ஐ.டி., ரெய்டில் அனுஷ்காவை சிக்க வைத்த பிரபல நடிகர்

சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டால் கலங்கி போய் இருக்கிறார் நடிகை அனுஷ்கா. இதனிடையே இந்த ரெய்டிற்கு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.


"அருந்ததீ" படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக வரத்தொடங்கியுள்ளார்.


குறுகிய காலத்தில் இந்த இடத்தை பிடித்த நடிகை அனுஷ்கா மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.


இதில் ஏராளமான கணக்கில் வராத சொத்துக்கள், நகைகள் மற்றும் ரொக்க பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் அனுஷ்கா, மன ஆறுதலுக்காக சில நாட்கள் பெங்களூருவில் தங்க முடிவெடுத்துள்ளார்.


இதனிடையே இந்த ரெய்டிற்கு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் தான் காரணம் என்கிறார் அனுஷ்கா.


விசாகப்பட்டிணம் கடற்கரை அருகே நிலம் வாங்க அந்த நடிகர் தான் தன்னை வற்புறுத்தியதாகவும், வாங்கும் போது பல பிரச்சனைகளை வந்ததாகவும் கூறுகிறார் அனுஷ்கார்.

வானம் சூட்டிங்கில் சிம்புவுக்கு மீண்டும் காயம்

வானம் படத்தின் சூட்டிங் ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் வேளையில் படத்தின் சூட்டிங்கின் போது சிம்புவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


தெலுங்கில் சூப்பர் ஹிட்டான "வேதம்" படம் தமிழில் "வானம்" என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக சிம்புவும், ஹீரோயினாக அனுஷ்கா நடிக்கின்றனர். இவர்களுடன் பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


வேதம் படத்தை இயக்கிய கிரிஷே இப்படத்தையும் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதனிடையே இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.


இந்நிலையில் சூட்டிங்கின் போது இரும்பு கம்பி ஒன்று தாக்கி சிம்புவுக்கு காயம் ஏற்பட்டது. வலி பொறுக்காமல் துடித்து போன சிம்புவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் படக்குழுவினர்.


அங்கு சிம்புவை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், ஆபரேஷன் முடித்த பின்னர் இரண்டு வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.


ஓரிரு நாளில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. சிம்புவுக்கு ஏற்பட்ட காயத்தால் வானம் படத்தின் சூட்டிங் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக இதேபோன்று ஏற்கனவே இருமுறை வானம் பட சூட்டிங்கின் போது சிம்புவுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் விஷால்

சினிமாவில் விஷாலுக்கு முக்கிய அந்தஸ்து கொடுத்த படங்களில் சண்டக்கோழி படமும் ஒன்று. இப்படத்தை டைரக்டர் லிங்குசாமி இயக்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் லிங்குசாமியின் இயக்கத்தில் ஒரு படம் பண்ணப்போகிறார் விஷால்.

ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் டைரக்டர் லிங்குசாமி.

இப்போது ஆர்யா, மாதவனை வைத்து வேட்டை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து விஷாலை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

தற்போது விஷால் பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒருபடத்தில் நடித்து வருவதால், அந்தபடத்தை முடித்த பின்னர் இந்தபடத்தை இயக்கலாம் என்ற எண்ணியிருக்கிறார்.

ஏற்கனவே சண்டக்கோழி படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவே இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சண்டக்கோழியில் விஷால், யுவன், லிங்குசாமி ஆகிய மூவர் காம்பினேஷன் நன்றாக அமைந்திருந்தது. அதேபோல் இனி எடுக்கப்போகும் புதிய படத்திலும் இவர்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குள்ளநரி கூட்டத்துடன் மீண்டும் சேர்ந்த விஷ்ணு

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஷ்ணுக்கு முதல்படம் நன்றாக அமைந்தாலும், அதற்கு அடுத்து வந்த பலே பாண்டியா, துரோகி போன்ற படங்கள் நன்றாக அமையவில்லை.


