ரானாவாவது... காணாவாவது...! வடிவேலு பரபரப்பு பேட்டி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நடிகர் வடிவேலு சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தார்.


சிறிது நேரம் முதல்வரிடம் பேசிய வடிவேலு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது.


அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன்.


ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.


ரானா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ரானாவாவது... காணாவாவது... அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன்.


கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க... என்று சிரித்தபடியே கூறினார்.

வானம் படத்திற்கு யு/ஏ சான்று

சிம்பு நடிப்பில் இன்னும் சிலதினங்களில் வெளியாக இருக்கும் படம் "வானம்". மிகுந்த எதிர்பார்ப்‌பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கியுள்ளனர் தணிக்கை குழுவினர்.


தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "வேதம்" படம், தமிழில் "வானம்" என்ற பெயரில் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா, வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், சரண்யா, சந்தானம் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


கிரிஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். வி.டி.வி. புரோடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பாக்ஸ் சார்பில் வி.டி.வி.கணேஷ், ஆர்.கணேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஏப்ரல் 29ம் தேதி ரிலீசாக இருக்கிறது.


இதனிடையே இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இரண்டு காட்சிகளை மட்டும் நீக்கி விட்டு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் யு/ஏ சான்று அளித்துள்ளனர்.


அத்துடன், இதுவரை சிம்பு நடித்த படங்களை காட்டிலும் இந்தபடத்தில் வித்யாசமாகவும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தணிக்கை குழுவினர் பாராட்டி இருக்கின்றனர்.


வானம் படத்தை உலகம் முழுவதும் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி வெளியிட இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.


ஆனால் சென்னையில் மட்டும் குறள் டி.வி.கிரியேஷன்ஸ் சார்பில் சிம்புவின் அப்பா விஜய.டி.ராஜேந்தர் வெளியிட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். சென்னை உரிமையை மட்டும் டி.ஆர்., வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை.

கோ ( KO ) - விமர்சனம்

நல் அரசியலை விரும்பும் ஒரு நடுநிலை பத்திரிகை புகைப்பட கலைஞனின் பேராட்டமும், ஏமாற்றமும் அவனால் அரசியலிலும், சமூகத்திலும் ஏற்படும் மாற்றமும், ஏற்றமும்தான் "கோ" படத்தின் மொத்த கதையும்!


பிரபல வங்கியில் பெரும்பணத்தை துப்பாக்கி முணையில் கொள்ளையடித்து தப்பும் நக்சலைட் கும்பலை துரத்தி, துரத்தி படம்பிடித்து போலீஸில் சிக்க வைப்பதின் மூலம் ஒரேநாளில் பிரபலமாகிறார் தின அஞ்சல் பத்திரிகை புகைப்பட கலைஞர் அஸ்வின் எனும் ஜீவா!


இந்த காட்சியில் சுறுசுறுப்பாக ஆரம்பமாகும் அவரது துப்பறியும் பத்தி‌ரிகையாளர் புத்தி எலக்ஷன் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாஸராவ் தன் பதவி ஆசைக்காக 13வயது சிறுமியை திருமணம் செய்யும் காட்சிகளை பதிவு செய்து பத்திரிகையில் பிரசுரித்து பரபரப்பு கிளப்புவது, "சி.எம்." பிரகாஷ்ராஜ் எக்குத் தப்பாய் கேள்வி் கேட்ட நிருபரை செருப்பால் அடிப்பதை படம் எடுத்து அதே எலக்ஷன் நேரத்தில் அவருக்கு ஆப்பு வைப்பது.


எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி இந்த இரண்டுமே எலக்ஷனில் தோற்றுப்போக காரணமாக இருந்து படித்த இளைஞர்களால் புதிதாய் பிறந்த "இறகு" கட்சி ஜெயிப்பதற்கு காரணமாவது... என படம் முழுக்க பத்திரிகை புகைப்பட கலைஞராக பட்டையை கிளப்பி இருக்கிறார் ஜீவா.


அதிலும் ஆரம்பத்தில் வங்கி கொள்ளையர்கள் தப்பும் வேனை காமிராவும் கையுமாக ஜீவா ‌ச்சேஸ் செய்யும் காட்சிகள் செம த்ரில்! அதே த்ரில் க்ளைமாக்ஸில் கண்ணி வெடியும் காலுமாக தனக்கும், சமுதாயத்திற்கும் நம்பிக்கைத் துரோகம் செய்த நண்பனை தீர்த்து கட்டிவிட்டு ஜீவா தப்புவது வரை விறுவிறுப்பாக படம் பிடிக்கப்பட்டிருப்பது தான் "கோ" படத்தின் பெரிய பலம்!


