எனக்கு எதிரி அந்த அரசியல்வாதிதான் - அஜீத் ஆவேச பேட்டி

எனக்கு எதிரிகள் அரசியலில் இருக்கும் சினிமாக்காரர்கள்தான் என்று நடிகர் அஜீத் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான ரசிகர்களுடன் செயல்பட்டு வந்த ரசிகர் மன்றத்தை ஏன் கலைத்தார் என்பதற்கு நேரடியான பதில் எதுவும் இதுவரை சொல்லாத அஜீத், முதன் முறையாக ரசிகர்கள் மன்றத்தை கலைத்தது பற்றி நியாயமான ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்.

வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று மீடியாவில் அடிக்கடி சொல்கிறீர்கள். இதை மனதில் வைத்தே என்னுடைய படங்கள் வெளியாகும் நேரத்தில் என்னை பற்றியோ, அல்லது என் படம் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள்.

இதனால் என்னுடைய படத்திற்கான ஓப்பனிங் குறையும் என்ற எண்ணம்தான் காரணம். இது மட்டுமில்லாமல் என்னுடைய ரசிகர்களை குறிவைத்து பல புகார்களை கூறி அவர்களை கஷ்டப்படுத்துவதும் நடக்கிறது.

இதனால் என் மீதும், என் ரசிகர்கள் மீதும் மக்களுக்கு ஒரு கோபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் சிலர். இதுவும் நான் என் மன்றங்களை கலைப்பதற்கு ஒரு காரணம். என் மீதான கோபத்தை என் ரசிகர்கள் மீது காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இன்று மன்றங்களை கலைத்துவிட்டேன். இப்போது வேண்டுமானால் என்னை தாக்குங்கள். இனியும் என் ரசிகர்களை தாக்க வேண்டாம், என்று கூறியிருக்கும் அஜீத், தனக்கு எதிரிகள் அரசியலில் இல்லை என்றும்; சினிமாவில்தான் ஒரு சில எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்கு நன்றாக தெரியும் என்றும் சூசகமாக பேசியிருக்கிறார்.


அஜீத்தின் முந்தைய படங்கள் ரிலீஸ் ஆகிற நேரங்களில் அவரது ரசிகர் மன்றங்கள் சார்பில் விழா எடுக்கப்படும். தியேட்டர் வாசல்களில் கட்-அவுட், ஆளுயுர மாலை, பாலாபிஷேகம் என அமர்க்களப்படும்.

மங்காத்தா ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த குழப்பங்களை போக்கவும், ரசிகர்களை மீண்டும் அரவணைத்து செல்லும் விதத்திலும் அஜீத் இப்படி கூறியிருக்கலாம் என்ற கருத்து திரையுலகில் நிலவுகிறது.

தொழிலதிபருடன் நடிகை ஓட்டம்! கணவன் கண்ணீர்

கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் தன் மனைவி மீனா ஓடி விட்டதாக அவரது கணவர் போலீசில் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.

துணை நடிகையான மீனாவின் கணவர் பெயர் ராஜா. நாகர்கோவிலை சேர்ந்த அவர் சென்னை விமான நிலைய போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அதில், என்னுடைய மனைவி மீனா (27). துணை நடிகை. அவர் கடந்த 24.4.2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் தங்கியிருந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, கடந்த 23ம்தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தார்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.அப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நடிகை மீனாவுக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் துபாயில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

மீனாவின் கணவர் ராஜாவுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த போலீசார், கேரள தொழிலதிபருடன் மீனா சென்றாரா? அல்லது யாராவது அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார்களா என்கிற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

அஜித்தின் மங்காத்தாவும், விஜய்யின் வேலாயுதமும் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளன. ஒரே மாதத்தில் இரு இளம் முன்னணி நாயகர்களின் படம் ரிலீஸ் ஆகவிருப்பதால் எந்த படம் வெற்றி பெறும்? என்ற பட்டிமன்றத்தை கேரள ரசிகர்கள் இப்போதே நடத்த தொடங்கி விட்டார்கள்.

ஏன் கேரள ரசிகர்கள் அஜித், விஜய் படங்களுக்கு பட்டிமன்றம் நடத்துகிறார்கள்? படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது கேரளாவில்தான்.

தமிழில் இந்த படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 3 வாரங்களுக்கு முன்னதாக மேற்படி படங்களை வெளியிட கேரள விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மங்காத்தா படம் ஆகஸ்ட் 19ம்தேதியும், வேலாயுதம் படம் ஆகஸ்ட் 31ம்தேதியும் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அஜித் படத்தை விட விஜய் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடியது கேரள மக்கள்தான் என்பது நினைவிருக்கலாம். அதேபோல அஜித்தின் பில்லா படம் கேரளாவில் நல்ல வசூலை வாரி குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில மங்காத்தாவும், வேலாயுதமும் ஒரே மாதத்தில் கேரள திரையரங்ககளை ஆக்கிரமிக்க இருப்பதால், யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்ற பட்டிமன்றத்தை கேரள ரசிகர்கள் இப்போதே நடத்தத் தொடங்கி விட்டார்கள்.

