மீண்டும் தமிழில் மதுபாலா

பாலசந்தரின், "அழகன் படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானவர், மதுபாலா. இதற்கு பின், மணிரத்னத்தின், "ரோஜா வில் ஹீரோயினாக நடித்ததால், பாலிவுட், இவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. 

தமிழில், சில படங்களில் நடித்தாலும், பாலிவுட்டிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தினார். பாலிவுட்டில், அதிக வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. பின், திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கையில், கவனம் செலுத்தினார். 

இதனால், பட வாய்ப்புகள் குறைந்தன. சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்தார். எதிர்பார்த்த அளவு, வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில், "டிவி சீரியலில் நடித்தார். 

பெரிய அளவில், வரவேற்பு இல்லாததால், சினிமா வெளிச்சத்திலிருந்து விலகியிருந்த மது பாலா, இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணா இயக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம், ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்பதால், உற்சாகத்தில் இருக்கிறார், மதுபாலா.

கமலுடன் கைகோர்க்கும் யுவன்

கடந்த, 1980 மற்றும் 90களில், கமல் ஹாசன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர், இளையராஜா தான். இந்த இருவரும் இணைந்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே, இன்றும் ரசிகர்களின் மனதில், நீங்காமல் இடம் பிடித்துள்ளன. 

தற்போது, இளையராஜாவின் மகன், யுவன் சங்கர் ராஜா, கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராகி விட்டாலும், இதுவரை கமல் நடித்த படத்துக்கு, இசையமைத்தது இல்லை. 

இது தொடர்பாக, யுவனிடம், ஒரு ஏக்கம் இருந்து வந்தது. தற்போது, அந்த ஏக்கம் தீர்ந்துள்ளது. கமல், அடுத்து நடிக்கவுள்ள, "உத்தம வில்லன் படத்துக்கு, யுவன் தான், இசையமைக்கிறாராம். 

இதனால், யுவன் சங்கர் ராஜா மட்டுமல்லாமல், கமல் ஹாசனின் ரசிகர்களும், இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்க்கின்றனர்.  

3 நாட்களில் 21 கோடி வசூல் செய்த தனுஷின் ராஞ்சனா


இந்தியில் தனுஷ் நடித்துள்ள முதல் படம் ராஞ்சனா. என்னதான் தமிழில் அவர் முன்னணி நடிகராக இருந்தாலும் பாலிவுட்டைப்பொறுத்தவரை புதுமுகமே என்பதால், படத்திற்கு எந்த மாதிரியான ஓப்பனிங் இருக்கப்போகிறதோ என அனைவரும் மனதளவில் பயந்துதான் இருந்தனர். 

ஆனால், கடந்த 21-ந்தேதி திரைக்கு வந்த அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 21 கோடியை வசூல் செய்து விட்டதாம். 

இதனால் படத்துக்காக செலவு செய்தவர்களுக்கு போட்டதை விட அதிகம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறதாம்.

அதேசமயம், பாடி பில்டர்களாக இருக்கும் மும்பை சினிமாவில், பாடியை நம்பி நானில்லை, திறமையை நம்பித்தான் இருக்கிறேன் என்பது போல் கதையின் நாயகனாக மாறி நடித்த தனுசின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். 

அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, சோனம்கபூருக்காக ராஞ்சனாவைப்பார்த்த இந்திவாலாக்களுக்கும்கூட தனுஷின் நடிப்பு ரொம்ப பிடித்திருக்கிறதாம். 

இதனால் சுள்ளானாக பாலிவுட்டுக்கு சென்று சூடுகாட்டியிருக்கும் தனுசை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க அங்குள்ள படாதிபதிகள் தயாராகியுள்ளார்களாம்.

ஜில்லா படகுழுவினருக்கு விஜய் பிரியாணி விருந்து

விஜய்யின் ‘தலைவா’ படம் முடிவடைந்துள்ளது. இதன் பாடல் மற்றும் டிரெய்லர் இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அடுத்து ‘ஜில்லா’ படத்துக்கு விஜய் தயாராகியுள்ளார். 

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சிம்ரன் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். இப்படத்தை நேசன் இயக்குகிறார். ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். 

இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னையில் நடக்கிறது. விஜய் தனது பிறந்தநாளையொட்டி ‘ஜில்லா’ படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். 

சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு அரங்கில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. 

ஒவ்வொருவருக்கும் விஜய்யே தனது கைப்பட பிரியாணியை பரிமாறினார். 

துணை நடிகர், நடிகைகள் லைட்மேன்கள், கேமராமேன் உதவியாளர்கள், உள்ளிட்ட பலர் விஜய் அளித்த பிரியாணியை சாப்பிட்டு வாழ்த்தினார்கள்.

படப்பிடிப்பு தளத்திலேயே ஆர்யாவை மனைவி போன்று உபசரித்த நயன்தாரா


ஆர்யா-நயன்தாரா இருவருக்குமிடையே சினிமாவுக்கு வெளியே ஏதோஒரு அந்நியோன்யமான உறவு இருக்கிறது என்பது நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. 

அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது அவர்கள் நடித்துள்ள ராஜாராணி படப்பிடிப்பில் அதிக நெருக்கமாக, இணக்கமாக நடந்து கொண்டார்களாம். 

