கமலுக்காக தலைவா ஷூட்டிங் நிறுத்திய விஜய்

கமலுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகும் வரை தனது தலைவா படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளார் நடிகர் விஜய். 

கமலின் விஸ்வரூபம் பிரச்னை தமிழ்நாட்டை கடந்து இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. 

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை விட்டே தான் வெளியேற போவதாக கமல் அறிவித்ததைதொடர்ந்து தமிழ் திரையுலகினர் தவிர்த்து பிறமாநில திரையுலகினரும் தங்களது ஆதரவை கமலுக்கு கொடுத்து வருகின்றனர். 

ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யோ இதுவரை எந்த ஒரு பேட்டியோ, அறிக்கையோ கொடுக்கவில்லை. 

இந்நிலையில் இப்போது முதன்முறையாக கமலுக்கு குரல் கொடுத்துள்ளார். 

விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை தான் ‌நடித்து வரும் தலைவா படத்தின் ஷூட்டிங் நடக்காது ‌என்று கூறியுள்ளார். 

மேலும் கமல் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

சர்ச்‌சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் சம்மதம்


விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் முஸ்லிம் தரப்பினருக்கும், விஸ்வரூபம் படத்திற்கும் எந்த பிரச்னையும் வராது என்று கமல் கூறியுள்ளார். 

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. 

ஆனால் இதனை எதிர்த்து கமல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராம் விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். 

இதனையடுத்து இப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு தரப்பில் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் மீண்டும் முஸ்லிம் அமைப்புகள் சிலருடன் செய்தியாளர்களை சந்தித்த கமல், படத்தில் விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சொல்கின்றனர். 

அதன்படி சில காட்சிகளை நீக்கும்படி எனது முஸ்லிம் சகோதரர்கள் கூறினார். இதனையடுத்து படத்தில் இருக்கும் சில காட்சிகளையும், வசனங்களையும் நீக்க முடிவு செய்துள்ளனர். 

இதன்மூலம் இனி முஸ்லிம் சகோதரர்களுக்கும், எனது விஸ்வரூபம் படத்திற்கும் எந்த பிரச்னையும் வராது. 

அதேசமயம் படத்திற்கு வேறு விதமான பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கிறது. இது எனக்கும், நாட்டுக்கும் பதற்றம் தரக்கூடியாக செய்தியாக இருக்கிறது.

எனக்கோ, எனது ரசிகர்களுக்கோ எதுவும் ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை என்றார். 

பவர் ஸ்டாரால் சந்தானத்திற்கு சிக்கல்

லட்டு திண்ண பவர் ஸ்டாருக்கு மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் டாப் ஹீரோக்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். 

சில தினங்களுக்கு முன்பு அடையாரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூடி கும்மாளமடித்த ஹீரோக்கள் இதுகுறித்து காரசாரமாகவே பேசிக் கொண்டார்களாம். 

"நாமெல்லாம் கஷ்டப்பட்டு நடிச்சு படம் பண்ணினால் அது சொத்தை இது சொதப்பல்னு சொல்ற மீடியாக்கள், ஒரு கிரிமினல் நடிச்ச படத்தை தலைக்கு மேல வச்சு கொண்டாடுறாங்க. 

இதுக்கு ஒரு முடிவு கட்டணும்" என்று வீராவேசம் பேசியிருக்கிறார்கள். சந்தனமான காமெடி இனியும் பவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தங்கள் படத்திலிருந்து சந்தனத்தை கரைத்து விட வேண்டியதுதான் என்றும் பேசி முடிவு செய்திருக்கிறார்களாம். 

அதோடு பவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதில் நாம் கலந்த கொள்ளக்கூடாது என்றும் அந்த ரகசிய கூட்டத்தில் ரகசிய தீர்மானம போட்டிருக்காங்களாம். 

விஸ்வரூபம் பிரச்னை - கமலுக்கு ரஜினி காந்த் ஆதரவு

விஸ்வரூபம் படப்பிரச்னையில் தான் மிகவும் புண்பட்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 ஆண்டுகளாக நடிகர் கமலஹாசனை தான் அறிவேன் என்றும் அவர் யாருடைய மனதையும் புண்படுத்தாதவர் என்றும், முஸ்லிம்கள் மீது மதிப்பு வைத்திருப்பதால் தான் அவர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டினார் என்றும் கூறியுள்ளார். 

மேலும், ரூ. 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்பட வெளியீடு தாமதமாவதால், கமல் எந்தளவு மனம் புண்பட்டிருப்பார் என்பதை தான் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் கமலஹாசன் என்றும் கூறியுள்ளார். 

இவ்விவகாரத்தில் இருதரப்பினரும் அமர்ந்து விவாதிக்க வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூறியுள்ளார். 

விஸ்வரூபம் படத்தின் மீதான வழக்கு ஒத்திவைப்பு


சென்னை: நடிகர் கமல் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைபடத்திற்கு விதிக்கப்பட்ட  தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட  வழக்கில் இன்று மாலை நடந்த விசாரணையில் வழக்கு வரும்  28 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டள்ளது.

நடிகர் கமல் தயாரித்துள்ள இப்படத்தை வெளியிட, 15 நாட்கள் தடை விதிக்குமாறு, அரசு தரப்பில் இருந்து, மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களும், இப்படத்திற்கு, 15 நாட்களுக்கு வெளியிட தடை விதித்துள்ளனர். 

தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார் கமல். இந்த வழக்கின் மீதான இன்று மாலை நடந்த விசாரணையில்  வரும் 28-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  நீதிபதிகள் கே.என்.பாட்ஷசா ,பால்வசந்தகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்  திரைப்படத்தை நீதிபதிகளும், மனுதாரர்களும் வரும் 26-ம் தேதி  பார்த்த பின்னரே இந்த வழக்கின் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினர்.

சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடைபெறுவதை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

12 வருடம் சினிமாவை மறந்த அரவிந்த்சாமி


12 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கும் கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் அரவிந்த்சாமி. இத்தனை வருட இடைவெளியில் சினிமாவை மறந்து இருந்தது ஏன் என்பதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறியிருப்பதாவது: 20 வயசுல தளபதி படத்துல மணிரத்னம் சார் நடிக்க வச்சார். அப்போ எனக்கு நடிப்புன்னா என்னென்னே தெரியாது. 

அவர் சொல்றபடி செஞ்சேன். அது எனக்கு பெரிய பெயரை கொடுத்துச்சு. முதல் படமே தமிழக சூப்பர் ஸ்டாருடனும், மலையாள சூப்பர் ஸ்டாருடனும் நடிக்க வாய்ப்பு. அவர்களோடு என்னையும் மக்கள் ரசித்தார்கள். 

அடுத்து ரோஜாவில் ஹீரோ. அடுத்து பம்பாயில் நடிச்சேன். எல்லாமே ஹிட். நம்பர் ஒண் இடத்தை நோக்கி நகர்ந்திட்டிருக்கிறப்போதான் அம்மா இறந்தாங்க. அம்மாமேல உயிரையே வச்சிருந்தேன். 

அவுங்களோட பிரிவு என்னை தனிமையாக்குச்சு. அப்புறம் ஒரு விபத்துல முதுகு எலும்பு உடைஞ்சு குனிந்து எழு முடியாத சூழ்நிலை. 

அதுலேருந்து மீண்டு வந்தால், அப்பாவோட பிசினஸ்களை நான் நடத்த வேண்டிய கட்டாயம். இப்படி அடுத்தடுத்து வந்த பிரச்சினைகள் என்னை சினிமாலேருந்து ஒதுக்கிடுச்சு. திரும்பி பார்த்தா 12 வருஷம் ஓடியிருக்கு. 

இடையில சில வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா நான் ஒத்துக்கல. பழைய அந்த சாக்லெட் ஹீரோவா நிக்க முடியாதுன்னு தெரிஞ்சுது. 

காரணம் காலம் என்னோட தோற்றத்தை மாத்தியிருந்துச்சு. ஆனா மணிரத்னம் சார் நீ இப்படி இருக்ககூடாது, வான்னு கடல்ல கொண்டு வந்து நிறுத்திட்டாரு. 

இனி தொடர்ந்து நடிப்பேன். நிறைய படம் நடிக்கணும்னு ஆசை கிடையாது. ஒன்றிரண்டு படங்கள்ல நடிச்சாலும் எனக்கு பொருத்தமான நல்ல படங்கள்ல நடிச்சா போதும் என்று நினைச்சிருக்கேன்.

முருகதாஸ் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் அஜித்


தீனா படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும், முருகதாஸூம் இணையவுள்ளனர். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அஜித்தை வைத்து தீனா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். 

டைரக்டராக அறிமுகமான முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட். தீனா படத்தால் அஜித்துக்கும், ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் பெரிய பெயர் கிடைத்தது. 

மேலும் அஜித்துக்கு தல என்ற பெயரே இந்த படத்தால் தான் கிடைத்தது. 

இந்நிலையில் கிட்டத்தட்ட 11 வருடத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும், முருகதாஸூம் இணைந்து படம் பண்ண இருக்கின்றனர். 

அதுவும் இந்தபடத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமாம். ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ஒன்-லைன் ஸ்டோரி, அஜித்துக்கு ரொம்ப பிடித்து போக உடனே ஒப்புக்கொண்டுவிட்டாராம். 

ஏற்கனவே அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி, வில்லன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாகின. 

அந்த சென்டிமென்ட்டாக இந்தபடத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 

தற்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடித்து வரும் அஜித், அதற்கு அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். 

அதற்கு அடுத்து இந்தப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய முழுஅறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 

சந்தானம்- டாக்டர் சீனிவாசன் புதிய கூட்டணி ஒப்பந்தமானது


வடிவேலுவின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டதையடுத்து, அடுத்த கிரேடில் இருந்த சந்தானம் நம்பர்ஒன் காமெடியனின் நாற்காலியை கைப்பற்றி விட்டார். 

முன்வரிசையில் இருக்கும் சில ஹீரோக்கள் தங்களுடன் சந்தானமும் கைகோர்த்தால் வெற்றியை எளிதாக கைப்பற்றி விட முடியும் என்று அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டு வருகின்றனர். 

இதனால் இன்றைக்கு பல படங்களின் வியாபாரத்தை முடிவு செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறார் சந்தானம்.

இந்த நிலையில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் டாக்டர் சீனிவாசனுடன் இணைந்து காமெடி செய்திருந்தார் சந்தானம். அது பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி விட்டது. 

குறிப்பாக சீனிவாசனின் காமெடி பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது. அதனால் அவரையும் தன்னுடன் கூட்டு சேர்த்து கொண்டு அவரை கலாய்த்தபடி நடித்தாலே இன்னும் பத்து வருடத்துக்கு தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துளளார் சந்தானம். 