இருப்பினும் மனம் தளராமல் அடுத்து குள்ளநரி கூட்டம் என்ற படத்தில் நடித்தார். தர்ஷன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆஷிஸ் ஜெயின் தயாரிப்பில், புதுமுக டைரக்டர் ஸ்ரீபாலாஜி இயக்கி இருந்தார்.


விஷ்ணுவின் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து இருந்தார். சிலதினங்களுக்கு முன்னர் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மிகுந்த குஷியில் இருக்கிறார் விஷ்ணு.


இதனிடையே விஷ்ணு மீண்டும் ஆஷிஸ் ஜெயின் தயாரிப்பில், ஸ்ரீபாலாஜியின் இயக்கத்தில் ஒரு படம் பண்ணப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், ஆம், மீண்டும் அதே கூட்டணியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண இருக்கிறேன். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்றார்.

தெலுங்கு நடிகருடன் தமிழ் நடிகை டேட்டிங்

புகழின் உச்சிக்கு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு மார்க்கெட்டை கெடுத்துக் கொண்ட நடிகை ஸ்ரேயா, இப்போது பிரபல தெலுங்கு நடிகருடன் டேட்டிங் போவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம்.

டகுபதி ராணா என்ற பெயருடைய அந்த நடிகர் தெலுங்கில் பிரபல சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். அதாவது அவரது தாத்தா பிரபல தாத்தா ராமாநாயுடு.

நடிகர்கள் வெங்கடேஷ், நாகார்ஜூனா போன்றவர்கள் அவரது ரத்த சொந்தங்கள். பெரிய குடும்பத்து பிள்ளை என்பதாலோ என்னவோ ராணாவை, அந்த நடிகை வளைத்து போட்டுக் கொண்டார் என்று தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு மலைப்பிரதேசத்துக்கு இருவரும் டேட்டிங் சென்று உல்லாசமாக பொழுதை போக்கிவிட்டு திரும்பியிருக்கிறார்களாம்.

இதுபற்றி அம்மணியிடம் கேட்டால், "ராணாவின் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ராணாவுக்கும் எனக்கும் நட்பைத் தாண்டி வேறு எந்த தொடர்பும் இல்லை.

நாங்கள் டேட்டிங் வைத்துக் கொண்டதாக சொல்வது வெறும் வதந்திதான்" என்று வழக்கம்போல பதிலளிக்கிறாராம்.

கத்ரீனா விளம்பரத்தில் ஸ்லம்டாக்! ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கு!!

கத்ரினா கைப் தோன்றும் விளம்பரம் ஒன்றில் ஸ்லம்டாக் மில்லினர் படப் பாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதை எதிர்த்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கு தொடரவிருக்கிறார்.


பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் நடித்த விளம்பர படம் சமீபத்தில் ரிலீசானது. அதில் ஸ்லம்டாக் மில்லினர் பாடலை பயன்படுத்தி இருந்தனர்.


இந்த விளம்பரத்தை பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்தார். காரணம், பாடலின் முழு உரிமையும் ரஹ்மானிடம்தான் உள்ளது.


கத்ரீனா விளம்பரத்தை உருவாக்கியவர்கள் ரஹ்மானிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.


இதையடுத்து அந்த விளம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளார். இதுபற்றிய சட்ட விவகாரங்களை கவனிக்கும்படி தனது வக்கீல்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


ரஹ்மான் தரப்பில் இதுபற்றி கூறும்போது, "விளம்பர படத்தை தயாரித்தவர்களிடம் எனது வக்கீல்கள் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள். விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்த நடவடிக்கை கத்ரீனாவுக்கு எதிரானதல்ல. காபிரைட் உரிமையை மீறும் வகையில் இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் மீதுதான்" என்றனர்.


கத்ரினாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்கனவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஆல்பம் ஒன்றில் இணைந்து பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அழகிரி டெண்டுல்கர், ஸ்டாலின் சேவக்: வடிவேலு

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார் வடிவேலு. அத்துடன் மத்திய அமைச்சர் அழகிரி சச்சின் டெண்டுல்கர் என்றும், துணை முதல்வர் ஸ்டாலின் ‌சேவக் என்றும் கூறியுள்ளார்.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்காக நடி‌கர், நடிகையரும் களத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டனர்.


