அனுஷ்காவும் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது, ரயில் கூரையிலிருந்து ஆற்றில் குதிக்க வேண்டும். இந்தக்காட்சியை டைரக்டர் சொன்னபோது, கார்த்தியும், அனுஷ்காவும் அஞ்சாமல் குதித்துவிட்டார்களாம்.

அதுவும் டூப் கூட போடாமல் தைரியமாக நடித்துள்ளனர். இந்த சண்டைக்காட்சிக்கு மட்டும் சுமார் ரூ.2 கோடி செலவாகியுள்ளதாம்.

இதுகுறித்து டைரக்டர் சுராஜ் கூறும்போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும் என்று அனுஷ்கா-கார்த்தியிடம் சொன்னபோது டூப் வேண்டாம் என்று இருவரும் மறுத்துவிட்டனர்.

அதன் பிறகு ரயிலை மெதுவாக இயக்கச் சொன்னோம். தொடர்ந்து அனுஷ்காவும், கார்த்தியும் ரயிலில் இருந்து கீழே குதித்தார்கள். படம் பிரமாதமாக வர வேண்டும் என்றால் அதைப்பற்றி கவலைப்படாத நிறுவனம் ஸ்டுடியோ கிரீன்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இப்படம் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது.

ரூ.2 கோடி செலவில் ஒரு ரயில் சண்டைக் காட்சி படத்தின் பிரம்மாண்டத்திற்கு சிறு உதாரணம் மட்டுமே. இன்னும் படத்தில் ஏராளமான காட்சிகள் உண்டு என்று கூறியுள்ளார்.

ஹாலிவுட் படத்தை நடித்து இயக்கும் கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன், முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் நடிப்பதுடன், அப்படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இப்படத்தை லார்ட் ஆப் தி ரிங்ஸ் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் தயாரிக்கிறார்.

சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா கடந்த 3 தினங்களாக நடந்தது. இதில் கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மற்றும் படக்காட்சிகளை வெளியிட்டார்.

இதே விழாவில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போனும் கலந்து கொண்டார். அப்போது கமல்ஹாசனை பேரிஆஸ்போன் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் இணைந்து ஒரு `ஹாலிவுட் படத்தில் பணிபுரிவது என்று அப்போது முடிவு செய்தார்கள்.

இதுகுறித்து சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மேட்ரிக்ஸ், லார்ட் ஆப் தி ரிங்ஸ், போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் பேரி ஆஸ்போன். அவர், என்னுடன் இணைந்து படம் பண்ண விரும்புவதாக கூறினார்.

அதன்படி நான் அவரிடம் 9 கதைகள் சொன்னேன். அதில் ஒரு கதை அவருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும், அதனால் இக்கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

மேலும் இப்படத்தை என்னையே ஹீரோவாகவும், டைரக்டராகவும் பணியாற்ற சொன்னார். முதலில் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க சற்று தயங்கினேன். பின்னர் பேரி ஆஸ்போனின் வேண்டுகோளை ஏற்று இப்படத்தை நானே இயக்கி, நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

நானும், பேரி ஆஸ்போனும் இணைந்து பணியாற்றும் இப்படம் இந்திய பாணியில், ஹாலிவுட் தரத்தில் இருக்கும். அதற்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என்று கூறினார்.

கமல்ஹாசனுக்கு கிடைத்த இப்படியொரு வாய்ப்பு அவருக்கு மட்டும் அல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த ஒரு மிகப்பெரிய கவுரவமாகும்.

மேலும் ஹாலிவுட் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து, படத்தையும் இயக்கும் முதல் இந்திய நடிகர், தமிழர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு கிடைத்து இருக்கிறது.

விஸ்வரூபம் படத்தின் கதை என்ன?

ஹாலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மற்றும் படக்காட்சிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

பயங்கரவாதமும், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் கதை என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டம் தெரிகிறது. அதுமட்டுமல்ல படத்தில் கதக் டான்சராகவும் மிரட்டியுள்ளார் கமல்.

