விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல்


விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும். இல்லையேல் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள,"விஸ்வரூபம் படம், இம்மாதம், 11ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படம் வெளியாவதற்கு, 8 மணி நேரம் முன்பாக, டி.டி.எச்., வசதி மூலம், "டிவியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு, சினிமா தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினரும், தியேட்டர்கள் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய கூட்டமைப்பினாலும், படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்படப் பிரச்னை தொடர்பாக, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா கூறியதாவது:

"விஸ்வரூபம் படத்தின், "டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது, படத்தில், இஸ்லாமியர்களுக்கு புறம்பான காட்சிகள் இடம்பெற்றிருக்குமோ என, சந்தேகம் ஏற்படுகிறது.

இதனால், இப்படத்தை எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு, பிரத்யேகமாக திரையிட்டுகாட்ட வேண்டும் என, கேட்டோம். எங்களின் ஐயத்தை போக்கவேண்டிய நடிகர் கமல்ஹாசன், தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். 

படம் வெளியாவதற்கு முன்பாக, எங்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும். இல்லையென்றால், பட வெளியீட்டிற்கு, ஜனநாயக வழிகளில், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, முகமது ஹனீபா தெரிவித்தார்.

தியேட்டரில் திரையிடமாட்டோம் :

"டி.டி.எச்., என்பது, தியேட்டர், சினிமா தொழிலை மெல்ல கொல்லும், "சயனைடு விஷம். கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம் வைக்கும் முயற்சி. டி.டி.எச்.,ல் வெளியாகும் கமல், மணிரத்னம் என, யார் படமாக இருந்தாலும், தியேட்டரில் ஓட்டமாட்டோம் என, திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். கூட்டத்தில், "டி.டி.எச்.,ல் வெளியிடப்படும் எந்த சினிமாவையும், தியேட்டரில் திரையிடமாட்டோம். வினியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"விஸ்வரூபத்திற்கு தடை கோரிய வழக்கு :

"நடிகர் கமல் நடித்துள்ள, விஸ்வரூபம் படம், 90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட, கால தாமதம் ஏற்பட்டால், பலருக்கு பாதிப்பு ஏற்படும் என, சென்னை ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

ரெஜன்ட் சாய்மீரா நிறுவனம் சார்பில், ஐகோர்ட்டில், தாக்கல் செய்த மனு: மர்மயோகி படத்துக்காக, நடிகர் கமல், எங்களிடம் பணம் பெற்றார். இப்படம் தயாரிக்கப்படவில்லை. எங்களுக்கு, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. 10.50 கோடி ரூபாய், தருவதற்கு உத்தரவிடக் கோரி, கமலுக்கு எதிராக, வழக்கு தொடுத்துள்ளோம். விஸ்வரூபம் படத்தை வெளியிட்டு விட்டால், எங்களுக்கு பணம் கிடைக்காது. எனவே, படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரர் சந்திரஹாசன், தாக்கல் செய்த பதில் மனு: மர்மயோகி படத்தால், ஓராண்டு காலம், கமலுக்கு வீணாகி விட்டது. அதன் மூலம், 40 கோடி ரூபாய், அவருக்கு இழப்பு ஏற்பட்டது. 

சாய்மீரா நிறுவனத்துக்கு, எந்தப் பாக்கியும் இல்லை. விஸ்வரூபம், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களை வெளியிடும் போது, பணத்தை திருப்பிச் செலுத்துவதாக, எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. கோர்ட் நடவடிக்கைகளை, மனுதாரர் தவறாக பயன்படுத்துகிறார்.

மனுதாரர் கோரியது போல், தடை விதித்தால், எங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும். தமிழிலும், இந்தியிலும், விஸ்வரூபம் படத்தை தயாரிக்க, 90 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.படம் வெளியாக, கால தாமதம் ஏற்பட்டால், பலருக்கும் பாதிப்புஏற்படும். 

எங்களுக்கு இடையூறு செய்வது தான், மனுதாரரின் நோக்கம்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை, இம்மாதம், 8ம் தேதிக்கு, நீதிபதி வி.கே.சர்மா தள்ளி வைத்துள்ளார். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...