இதையடுத்து கலகலப்பு சிவா நடிக்கும் யா யா படத்தில் முதலில் ஒப்பந்தமாகியிருநத சந்தானம், இப்போது டாக்டர் சீனிவாசனையும் உள்ளே இழுத்திருக்கிறார். 

ஆக, கவுண்டமணி செந்திலை கலாய்த்தது போல், இப்போது டாக்டர் சீனிவாசனை சந்தானம் கலாய்க்கும் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிறது.

தலைவாவுக்காக விஜய்-சந்தானம் இணைந்து பாடிய பாட்டு


இளைய தளபதி என்று எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். நடிகர் மட்டும் அல்ல, சிறந்த நடனமும் ஆடுபவர். அதோடு மட்டுமல்லாது அவ்வப்போது பாட்டும் பாடி அசத்துவார். 

இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன. சமீபத்தில் துப்பாக்கியில் 

இவர் பாடிய கூகுள் கூகுள்... பாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், துப்பாக்கி படத்திற்கு ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். 

தலைவா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இப்படத்தில் ஒரு கலக்கலான பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் விஜய்.  இவருடன் காமெடி நடிகர் சந்தானமும் இணைந்து பாடியுள்ளார். 

இதுகுறித்து ஜீ.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, சில தினங்களுக்கு முன்னர் தான் விஜய்யின் குரலில் பாடல் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டது. விஜய்யுடன், சந்தானமும் பாடியிருக்கிறார். 

பாடலும் நன்றாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு இந்தப்பாடல் நிச்சயம் பிடிக்கும் என்று கூறியுள்ளார். 

விஸ்வரூபத்தால் கமலுக்கு பைத்தியம் பிடித்துள்ளது - பாலுமகேந்திரா


விஸ்வரூபம் படத்தை பார்க்கும்போது கமலின் முழு ஈடுபாடு தெரிகிறது, இந்த படத்திற்காக கண்டிப்பா அவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் என பாலுமகேந்திரா கூறியுள்ளார். 

பல்வேறு பிரச்னைகளை கடந்து கமலின் விஸ்வரூபம் படம் வருகிற ஜன-25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல். 

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு போட்டு காட்டியுள்ளார் கமல். படத்தை பார்த்து வியந்து போய்  உள்ளார் பாலுமகேந்திரா. 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, விஸ்வரூபம் படத்தை பார்க்கும் போது கமலின் முழு உழைப்பும் தெரிகிறது. 

எந்தளவுக்கு அவர் கஷ்டப்பட்டு இருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. நிச்சயம் இந்தபடத்திற்காக அவருக்கு பைத்தியம் பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் சினிமா பைத்தியம். 

அந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கமலை எல்லோரும் உலகநாயகன் என்று அழைக்கின்றனர். 

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு அவரை உலகஇயக்குனர் என்று அழைப்பார்கள், என்னைப்போலவே கமலும் சினிமாவை நேசிப்பவர். அதற்காக அவரை ‌எண்ணி பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார். 

எப்பவுமே நான் தான் மாஸ் - மார்தட்டுகிறார் பவர்ஸ்டார்


தன்னை தானே மிகைப்படுத்தி கொள்வதில் பவர்ஸ்டாருக்கு நிகர் பவர்ஸ்டார் தான். தன்னுடைய முதல்படமான லத்திகா படம் வெளிவருதற்கு முன்பே டாக்டர் சீனிவாசன் என்ற பெயருக்கு முன்னால் பவர்ஸ்டார் என்று தன்னை பிரபலப்படுத்தியவர். 

அதுமட்டுமின்றி அவ்வப்போது இன்றைய நடிகர்களில் தனக்கு போட்டியான ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே, எனது நடிப்பை பார்த்து ஷங்கரே அவரது படத்தில் நடிக்க வைத்தார், என்னுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டார் என்று ஏக வசனம் பேசுபவர். 

இவர் நடித்த முதல்படமான லத்திகா படம் தியேட்டர்களில் ஓடாமலேயே 300 நாட்கள் ஓடியதாக தமிழகம் முழுக்க போஸ்டர் அடித்து விளம்பரபடுத்தியவர், உண்மையிலேயே அவரது படம் ஹிட்டானால் சும்மாவா இருப்பார். ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து வருகிறார். 

இந்த பொங்கலுக்கு நடிகர் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்து இருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளதால் மனுசனை பிடிக்கவே முடியவில்லை. 

ஏக குஷியில் இருக்கிறார். ஏற்கனவே தன்னை பவர்ஸ்டார் என்று பிரபலப்படுத்தியவர் இப்போது தான் ஒரு மாஸ் ஹீரோ என்று கூறி வருகிறார். 

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னுடைய நடிப்பை ரசிகர்கள் மிகவும் கொண்டாடுகிறார்கள், மகிழ்கிறார்கள். 

இன்றைய ரசிகர்களின் ரசனையை உணர்ந்து நான் நடித்து வருகிறேன். அதனால் தான் அவர்கள் என்னை கொண்டாடுகிறார்கள். எப்பவுமே நான் தான் மாஸ் ஹீரோ என்று மார்தட்டி கொள்கிறார். 

பீட்சா தயாரிப்பாளரின் அடுத்த படம் சூது கவ்வும்

பீட்சாவைத் தயாரித்த திருக்குமரன் எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் சூது கவ்வும். பீட்சா ஹீரோ விஜய் சேதுபதிதான் இதிலும் ஹீரோ. 

சஞ்சிதா ஷெட்டி ஹீரோயின். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். 

"இது பிளாக் காமெடி டைப் படம். அதாவது திகில் படத்தில் காமெடி. இண்டர்கட் ஷாட்டுகள் மூலம் புதுமையான முறையில் கதை சொல்லப்போகிறோம். 

இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்பதால் கதை பற்றிச் சொல்ல முடியாது" என்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி. 

கோடி கேட்கும் முருங்கைக்காய் இயக்குனர்

திருப்பதி பிரசாத படத்தின் கதை என்னுடையது என்று முருங்கைக்காய் இயக்குனர் கோர்ட் படியேற தயாரானார். 

இவரை எப்படி சமாளிப்பது என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உதயமான அரசியல் வாரிசு நடிகர் படத்தை வாங்கிவிட்டார். 

அவர் முருங்கைக்காய் இயக்குனரை அழைத்து ஒரு கணிசமான தொகையை கொடுத்து "விஷயத்தை இதோடு விட்டுருங்க. டைட்டில்ல மூலக்கதைன்னு உங்க பேரை போட்டுர்றோம்" என்று சொல்லி சமாளித்தார். 

கடைசி நேரத்தில் அவசர அவசரமாக முருங்கைக்காய் இயக்குனர் பெயர் டைட்டிலில் சேர்க்கப்பட்டது. 

இப்போது படம் கோடிக் கணக்கில் வசூலை கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்தும்தான் தனக்கு கொடுத்த தொகை ரொம்ப சின்னது என்று ஃபீல் பண்ண ஆரம்பித்திருக்கிறாராம் முருங்கைக்காய் இயக்குனர். 

முழுசா ஒரு கோடி கொடுத்திருங்க என்று இப்போது கேட்க ஆரம்பிச்சிருக்காராம். 

டாப்ஸியை மிரட்டிய நயன்தாரா


ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா, அஜீத்துடன் நடித்த பில்லா படத்துக்குப்பிறகுதான் பரபரப்பான நடிகையானார். 

காரணம் அதுவரை கிளாமர் விசயத்தில் ஓரளவு அடக்கி வாசித்த நயன்தாரா, அந்த படத்தில் துணிச்சலாக பிகினி உடைக்கு மாறினார். 

ஏற்கனவே அவரது அழகில் மயக்கத்தில் இருந்த இளவட்ட ரசிகர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அதன்பிறகுதான் நயன்தாராவின் மார்க்கெட்டும் சூடுபிடித்தது.

இந்நிலையில், தற்போது செகண்ட் இன்னிங்சில் இருக்கும் அவர், அந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் ஆரம்பத்தில் அமைதி காத்த நயன், இப்போது மறுபடியும் கட்டவிழ தயாராகி விட்டாராம். 

மீண்டும் அதே அஜீத், விஷ்ணுவர்தன் படத்தில் இணைந்திருக்கும் அவர், ஆன்மீகவாதியாட்டம் அமைதியாக காட்சி தந்தாலும், கேமரா கண்களுக்கு போதும போதும் என்கிற அளவுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறாராம். 

நயன்தாராவின் இந்த திடீர் தாராளம் கண்டு படத்திற்கான வியாபாரம் இன்னும் எகிறும் என்று படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது.

ஆனால், நயன்தாராவின் அதிரடி கவர்ச்சிக்கு முன்னால் உன் நடிப்பு காணாமல் போய் விட்டது என்று சிலர் சொல்ல, ஆரம்பத்தில் கிளாமரில் நாம்தான் தூக்கலாக இருப்போம் என்று கணக்குப்போட்டிருந்த அப்படத்தின் இன்னொரு நாயகியான டாப்ஸி மிரண்டு போயிருக்கிறாராம். 

சந்தானத்தை ஓவர்டேக் செய்த டாக்டர் சீனிவாசன்


சில சமயங்களில் எதிர்பார்த்தது ஒன்றாக இருக்க, நடந்தது வேறு ஒன்றாக இருக்கும். 

அப்படித்தான் லத்திகா படத்தில் நடித்த டாக்டர் சீனிவாசன், தனக்குத்தானே பவர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துக்கொண்டு செய்யுற அலம்பலை தாங்க முடியாமல் தனது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க அழைத்தார் சந்தானம். 

மேலும், அவரே கடுப்பாகி இத்தோடு சினிமா விட்டே ஓடிவிட வேண்டும் என்கிற அளவுக்கு படம் முழுக்க அவரை செம கலாய்ப்பு கலாய்க்கும்படியான வசனங்களையும் இணைத்தார் சந்தானம். 

ஆனால் அவை அத்தனையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு நடித்தார் சீனிவாசன். 

விளைவு, சந்தானத்தின் கலாய்ப்பு அனைத்தையும் வெகுளித்தனமாக ஏற்றுக்கொண்டு நடித்த சீனிவாசனின் நடிப்பைப் பார்த்து தியேட்டர்களில் ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறார்களாம். 

இதையறிந்து செம காண்டில் இருக்கிறாராம் சந்தானம். இப்படியே நம்ம படங்களில் தொடர்ந்து இவர் நடிச்சா, நம்மளை வீட்டுக்கு அனுப்பிடுவார் போல இருக்கே என்று உஷாராகி விட்டார். 

அதனால் இனிமேல் தனது படங்களில் சீனிவாசனுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார் சந்தானம்.

பிப்ரவரி 2-ம் தேதி விஸ்வரூபம் டி.டி.எச்.சில் வெளியீடு


கமல் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை தியேட்டர்களில் வெளிவரும் முன்பே டி.டி.எச்.சில் ஒளிபரப்ப கமல் முடிவு செய்தார். 

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகர்கஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையும் மீறி கமல் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்பியே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்தார். 