விஸ்வரூபம் படம் குறித்து சிங்கப்பூரில் கமல் கூறியதாவது, கடந்த 7 வருடங்களாக என மனதில் பதிந்திருந்த கதை தான் விஸ்வரூபம்.

அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள்.

3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள்.

தனது நடன பள்ளியை சம்சாரம் இடைஞ்சலின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத். ஆசை யாரைவிட்டது. நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள்.

மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறான். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிறது என்றோடு முடித்து கொண்ட கமல் மீதியை திரையில் நீங்களே பாருங்கள் என்று கூறி முடித்துவிட்டார்.

துப்பாக்கி படப்பிடிப்பில் விஜய் காயம்

துப்பாக்கி படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்க்கு காலில் அடிப்பட்டது. நண்பன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் புதியபடம் துப்பாக்கி.

இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை‌ மும்பையை மையப்படுத்தி இருப்பதால் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையிலேயே நடத்தி வந்தார் முருகதாஸ்.

தற்போது சில காட்சிகளை படமாக்க லண்டன் சென்றுள்ளனர் விஜய், முருகதாஸ் உள்ளிட்ட துப்பாக்கி படக்குழுவினர்.

லண்டனில், ஆக்ஷ்ன் காட்சி ஒன்றை படமாக்கி கொண்டிருந்தனர். அதில் விஜய் பங்கேற்று நடித்து வந்தார்.

அப்போது சண்டைக்காட்சியின் போது விஜய்க்கு கால்மூட்டில் எதிர்பாரா விதமாக அடிபட்டது. இதனையடுத்து வலியால் துடித்த விஜய் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. லண்டனில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு மெல்போர்ன் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் விஜய் பங்கேற்க இருந்தார்.

ஆனால் இப்போது அவருக்கு அடிப்பட்டதால், இந்த விழாவில் விஜய் பங்கேற்க மாட்டார் எனத் ‌தெரிகிறது.

இசை படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை பழிதீர்க்கும் எஸ்.ஜே.சூர்யா

"இசை" எனும் பெயரில் இயக்குநர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இசையமைத்து நடித்து, இயக்கி, தயாரித்து வரும் புதிய படத்தின் கதை, வளரும் இசையமைப்பாளரைப்பார்த்து வளர்ந்த பழுத்த இசையமைப்பாளர் பொறாமை கொண்டு செய்யும் டார்ச்சர்கள் தானாம்!

இந்த கதையை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெருக்கமான எஸ்.ஜே.சூர்யா கையில் எடுக்க காரணம்? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எனும் பழமொழிக்கு ஏற்ப பழிவாங்கும் படலமாகத்தானாம்.!

அதாகப்பட்டது, இவரது "அ.ஆ." படத்திற்கு இசையமைத்தபோது ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா சொன்ன கேட்ட ட்யூன்களை எல்லாம் பார்த்துவிட்டு நீங்களே இசையமைப்பாளர் ஆகிவிடுங்‌களேன்... என கிண்டலடித்ததை தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும், அதேநேரம் இசைப்புயலையும் வம்பில் சிக்க வைக்க வேண்டும் என யோசி்த்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை அறிவை பார்த்து என்னையே இசையமைக்க சொன்னதால் தான் நான் "இசை" படத்திற்கு இசையமைப்பாளரானேன் என பில்-டப் கொடுத்து வருவதுடன், இசைப்புயலையும் வம்பில் சிக்க வைக்கும் உத்தேசத்தில் அவர், இளையாரா உள்ளிட்டவர்களிடம் கீ-போர்டு ப்ளேயராக இருந்து இசையமைப்பாளராக உயர்ந்தபோது, உச்சத்தில் இருந்த இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் காட்டிய எதிர்ப்புகளை நட்பு அடிப்படையில் தன்னிடம் பகிர்ந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானை காட்டி கொடுக்கும் விதமாக இசை படத்தில் எக்கச்சக்க சீக்ரெட் மேட்டர்களை "கீன்" படுத்தி ரஹ்மானை பழிதீர்க்க இருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா!