அதாவது ஆர்யாவைக்கண்டாலே நயன்தாராவின் முகத்தில் ஒருவித பாசம் பீறிடுகிறதாம்.

இருவரும், ரகசிய புன்னகை பூத்தபடி தங்களை சுற்றி பலர் அமர்ந்திருந்தாலும், அவர்களுக்கு கேட்காத வகையில் ஒருவர் காதில் ஒருவரர் ரகசியம் பேசுவது போல் யாருக்குமே கேட்காத வகையில் பேசுகிறார்களாம். 

இப்படியே போகப்போக ஆர்யாவின் தோளில் சாய்ந்து கொள்கிறாராம் நயன்தாரா. 

அதோடு, படத்தில் கணவன்-மனைவியாகவே நடிக்கும் அவர்கள், கேமரா முன்பு வந்து விட்டால், அந்த ஒட்டல் உரசலுடன் நடித்து சுற்றியிருப்போரையே சூடேத்துகிறார்களாம்.

இதை சிலர் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே. ரெண்டு பேரும் நிஜமாலுமே சேர்ந்துட்டாங்களோ என்று சிலர் பட டைரக்டர் அட்லியிடம் கேட்க, ஏற்கனவே அவர்கள் நெருக்கமான ப்ரண்ட்சுதான். 

ஆனா இந்த படத்தோடு கதைப்படி கணவன் மனைவிங்கிறதால நிஜ வாழ்க்கைய பிரதிபலிக்கிற வகையில் நடிச்சிட்டு வர்றாங்க. அவர்களோட இந்த நடிப்பு என்னோட கதைக்கு பெரிய பலமாகப்போவுது என்கிறார்.

அம்பிகாபதியுடன் போட்டியிட தயாராகும் அன்னக்கொடி

தனுஷின் அம்பிகாபதி படத்துடன் போட்டி போட பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் தயாராகி வருகிறது.  அம்பிகாபதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

இந்த படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா நடித்துள்ள பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கும் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

இந்த படமும் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அம்பிகாபதியின் இந்திப்பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ் பதிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

இதேபோல பாரதிராஜாவின் அன்னக்கொடியும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி போட்டியிடவுள்ளது.

ஹன்சிகாவுக்கு தடைபோட்ட சிம்பு - புகையும் புதுத்தகவல்


சாதாரணமாக சிம்பு யாருடனாவது நட்பு வைத்தால் ரொம்ப நெருக்கமாகி விடுவார். பிடிக்கவில்லையென்றால் அவர்கள் இருக்கிற பக்கமே திரும்ப மாட்டார். 

அப்படித்தான் நயன்தாராவுடன் ஒரு காலத்தில் ரொம்ப நட்பாக இருந்தார், அந்த நெருக்கமே நாளடைவில் அவர்களுக்கிடையே காதலை உருவாக்கியது. 

ஆனால் அவர்களின் காதல் மீது யார் கண் வைத்தார்களோ, குறுகிய காலத்திலேயே டமார் என்று வெடித்து சிதறியது. அதையடுத்து நயன்தாரா இருக்கிற பக்கமே சிம்பு திரும்பவில்லை.

இந்தநிலையில், இப்போது வாலு, வேட்டை மன்னன் படங்களில் தன்னுடன் நடித்து வரும் ஹன்சிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். 

இதை பார்க்கிறவர்கள் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சிம்பு இதை மறுத்து வருகிறார். ஆனால் ஹன்சிகா தரப்பில் நோ ரியாக்ஷன்.

இருப்பினும், ஹன்சிகாவின் சினிமா கேரியருக்கு நிறைய அட்வைஸ் செய்கிறாராம் சிம்பு. அந்த வகையில், சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா ஜோடி சேரப்போகிறார் என்ற செய்தியைக்கேட்டு ஷாக் ஆகிவிட்டாராம் அவர். 

உடனே அவரை அழைத்து, மார்க்கெட் நல்லா போய்க்கிட்டிருக்கிற நேரத்தில் இப்படி துக்கடா நடிகர்களோட நடிச்சு உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கப்போறியா என்று தனது பாணியில் சொன்னாராம். அவர் கேள்விக்கு ஹன்சிகாவினால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லையாம்.

ஏற்கனவே அப்படத்தில் நடிப்பதற்கு ஏ.ஆர்.முருகதாசிடம் ஒப்புதல் தெரிவித்து விட்ட ஹன்சிகா, சிம்புவின் அறிவுரையா? சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா? எதை ஏற்பது என்பது புரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டு நிற்கிறார்.

கமல் செய்த அதிரடி மாற்றம்

"விஸ்வரூபம்-2 படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்பை, சென்னையில் நடத்தி வருகிறார் கமல். சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா என, முதல் பாகத்தில் நடித்தவர்களே, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். 

ஆனால், தயாரிப்பு பொறுப்பை மட்டும், தன்னிடமிருந்து, வேறு ஒருவரிடம் விற்று விட்டார். மேலும், முதல் பாகத்துக்கு, ஒளிப்பதிவு செய்த சானு வர்க்கீசை நீக்கி விட்டு, இப்போது ஷாம்தத் சைனுதீன் என்பவரை நியமித்துள்ளார். 