அதன்படி கடந்த 10-ந் தேதி இப்படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்படும் எனவும், 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கமலிடம் சென்று நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தைக்கு பின்னர், தியேட்டர்களுக்கு வரும் முன்பே டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிடும் முடிவை கமல் ஒத்திவைத்தார். இருந்தாலும் டி.டி.எச்.சில் இப்படம் ஒளிபரப்பபடும் என அறிவித்தார். 

சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், வருகிற 25-ந் தேதி விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் மட்டும் திரையிடப்படுகிறது என அறிவித்தார். ஆனால் டி.டி.எச்.சில் ஒளிபரப்பும் தேதியை குறிப்பிடவில்லை. 

இந்நிலையில், இப்படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படுமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து கொண்டே இருந்தது. 

இந்நிலையில் அடுத்த மாதம் பிப்ரவரி 2-ந் தேதி ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப கமல் முடிவு செய்துள்ளார். 

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் அறிவித்தார். ஆனால், எந்தெந்த டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்டும் என தகவல்கள் ஏதும் அறியப்படவில்லை.

கமல், ஏற்கெனவே, ஏர்டேல், டாடா ஸ்கை, டிஷ்டிவி, சன், ரிலையன்ஸ், வீடியோகான் ஆகிய டி.டி.எச்.களில் இப்படம் ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முருங்கைக்காய் நடிகரின் வாயை அடைத்த லட்டு படக்குழு


சந்தானம், சேது, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் மூன்று ஹீரோக்களாக நடித்துள்ள படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படம் மூன்று பேர் ஒரு பெண்ணை காதலிக்கும் கதையில் உருவாகியுள்ளது. 

ஏற்கனவே பாக்யராஜ் முன்பு இயக்கிய இன்று போய் நாளைவா படத்தின் கதை அடிப்படையில் இந்த கதையையும் உருவாக்கியிருக்கிறார்களாம். 

ஆனால் இதற்கான ஒப்புதலை முறையாக பாக்யராஜிடம் பெறவில்லையாம. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி வரை அடக்கிவாசித்த பாக்யராஜ். 

தேதி அறிவித்ததும் இதுதான் எதிரிகளை தாக்க சரியான சந்தர்ப்பம் என்று படத்தின் மீது மோசடி புகார் அளித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத லட்டு படக்குழு கடும் அதிர்ச்சியடைந்தது. இது வேறு மாதிரியான கதை என்றும் வாக்குவாதம் செய்தது. 

ஆனால், அதற்கு முன்பு இன்றுபோய் நாளை படத்தின் தழுவல்தான் இந்த படம் என்று அப்படக்குழுவினர் சிலர் பேசியதை வீடியோ ஆதாரமாக வைத்து பாக்யராஜ் பேசியதால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. 

அதனால் வாய்விட்டு வம்பில் மாட்டிக்கொண்டேமே என்று தடுமாறிய லட்டு படக்குழு, அதன்பிறகு முருங்கைக்காய் நடிகரை சமாளிக்க பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியது. 

ஆனால் அதற்கெல்லாம் மனிதர் அடங்கவில்லை. இறுதியில் சில லட்சங்களை அவர் முன்பு எடுத்து போட, அதுவரை வெறுப்பாக இருந்த முருங்கைக்காய், கரன்சியை கண்ணில் பார்த்ததும் ஹாடான பேச்சை கலகலப்பாக மாற்றி விட்டதோடு, பேச்சுவாக்கில் கட்டுகளையும் கைப்பற்றி விட்டாராம். 

விளைவு, மேற்படி நடிகர் கம் டைரக்டருக்கு ஒரு திருப்பதி லட்டை கொடுத்து விட்டு, லட்டு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது படக்குழு.

கெளதம்மேனனை தடுமாற வைத்த நீதானே என் பொன்வசந்தம்


நடுநிசி நாய்கள் படம் ஏமாற்றியபோதுகூட பெரிய அளவில் பீல் பண்ணாத கெளதம்மேனன், இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தோல்வியால் ரொம்ப தடுமாறிப்போயிருக்கிறார். 

இந்நிலையில், அடுத்தபடியாக யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து சூர்யாவை நாயகனாக வைத்து துப்பறியும சந்துரு என்ற பெயரில் ஒரு படம் இயக்கயிருந்தார். 

ஆனால் விஜய் அந்த கதையில் நடிக்க மறுத்தபோது அடுதது தான் நடித்து தருவதாக வாக்களித்திருந்த சூர்யா, இப்போது அவருக்கு பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்கிறாராம். 

கைவசம் பல படங்கள் இருப்பதாக சொல்லி பட்டியல் போடுகிறாராம்.

இதனால் தன்னை சூழ்ந்திருக்கும் தோல்வி அலைகளை துரத்தியடிக்கும் நோக்கத்தில் அடுத்தபடியாக சில முன்வரிசை நடிகர்களை சந்தித்து கால்சீட் பேசி வருகிறார். 

ஆனால் ஒருகாலத்தில் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்று பக்கம் பக்கமாக பேட்டி கொடுத்த நடிகர்கள்கூட இப்போது கனவு கலைந்து விட்டது என்று சொல்லி ஓட்டம் பிடிக்கிறார்களாம். 

இதனால் மனசொடிந்து போயிருக்கிறார் கெளதம். காலக்கொடுமையை நினைத்து கவலையுடன் இருப்பவர், அடுத்தபடியாக அஜீத்தை நாடியுள்ளார். 