இதனிடையே நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலால், அவரை எதிர்த்து வடிவேலு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் ‌பேசிய வடிவேலு, தமிழகத்தில் மீண்டும் அய்யா கருணாநிதி அவர்கள் முதல்வராகனும், கடந்த தேர்தலின் போது இவர் அளித்த வாக்குறுதியை அனைவரும் கதாநாயகன் என்று வர்ணித்துள்ளனர். சொன்னது போல் அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.


அதேபோல் இந்தாண்டும் தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்களை வழங்குவதாக கூறியிருக்கிறார். நிச்சயம் அவர் சொன்னதை செய்வார். அத்துடன் அவரது தலைமையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மாதிரி அண்ணன் அழகிரியும், சேவக் மாதிரி துணை முதல்வர் ஸ்டாலினும் இருக்கின்றனர்.


இவர்களும் இருவரும் சேர்ந்து சிக்ஸர்களாக விளாச போகின்றனர். மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்க போகிறது. இவர்களுடன் நானும் சேர்ந்து தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போகிறேன்.


வருகிற 23ம் தேதி திருவாரூரில் முதல்வர் கருணாநிதி அவர்கள் பங்கேற்கும் பிரச்சாரத்தில் நானும் பங்கேற்க இருக்கிறேன்.


அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ளேன் என்றார்.

தி.மு.க.,வுக்கு ஆதரவாக களமிறங்கும் வடிவேலு

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்ய உள்ளார். சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.


சில, பல மாதங்களுக்கு முன்னர் நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை யாரும் மறந்திருக்க மாட்டார். வடிவேலு வீட்டின் மீது கல்லை எறிந்து பெரும் ரகளை செய்தனர் தே.மு.தி.க.,வினர்.


இதனால் கொதித்து போன வடிவேலு வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து நானே போட்டியிட்டு அவரை தோற்கடிப்பேன் என்று ஆவசேமாக கூறியிருந்தார்.


இப்போது தேர்தலும் வந்துவிட்டது. வடிவேலு, விஜயகாந்‌த்தை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடிவேலு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.


இந்நிலையில் தி.மு.க.,வுக்கு அதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று(21.03.11) சந்தித்து பேசினார் வடிவேலு.


வருகிற 23ம் தேதி முதல் தனது பிரச்சார பயணத்தை தொடங்கும் வடிவேலும் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க இருக்கிறார்.

ஹாலிவுட்டில் கால்பதிக்கும் யுவன்

ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா.


தன் தந்தையை போல இவரும் இசையில் அசத்தி வருகிறார். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையப்பாளரும் இவர் தான். கடந்த ஆண்டு யுவன் இசையமைத்து வெளிவந்த பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாகின. தற்போது தமிழில் மட்டுமல்லாது, இந்தியிலும் இசையமைத்து வருகிறார்.


இந்நிலையில் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புகள் தேடிவந்துள்ளதாக யுவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் இணையதளத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது,


இந்த வருடம் மிகப்பெரிய நற்செய்தி ஒன்று காத்திருப்பதாகவும், நிச்சயம் கோலிவுட்டையும் தாண்டி அது வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.


யுவனின் இந்த செய்தியை பார்த்துவிட்டு அவரது ரசிகர் ஒருவர், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க உள்ளீர்களா? என்று கேட்டுள்ளார்.


அதற்கு யுவனும் ஆம்! ஹாலிவுட் படத்திற்கு தான் இசையமைக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சின்னத்திரையில் பார்த்திபன் - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான்

வெள்ளித்திரையில் தனித்தனியே சிலபல ‌வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் பார்த்திபனும், டைரக்டர் கவுதம் மேனனும் சின்னத்திரைக்காக கைகோர்க்கிறார்கள். இவர்கள் இருவரும் இணையப் போகும் தொடர் ஒரு விறுவிறுப்பான துப்பறியும் தொடராம்.