அதே போல், "விஸ்வரூபம் படத்துக்கு மூன்று பேர் இணைந்து இசையமைத்தனர். 

ஆனால், இப்போது இரண்டாம் பாகத்துக்கு, ஜிப்ரானை ஒப்பந்தம் செய்துள்ளார்."வாகை சூடவா படத்தில் அறிமுகமான ஜிப்ரான், "வத்திக்குச்சி, குட்டிப்புலி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

தயாராகிறது ரஜினியின் சந்திரமுகி 2


மலையாளத்தில் மோகன்லால் - சுரேஷ்கோபி, ஷோபனா நடித்த படம் மணிசித்திரதாழ். இப்படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி.வாசு. 

அதையடுத்து தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்தார் வாசு. மலையாளம், கன்னடத்தைவிட பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது அப்படம். 

முக்கியமாக, சந்திரமுகியாக கண்களை உருட்டி, ரசிகர்களை மிரட்டும் பேயாக நடித்த ஜோதிகா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

இந்த நிலையில், முதன்முதலில் மலையாளத்தில் வெளியான மணிசித்திரதாழ் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். 

அப்படத்திலும் மோகன்லால்- ஷோபனா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். அப்படத்துக்கு கீதாஞ்சலி என பெயரும் வைத்து விட்டார்களாம்.

அதனால், தமிழிலும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று சிலர் ரஜினி தரப்பை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். 

வருடக்கணக்கில் கோச்சடையான் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அதற்கு முன்னதாக சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை கொடுக்க ஏற்கனவே யோசித்துக்கொண்டிருக்கும் ரஜினியின் மனக்கண்ணில் இப்போது சந்திரமுகி பேய்தான் அடிக்கடி வந்து செல்கிறதாம். 

விரைவில் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து ஓட்டம் பிடித்த விஜயசேதுபதி


சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்பவர் கமல்ஹாசன். அவருக்குப்பிறகு சமீபகாலமாக தனுஷ், விஷால், சித்தார்த் உள்ளிட்ட சில நடிகர்களும் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இவர்களைப்பார்த்து பீட்சா, சூதுகவ்வும் படங்கள் மூலம் வளர்ந்து வரும் விஜயசேதுபதியும் தான் நடித்து வரும் சங்குதேவன் என்ற படத்திற்கு, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளரானார். அவரது இந்த முயற்சியை பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

சில நாட்களாக படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால், திடீரென்று ஒருநாள் படப்பிடிப்பு நடந்த பிறகு வேலை செய்தவர்களுக்கு அவரால் பேட்டா கொடுக்ககூட முடியவில்லையாம். 

எனக்கு பணம் கொடுத்து வந்த நிறுவனம் திடீரென்று பணம் தருவதை நிறுத்தி விட்டது. என்றாலும், என் கையில் இருந்த பணத்தை போட்டு பல நாட்களாக படப்பிடிப்பை நடத்தினேன். இப்போது என் கையில் இருந்த மொத்த பணமும் கரைந்து விட்டது என்றாராம். 

இதனால், அப்படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து வந்த விஜயசேதுபதி, தனக்கு பணம் கொடுத்து வந்த நிறுவனத்திடமே படத்தை ஒப்படைத்து விட்டாராம். 

இதற்கு மேல் என்னிடம் பணம் இல்லை. இந்த பர்ஸ்ட் காப்பி வியாபாரமெல்லாம் எனக்கு செட்டாகாது. 

அதனால் இனி மொத்த தயாரிப்பு பொறுப்பையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். என்னை ஆளை விடுங்கள் என்று ஓட்டம் பிடித்து விட்டாராம்.

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விஜய்

நடிகர் விஜய், "தேவா படத்தில் சொந்தக் குரலில் பாடினார். அப்பாடல், பெரிய அளவில் ஹிட்டானது. அதனால், தான் நடித்த படங்களில் தொடர்ந்து பாடி வந்த விஜய், கடந்த சில ஆண்டுகளாக, எந்த படத்திலும் பாடவில்லை. 

நீண்ட இடைவெளிக்கு பின், "துப்பாக்கி படத்தில், "கூகுள் கூகுள் என்ற பாடலை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடினார். 

இளைஞர்களால், மிகவும் விரும்பப்பட்ட , அந்த பாடல், விஜய் ரசிகர்களையும், பெரிய அளவில் கவர்ந்தது. 

அதனால், இனிமேல், நடிக்கவுள்ள படங்களில், ஒரு பாடலாவது பாடி விடுமாறு, அவரை வற்புறுத்தி வருகிறார்களாம். 

அதனால், "தலைவா படத்திலும், "ஜில்லா படத்திலும், ஒரு பாட்டு பாடுகிறாராம்.

தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்


சமீபத்தில் வெளிவந்த "கலகலப்பு" படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சியும், யு.டி.வி மோஷன் பிக்சர்ஸீம் உடனடியாக இணைந்து உருவாக்கியிருக்கும் படம் தான் "தீயா வேலை செய்யணும் குமாரு..."