சிக்ஸ் பேக்கை காட்ட போகிறார் சிம்பு

சமீபகாலமாக சிக்ஸ்பேக் வைக்கும் கலாச்சாரம் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் தனுஷ் போன்ற நடிகர்களுக்கு அடுத்தபடியாக இப்போது சிம்புவும் சிக்ஸ்பேக் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்தியில் சல்மான் கான் நடித்து சூப்பர் ஹிட்டான படம் தபாங். இப்படம் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இப்படத்தை டைரக்டர் தரணி இயக்க, அதில் ஹீரோவாக சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., நடிக்கிறார். ஒஸ்தி படத்தில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் சிம்பு நடிக்கிறார்.

இதற்காக தன்னுடைய உடம்பை வலுப்படுத்தி வருகிறார். மேலும் இந்தபடத்தில் நீங்கள் சிக்ஸ் பேக் வைத்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் தரணி சொல்ல, சிம்புவும் அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டார்.

சிக்ஸ் பேக்கிற்காக தினமும் கடுமையான உடற்பயிற்சி, யோகா, சத்தான மற்றும் கட்டுக்கோப்பான உணவு வகைகளை உட்கொண்டு வருகிறார்.

தமன்னா விரும்பும் தமிழ் ஹீரோ??

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் தமன்னா ஜோடி போட்டுவிட்டாலும், பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி போட வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்து கொண்டு இருக்கிறதாம்.

தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. கடந்த ஆண்டு மட்டும் நான்கு, ஐந்து படங்களில் நடித்து வந்த தமன்னா, இந்தாண்டு சிறுத்தை, வேங்கை என்ற இரண்டு படத்தோடு முடித்து கொண்டார்.

அதன்பிறகு தமிழில் வேறு எந்தபடத்திலும் நடிக்காமல் தெலுங்கு பக்கம் போய்விட்டார்.

இந்நிலையில் தமிழில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு இருந்தாலும், ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருக்கிறது.

தமன்னா இன்னமும் ஜோடி போடாமல் உள்ள அந்த ஹீரோ வேறு யாருமல்ல, நம்ம சீயான் விக்ரம் தான். அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டுமாம் அம்மணிக்கு.

இந்த விஷயம் விக்ரமுக்கு தெரியுமா...?

ஜீவாவிடம் மன்னிப்பு கேட்ட விஜய், ஷங்கர்

ரெளத்திரம் படத்தின் ஆடியோ ரிலசுக்கு வருவதாக கூறி, கடைசிநேரத்தில் வராமல் போனதால் நடிகர் விஜய் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகியோர் ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டனர்.

டைரக்டரின் ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்து வரும் ஜீவா, தன்னுடைய ரெளத்திரம் படத்தின் ஆடியோவை ஷங்கர், விஜய், இலியா‌னா வைத்து வெளியிட முதலில் திட்டமிட இருந்தார்.

ஆனால் அன்று மாலை நடைபெற இருந்த நண்பன் பட சூட்டிங் ரத்தானதால், ஷங்கர், விஜய், இலியானா உள்ளிட்டோர் ரெளத்திரம் ஆடியோ ரிலீஸ்க்கு வரவில்லை.

இதனால் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர்வர்கள் தலைமையில் ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் பங்குபெற ரெளத்திரம் படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டனர்.

விழாவில் கலந்து கொள்ள முடியாமல் ‌போனதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, அவரது மகனும், நடிகருமான ஜிவாவிற்கு போனில் பெர்ஸனலாக சாரி ‌சொன்னார்களாம் ஷங்கர், விஜய் உள்ளிட்ட இருவரும்..! அதிலும் மிஸ்ஸா இலியானா...?

அஜீத்தின் மங்காத்தா படத்திற்கு சிக்கல்

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான "மங்காத்தா" படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருகின்றனர். இதனால் மங்காத்தா படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி அமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் "மங்காத்தா".

இதுவரை அஜீத்தை பார்த்திராத வித்யாசமான கேரக்டருடனும், வித்யாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் அஜீத்திற்கு இது 50வது படமும் கூட. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் மங்காத்தா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் சூட்டிங் ‌எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்வதற்கான வேலை நடந்து வருகிறது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல விலைக்கு இப்படம் விற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இப்படத்தை வாங்க இன்னும் யாரும் முன்வரவில்லை.

இதற்கு காரணம், இப்படத்தினை தயாரித்து இருக்கும் துரை தயாநிதியின் தயாரி்ப்பு தான். இவர் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் ஆவார்.

விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் இப்படம் அமைந்திருந்தாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், தயாநிதி அழகி பேனரில் படத்தை வாங்குவதற்கும், அதனை ரிலீஸ் செய்வதற்கும் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மங்காத்தா படக்குழு முழித்து கொண்டு இருக்கிறது.

இதுஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அஜீத்தே தனது சொந்தப் பொறுப்பில் இந்தபடத்தை வெளியிட வேண்டும் என்றும், ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவை போய் பார்த்து விட்டு வர‌ வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அஜீத்தோ, நான் அப்படி போய் பார்த்தால் அது சுயநலத்துக்காக செய்த மாதிரி ஆகிவிடும். படத்தை தைரியமாக வெளியிடுங்கள், ஒன்றும் ஆகாது என்று கூறி வருகிறாராம்.

விஷால் படத்தலைப்புக்கு வேட்டு

பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு பிரபாகரன் என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பெயர் சில காரணங்களுக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை படத்தின் தலைப்பாக வைக்க வேண்டாம் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியதால் இந்த பெயர் மாற்றம் எனத் தெரிகிறது.

பிரபாகரன் எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படம் இனி வெடி என மாற்றப்பட்டுள்ளது. இப்படம் வெடி என்று பெயரிடப்பட்டதாலோ என்னவோ, தீபாவளி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இப்படத்தில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன் என்பதால் அதையயே தலைப்பாக வைத்திருந்தனர்.

இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மோகன் நடராஜன் தயாரிப்பில், பூபதி பாண்டியன் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் படத்திற்கு வெடி என்று பெயரிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விக்ரம் தனது வலைத்தளத்தில் முன்பே தகவல் வெளியிட்டிருந்தார். இது என்ன ஆகுமோ தெரியவில்லை.

மகனுக்கு கதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த விஜயகாந்த்

தனது மகனை ஹீரோவாக களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் நடிகர் விஜயகாந்த், மகனுக்காக இயக்குநர் ஒருவரிடம் கதை கேட்க, அவ‌ர் சொன்ன கதையை கேட்டு விழுந்து, விழுந்து சிரித்தாராம்.

முழுநேர அரசியல்வாதியாக எதிர்கட்சி தலைவராக ஆகிவிட்ட நடிகர் விஜயகாந்த் கொஞ்சம், கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகி வருகிறார்.

அதேசமயம், தன்னுடைய மகன் சண்முகபாண்டியனை ஹீரோவாக்கும் முயற்சியில் விஜயகாந்த், அவரது மனைவி பி‌ரேமலதா, மைத்துனர் எல்.கே.சுத்தீஷ் உள்ளிட்ட மொத்த குடும்பமே ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல டைரக்டர்களிடம் கதையும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் டைரக்டர் பூபதி பாண்டியன் ஒரு கதை சொல்ல விஜயகாந்த் வீட்டிற்கு சென்றாராம்.

அப்போது அவரின் கதையை விஜயகாந்தின் மொத்த குடும்பமும் உட்கார்ந்து கேட்டதாம். கதையை கேட்ட பின்னர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனராம்.

மேலும் கதை பிடித்து போக, அடுத்த கட்ட வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம் விஜயகாந்த்.

சினேகாவின் சின்ன சின்ன ஆசை

பக்கத்து வீட்டு பெண் போல இயல்பான நடிப்பாலும், தன்னுடைய புன்னகையாலும், ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொண்டவர் புன்னகை இளவரசி சினேகா.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் சினேகா, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் இப்போது கரை ஒதுங்கி நிற்கும் நடிகைகளின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.

தமிழில் கடைசியாக போலீஸ் அதிகாரியாக நடித்த பவானி படத்‌திற்கு பிறகு வேறு படங்களே இல்லை. இதுகுறித்து சினேகாவிடம் கேட்டால், கடவுள் அருளால் நல்ல கேரக்டர்கள் பலவற்றில் நடித்து விட்டேன்.

அடுத்து என்ன படம், எப்படி பண்ணலாம் என்று தேர்வு செய்து வருகிறேன். நிறையபேர் வந்து கதை சொன்னாங்க, ஆனால் ஒரு கதையும் மனதில் நிற்கும்படியாக இல்லை.

நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். 10வருடமாக தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும், எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்கிறது.

அது என்னானா, மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நடிக்கணும், டைரக்டர்கள் பாலா, ‌கவுத‌ம் வாசுதேவ் மேனன், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரது டைரக்ஷனில் எப்படியாவது ஒரு படம் பண்ணிவிட வேண்டும் என்று தன்னுடைய சின்ன ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழில் கைவசம் படங்கள் ஏதும் இல்‌லாததால் தற்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ராஜன்னா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கூடவே ஓய்வு கிடைக்கும் போது தனது உடலை ‌இன்னும் கொஞ்சம் ஸ்லிம்மாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்

பணம் பணம் பணம்னு அலையும் அஜீத், என்ற தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விடாதீர்கள் ரசிகர்களே! மங்காத்தா படத்தில் வரும் 2 அஜீத்களில் ஒரு அஜீத்தின் கேரக்டர்தான் இது!!

