விஜய் பங்கேற்ற விழாவில் போலீஸ் தடியடி

விஜய்யிடம் கைகுலுக்க ஆசைப்பட்டு முண்டியடித்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய், மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் தொடங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலத்தில், மாவட்ட தலைமை விஜய் நற்பணி மன்றத்தின் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, "தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள்.

அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்", என்று ரசிகர்களை உற்சாகமூட்டி பேசினார்.

அவர் பேசி முடித்ததும், நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்ட ரசிகர்கள் பலரும் விஜய்யிடம் கை குலுக்க மேடையை நோக்கி முன்னேறினர். அப்போது ரசிகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

இதனால் போலீசுக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரசிகர்கள் சேர்களை தூக்கி போலீசார் மீது எறிந்தனர். சிறிது நேரம் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் மைக்கில் எச்சரித்த வண்ணம் ரசிகர்களை கட்டுப்படுத்திய பின்னர் பரபரப்பு அடங்கியது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...