இதுபற்றி கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில், வெள்ளித்திரை அனுபவத்தை சின்னத்திரையில் பெற முடியாது என்ற தவறான கருத்‌தை தகர்த்தெரியும் வகையில் என்னுடைய திகில் தொடர் இருக்கும்.


பெரிய திரை அனுபவத்தை தரும் அளவுக்கு பரபரப்பும், புதுமையும் நிறைந்த கச்சிதமான தொடராக அதனை இயக்கவுள்ளேன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும், என்றார்.


நடிகர் பார்த்திபன் கூறுகையில், தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது உண்மைதான். இதுதொடர்பாக ரொம்ப நாளாகவே நானும், கவுதமும் விவாதிச்சிட்டு இருந்தோம். இந்த முயற்சி மிக வித்தியானமாதாகவும், இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகவும் இருக்கும்.


ஹாலிவுட் தரத்தில் சின்னத்திரை தொடரை எடுக்கலாம் என்பதை எங்களது சீரியல் நிரூபிக்கும். சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த இயக்குனர்கள் சங்க விழாவின்போதுதான் இதுகுறித்த திட்டம் உருவானது. இந்தத் தொடரை தயாரிப்பவரும் டைரக்டர் கவுதம்‌மேனன்தான், என்றார்.


ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய த்ரில் தொடருக்கு இசையமைக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

தள்ளிப்போகிறது மங்காத்தா ரீலிஸ்

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் - நடிகை த்ரிஷா ஜோடி நடித்து வரும் புதிய படமான மங்காத்தா ரீலிஸ் தேதி தள்ளிப்போகிறது.


அஜித் பிறந்த நாளான மே 1ம்தேதி படத்தை ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் விறுவிறுப்பாக சூட்டிங்கை நடத்தி வரும் குழுவினர், இப்போது ரீலிஸை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.


அஜித் - த்ரிஷா தவிர லட்சுமிராய், பிரேம்ஜி அமரன், அர்ஜூன், வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் இப்‌போது மும்பையில் நடந்து வருகிறது.


ஏப்ரல் 16ம்தேதி வரை மும்பையில் நடக்கவுள்ள படப்பிடிப்பை முடித்த கையோடு 2 பாடல் காட்சிகளை எடுக்க வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு.


அதன் பிறகுதான் படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய முடியும். எனவே, தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு ஒருபுறம், ஐபிஎல் கிரிக்கெட் ஒருபுறம் என பரபரப்புக்கு இடையே படத்தை அவசரம் அவசரமாக ரீலிஸ் செய்ய வேண்டாம் என நினைக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.


இதனால் மே மாதம் என இருந்த ரீலிஸ் தேதி ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம்

த்ரிஷாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியுள்ளார் அவரது தாயார் உமா கிருஷ்ணன். இந்நிலையில் அவரது திருமணம் ‌குறித்து தினம் ஒரு வதந்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதை த்ரிஷாவும், அவரது தயாரும் மறுத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந்தை இருக்கிறது என்று செய்திகள் வந்தது. இதற்கு த்ரிஷா மிகுந்த கோபத்துடன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது.

ஆந்திர தொழிலதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று த்ரிஷா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் பரவத்தொடங்கியுள்ளது. இந்தமுறை இந்த வதந்தி கிளம்பி இருப்பது தமிழ்நாட்டில் அல்ல ஆந்திராவில்.

தற்போது ஐதராபாத் சென்றுள்ள த்ரிஷா விவல் கம்பெனியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். த்ரிஷா ஏற்கனவே இந்த கம்பெனியின் விளம்பர தூதராக இருக்கிறார்.

இந்நிலையில் இந்த வதந்தி குறித்து அவரிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை காரணம், இதுபோன்ற வதந்திகளுக்கு தேவையில்லாமல் விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.

உடல் எடையை குறைக்கிறார் அஜீத்

"மங்காத்தா" படத்தை தொடர்ந்து, அஜீத் அடுத்து நடிக்க போகும் "பில்லா-2" படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க இருக்கிறார்.


