சமீபத்தில் வெளிவந்த "கலகலப்பு" படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சியும், யு.டி.வி மோஷன் பிக்சர்ஸீம் உடனடியாக இணைந்து உருவாக்கியிருக்கும் படம் தான் "தீயா வேலை செய்யணும் குமாரு..."
கதைப்படி ஹீரோ சித்தார்த்தின் குடும்பம், பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக காதல் திருமணம் செய்து கொண்டு புரட்சி பண்ணி வரும் குடும்பம். சித்தார்த்தின் அக்காக்கள் இருவரும் கூட காதல் திருமணம் புரிந்தவர்கள் தான்.
ஆனால் ஐ.டி. கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கும் சித்தார்த்துக்கு மட்டும் காதல், எட்டிக்காயாக கசக்கிறது. காரணம் சின்ன வயதிலும், பள்ளி கல்லூரி பருவங்களிலும் அவர் சக மாணவிகளிடம் வாங்கிய லவ்-பல்புகள் தான்!
இந்நிலையில் தம்பிக்கு ஒரு லவ் மேரேஜை செய்து பார்த்துவிட வேண்டும் எனும் அக்காக்களின் பேராசையாலும், அத்தான்களின் ஒத்தாசையாலும், தன் அலுவலகத்திற்கு புதிதாக பேரழகியாக வந்து சேரும் சஞ்சனா எனும் ஹன்சிகா மோத்வானியை காதலியாக அடையத்துடிக்கிறார் குமார் எனும் சித்தார்த்! அதற்காக காசுக்கு காதல் டிப்ஸ்களை வாரி வழங்கி பலரது காதல் கைகூட காரணமாக இருக்கும் மோக்கியா சந்தானத்தின் உதவியை நாடுகிறார் சித்தார்த்!
கண்டபடி காசை வாங்கிக் கொண்டு சித்தார்த்தை, காதலில் தீயா வேலை செய்ய சொல்கிறார் சந்தானம்... சந்தானத்தின் ஐடியாபடி சித்தார்த் பண்ணும் காதல் கலாட்டாக்களும், அதற்கு ஹன்சிகா அசைந்து கொடுத்தாரா? இல்லையா? என்பதுடன், இன்னும் சில கலர்புல் திருப்பங்களை கலந்து கட்டி தந்திருப்பதும் தான் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
நாயகர் சித்தார்த், ஆரம்பத்தில் அசமந்தமாக காதலில் பிடிப்பில்லாமல் கொஞ்சம் சோகமே உருவாக திரிவதும், பின் சந்தானத்தின் ஐடியாபடி லவ்வர் பாயாக மாறி ஹன்சிகாவை சுற்றி சுற்றி வந்து காதலில் கலக்குவதும், தன் காதலுக்கு வில்லனாக வரும் கணேஷ் வெங்கட்ராமை வெறும் வதந்தி மூலம் கட்டம் கட்டி தூக்குவதுமாக செம காதல் கலாட்டாக்கள் புரிந்திருக்கிறார். சித்தார்த்திற்குள் இப்படி தீயா வேலை செய்யும் ஒரு குமாரா.?! எனும் ஆச்சர்யத்தை கிளப்புகிறார் மனிதர்!!
நாயகி ஹன்சிகா, முந்தைய படங்களைக் காட்டிலும் நிறையவே ஸ்லிம் ஆகி செம செக்ஸி லுக்கில் சித்தார்த்தை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களையும் காதலிக்க தூண்டுவது மாதிரி நடித்திருப்பது "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது!
சித்தார்த், ஹன்சிகா இருவரையும் காட்டிலும் காசுக்கு, காதலுக்கு உதவும் கேரக்டரில் காமெடியனாக வரும் மோக்கியா எனும் சந்தானம் தான் இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எனும் அளவிற்கு எல்லோரது பாத்திரத்திலும் புகுந்து புறப்பட்டு கலாய்த்திருக்கிறார்.
கணேஷ் வெங்கட்ராமை பார்த்து, "அது யாருடா அது செல்வராகவன் பட செகண்ட் ஹீரோ மாதிரி செம அழகா இருப்பது..", "ஆர்யாவுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு காதல் டிப்ஸ் தந்தவன் நான்...." என்பதில் தொடங்கி சித்தார்த்தின் காதலுக்கு அவரது அக்கா-தங்கை, அத்தான்கள் என அனைவரும் உதவுவதை பார்த்து, "இது குடும்பம் அல்ல விக்ரமன் படம்..." என்று கமெண்ட் அடிப்பது வரை சந்தானத்தின் ஒவ்வொரு டயலாக்களும் தியேட்டரே சிரிப்பிலும், விசில் சப்தத்திலும் அதிர்கிறது! பேஷ், பேஷ்!!
செகண்ட் ஹீரோ கணேஷ் வெங்கட்ராம், மொட்டை பாஸ்கி, எப்.எம்.பாலாஜி, டீம் லீடர் விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
குஷ்பு சுந்தரின் உடையலங்காரம், கோபி அமர்நாத்தின் அழகிய ஒளிப்பதிவு, சத்யாவின் இனிய இசை எல்லாம் சேர்ந்து, சுந்தர்.சி.யின் எழுத்து இயக்கத்தில், "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தை "தியேட்டரில் போய் பார்க்கணும் ரசிகரு..." எனும் ஆவலை ஏ, பி, சி எல்லா சென்டரிலும் ஏற்படுத்தி விடும் என்றால் மிகையல்ல!
மொத்தத்தில், "தீயா வேலை செய்யணும் குமாரு" - "செம திருப்திப்படுத்தும் எல்லோரையும் பாரு"
0 comments:
Post a Comment