விஸ்வரூபம் ரிலீஸ் தள்ளிவைப்பு - கமல் அறிவிப்பு


விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி‌ வைத்தார் நடிகர் கமல்ஹாசன். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் இதனை அறிவித்தார். மேலும் டி.டி.எச்., இல் படம் வெளியாவது உறுதி என்றும் கூறினார்.

கமல் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை டி.டி.எச்.-ல் வெளியிடும் புதிய திட்டத்தை நடிகர் கமல்ஹாசன் கொண்டு வந்துள்ளார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது குறித்து தியேட்டர் உரிமையாளர்களும், நடிகர் கமல்ஹாசனும் நேற்று இரவு சந்தித்து பேசினர். 

இதில் ஒரு சுமூக முடிவு ஏற்பட்டதாக தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொது செயலர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனது ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படம் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு பிரச்னைகள் எழுந்து வந்தது உங்களுக்கே தெரியும். 

இது என்னுடைய பொருள், அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். இதை யாரும் தடுக்க முடியாது. 

இது புது வழி! நாளை பொது வழி : டி.டி.எச். ரிலீஸ் என்பது புதிய வழி. என் சுயநலத்திற்காக நானே எடுத்த வழி கிடையாது. இன்று இது புது வழி. நாளை அனைவரும் பயன்படுத்தும் பொதுவழி. 

சாட்டிலைட் வந்தபோது இதே மாதிரி எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இப்போது அதை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள். அதேபோல் இந்த டி.டி.எச்., சேவையையும் நாளை அனைவரும் வரவேற்பார்கள். இது என்னுடைய படம். எனது படத்தை இப்படி வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது.

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு : விஸ்வரூபம் படம் டி.டி.எச்.-ல் வெளியாகும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ரிலீஸ் ஆகும் தேதியை மட்டும் தள்ளி வைத்துள்ளேன். இது யாருடைய நிர்ப்பந்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. எனது நண்பர்கள் சிலர் அறிவுரைகள் சொன்னார்கள். 

அதில் நியாயங்கள் இருந்தது. அதனை ஏற்று விஸ்வரூபம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளேன். தியேட்டரிலும், டி.டி.எச்-லும் ஒரே நாளில் ரிலீஸ் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும். 

டி.டி.எச்., வீடுகளுக்கு மட்டுமே...! டி.டி.எச்-ல் படத்தை ரிலீஸ் செய்யும் போது வீடுகளில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும். மீறி கேபிள் மூலமாகவோ, உணவு விடுதிகளிலோ அல்லது வேறு ஏதாவது பெரிய வளாகங்களிலோ படத்தை ஒளிப்பரப்பு செய்தால் அது சட்ட வி‌ரோதமானது. மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரிலீஸ் தேதியை நான் தான் முடிவு செய்வேன் : விஸ்வரூபம் படம்  எந்தவொரு சமூகத்தையும் தாக்கும் படமல்ல. பலபேர் இந்த படம் வெளியாகும் தேதியை அவர்களாகவே தெரிவித்து வருகிறார்கள். அது சரியல்ல. படத்தை எந்த தேதியில் வெளியிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்து அறிவிப்பேன்.

இவ்வாறு கமல் கூறினார். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...