அஜீத் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு கொண்டாட்டமான ஆண்டாக அமையப்போகிறது. இந்தாண்டு அவருக்கு இரண்டு படங்கள் வெளிவர இருக்கிறது ஒன்று "மங்காத்தா", மற்றொன்று "பில்லா-2".


தற்போது மங்காத்தா படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார் அஜீத். இந்தபடம் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று ரிலீசாக இருக்கிறது.


இதனைத்தொடர்ந்து அஜீத் நடிக்கும் படம் "பில்லா-2". இப்படத்தை "உன்னைப்போல் ஒருவன்" படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.


"பில்லா-2" படத்தில் டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே இப்படத்தின் கதை. படம் முழுக்க அவரது இளமை காலத்து வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக அவரை இளமையாக காட்ட வேண்டும்.


ஆகையால் அஜீத் தனது உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் இருக்கிறார். சுமார் 15கிலோ வரை தனது எடையை குறைக்க உள்ளார். மங்காத்தா படம் முடிந்த பின்னர் இதற்‌கான வேலையில் ஈடுபட இருக்கிறார் அஜீத்.

ஷாருக்கானுக்கு மிக மோசமான நடிகர் விருது

ஆலிவுட் பட உலகில் நடிகர், நடிகைகளை கேலி செய்யும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோன்று பாலிவுட் படவுலகிலும் கோல்டன் கேலா விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாலிவுட் நடிகர்களில் மிக மோசமான நடிகருக்கான விருது நடிகர் ஷாருக்கானுக்கு கிடைத்துள்ளது. ‘மை நேம் இஸ் கான்’ என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

மோசமான படத்துக்கான விருதும் இதே படத்துக்கு கிடைத்துள்ளது. அதேநேரம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இதே படத்துக்காக நடிகர் ஷாருக்கான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் மிக மோசமான நடிகைக்கான விருது‘ஆயிஷா’ படத்தில் நடித்த சோனம் கபூருக்கும், மோசமான டைரக்டருக்கான விருது ‘குஷாரிஷ்’ படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கிடைத்தது.

மோசமான துணை நடிகருக்கான விருதை அர்ஷன் ராம்பாலும், மோசமான துணை நடிகைக்கான விருதை கங்கனா ரானாவத்தும் பெற்றனர். டைரக்டர் ராம்கோபால் வர்மாவுக்கு ‘இனி நீங்கள் படம் இயக்கியது போதும்’ என்ற விருது கிடைத்தது.

அசினை விட நயன்தாரா பெஸ்ட்

தமிழில் காவலன் படத்தில் வந்த அசினை காட்டிலும், மலையாளத்தில் பாடிகார்ட் படத்தில் வந்த நயன்தாரா நன்றாக நடித்திருக்கிறார் என்று சர்டிபிகேட் தருகிறார் பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர்.


மலையாளத்தில் ஹிட்டான் "பாடிகார்ட்" படம், தமிழில் காவலன் என்ற பெயரில் ரீ-மேக்கானது. இதில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக அசினும் நடித்து இருந்தனர். இப்படத்தை டைரக்டர் சித்திக் இயக்கி இருந்தார்.


இந்நிலையில் இப்படம் இந்தியிலும் ரீ‌-மேக் செய்யப்பட இருக்கிறது. பாடிகார்ட் என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் சல்மான், கான்-கரீனா கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். டைரக்டர் சித்திக்கே இந்தியிலும் இயக்குகிறார்.


இதனிடையே நடிகை கரீனா கபூரிடம், மலையாள பாடிகார்ட் மற்றும் தமிழ் காவலன் பட டி.வி.டி.க்களை கொடுத்து அதனை பார்க்கும்படி கூறியிருக்கிறார் இயக்குநர் சித்திக்.


இரண்டு படங்களையும் பார்த்த கரீனா, படத்தில் காவலன் அசினை காட்டிலும், பாடிகார்ட்டில் வந்த நயன்தாரா இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

படமாகும் வாஸ்கோடகாமா வரலாறு

மலையாளத்தில் உருமி, தமிழில் 15ம் நூற்றாண்டு உறைவாள், ஆங்கிலத்தில் வாஸ்கோடாகாமா எனும் பெயர்களில் புதிய படமொன்று உருவாகி வருகிறது.