கதைப்படி ஹீரோ சித்தார்த்தின் குடும்பம், பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக காதல் திருமணம் செய்து கொண்டு புரட்சி பண்ணி வரும் குடும்பம். சித்தார்த்தின் அக்காக்கள் இருவரும் கூட காதல் திருமணம் புரிந்தவர்கள் தான். 

ஆனால் ஐ.டி. கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கும் சித்தார்த்துக்கு மட்டும் காதல், எட்டிக்காயாக கசக்கிறது. காரணம் சின்ன வயதிலும், பள்ளி கல்லூரி பருவங்களிலும் அவர் சக மாணவிகளிடம் வாங்கிய லவ்-பல்புகள் தான்! 

இந்நிலையில் தம்பிக்கு ஒரு லவ் மேரேஜை செய்து பார்த்துவிட வேண்டும் எனும் அக்காக்களின் பேராசையாலும், அத்தான்களின் ஒத்தாசையாலும், தன் அலுவலகத்திற்கு புதிதாக பேரழகியாக வந்து சேரும் சஞ்சனா எனும் ஹன்சிகா மோத்வானியை காதலியாக அடையத்துடிக்கிறார் குமார் எனும் சித்தார்த்! அதற்காக காசுக்கு காதல் டிப்ஸ்களை வாரி வழங்கி பலரது காதல் கைகூட காரணமாக இருக்கும் மோக்கியா சந்தானத்தின் உதவியை நாடுகிறார் சித்தார்த்!

கண்டபடி காசை வாங்கிக் கொண்டு சித்தார்த்தை, காதலில் தீயா வேலை செய்ய சொல்கிறார் சந்தானம்... சந்தானத்தின் ஐடியாபடி சித்தார்த் பண்ணும் காதல் கலாட்டாக்களும், அதற்கு ஹன்சிகா அசைந்து கொடுத்தாரா? இல்லையா? என்பதுடன், இன்னும் சில கலர்புல் திருப்பங்களை கலந்து கட்டி தந்திருப்பதும் தான் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

நாயகர் சித்தார்த், ஆரம்பத்தில் அசமந்தமாக காத‌லில் பிடிப்பில்லாமல் கொஞ்சம் ‌சோகமே உருவாக திரிவதும், பின் சந்தானத்தின் ஐடியாபடி லவ்வர் பாயாக மாறி ஹன்சிகாவை சுற்றி சுற்றி வந்து காதலில் கலக்குவதும், தன் காதலுக்கு வில்லனாக வரும் கணேஷ் வெங்கட்ராமை வெறும் வதந்தி மூலம் கட்டம் கட்டி தூக்குவதுமாக செம காதல் கலாட்டாக்கள் புரிந்திருக்கிறார். சித்தார்த்திற்குள் இப்படி தீயா வேலை செய்யும் ஒரு குமாரா.?! எனும் ஆச்சர்யத்தை கிளப்புகிறார் மனிதர்!!

நாயகி ஹன்சிகா, முந்தைய படங்களைக் காட்டிலும் நிறையவே ஸ்லிம் ஆகி செம செக்ஸி லுக்கில் சித்தார்த்தை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களையும் காதலிக்க தூண்டுவது மாதிரி நடித்திருப்பது "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது!

சித்தார்த், ஹன்சிகா இருவரையும் காட்டிலும் காசுக்கு, காதலுக்கு உதவும் கேரக்டரில் காமெடியனாக வரும் மோக்கியா எனும் சந்தானம் தான் இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எனும் அளவிற்கு எல்லோரது பாத்திரத்திலும் புகுந்து புறப்பட்டு கலாய்த்திருக்கிறார். 

கணேஷ் வெங்கட்ராமை பார்த்து,  "அது யாருடா அது செல்வராகவன் பட செகண்ட் ஹீரோ மாதிரி செம அழகா இருப்பது..", "ஆர்யாவுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு காதல் டிப்ஸ் தந்தவன் நான்...." என்பதில் தொடங்கி சித்தார்த்தின் காதலுக்கு அவரது அக்கா-தங்கை, அத்தான்கள் என அனைவரும் உதவுவதை பார்த்து, "இது குடும்பம் அல்ல விக்ரமன் படம்..." என்று கமெண்ட் அடிப்பது வரை சந்தானத்தின் ‌ஒவ்வொரு டயலாக்களும் தியேட்டரே சிரிப்பிலும், விசில் சப்தத்திலும் அதிர்கிறது! பேஷ், பேஷ்!!

செகண்ட் ஹீரோ கணேஷ் வெங்கட்ராம், மொட்டை பாஸ்கி, எப்.எம்.பாலாஜி, டீம் லீடர் விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

குஷ்பு சுந்தரின் உடையலங்காரம், கோபி அமர்நாத்தின் அழகிய ஒளிப்பதிவு, சத்யாவின் இனிய இசை எல்லாம் சேர்ந்து, சுந்தர்.சி.யின் எழுத்து இயக்கத்தில், "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தை "தியேட்டரில் போய் பார்க்கணும் ரசிகரு..." எனும் ஆவலை ஏ, பி, சி எல்லா சென்டரிலும் ஏற்படுத்தி விடும் என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "தீயா வேலை செய்யணும் குமாரு" - "செம திருப்திப்படுத்தும் எல்லோரையும் பாரு"

தில்லு முல்லு - சினிமா விமர்சனம்


கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்கு முன் 1981-ம் வருடம் வெளிவந்த ‘‘தில்லுமுல்லு’’ திரைப்படம், நீண்ட, நெடிய இடைவெளிக்குப்பின் தமிழ் சினிமா ரசிகர்கள் 32 பற்களும் தெரிய சிரித்து மகிழ, பத்ரி இயக்கத்தில் ‘மிர்சி’ சிவா நடிக்க, மீண்டும் வெளிவந்திருக்கிறது! 