மங்காத்தா படம் குறித்து அஜீத் அளித்துள்ள பேட்டியொன்றில்தான் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தனது 50வது படமான மங்காத்தா பற்றி அஜீத் அளித்துள்ள பேட்டியில், வெங்கட் பிரபு ஒரு தொழில்முறை இயக்குநர். மிக மிக பக்குவமானவர். அவரோடு பணியாற்றிய நாட்கள் இனிமையானவை.

அனைவரையும் அனுசரித்து வேலை வாங்குவதில் வெங்கட்டுக்கு நிகர் யாருமில்லை. நான் இதுவரை வேலைபார்த்த இயக்குநர்களிலேயே பெஸ்ட் என்றால் வெங்கட்டைத்தான் சொல்வேன். இந்தப் படத்தில் நான் வினாயக் மாதவன் என்ற ரோலில் வருகிறேன்.

பணம் பணம் பணம் என்று பணத்தையே குறியாகக் கொண்ட கேரக்டர் அது. இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு மோசமான கேரக்டர் அது.

நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னொரு கேரக்டர் போலீஸ் கேரக்டர் என்று கூறியுள்ளார்.

விஜய் பங்கேற்ற விழாவில் போலீஸ் தடியடி

விஜய்யிடம் கைகுலுக்க ஆசைப்பட்டு முண்டியடித்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய், மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் தொடங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலத்தில், மாவட்ட தலைமை விஜய் நற்பணி மன்றத்தின் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, "தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள்.

அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்", என்று ரசிகர்களை உற்சாகமூட்டி பேசினார்.

அவர் பேசி முடித்ததும், நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்ட ரசிகர்கள் பலரும் விஜய்யிடம் கை குலுக்க மேடையை நோக்கி முன்னேறினர். அப்போது ரசிகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

இதனால் போலீசுக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரசிகர்கள் சேர்களை தூக்கி போலீசார் மீது எறிந்தனர். சிறிது நேரம் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் மைக்கில் எச்சரித்த வண்ணம் ரசிகர்களை கட்டுப்படுத்திய பின்னர் பரபரப்பு அடங்கியது.

சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர் - டி.ஆர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா. பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது.

அதில் "அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.," என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது. இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் கூறியதாவது, சிம்புவின் வானம் படத்தை 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை ரெடி பண்ணியது நான் தான். இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே.

சினிமா வாழ்க்கையில் சிம்புவும், எம்.ஜி.ஆர்., போன்ற நிலைமையை அடைய வேண்டும். அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம். அதற்காக சிம்புவை நான் தயார் பண்ணி வருகிறேன்.

அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான். மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர்., எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன்.

எம்.ஜி.ஆர்., மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லாம் தகுதியும் இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான்.

தற்போது நான் ஒரு தலைக்காதல் படத்தை இயக்கி வருகிறேன். இந்த படம் ஒரு அழகான காதல் கதை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன். விரைவில் ஒரு தலைக்காதலுடன் உங்களை சந்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் படத்துக்கும் சிக்கல்

கடந்த ஆட்சியில் ஏகபோகமாக சினிமாத்துறையை வளைத்து போட்டவர்களுக்கெல்லாம் அடுத்தடுத்து அடி விழுந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வேறு மாதிரியான சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

முன்னாள் முதல்வரின் பேரனும், முன்னாள் துணை முதல்வரின் மகனுமான உதயநிதி, ரெட்ஜெயண்ட் மூவிஸ் என்ற பெயரில் படநிறுவனத்தை தொடங்கி, பல படங்களை திரையிட்டார்.

ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் திரைத்துறையை சேர்ந்தவர்கள் யாருமே ரெட்ஜெயண்ட்டை பகைத்ததில்லை.

அந்த சமயத்தில்தான் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் ஒருகல் ஒரு கண்ணாடி பட சூட்டிங் தொடங்கியது. படத்தில் ஹீரோ உதயநிதிக்கு சமமான கேரக்டரில் நடிக்க காமெடி நடிகர் சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முந்தைய ஆட்சியின்போது கைநிறைய கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்த சந்தானம், இப்போது ஆட்சி மாற்றத்தையடுத்து முன்பு காட்டிய தாராளத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட காட்டவில்லையாம்.

அநேகமாக ஹீரோ உதயநிதி வருகிற எல்லா காட்சியிலும் சந்தானமும் இருப்பதால், இவர் வந்தால்தான் அவர் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை.

வேறு வேறு படங்களில் பிசியாக இருக்கும் சந்தானம் மீண்டும் எப்போது கண்ணாடி பக்கம் வருகிறாரோ, கடவுளுக்கே வெளிச்சம் என்று பேசிக் கொள்கிறார்கள் ஓகே.ஓகே., யூனிட்டில்...