டைரக்டர் சந்தோஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாஸ்கோடாகாமாவின் வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கதை இருக்குமாம்.


ப்ருத்வி ராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் உள்ளிட்ட தமிழ், மலையாளம், இந்தி நட்சத்திரங்களுடன் இங்கிலாந்து நடிகர்ள் அலெக்ஸ், ராபின் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.


இதில் வித்யாபாலன் ஒத்தைப் பாட்டு ஆடுவது போன்று, இளவரசியாக நடிக்கும் ஜெனிலியா ‌‌போடும் தாசியாட்டமும் பேசப்படுமாம்.


சந்தோஷ் சிவனுடன் இணைந்து நடிகர் ப்ருத்விராஜூம் தயாரிக்கும் 15ம் நூற்றாண்டு உறைவாள், மலையாளத்தில் எடுக்கப்பட்டதிலேயே மிகவும் பெரிய பட்ஜெட்டாம்.


ஆமாம், பின்னே... தமிழ், ஆங்கிலத்திலும் ஒருசேர உருவாகிறதே

முதன் முதலாக கமலுடன் இணையும் யுவன்

டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கமலுடன், யுவன் இணைவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்வராகவன் கமலை வைத்து ஒரு புதிய படம் பண்ண ஒப்பந்தமாகி இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது.

இப்போது அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க, செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

"ஆ‌யிரத்தில் ஒருவன்" படத்தின் போது செல்வாராகவனுக்கும், யுவனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அப்படத்தில் இருந்து யுவன் விலகினார். இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் அந்தபடத்திற்கு இசையமைத்தார்.

இந்நிலையில் "இரண்டாம் உலகம்" படத்தின் மூலம் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்தார் யுவன். இந்தபடம் விரைவில் வெளிவர இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து இப்போது கமலை வைத்து இயக்கப்போகும் படத்திற்கும் யுவனே இசையமைக்க இருக்கிறார்.

கமலுடன், யுவன் இணைவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தன கடத்தல் வீரப்பனாக கிஷோர்

"குப்பி", "காதலர் குடியிருப்பு" போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் ரமேஷ் அடுத்து, மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார். இப்படத்திற்கு வன யுத்தம் என்று பெயரிட்டுள்ளார்.


படம் குறித்து டைரக்டர் ரமேஷ் கூறியதாவது, மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறேன். படத்திற்கு "வன யுத்தம்" என்று பெயரிட்டுள்ளேன்.


வீரப்பன் பற்றிய கதை என்பதால் அவரை பற்றிய தகவல்களை நிறைய சேகரித்து வருகிறேன். படத்தில் வீரப்பனாக பொல்லாதவன் கிஷோர் நடிக்கிறார்.


அதேசமயம் வீரப்பனுக்கு எதிரான போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்.


விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். அக்ஷயா கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.


விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும் என்றார்.

ஸ்லம்டாக் ரூபினா குடிசையில் தீ! ஆஸ்கார் விருது சாம்பல்!!

மும்பையில் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியின் வீடு தீ விபத்தில் சிக்கியது. அவர் வாங்கிய ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், புகைப்படங்களும் தீயில் எரிந்து சாம்பலாயின.


மும்பையில் பாந்திரா ரெயில் நிலையத்தை ஒட்டி மிகப்பெரிய குடிசைப்பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு குடிசையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது.


சிறிது நேரத்தில் அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு தீ மளமளவென பரவியது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.


இந்த தீ விபத்தில் 800க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.


இதில் ஸ்கார் விருது பெற்ற சிறுமி ரூபினா அலியின் குடிசையும் தீயில் எரிந்து சாம்பலானது.


வீட்டில் இருந்த ஆஸ்கார் விருது உள்ளிட்ட விருதகள், புகைப்படங்கள், நினைவுப்பரிசுகள் உள்ளிட்டவைகளும் சாம்பலாயின.