‘கோல்மால்’ என்னும் இந்திப்பட ரீமேக்கான ரஜினி நடித்த ‘தில்லுமுல்லு’ சூப்பர் என்றால் ‘மிர்சி’ சிவாவின் ‘தில்லுமுல்லு’ சூப்பரோ சூப்பர் என்பது ஹைலைட்!

முருக பக்தரான பிரகாஷ்ராஜின் பிரபல மினரல் வாட்டர் கம்பெனியின் மூத்த வக்கீல் இளவரசு. ‘மிர்சி’ சிவாவின் தாய்மாமா. ஒரு கேசில் இளவரசின் வ(வா)த திறமையால் தனக்கும் தன் தங்கைக்கும் சேரவேண்டிய 5 கோடி மதிப்பிலான பூர்வீக வீட்டை இடிக்கிறார் சிவா. 

அதனால் சிவாவிற்கும், அவரது தங்கைக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளவரசு. சிபாரிசு பிடிக்காத பிரகாஷ்ராஜின் வாட்டர் கம்பெனி முக்கிய பொறுப்பு நேர்காணலுக்கு, சிவாவை தன் உறவு என காட்டிக்கொள்ளாமல் அனுப்பி வைக்கிறார். 

முருக பக்தரான பிரகாஷ்ராஜை அவரது ரூட்டிலேயே போய் கவிழ்த்து, கவர்ந்து... நாற்பதாயிரம் சம்பளத்துடன் கூடிய அந்த வேலையை கைப்பற்றும் சிவா, அதை தக்க வைத்துக்கொள்ள போடும்‌ டபுள் ஆக்டிங்கும், நான்வெஜ் பார்ட்டியான தற்காப்பு கலை தெரிந்த தம்பி ‘கங்கு-லீ’ என்னும் டிராமாவும் அவர்மீது பிரகாஷ்ராஜின் மகளும் நாயகியுமான இஷா தல்வாருக்கு ஏற்படும் காதலும் கலாட்டாவும்தான் ‘தில்லுமுல்லு’ படத்தின் லொள்ளு ஜொல்லு கதை மொத்தமும்.

முருகபக்தர் பசுபதி - கராத்தே கங்கு-லீ என இருவேறு கெட்-அப்புகளில் மிர்சி சிவா செம பில்டப் காட்டி நடித்திருக்கிறார். பலே, பலே! அதிலும் தீவிர முருகபக்தரான உங்களுக்கு பசுபதிங்கற பெயர் தமிழ் சினிமா வில்லன் மாதிரி இருக்கிறதே...?! என பிரகாஷ்ராஜ் இன்டர்வியூவுக்கு வந்த சிவாவிடம்  திடீரென  கேட்குமிடத்தில், விக்கித்துப்போகும் சிவா, ஒரு சில நொடிகளில் சமாளித்துக்கொண்டு பசுபதிங்கற பெயருக்குள்ளே முருகனின் ஆறுபடை வீடும் அடங்கியிருக்குன்னுதான் எனக்கு அந்தப்பெயரே வச்சாங்க... என்று ‘‘ப-பழனி, சு-சுவாமிமலை, மீண்டும் ப-பழமுதிர்சோலை, கடைசி தி-யில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி’’ன்னு 3 படை வீடுகளும் ஒட்டு மொத்தமா அடங்கியிருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பீல் - பீல் பண்ணிக்குங்கன்னு கொடுப்பாரு பாருங்க ஒரு விளக்கம். தியேட்டரில் அதில் ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் சீன் பை சீன் தொடர்ந்து க்ளைமாக்சிலும் தொற்றிக்கொள்வது ‘தில்லுமுல்லு’ படத்திற்கு மட்டுமல்ல, சிவாவிற்கும் பிளஸ்!

பழைய ‘தில்லுமுல்லு’வில் தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தை இதில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருக்கிறார். சவாலான பாத்திரம் என்றாலும் சபாஷ் வாங்கிவிடுகிறார் மனிதர். சிவா வீட்டில் வேலைபார்க்கும் குப்பத்து மனுஷி கோவை சரளாவை, சிவாவின் அம்மா, முருக அடிமை என நம்பி அவர் காலில் விழும் இடங்களில் பிரகாஷ்ராஜ், சிவாவை மட்டுமல்ல, தேங்காய் சீனிவாசனையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் என்றால் மிகையல்ல! 

கோவை சரளா, அலகும் பேசமுடியாத வாயுமாக கிளப்பி இருக்கிறார். கதாநாயகி இஷாதல்வார் கொஞ்சகாலம் தமிழ் சினிமாவில் கிளாமராக காலம் தள்ளுவார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா எல்லாரும் படம் முழுக்க இருந்தாலும் க்ளைமாக்சில் வரும் சந்தானம் இவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறார். 