சறுக்கி விழுந்த படாதிபதி, இயக்குனர்களுக்கு கைகொடுக்கும் பழக்கமுள்ள அஜீத், கெளதமுக்கு கைகொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஊழல் தலைவர்கள் - நடிகர் அஜித் விளாசல்


ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர், என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். 

நடிகர், நடிகைகளுக்கு சேவை வரிவிதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

இதில் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள், உள்ளிட்ட அனைத்து திரைப்பட சங்கத்தினரும் பங்கேற்றார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் இருந்ததால் அஜித் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் சேவை வரிவிதிப்பு குறித்து நடிகர் அஜித் அளித்துள்ள பேட்டியில், ரெயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. 

நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. 

கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே போதும். 

நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, டாப்-10 பணக்கார நாடுகளில் ஒன்றாகவோ மாறும். 

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர். 

இந்த உண்மையை நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள். 

ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர். 

கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும், என்று கூறியுள்ளார். 

விஸ்வரூபம் வெளியீட்டில் தடுமாறுகிறார் கமல்


கமல் நடித்த விஸ்வரூபம் வெளியீட்டில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. தொடர்ந்து கமல் தடுமாறி வருகிறார். 

டிடிஎச்சில் முதலிலும், பின்னர் தியேட்டரிலும் வெளியிடப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த கமல் அதன் பிறகு இரண்டையும் ஒரே நாளில் வெளியிட இருப்பதாக சொன்னார். 

இதற்கு தியேட்டர், டிடிஎச் இரண்டு தரப்பிலுமே பலத்த எதிர்ப்பு கிளம்ப இப்போது 25ந் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என்ற அறிவித்தார். டிடிஎச்சில் வெளியிடுவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

முதலில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் திரையிடப்படும் என்று அறிவித்தவர் இப்போது தெலுங்கு, தமிழில் மட்டும் என்று அறிவித்திருக்கிறார். 

தியேட்டரில் வெளியிடப்படும் தேதியை அவர் அறிவித்து விட்டதால் டிடிஎச் நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. முதலில் தியேட்டரில் வெளியிட்டால் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதி தவிடுபொடியாகி விடும். 

அவர்களுக்கு பணத்தை திருப்பித் தரவேண்டியது இருக்கும். எங்கள் பெயருக்கும் களங்கம் வரும். இதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டோம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ்சுக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள்.

இந்த நிலையில் இன்று தியேட்டர் அதிபர்கள், மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டுக்கூட்டம் சேம்பரில் நடந்தது. இதில் "கமல் முதலில் விஸ்வரூபத்தை தியேட்டரில் வெளியிட்டால் அவருக்கு 500 தியேட்டர்கள் கொடுத்து அவர் படம் ஓடும்வரை வேறு படங்களை திரையிடாமல் அவர் முதலீடு செய்த 100 கோடியை வசூலித்து கொடுத்து விடுவது" என்று பேசி முடிவு செய்திருக்கிறார்கள். 

இதைக் கேட்டு சந்தோஷப்பட்ட கமல் அந்த கூட்டத்திற்கு வந்து தனது நன்றியை தெரிவித்தார். தியேட்டர் அதிபர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கமலுக்கு மோதிரம் அணிவித்து மகிழ்ந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் கமல் பேசியதாவது:

"வருகிற 25ந் தேதி தமிழ்நாட்டில் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியாகிறது. டிடிஎச்சில் ஒளிபரப்புவது குறித்து அந்த பங்காளிகளுடன் பேசி அறிவிப்பேன். இவர்கள் எனது உறவினர்கள். 

என் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள். நான்தான் அம்பு என்று கருதிவிட்டேன். எனது எல்லா கடனையும் தீர்ப்பதற்காகத்தான் இந்தப் படத்தை எடுத்தேன். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பட்ட கடனைத் தவிர மற்ற கடன்களை அடைத்துவிடுவேன். 

எல்லா பிரச்சினைகளில் இருந்தும, சோர்விலிருந்தும் வெளிவந்து விடுவேன்" என்று செண்டிமெண்டாக பேசினார். டிடிஎச் குறித்து நிருபர்கள்  கேட்ட சரமாரி கேள்விக்கு அதுபற்றி பின்னர் சொல்கிறேன். விரைவில் நல்ல செய்தி வரும் என்று மட்டும் சொன்னர்.

தியேட்டர்காரர்கள் மீது நம்பிக்கை வந்தவிட்ட நிலையில் டிடிஎச் நிறுவனங்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று கமல் திணறி வருகிறார். அதனால் 25ந் தேதி ரிலீஸ் என்பதும் உறுதியானதல்ல. அதிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.

பரபரப்பை கிளப்ப போகும் தெலுங்கு டப்பிங் படம்

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் சர்வானந்த், இவர் சாய்குமாருடன் இணைந்து நடித்துள்ள தெலுங்கு படம் "பதவி" என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. 

இன்னொரு நாயகனாக சந்தீப் நடிக்கிறார். மூத்த அரசியல்வாதியின் இரண்டு வாரிசுகளுக்கு இடையேயான போட்டிதான் கதை. 

மூத்த அரசியல்வாதி சாய்குமாரின் வாரிசுகளாக சர்வானந்தும், சந்தீப்பும் நடித்துள்ளனர். 

இன்றை அரசியல் சூழ்நிலைக்கேற்ப அனல் பறக்கும் வசனங்கள் படத்தில்  இருக்கிறதாம். 

கே.தேவா என்பவர் இயக்கி இருக்கிறார். பிரபாகர் தமிழ் வசனங்களையும், பிறைசூடன் பாடல்களையும் எழுதி உள்ளார். 