விக்ரமின் தெய்வத்திருமகள் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

கடின உழைப்பிற்கும், அதிக ஈடுபாட்டுக்கும் பெயர் போனவர் சீயான் விக்ரம் என்று, அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்திலேயே தெரியும். "ராவணன்" படத்திற்கு பிறகு விக்ரம் கஷ்டப்பட்டு நடித்திருக்கும் படம் தான் "தெய்தவத்திருமகள்".

மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார் விக்ரம். படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் "மதராசப்பட்டினம்" புகழ் விஜய். "தெய்வத்திருமகள்" படம் பற்றிய ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ் இதோ...

* மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக, கிருஷ்ணா எனும் கேரக்டரில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம். இந்த கேரக்டருக்காக, 10கிலோ எடையை குறைத்தது மட்டுமில்லாமல், சூட்டிங் நடந்த கிட்டத்தட்ட 100நாளும் கடும் உணவு கட்டுபாட்டை கடைப்பிடித்தாராம்.

* கிருஷ்ணா கதாபாத்திரத்திற்காக 2 மாதம் பாத்வே என்ற மனநல காப்பகத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசி, பழகி, அவர்களை நன்கு கவனித்து, தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். நிச்சயம் இதற்காக அவருக்கு ஒரு பெரிய சலாம் போடலாம்.

* இதுவரை கவர்ச்சியாகவே வந்த அனுஷ்காவை, இந்த படத்தில் சற்று வித்யாசமாக பார்க்கலாம். படத்தில் அவருடைய கேரக்டர் வக்கீல் கேரக்டராம். இதுவரை தான் நடித்த கேரக்டர்களிலேயே இதுபோன்று எந்த படத்திலும் அமையவில்லை என்று சிலதினங்களுக்கு முன்னர் அவரே கூறியிருந்தார். அந்தளவுக்கு அனுஷ்காவின் கேரக்டர் பவர்ஃபுல்லானதாம்.

* இதேபோல் மற்றொரு நடிகையான அமலா பால், இந்த படத்தில் ஸ்வேதா என்ற கனமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கேரக்டருக்காக தன்னை மிக துள்ளியமாகவும், அழகாகவும், வெளிப்படுத்தியுள்ளதால் டைரக்டர் விஜய், விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் அமாலா பாலை பாராட்டினார்களாம்.

* காமெடிக்கு பெயர் போனவர் நடிகர் சந்தானம். இதுவரை ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கி வந்த சந்தானம், முதன்முறையாக அனுஷ்காவுடன் சேர்ந்து காமெடியில் அசத்தியிருக்கிறாராம். மேலும் காமெடியனாகவும், ஒரு முக்கிய காட்சியில் கண்ணீரும் சிந்தி அவருடைய முழு நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

* இப்படத்தில் விக்ரமுடன் ஒன்றிப்போய் இருக்கும் மற்றொரு கேரக்டர் மும்பையை சேர்ந்த சாரா என்ற குழந்தை நட்சத்திரம். படத்தில் உள்ள வனசங்களை உச்சரிக்க பலவித பயிற்சி கொடுத்து சாராவை பேச வைத்துள்ளனர். அவர்களது முயற்சிக்கு நல்ல பலனாக, தனக்கு கொடுக்கப்பட்ட வசனங்களை மிக அழகாக பேசி, நடித்து அசத்தினாராம்.

சூட்டிங்கின் போது ஒருநாள் விக்ரம்-சாரா சம்பந்தப்பட காட்சியை படமாக்கி கொண்டு இருந்தனர். அப்போது விக்ரமிடம், சாரா கேள்வி கேட்பது போன்றும், இதற்கு விக்ரம் பதிலளிக்க சற்று யோசித்து சொல்வது போன்றும் காட்சி. ஆனால் விக்ரம் டயலாக்கை மறந்து விட்டார் என்று எண்ணி, விக்ரமின் வசனத்தை சாரா முணுமுணுத்து இருக்கிறார்.

இதைக்கேட்ட மொத்த யூனிட்டும் சாராவை பாராட்டினார்களாம். கூடவே கெட்டிக்காரி சாரா என்று சொல்லி பெயரிட்டாராம் விக்ரம்.

* படத்தில் கிருஷ்ணாவாக நடித்திருக்கும் விக்ரம், அந்த கேரக்டரில் இருந்து வெளியே வர ரொம்பவே கஷ்டப்பட்டாராம். கண்ணாடி முன் நின்று, பார்த்து பேசிதான் அவரால் அந்த கேரக்ட்டரை விட்டு வெளியேற முடிந்ததாம்.