லக்ஷ்மணனின் ஒளிப்பதிவு அழகு அருமை! எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ‘தில்லுமுல்லு’ பாடலுக்கு அவர்கள் போடும் ஆட்டமும் இளமை புதுமை! படத்தின் வசனம் மற்றும் காட்சி அமைப்புகளில் பழைய தில்லுமுல்லுவில் இருந்து முற்றிலும் புதுமையாக நிறைய யோசித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருந்தாலும் பழைய ‘ராகங்கள்-16’ பாடலை அப்படியே வைத்திருக்கும் இடத்தில் இயக்குநர் பத்ரி நின்றிருக்கிறார் - ‘வென்றிருக்கிறார்’.

வேந்தர் மூவிஸ் எஸ்.மதனின் நேரடி முதல் தயாரிப்பு ‘‘தில்லுமுல்லு’’ என்றாலும், வசூல் -  ‘‘அள்ளு... தள்ளு...’’ என்றளவில் சூப்பர் டூப்பர் ஹிட்!

குட்டிப்புலி - சினிமா விமர்சனம்ஊருக்குள் சண்டியராக சுற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய மகனான சசிகுமாருக்கு, திருமணம் செய்துவைத்தால் திருந்திவிடுவான் என்று அவனுக்கு பெண் பார்க்கிறார் அம்மா சரண்யா பொன்வண்ணன். 

ஊருக்காக அரிவாள் தூக்கி தன் உயிரை மாய்த்துவிட்டு அம்மாவை தவிக்க விட்டுச் சென்ற அப்பாவைப் போல், தானும் அடிதடி என்று சுற்றுவதால், அம்மா நிலைமை போன்று வேறு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என நினைத்து திருமணத்தை வெறுக்கிறார் சசிகுமார். இதனால் வீட்டை விட்டு வெளியேறி வெளியே தங்குகிறார். 

இந்நிலையில், அந்த ஊருக்கு புதிதாக வரும் லட்சுமிமேனன், பெண்களை அதிகமாக மதிக்கும் சசிகுமாரின் குணத்தை கண்டு அவர்மேல் காதல் கொள்கிறார். தன்னுடைய காதலை சசிகுமாரிடம் சொல்லவரும் நேரத்தில், ஏற்கெனவே சசிகுமாரிடம் அடிவாங்கிய கூட்டம் ஒன்று சசிகுமாரை வெட்டிச் சாய்க்கிறது. இதைக்கண்டதும் லட்சுமிமேனன் அதிர்ச்சியடைகிறார். 

உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சசிகுமாரை காப்பாற்ற 3 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு லட்சுமிமேனன் சசிகுமாரின் நண்பரிடம் தன்னுடைய நகையை கொடுத்து அவரை காப்பாற்ற உதவுகிறார். இதிலிருந்து மீண்டு வருகிறார் சசிகுமார். 

அரசு அதிகாரியாக வேலைசெய்யும் லட்சுமிமேனனின் அப்பாவுக்கு தனது மகள் சசிகுமாரை விரும்புவது தெரியவரவே, வேறு ஊருக்கு மாறுதலாக முடிவெடுக்கிறார். இதற்காக, அதே ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மூர்த்தியிடம் சென்று உதவி கேட்கிறார். ஆனால் மூர்த்தியோ நேர்மையான அதிகாரியை மாற்ற மனமில்லாததால், சசிகுமாரை அழைத்து அதட்டி வைக்கலாம் என நினைத்து, அவரை அழைத்துவர தனது அடியாட்களை ஏவி விடுகிறார். 

மூர்த்தியை சந்திக்க வரும் சசிகுமாரோ மூர்த்தியையும், அவரது ஆட்களையும் அடித்து துவம்சம் செய்கிறார். லட்சுமிமேனனின் அப்பாதான் மூர்த்தியை தன்மீது ஏவி விட்டார் என தவறாக நினைக்கும் சசிகுமார், லட்சுமிமேனனின் வீட்டிற்கு சென்று அவரது அப்பாவிடம் திருமணம் செய்தால் உன்னுடைய மகளைத்தான் திருமணம் செய்வேன் என சவால் விட்டு திரும்புகிறார். 

இந்நிலையில், சசிகுமாரால் அடித்து துவம்சம் செய்யப்பட்ட மூர்த்தி அவரை தீர்த்துக்கட்ட துடிக்கிறார். இறுதியில் இந்த கும்பலிடமிருந்து சசிகுமார் தப்பித்தாரா? லட்சுமிமேனனை கரம் பிடித்தாரா? தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற தாயின் கனவு நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை. 

அழகான கிராமம், அங்கு வாழும் மனிதர்களின் இயல்பான குணம் என காட்சிப்படுத்தியதில் இயக்குனர் முத்தையா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். முன்பாதியில் அடிதடி, காமெடி, செண்டிமெண்ட் என விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக, சின்ன சின்ன வசனங்களைக்கூட ரசிக்கும்படியாக அமைத்திருப்பது சிறப்புக்குரியது. முழுக்க முழுக்க பெண்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் களமிறங்கியிருக்கும் இயக்குனர் முத்தையாவுக்கு பாராட்டுக்கள்.

அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளார். குட்டிப்புலியாக சசிகுமார், தனது முந்தைய படங்களில் உள்ள அதே அலப்பறையை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார். முறுக்கு மீசை, கையில் அரிவாள், தூக்கி கட்டிய லுங்கி என பக்கா சண்டியர்போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்திற்கு படம் இவருக்கென்று வசனங்கள் உருவாக்குவார்கள் போலும். 

இந்த படத்திலும் இவர் பேசும் வசனங்கள் பலத்த கைதட்டல்களை பெறுகின்றன. சசிகுமாரின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணனுக்கு கிராமத்து அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். சசிகுமாரைவிட இவருக்குத்தான் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை சபாஷ் என்று சொல்கிற அளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார். லட்சுமிமேனன் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறார். 

சசிகுமாரை துரத்தி துரத்தி காதலிப்பது மட்டும்தான் இவருடைய வேலை. மற்றபடி படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. காமெடிக்காக ‘கனா காணும் காலங்கள்’ குழு செய்யும் ரகளை ரசிகர்களை ஆங்காங்கே உற்சாகப்படுத்தியுள்ளது. ஜிப்ரான் இசையில் ‘காத்து காத்து’, ‘அருவாக்காரன்’ பாடல்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 

சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு, வசனம், காமெடி காட்சிகள் என அனைத்தும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த குட்டிப்புலி இன்னும் கொஞ்சம் கூடுதலாக பாய்ந்திருக்கும். மொத்தத்தில் ‘குட்டிப்புலி’ பதுங்கிப் பாயும்.

நாளை ரஜினியின் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியீடு


எந்திரன் படத்தையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். 

5 மொழிகளில் தயாராகும் இப்படம் ஹாலிவுட் மற்றும் 3டி மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை எந்தவொரு படமும் இந்த தொழில் நுட்பத்தில் வெளிவராத காரணத்தினால், பெருவாரியான இந்திய ரசிகர்கள் இப்படத்தின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

அதனால் இப்படத்தை இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ள ரஜினி, படத்தின் ட்ரெய்லரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டார். 

ஆனால், ரெடி பண்ணப்பட்ட ட்ரெய்லரில் அவருக்கு திருப்தி ஏற்படாததால், அந்த முயற்சியை கைவிட்டார் ரஜினி. 

இருப்பினும் சர்வதேச அளவிலான ஏதாவது ஒரு விழாவில்தான் கோச்சடையான் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருந்து வந்தார் அவர்.

இந்த நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோச்சடையான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட ரஜினி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஆனால், சாதாரணமாக வெளியிடுகிறாரா அல்லது ஏதாவது விழாக்களில் வெளியிடுகிறாரா? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளார்களாம். ஆனால். ரஜினிதரப்பிலிருந்து இதுபற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

விஜய்யை டீலில் விட்ட விக்ரம்இதுவரை எந்த இயக்குனரின் படத்திலும் தொடர்ச்சியாக நடித்ததில்லை விக்ரம். ஆனால், தெய்வத்திருமகள் படத்தில் நடித்தவர் பின்னர் கரிகாலன் படத்தில் நடிக்கத் தொடங்கினார். 

ஆனால், அப்போது பார்த்து ஒரு உதவி இயக்குனர் தனது கதையை திருடி படமாக்குவதாக புகார் தெரிவித்தார். இதனால் டென்சன் ஆகிப்போனார் விக்ரம். அப்படத்திலிருந்தே விலகினார்.


இந்த சூழ்நிலையில், தன்னிடம் தாண்டவம் என்றொரு கதை ரெடியாக இருப்பதாக இயக்குனர் விஜய் சொன்னதால், உடனே அதில் கமிட்டாகி அவுட்டோர் சென்று விட்டார் விக்ரம். 

ஆனால் அந்த படம் தோல்வியடைந்து விட்டது. அதன்பிறகு ஷங்கரின் ஐ படத்தில் நடிக்க கமிட்டான விக்ரம், அப்படத்தில் நடிக்கும்போதே நாம் இருவரும் இன்னொரு படத்திலும் இணையலாம் என்று விஜய்யிடம் கூறியிருந்தாராம்.அதனால் தற்போது தலைவா படத்தை இயக்கியுள்ள விஜய், மீண்டும் விக்ரமை அணுகினாராம். ஆனால், விக்ரமோ, ஐ படம் முடிய இன்னும் அதிக டயம் ஆகும். 

அதனால் இப்போது நாம் இணைய சாத்தியமில்லை. எனக்காக ரெடி பண்ணிய கதையை வேறு யாராவது நடிகரை வைத்து படமாக்கி விடுங்கள் என்று எஸ்கேப்பாகி விட்டாராம். 

இதனால், இப்போது தனது மதராசப்பட்டினம் படத்தில் நடித்த ஆர்யாவைக் கொண்டு புதிய பட வேலைகளில் இறங்க தயாராகி வருகிறார் டைரக்டர் விஜய்.

தலைவா பட பாட்டு திருட்டு - கமிஷனரிடம் விஜய் புகார்தலைவா படத்தின் பாடலை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் அப்படத்தின் டைரக்டர் விஜய். 