பொங்கலுக்கு 5 படங்கள் மட்டுமே ரிலீஸ்


இந்தாண்டு டஜன் கணக்கில் ரிலீஸ் ஆக இருந்த பொங்கல் படங்கள் வழக்கம் போல் தியேட்டர்கள் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டது. 

இதனால் இந்த பொங்கலுக்கு வெறும் 5 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக இருக்கிறது. அதில் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், விஷாலின் சமர், சந்தானத்தின் கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் அடங்கும். 

அலெக்ஸ் பாண்டியன்: சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். 

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள பேட் பாய்ஸ் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் விருந்தாக நாளை(11ம் தேதி) உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சமர் : விஷாலை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை படத்தை இயக்கிய திரு, மீண்டும் விஷாலுடன் கூட்டணி அமைத்துள்ள படம் சமர். இப்படத்தில் விஷால் உடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. இன்னொரு நாயகியாக சுனைனா நடித்துள்ளார். 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆரம்பத்திலேயே தலைப்பு பிரச்னையில் சிக்கி பின்னர் சமர் என்ற பெயரில் மாறி, கடந்த டிசம்பர் 21ம் தேதியே ரிலீஸ் ஆக இருந்து, பின்னர் பின்வாங்கி இந்த பொங்கலுக்கு வர இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஜன 13ம் தேதி சுமார் 300 தியேட்டர்களில் இப்படம் வெளியாக இருக்கிறது.

கண்ணா லட்டு தி்ண்ண ஆசையா : இதுவரை காமெடி நடிகராக இருந்து வந்த சந்தானம் முதன்முறையாக ராமநாரயணன் உடன் தயாரிப்பாளராகவும் ப்ளஸ் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ள படம் தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா. 

இப்படத்தில் சந்தானத்துடன் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன், சேது என்ற புதுமுகம் ஆகியோர் நடிக்கின்றனர். ஹீரோயினாக விஷாகா சிங் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆகும் தருணத்தில் சர்ச்சையில் சிக்கியது. 

இப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவரும், படத்தின் முழு கதையே தன்னுடைய படமா இன்று போய் நாளை வா படத்தின் அப்பட்டமான காப்பி என்று பாக்யராஜூம் புகார் கூறியுள்ளனர். இந்தப்படமும் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

புத்தகம் : ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் புத்தகம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி நடிக்கிறார். சின்னத்திரை புகழ் விஜய் ஆதிராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்துள்ளார். இப்படமும் ப‌ொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

விஜயநகரம் : கல்வி நிறுவனங்களில் நடக்கும் மோசடியை வெளிச்சம் போட்டு காட்ட வரும் படம் விஜயநகரம். இப்படத்தின் ஹீரோவாக சிவனும், ஹீரோயினாக ஹாசினி என்பவரும் நடித்துள்ளனர். 

தன்வீர் என்பவர் இயக்கியுள்ளார். கார்த்தி, விஷால் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுடன் இந்தப்படமும் பொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

இதில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்படுமேயானால் இன்னும் சில பங்கள் ரிலீஸ் ஆகலாம். டி.டி.எச். பிரச்னையால் விஸ்வரூபம் படம் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலைப்பாட்டில் கமல் உடன் தியேட்டர் அதிபர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் படம் வெளியாக இருக்கிறது. 

பெங்கலுக்கு வெளியாகும் இந்த ஐந்து படங்களில் எந்த படங்கள் வெற்றி பெறப்போகிறது என்பதை ரிலீஸ்க்கு பிறகே சொல்ல முடியும். அதுவரை காத்திருப்போம்.

விஸ்வரூபம் ரிலீஸ் தள்ளிவைப்பு - கமல் அறிவிப்பு


விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி‌ வைத்தார் நடிகர் கமல்ஹாசன். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் இதனை அறிவித்தார். மேலும் டி.டி.எச்., இல் படம் வெளியாவது உறுதி என்றும் கூறினார்.

கமல் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை டி.டி.எச்.-ல் வெளியிடும் புதிய திட்டத்தை நடிகர் கமல்ஹாசன் கொண்டு வந்துள்ளார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது குறித்து தியேட்டர் உரிமையாளர்களும், நடிகர் கமல்ஹாசனும் நேற்று இரவு சந்தித்து பேசினர். 

இதில் ஒரு சுமூக முடிவு ஏற்பட்டதாக தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொது செயலர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனது ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படம் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு பிரச்னைகள் எழுந்து வந்தது உங்களுக்கே தெரியும். 

இது என்னுடைய பொருள், அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். இதை யாரும் தடுக்க முடியாது. 

இது புது வழி! நாளை பொது வழி : டி.டி.எச். ரிலீஸ் என்பது புதிய வழி. என் சுயநலத்திற்காக நானே எடுத்த வழி கிடையாது. இன்று இது புது வழி. நாளை அனைவரும் பயன்படுத்தும் பொதுவழி. 

சாட்டிலைட் வந்தபோது இதே மாதிரி எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இப்போது அதை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள். அதேபோல் இந்த டி.டி.எச்., சேவையையும் நாளை அனைவரும் வரவேற்பார்கள். இது என்னுடைய படம். எனது படத்தை இப்படி வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது.

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு : விஸ்வரூபம் படம் டி.டி.எச்.-ல் வெளியாகும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ரிலீஸ் ஆகும் தேதியை மட்டும் தள்ளி வைத்துள்ளேன். இது யாருடைய நிர்ப்பந்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. எனது நண்பர்கள் சிலர் அறிவுரைகள் சொன்னார்கள். 