ஆனாலும் சில நேரங்களில் முழுநேர கிருஷ்ணாவாகவேதான் இருந்தாராம். அப்படி ஒருநாள் விக்ரமிடம் அனுஷ்கா ஏதோ பேச, விக்ரமோ கிருஷ்ணா மாதிரியே பதிலளித்தாராம். இதைக்கண்டு அனைவரும் வியந்து போனார்களாம்.

* இப்படத்தின் ஒரு முக்கிய அம்சமாக தேவைப்பட்டது கோர்ட். இதற்காக கலை இயக்குநர் சந்தானம், நிஜ கோர்ட்களுக்கு எல்லாம் சென்று அங்குள்ள பொருட்கள், தேவைப்பட்ட பல விஷயங்களையும் சேகரித்து, இப்படத்திற்காக ஒரு கோர்ட்டையே உருவாக்கி கொடுத்திருப்பதை படம் பார்த்த பின்னர் எல்லோரும் நம்புவார்கள்.

* இப்படத்தின் சூட்டிங் பெரும்பாலும் சென்னை மற்றும் ஊட்டி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்பாதி ஊட்டியில் பிரமாண்ட செட் போட்டும், பிற்பாதி சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளிலும் காட்சி அமைத்திருக்கின்றனர்.

* படத்தின் சூட்டிங் காட்சிகளில் போது பலருக்கும் விக்ரம்மை அடையாளம் தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் விக்ரமின் நடிப்பை பார்த்து முதியவர் ஒருவர் பாவம் பைத்தியம் என்று கூறினாராம். அந்தளவுக்கு கேரக்டரோடு ஒன்றிப்போய் இருந்திருக்கிறார் விக்ரம்.

* முதல் முறையாக ஹாலிவுட்டில் வசூல் சாதனை படைக்கும் அம்சங்கள் இந்த படத்தின் ஒரு பாட்டில் இடம் பெறுகிறது. முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்குமாம்.

* இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், தான் பணியாற்றிய படங்களிலேயே, இந்தபடத்திற்கு தான் பின்னணி இசை அருமையாக அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். அதிலும் படத்தின் உச்சக்கட்ட காட்சியில் 10 நிமிடங்களுக்கு சிம்ஃபொனி இசை அமைத்திருப்பது நம் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகப்படுத்தும்.

* இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் நீரவ்ஷா, முதன்முறையாக விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் வரும் காட்சிகளின் வடிவமைப்பு ஒரு கனவு போல சுகமாகவும், அழகாகவும் பதிவாக்கி இருக்கிறார். அதிலும் ஊட்டியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம்.

* இயக்குநர் விஜய் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனியின் வெற்றிக்கூட்டணி இந்த படத்திலும் தொடர்கிறது. அவரும், அவரது குழுவினரும் தான் எனது முதல் விமர்சகர்கள் என்று கூறும் விஜய், ஆண்டனியின் படத்தொகுப்பு தெய்வத்திருமகள் படத்தை எங்கோ கொண்டு சென்றிருக்கிறது என்று பெருமையாக கூறுகிறார்.

2ஜி ஸ்பெக்டரம் படத்தில் கனிமொழியாக நடிக்கும் நடிகை

2ஜி ஸ்பெக்டரம் ஊழலை மையப்படுத்தி அதே பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் இடம்பெறும் ரியல் கேரக்டர்கள் யார் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த கேரக்டர்களில் நடிக்கப்போகும் நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது. முக்கியமான கேரக்டரான அரசியல் தரகர் நீரா ராடியா கேரக்டரில் நடிகை லட்சுமி ராய் நடிக்கப்போவதாக முதலில் செய்திகள் வெளியாயின.

இப்போது சாந்தினி என்ற மலேசிய நடிகை நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய பட்டியல் இன்னமும் வெளியாகாத நிலையில், கனிமொழி கேரக்டரில் நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மட்டுமல்லாமல்... அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்தது.

இந்நிலையில் கனிமொழி கேரக்டரில் நடிக்க ஒரு நடிகையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்சுமி ராமகிருஷ்ணன். பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகான் அல்ல, யுத்தம் செய், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் அம்மா வேடத்தில் நடித்தவர்தான் இந்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமியிடம் கனிமொழி கேரக்டர் பற்றி கூறியதும், டபுள் ஓ.கே. சொல்லி விட்டாராம். அதேபோல மு.க.அழகிரி வேடத்தில் சிங்கமுத்து நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நட்சத்திர வாரிசுடன் ஜோடி போட சுள்ளான் நடிகர் மறுப்பு

சுள்ளானாக வலம் வந்தபோது இருந்த அதே சிம்பிள்தான் பெரிய இடத்து மாப்பிள்ளையானதும் என்று இன்றும் பலரால் பாராட்டப்பட்டு வரும் சுள்ளான் நடிகரைப் பற்றிய செய்திதான் இது.