"துப்பாக்கி" படத்திற்கு நடிகர் விஜய் "மதராசப்பட்டினம்" டைரக்டர் விஜய் இயக்கத்தில் "தலைவா" என்ற படத்தில் நடித்து வருகிறார். 

விஜய் ஜோடியாக அமலாபாலும், மற்றொரு ஹீரோயினாக இந்தி நடிகை ராகினியும் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. படத்தின் ஆடியோ ரிலீஸை அடுத்த மாதம் வெளியிட உள்ளனர். 


இந்நிலையில் "தலைவா" படத்தில் இடம்பெற்று இருக்கும் பாடல் ஒன்று இணையதளங்களில் உலா வந்து கொண்டிருப்பது "தலைவா" படக்குழுவினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. 

இதுகுறித்து படத்தின் டைரக்டர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் சென்னை கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம பேசிய டைரக்டர் விஜய், "தலைவா" படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள "வாங்கண்ணா வாங்கண்ணா..." என்ற பாடலை பாடல் வெளியீட்டுக்கு முன்பாகவே யாரோ திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

அது யார் என்பது தெரியவில்லை. எங்கள் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி கமிஷனரிடம் புகார் செய்துள்ளோம். 

இப்படம் சுமார் ரூ.60 கோடி செலவில் உருவாகியுள்ளது. விரைவில் பாடல்கள் வெளியாக இருக்கின்றன என்றார். அப்போது டைரக்டர் விஜய்யுடன், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினும் உடன் இருந்தார். 

கமல் கேரக்டரில் சந்தானம்

பாலச்சந்தர் இயக்கத்தில், ரஜினி நடித்த, "தில்லு முல்லு படம், தற்போது, ரீ-மேக் ஆகிறது. "தில்லு முல்லுவில், கமல்ஹாசனும், நட்புக்காக, வக்கீலாக ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். 

ரீ-மேக் படத்தில், ரஜினி நடித்த வேடத்தில், சிவா நடிக்க, தேங்காய் சீனிவாசன் ரோலில் பிரகாஷ் ராஜும், சவுகார் ஜானகிவேடத்தில் கோவை சரளாவும் நடிக்கின்றனர்.

ஆனால், கமல் நடித்த வேடத்துக்கு தான், யாரை நடிக்க வைக்கலாம் என்று, சில மாதங்களாக பரிசீலனை செய்தவர்கள், பின் சந்தானத்தை புக் செய்து படமாக்கி விட்டனர். 

"தில்லு முல்லுவில் ரஜினிக்கு கமல் உதவுவது போல்,  இதில் சிவாவுக்கு உதவும் வேடத்தில், நடித்துள்ளாராம், சந்தானம். "கமல் சார் நடித்தவேடத்தில் நடித்தது ரொம்ப பெருமையாக உள்ளது என்று கூறுகிறார், சந்தானம்.

இனி சந்தானம் வேண்டாம் - ஹீரோக்கள் அதிரடி முடிவு


சந்தானம் தான் வேண்டும், அவர் இருந்தால்தான் எங்களுக்கு ஒரு பேலன்சாக இருக்கும் என்று சிம்பு, ஆர்யா, கார்த்தி, சித்தார்த் உள்பட பல ஹீரோக்கள் அவரை கேட்டு வாங்கி வருகின்றனர். 

அவர் இப்போது என்னால் கால்சீட் தர முடியாது. இன்னும் 6 மாதமாகும் என்று சொன்னாலும், பரவாயில்லை கடைசி நேரத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக்கொள்ளலாம் என்று அவரை விடாமல் பிடித்து வருகின்றனர். 

அதிலும், உதயநிதி போன்ற வளர்ந்து வரும் நடிகர்கள், சந்தானத்தை தங்களுக்கு இணையாக நடிக்க வைத்து தங்கள் மைனஸை ப்ளசாக்கிக்கொண்டு வருகின்றனர். 

இதனால், முன்னணி ஹீரோக்களை விட வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு சந்தானம் முக்கியமானவராகி விட்டார். 

ஆனால், அப்படி அவருக்காக காத்திருக்கும அவர்கள், படங்களை முடித்து விட்டு தாங்கள் மாதக்கணக்கில் காத்திருந்தும் சந்தானம் வருவதற்கான சூழ்நிலை இல்லாமல் இருப்பதால் அவர் மீது வெறுப்பில் இருக்கிறார்கள். 

அதிலும், ஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானத்துடன் இணைந்து நடித்த உதயநிதி, இப்போது நடித்து வரும் இது கதிர்வேலன் காதல் படத்தின் படப்பிடிப்பு முடித்தவர் சந்தானத்துக்காகத்தான் காத்திருக்கிறாராம். 

ஒருவழியாக அவர் வந்து விடுவார் என்றாலும், இனிமேல் தான் நடிக்கிற படங்களில் அவருக்காக காத்திருக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளராம். 

தான் அழைத்த நேரத்தில் வந்து நடித்துக்கொடுத்து விட்டு செல்லும் ஒரு காமெடியனாக பார்த்து ஒப்பந்தம் செய்யப்போகிறாராம். இதே முடிவை மேலும் சில ஹீரோக்களும் எடுத்திருப்பதாக தெரிகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...