அதில் நியாயங்கள் இருந்தது. அதனை ஏற்று விஸ்வரூபம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளேன். தியேட்டரிலும், டி.டி.எச்-லும் ஒரே நாளில் ரிலீஸ் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும். 

டி.டி.எச்., வீடுகளுக்கு மட்டுமே...! டி.டி.எச்-ல் படத்தை ரிலீஸ் செய்யும் போது வீடுகளில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும். மீறி கேபிள் மூலமாகவோ, உணவு விடுதிகளிலோ அல்லது வேறு ஏதாவது பெரிய வளாகங்களிலோ படத்தை ஒளிப்பரப்பு செய்தால் அது சட்ட வி‌ரோதமானது. மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரிலீஸ் தேதியை நான் தான் முடிவு செய்வேன் : விஸ்வரூபம் படம்  எந்தவொரு சமூகத்தையும் தாக்கும் படமல்ல. பலபேர் இந்த படம் வெளியாகும் தேதியை அவர்களாகவே தெரிவித்து வருகிறார்கள். அது சரியல்ல. படத்தை எந்த தேதியில் வெளியிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்து அறிவிப்பேன்.

இவ்வாறு கமல் கூறினார். 

அஜித் படத்துக்கு தலைப்பு கிடைச்சாச்சு


விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு தலைப்பு வச்சாச்சாம். இதனை விஷ்ணுவர்தனே உறுதிபடுத்தியுள்ளார். 

பில்லா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித், நயன்தாரா, விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஒருபடம் உருவாகி வருகிறது. 

இப்படத்தில் அஜித்-நயன்தாராவுடன், ஆர்யா-டாப்சியும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 

இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இதுநாள் வரை இப்படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் ஷூட்டிங் நடந்து வந்தது. 

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பட தலைப்பு பிரச்னை பெரும் பிரச்னையாக இருப்பதால் தங்களது படத்திற்கு எந்தவிதமான தலைப்பு பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார் விஷ்ணுவர்தன். 

அதனால் பல்வேறு தலைப்புகளை யோசித்து இப்போது, ஒருவழியாக படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டார். 

இதுகுறித்து டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளதாவது, படத்தின் தலைப்புக்காக ரொம்பவே கஷ்டப்பட்டோம். இப்போது ஒரு தலைப்பு வைத்துவிட்டோம். அது என்ன தலைப்பு என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

இதனிடையே இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ஒருவிழா எடுத்து அறிவிக்க போவதாக கூறப்படுகிறது. 

விஸ்வரூபத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் திடீர் ஆதரவு


விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தும், காட்சியும் இருப்பதாகவும், அதனால் படத்தை எங்களுக்கு போட்டு காட்டிய பிறகே வெளியிட வேண்டும் என்றும் பல முஸ்லீம் அமைப்புகள் கூறி வருகின்றன. 

இந்த நிலையில் சில முஸ்லீம் அமைப்புகள் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கமல்ஹாசன் இதற்கு முன் இயக்கிய உன்னைப்போல் ஒருவன், ஹேராம் படங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தும், காட்சியும் இருந்தது. 

அதனால் இஸ்லாமிய மக்கள் இந்தப் படத்தை சந்தேகிப்பது நியாயமானதுதான். 

மேலும் சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி படம் முஸ்லீம்களை மிகவும் காயப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. 

அதனால்தான் விஸ்வரூபத்தை சந்தேகிக்கிறார்கள். ஆனால் கமல், இந்தப் படம் அப்படி இருக்காது என்று உறுதி அளித்திருக்கிறார்.  

மேலும் படத்தை பார்த்த முஸ்லீம் தணிக்கை குழு உறுப்பினர்களும் இதனை உறுதி செய்திருக்கிறார்கள். 

மலேசியாவில் படத்தை பார்த்த முஸ்லீம் அமைப்பினரும் பாராட்டியிருக்கிறார்கள். 

அதனால் நமது பயம் தேவையற்றது என்று தோன்றுகிறது. கமலை நம்புவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஜினியாக தனுஷ், கமலாக சிம்பு - ஒரு கலக்கல் ரீமேக்


சமீபகாலமாக ரீ-மேக் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகி கொண்டே வருகிறது. 

அந்த வகையில் ஸ்ரீதர் இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா ஆகியோரது நடிப்பில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "இளமை ஊஞ்சலாடுகிறது". 

இப்படம் இப்போது மீண்டும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் நடிக்க நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்புவின் பெயர்கள் அடிபடுகிறது. 

இதில் ரஜினி கேரக்டரில் தனுஷூம், கமல் கேரக்டரில் சிம்புவையும், ஸ்ரீபிரியா கேரக்டரில் ஸ்ருதிஹாசனையும் நடிக்க வைக்க எண்ணி இருக்கிறார்கள். 

இதுதொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

அதேசமயம் என்னதான் தனுஷ் - சிம்பு இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் தொழில் ரீதியாக அவர்களுக்கு இடையேயான போட்டி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி பஞ்ச் டயலாக்குகளை அடுக்கி மறைமுகமாக தாக்கி வருகிறார்கள். 

அப்படிப்பட்ட சூழலில் இவர்கள் இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவுக்கு தனுஷை அழைத்து இருந்தார் சிம்பு. 

இதனால் இவர்களுக்கான பகை மறந்துவிட்டது என்றும், இருவரும் இப்படத்தில் சேர்ந்து நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது. 
Related Posts Plugin for WordPress, Blogger...