இந்த சுள்ளான் நடிகர் அவரது மனைவியின் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவதாகவும், அந்த படத்தில் கலையுலகின் உலக நாயகன் என போற்றப்படும் நட்சத்திரத்தின் வாரிசுதான் நாயகியாக நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாயின.

அந்த செய்தியில் சிறு திருத்தம் இருக்கும் என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. ஆம்! சுள்ளான் நடிகர், வாரிசு நடிகையுடன் ஜோடி சேர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

வாரிசு நடிகையுடன் ஜோடி சேர வேண்டும் ஒரு சில நடிகர்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் நேரத்தில், சுள்ளான் நடிகர் நிராகரித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதே நேரம் வாரிசு நடிகையை வேண்டாம் என்று சுள்ளான் சொல்லவில்லை என்றும், ஹீரோயின் லிஸ்ட்டில் அவரும் இருக்கிறார் என்றும் இன்னொரு செய்தியும் உலாவிக் கொண்டிருக்கிறது.

பஞ்சாயத்தில் பாய்ந்த தயாரிப்பாளர்கள்

சமீபத்தில் நடந்த தயாரி்பாளர்கள் மீட்டிங் ஒன்றில், தற்போதைய தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரை பார்த்து, ஷக்தி சிதம்பரம் எக்குதப்பா பேச எஸ்.ஏ.சியை ஓங்கி இருக்கிறார்.

இதைப்பார்த்த ஷக்தி சிதம்பரம் பதிலுக்கு, நீங்க பத்து அடி அடிச்சா, நானும் ஒத்தயடியாவது அடிப்பேன்...

வயசுக்கு மரியாதை கொடுத்தா காப்பாத்திங்குங்க என காச்மூச்சுன்னு கத்தியிருக்கீறார். கூடவே நீங்க புரடியூசருன்னா, நாங்களும் கரண்ட் புரடியூசர்தான் என மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்.

இதைப்பார்த்த மொத்த கூட்டமும் வாயடைத்துவிட்டது.

ஏஸ்.ஏ.சி - ஷக்தி சிதம்பரம் இடையே‌ நடப்பது புரடியூசர் கவுன்சில் பஞ்சாயத்து ‌‌போட்டி மாதிரி தெரியலை, "காவலன்" பஞ்சாயத்து தொடருதோ என சந்தேகமாக இருக்கிறது என்கிறார் விவரமறிந்த வநியோகஸ்தர் கம் புரடியூசர் ஒருத்தர்! அதானே!!

விஜயகாந்துக்காக சினிமா தயாரிப்பதை நிறுத்திய தயாரிப்பாளர்

நடிகரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உத்தரவுக்கிணங்க பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தனது சினிமா தயாரிப்பு கம்பெனியை மூடி விட்டார்.

தென்மேற்கு பருவக்காற்று போன்ற நல்ல படங்களை வெளியிட்ட பெருமைக்கு சொந்தக்காரரான மைக்கேல் ராயப்பன் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றிபெற்ற கையோடு அடுத்தடுத்த படங்களை தயாரிக்கலாம் என்று நினைத்திருந்த மைக்கேல் ராயப்பனுக்கு அதிர்ச்சி கொடுப்பதுபோல கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஒரு அதிரடி உத்தரவை
பிறப்பித்துள்ளார்.

ஒரு வருஷத்துக்கு மக்கள் பணிகளை மட்டும் பாருங்க. உங்க தொகுதியை சுற்றி சுற்றி வாங்க. மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பதுதான் முக்கியம். அதற்கு பிறகுதான் சினிமா உள்ளிட்ட மற்றதெல்லாம் என்று தடாலடியாக உத்தரவு போட்டிருக்கிறார் விஜயகாந்த்.

கட்சித்தலைமையின் உத்தரவை மீற முடியுமா என்ன? மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பு நிறுவனம் சுமார் ஒரு வருட காலத்திற்கு தனது தயாரிப்பை தள்ளிப் போட்டிருக்கிறது. சென்னையில் ஒரு லட்சம் ரூபாய் வாடகைக்கு அமர்த்தியிருந்த ஆபீசையும் காலி செய்தாகி விட்டது என்பது கூடுதல் தகவல்.

நல்லது நடந்தா சரிதான்!

ஹீரோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஹீரோ

நேரில் பார்க்கும்போது மாப்ளே... மச்சான் என்று கூறி கட்டியணைத்து, பாசமழை பொழிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் விரல் நடிகரும், ஜீவமான நடிகரும் இப்போதெல்லாம் நேரில் மட்டுமல்ல... போனில் கூட பேசுவதில்லையாம்.

இதற்கெல்லாம் காரணம் சமீபத்தில் பத்திரிகை போட்டோகிராபர் கேரக்டரில் ஜீவ நடிகர் நடித்ததுதானாம். இந்த கதையில் முதலில் ஒப்பந்தமானவர் விரல் பார்ட்டி.