இதுபற்றி ரூபினா கூறுகையில், தீ விபத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்காக தந்த நினைவுப் பரிசுகளையும் கூட பறிகொடுத்து விட்டேன். இந்த நேரம் வரை எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை, என்றார்.

சீடன் - விமர்சனம்

இதுநாள் வரை முன்னணி கதாநாயகிகள் மட்டுமே தமிழ்சினிமாவில் பெரும்பாலும் கடவுள் அவதாரம் எடுத்து வந்தனர். சீடன் படத்தில் முன்னணி நடிகர் தனுஷ் கடவுள்..., அதுவும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதாரம் எடுத்து அசத்தியிருப்பதுதான் விசேஷம்.


த‌னுஷ் - தமிழ்க் கடவுள் என்றதும் ஏதோ பக்திப்படம்தான் சீடன் என்றும், அதில் தனுஷ் வேலும், மயிலுமாக கலகலவென்று சிரித்தவண்ணம் கடவுளாக காட்சியளித்தபடி யாமிருக்க பயமேன்? என கேட்பாரா? என்றால் அதுதான் இல்லை. அப்புறம்?


அதுதான் கதை! அதாகப்பட்டது., பழனி மலை அடிவாரத்தி்ல ஒரு பெரிய வீடு. பாரம்பரியம் மிக்க அந்த வீட்டில் ஒரு பாட்டியும், அந்த பாட்டியை பார்த்துக் கொள்ள இரண்டு பாட்டிகளும், அந்த மூன்று பாட்டிகளுக்கும் பணிவிடை செய்ய ஒரு வயசுப்பெண்ணும் வாழ்கின்றனர்.


அன்பும், பண்பும் நிறைந்த அந்த வாயசுப்பெண்ணுக்கு சின்ன வயது முதலே முருக கடவுள் மீது அளவுக்கு அதிகமான காதல். அதேமாதிரி ஒரு காதல் அந்த வீட்டுக்கு வரும் பாட்டியின் பேரன் மீதும் ஏற்படுகிறது. அனாதையான அவளுக்கும், அவள் காதலுக்கும், அவள் வணங்கும் முருகப்பெருமான் எந்த விதத்தில் உதவுகிறார்?! என்பதுதான் சீடன் படத்தின் மொத்த கதையும்!


கதாநாயகி அனன்யாவின் காதலுக்கு உதவும் கடவுளாக தனுஷ், முருக கடவுளாகவே வராமல் சமையல் கலைஞர் மடப்பள்ளி சரவணனாக வந்து காய்கறிகழை கழுவிவிட்டு நறுக்கணும், நறுக்கிட்டு கழுவக் கூடாது என்பதில் தொடங்கி, கீர‌ையில் கொஞ்சம் தயிர் சேர்த்து சமைத்தால் அதன் நிறமும் மாறாது, சுவையும் கூடுதலாக இருக்கும்... என்பது வரை தனுஷ் தரும் டிப்ஸ்கள் சூப்பர் என்றால், கடவுளின் அவதாரமாக‌ நாளைக்கு எல்லாம் மாறும்... என உணர்ந்து வாழ வேண்டும் என்பதில் தொடங்கி, மிகப்‌பெரும் வாழ்க்கையை தரப்போறவங்களுக்கு மிகப்பெரும் கஷ்டத்தையும் தருவான் கடவுள் என்பது வரை... அவர் பேசும் தத்துவங்களும் சூப்பரோ சூப்பர்! த‌னுஷ் இந்த வயதிலேயே நடிப்பில் கரை கண்டுவிட்டார் என்றால் மிகையல்ல.‌ பேஷ்! பேஷ்..!!


கதாநாயகி அனன்யாவுக்கு படத்தில் நடிக்க நிறையவே வாய்ப்பு. அதனை சரியாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அம்மணி! அவரை மாதிரியே அவரது காதலராக வரும் ஜெய்கிருஷ்ணாவும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.