இசை படத்தில் எஸ்.ஜே.சூர்யா வளரும் இசையமைப்பாளர். பிரகாஷ்ராஷ், அவருக்கு டார்ச்சர் தரும் வளர்ந்த இசையமைப்பாளர் என்றால் பாருங்களேன்!

விஜய்யின் தலைவன் பட தலைப்பு மாறுகிறது

துப்பாக்கி, யோஹன் அத்தியாயம் ஒன்று படங்களுக்கு பிறகு நடிகர் விஜய், மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள் புகழ் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு தலைவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பொருத்தம் இல்லை என்றும், இதனால் வேறு ஒரு புதிய தலைப்பை டைரக்டர் விஜய் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே படத்தின் தலைப்பை மாற்றுவது டைரக்டர் விஜய்க்கு சென்டிமென்ட்டும், ஏற்கனவே இவருடைய தெய்வத்திருமகள் படத்திற்கு மூன்று தலைப்பு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

வாலு பட வசனத்தால் சிம்பு, தனுஷ் மீண்டும் மோதல்

சிம்பு, தனுஷ் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ஏற்கனவே இருவரும் சினிமாவில் ஒருவரையொருவர் தாக்கி வசனம் வைத்தும், ஒருத்தருடன் ஜோடி சேர்ந்த நாயகியை மற்றவர் தன்னுடன் ஜோடி சேர்த்தும் ஆத்திரத்தை கொட்டினர்.

சுள்ளான் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சிந்து துலானியை ‘மன்மதன்’ படத்தில் சிம்பு துணை நடிகையாக்கி விலைமாது கேரக்டரில் நடிக்க வைத்தார். சிம்புவுடன் காதலை முறித்து பிரிந்த நயன்தாராவை ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் ஜோடியாக்கினார்.

‘லூசு பெண்ணே‘, ‘எவன்டி உன்ன பெத்தான், கையில கிடைச்சா செத்தான்’ என்பது போல் சிம்பு பாடல்கள் எழுதினார். தனுசும் போட்டியாக ‘ஒய் திஸ் கொலை வெறிடி’ பாடலை எழுதி பாடினார்.

இவ்வாறு அவர்களின் மோதல் நீடித்தது இருவரின் ரசிகர்களும் ஒருவரையொருவர் விமர்சித்து இணையதளங்களில் கருத்துக்கள் வெளியிட்டனர். கடந்த ஒரு மாதமாக இவர்களின் சண்டை சச்சரவு சற்று ஒய்ந்து இருந்தது. இருவரையும் சமரசப்படுத்த மத்தியஸ்தர்கள் முயற்சித்து வந்தனர்.

இந்த நிலையில் வாலு படத்தில் சிம்பு வைத்துள்ள வசனம் மூலம் மீண்டும் தகராறு தலைதூக்கியுள்ளது. இந்த படத்தில் சிம்புவை பார்த்து ஹன்சிகா ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் பிடிக்கும். ஆனா உன்ன மாதிரி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று பேசுவதுபோல் வசனம் உள்ளது.

தனுஷ் ‘படிக்காதவன்’ படத்தில் தன்னை வெறுக்கும் தமன்னாவிடம் என்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது. பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும் என்று வசனம் பேசுவார்.

அந்த வசனத்தை வாலு படத்தில் சேர்த்து, அதோடு தன்னை பார்த்த உடனே பிடிச்சிடும் என்ற வார்த்தைகளை சேர்த்து உள்ளார். இது தனுசுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவுடன் திரும்பவும் மல்லுக்கட்ட தயாராகிறார்கள்.

விஜய் பிறந்த நாளில் அஜித்தின் பில்லா 2 ரிலீஸ்

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜித்தின் பில்லா-2 படம், விஜய்யின் பிறந்தநாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அஜித், பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள புதிய படம் பில்லா-2. சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இன் என்டர்டெயின்மெட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், அஜித் ரசிகர்களை கவரும் வகையில் பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தற்போது பில்லா-2 படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது. அதவாது வரும் ஜூன் 22ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என படதயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.

ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்தது

ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் ‘கோச்சடையான்‘ படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. லண்டனில் 20 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது.

பின்னர் திருவனந்தபுரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அங்கு உள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் பெரும் பகுதி காட்சிகள் படமானது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்தி முடித்துள்ளனர். தற்போது டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் நடந்து வருகின்றன.

லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், ஊடங்காங் ஸ்டூடியோக்கில் இப்பணிகள் நடந்து வருவதாக படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்தார்.

படத்தை வெளியிடுவதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். இந்த வருடம் இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என்றும் அவர் கூறினார்.

ஜப்பான், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. ஜப்பானில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

எனவே ஜப்பான் மொழியிலும் படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இதுபோல் பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

தமிழ் சினிமாவில் மீண்டும் ரஜினி, கமல், ஸ்ரீதேவி

தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படங்கள் சக்கை போடு போட்டு புது சகாப்தத்தை ஏற்படுத்திய காலம் உண்டு.

ரசிகர்கள் அவர்களின் கதாபாத்திரங்களை ரொம்பவே ரசித்து கொண்டாடினார்கள்.

இப்போது மீண்டும் இந்த கூட்டணி பெயரில் ஒரு படம் வெளியாக இருக்கிறது.

அந்த படத்தின் பெயர் சகுனி. புதுமுகம் ஷங்கர் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், ப்ரணீதா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்தபடத்தில் கார்த்தி பெயர் ரஜினி, சந்தானம் பெயர் கமல், ப்ரணீதா பெயர் ஸ்ரீதேவியாம்.

நிச்சயம் இவர்களது கூட்டணியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று சகுனி படத்தின் மொத்த டீமே நம்புகிறது.

தமிழில் வரும் தி அமேஸிங் ஸ்பைடர்மேன்

குழந்தைகளுக்கு பிடித்த ஸ்பைடர்மேன் வரிசையில் அடுத்து வர இருப்பது தி அமேஸிங் ஸ்பைடர்மேன். ஆண்ட்ரு கார்பீல்டு ஸ்பைடர்மேன் கேரக்டரில் வருகிறார்.

எம்மா ஸ்டோன் நாயகி. இந்தி நடிகர் இர்பான் கானும் இதில் முக்கிய கேரக்டரில் வருகிறார். மார்க் வெப் இயக்கி உள்ளார். ஸ்பைடர்மேன் வரிசையில் இது நான்காவது படமாகும்.

உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவனுக்கு சூப்பர் சக்திகள் வருவதும் இதன் மூலம் அவன் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து சாகசங்கள் செய்வதுமே இப்படத்தின் கதை.

இதன் படப்பிடிப்பு 2010 டிசம்பரில் லாஸ் ஏஞ்சல்லில் துவங்கி 2011-ல் முடிந்தது. '3டி'யில் உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் தமிழில் தமிழகமெங்கும் ரிலீசாகிறது.

காதலனுடன் இணைந்து நடிக்கும் மீரா ஜாஸ்மின்

நடிகை மீரா ஜாஸ்மின், அவரது காதலரும், இசைக்கலைஞருமான ராஜேசும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். விஜய், அஜித், விஷால், மாதவன் உள்ளிட்ட தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்த மீரா ஜாஸ்மினுக்கு தற்போது தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லையென்றாலும் மலையாளம் உள்ளிட்ட பிற மொழிபடங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் பிரபல மண்டோலின் இசை கலைஞர் ராஜேசும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.

சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் கூட செய்து ‌கொண்டதாக கிசுகிசு பரவியது. ஆனால் இ‌தனை இருவருமே மறுத்துள்ளனர்.

மேலும் மீரா ஜாஸ்மின் நடிக்கும் படங்களின் சூட்டிங் ஸ்பாட்டில் ராஜேஷை காணமுடிகிறது. அதேபோல் ராஜேஸின் இசைகச்சேரிகளிலும் மீராவை காணமுடிகிறது.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக இருப்பதாகவும், விரைவில் இந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...