அவருக்கும், அப்பட டைரக்டருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் படத்தில் இருந்து தூக்கப்பட்ட வீரல், அன்றிலிருந்து ஜீவ நடிகர் மீது கோபத்தில் இருக்கிறார்.

படத்தையும், ஹீரோவையும் நக்கல் அடித்து ட்விட்டர் தளத்தில் எழுதுவது, சினிமா புள்ளிகளிடம் படத்தைப் பற்றி அவதூறு சொல்வது என காலம் தள்ளிக் கொண்டிருந்த விரல் ஹீரோ, இப்போது ஒருபடி மேலே போய், ஜீவத்தின் அடுத்த படத்திற்கு தடைக்கல்லாக நிற்கிறாராம்.

ஆம்! ஜீவம் அடுத்து நடிக்கவிருக்கும் படமொன்றை தடுத்து நிறுத்தும் பணியில் இறங்கியிருக்கும் விரல் வம்பு நடிகர், அப்பட தயாரிப்பாளருக்கே போன் போட்டு அவரை தூக்குங்க... என்று கூறியிருக்கிறாராம்.

இந்த படத்தில் யாரை வேண்டுமானாலும் ஹீரோவா போடுங்க... அவர் மட்டும் வேண்டாம் என்பதுதான் வம்புவின் வாதம். சினிமாவுல இதெல்லாம் சகஜம்தானே என்கிறார்கள் விவரமரிந்த சினிமாக்காரர்கள். ஆனால் ரசிகர்களோ... முட்டிக் கொள்ள தயாராகி வருகிறார்கள். என்னத்த சொல்ல...?

முதல்பட தயாரிப்பாளரை மறந்த வாகை சூடவா இயக்குநர்

"களவாணி" சற்குணம் இயக்கத்தில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் "வாகை சூடவா", இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.பி.ஜனநாதன், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், பிரபுசாலமன், அமீர், சிம்புதேவன், விஜய், "பசங்க" பாண்டிராஜ், சுசீந்திரன் என கோலிவுட் இயக்குநர்கள் மொத்தபேருடன் ஏ.எல்.அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களும் கலந்து கொண்ட இவ்விழாவில் கடைசிவரை, இயக்குநர் சற்குணத்திற்கு முதல்பட வாயப்பு தந்த தயாரிப்பாளர் நசீர் மேடை ஏற்றப்படவில்லை.

"வாகை சூடவா" இயக்குநர் சற்குணத்திற்கு "களவாணி", ஹீரோ விமலுக்கு "களவாணி", "எத்தன்" என இரண்டு படங்கள் தந்த நசீர் மேடை ஏற்றபடாதது கண்டு பின்னர் பிரஸ் மீட்டில் கேட்டபோது, இயக்குநர் சற்குணம் அவர் விழாவுக்கு வந்ததே எனக்கு தெரியாது என்றார்.

அவரிடமிருந்து மைக்கை வாங்கி பேசிய இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில், களவாணி படத்தயாரிப்பாளர் நசீர், இவ்விழாவிற்கு அழைக்கும்போது, என்னை மேடைக்கு அழைக்க வேண்டாம் என கேட்டு கொண்டார்.

அதனால் அழைக்கவில்லை என்று பூசி மொழுகினார். அப்படியென்றால் அதேமேடையில், மேடை ஏறுவதில்லை, பேசுவதில்லை எனும் சபதம் கொண்டிருக்கும் பாரத‌ிராஜாவை மட்டும் வற்புறுத்தி பேச வைத்தவர்கள், நசீரை மட்டும் மறந்தது, மறுத்தது ஏனாம்...?! வாகைசூட இருப்பவர்களு‌க்கே வெளிச்சம்!

மங்காத்தா என் கனவு

தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில், நடிகர் அஜித் - நடிகை த்ரிஷா நடித்து வரும் புதிய படம் மங்காத்தா. விரைவில் ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டமாக விளையாடு மங்காத்தா... எனத் தொடங்கி தொடரும் பாடல் வெளியிடப்பட்டது.

அஜித்தின் 50வது படம் என்ற முக்கியத்துவம் பெற்றுள்ள மங்காத்தா படம், தன் கனவுப்படம் என்று தயாரிப்பாள் தயாநிதி அழகிரி கூறியிருக்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியென்றில், நான் நீண்ட நாட்களாக வெங்கட்பிரபுவை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்கு ஏற்றாற்போல மங்காத்தா கதை அமைந்தது. வெட்கட்பிரபு மிகவும் இனிமையான நண்பர்.

இந்த படத்தில் பணிபுரிந்திருக்கும் மற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது முழுத் திறமைகளையும் பயன்படுத்தி இந்தப் படம் சிறப்பான முறையில் தயாராக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் இதுவொரு முக்கியமான படம். என்னைப்பொறுத்தவரை மங்காத்தா பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், மங்காத்தா என் கனவு, என்று கூறியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...