ஆனால் சாப்ட்டான பாட்டி, ஆப்ட்டான அம்மா என்று தனக்கு அமைந்து இருந்தும், காதலை சொல்லி ஹீரோ பர்மிஷன் வாங்க அவ்வளது தயக்கம் காட்டுவதுதான் நாடகம் போன்று போரடிக்கிறது. அதேமாதிரி க்ளைமாக்ஸில், எனக்கு கொடுத்த வாக்கை காபந்து செய்யப் போகிறாயே... என பாட்டி உருகுவதும், அனன்யா குயிலை பிடித்து கூண்டில் அடைத்து... குஷ்பு ஸ்டைலில் ஒரு பாட்டை பாடுவதும் போர்.


அந்த பாடல் இல்லாமலேயே எல்லாம் தெரிந்த பாட்டி, பேரன் ஜெய் கிருஷ்ணா கையில் ‌அனன்யாவை பிடித்துக் கொடுத்திருந்தால் சீடன் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.


பாட்டியாக செம்மீன் ஷீலா (!), அம்மா சுஹாசினி, பொன்வண்ணன், மயில்சாமி, மீரா கிருஷ்ணன், இளவரசு, உமா பத்மநாபன் என டஜன் கணக்கில் நட்சத்திரங்கள் இருந்தும், சீடனை காப்பாற்றுவது தனுஷூம், தினாவின் இசையும், இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவின் வசனமும்தான்.


சீடன் : தனுஷை நல் வேடன் என நிரூபித்திருக்கிறது

வானத்தை விலைக்கு வாங்கிய தயாநிதி அழகிரி

முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கிளவுட் நைன் மூவிஸ் நடிகர் சிம்புவின் வானம் படத்தை விலைக்கு வாங்கியுள்ளது.


டைரக்டர் கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் வானம். இந்த படத்தின் நாயகியாக அனுஷ்காவும், இன்னொரு நாயகனாக நடிகர் பரத்தும் நடித்துள்ளனர்.


முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வாங்கியிருக்கிறது.


விரைவில் வானம் இசை வெளியீடு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.


தயாநிதியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்து வரும் முக்கிய படமான அஜித்தின் மங்காத்தாவை மே 1ம்தேதி ரீலிஸ் செய்வது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், வானம் படம் அதற்கு முன்னதாகவே ரீலிஸ் செய்யப்படுமா? அல்லது அதற்கு பிறகு ரீலிஸ் செய்யப்படுமா? என்பது தெரியவில்லை.

தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக வடிவேலு போட்டி

தன்னை இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை அதிமுக ஏற்றுக்‌ கொள்கிறதா? என்று விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது பற்றி காமெடி நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த சிலபல மாதங்களுக்கு முன்பு, நடிகர் வடிவேலுவுக்கும், தேமுதிகவை சேர்ந்த பிரமுகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடிவேலுவின் வீடு மீது கல்வீச்சு தாக்குதலும் நடந்தது.


இதையடுத்து ஆவேசமடைந்த வடிவேலு ‌போலீசில் விஜயகாந்த் மீது புகார் அளித்ததுடன், அடுத்த தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன், என்று கூறியிருந்தார்.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜயகாந்த் அதிமுகவுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் இருக்கிறார். விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்ன நடிகர் வடிவேலு என்ன செய்யப்போகிறார்? அவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? என்பதையும் பரபரப்பான அரசியலுக்கிடையே சிலர் எதிர்பாத்து காத்திருக்கிறார்கள்.


இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டால் தீர்க்கமான முடிவை தெரிவிக்காமல் மழுப்பி விட்டார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன், என்று கூறியிருக்கிறார் வடிவேலு.


வடிவேலு அரசியல் களம் இறங்குவாரா? விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? அப்படி போட்டியிட்டால் எவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்கும்? அல்லது விஜயகாந்துக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தி.மு.க. வட்டாரம் வடிவேலுவை வளைத்துப் போடும் திட்டத்தையும் போட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பில்லா-2-வை இயக்குகிறார் சக்ரி டோலட்டி

அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அ‌தேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார்.

கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர்.

டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.பில்லாவை இயக்கிய விஷ்ணுவ‌ர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார்.

இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர்.

தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார்.

படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...