ஜீவாவிற்கு ஜோடியாக புரட்சிப் பெண் பத்தி‌ரிகையாளராக வலம் வரும் ரேணுகா நாராயணன் பாத்திரத்தில் வரும் கார்த்திகா, அவரது அம்மா மாஜி நாயகி ராதா மாதிரி 16 அடி பாய ரெடி என்றாலும், படத்தில் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதால் பரபரப்பான சில காட்சிகளிலும், ஃபாரின் லொகேஷன் பாடல் காட்சிகளிலும் 8 அடி மட்டும் பாய்ந்து, கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் அம்மணி.


அடுத்தடுத்த படங்களில் 32 அடி பாய்வதற்கு வாழ்த்துக்கள்!


முன் பாதியில் நல்லவன், பின்பாதியில் வில்லனாக வரும் அஜ்மல், இன்று அரசியலில் குதிக்கத் துடிக்கும் நடிகர்களையும், அவர்களுக்கு ஓட்டு போடாதீங்க... இவங்களுக்கு போடுங்க... என கை காட்டும் சினிமா இயக்குநர்களின் ஒரிஜினல் முகங்களையும் தோலுரித்து காட்டியிருப்பது போலவே தெரிகிறது. பேஷ் பேஷ்!.


அஜ்மலும், அவரது பாத்திரமும் ஹீரோ ஜீவாவை ‌போலவே "கோ" படத்தின் பெரும் பலம்! பியா, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாஸராவ், போஸ் வெங்கட், ஜெகன், ராஜா, வனிதா என எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு!


சமூகத்திலும், அரசியலிலும் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை முதன்முதலாக அடிமட்ட தொண்டன் முதல் அரசியல்வாதிகள் வரை உணர்த்தியிருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ரொம்பவே துணிச்சல்காரர்.


அவரது துணிச்சலுக்கு பக்கபலமாக இருந்திருக்கும் எழுத்தாளர்கள் சுபா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் ரிச்சர் எம்.நாதன், படத்தொகுப்பாளர் ஆண்டனி, வெளியிட்டாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்!


மொத்தத்தில் பத்திரிகையாளர்கள் படும் பாட்டையும், அவர்களது புகழையும் பாடும் "கோ" - "ஆஹா-ஓஹோ!".

விஜய்யின் வேலாயுதம் படம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

* மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை.

*. படம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. இந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாக, புதுவிதமாக சொல்லும் படமாக இயக்கி இருக்கிறார் ராஜா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் படத்திற்கு பிறகு இப்படியொரு அண்ணன், தங்கை பாசத்தை எந்தபடத்திலும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.

* கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.

* படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். அவன் விற்பது பால். ஆனால் அன்பால், நட்பால், பிறரையெல்லாம் தன்பால் ஈர்க்கிறான்.

அவர் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது அதுபோலத்தான் ‌இந்த வேலு(விஜய்) அந்த ஊருக்கு. காதலனாக, பாசமுள்ள அண்ணனாக, ஆவேச இளைஞனாக விஜய்க்கு ஜீசல்பந்தி நடத்து வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.

* படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி. இவர்களுடன் சந்தானம் ‌காமெடியில் தன் பங்கிற்கு அசத்த இருக்கிறார்.

* படத்தில் பாலிவுட்டை சேர்ந்த இரண்டு பிரபல வில்லன்கள் உட்பட 15 வில்லன்கள் நடித்திருக்கின்றனர்.

* படத்தில் ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு திருமண காட்சியை அமைத்துள்ளனர். இந்த திருமணத்திற்காக ஊரே பந்தல்போட்டு, கோலம் போட்டு, சீரியல் லைட்கடடி, தோரணம் அமைத்து ஊர்திருவிழா போல் அலங்காரம் செய்து ஆராவரம் செய்திருப்பது பிரமாண்டமான முயற்சி. ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு ஊரே முன்னின்று நடத்தி வைத்துள்ள அந்த திருமணக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்திலும் அமைந்ததில்லை.

* வேலாயுதம் படத்திற்காக அந்த ஊரில் ஒரு கிணறு வெட்டி, அதை அன்பளிப்பாக அந்த ஊருக்கே அளித்திருக்கின்றனர்.

* நடிகர்திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் படத்தினை புதுபிரிண்ட் போட் அந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸில் போட்டு காட்டி மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது அனைவரும் படத்தில் மூழ்கிக் கிடக்க டைரக்டர் கட் சொல்ல மறந்து விட்டாராம்.

* படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை சுமார் ரூ.2 கோடி செலவில் திருமூர்த்திமலையில் படமாகியுள்ளனர். ஏற்கனவே "சிவகாசி", "போக்கிரி" படங்களில் விஜய்க்கு ஓபனிங் சாங்கிற்கு நடனம் அமைத்த அசோக்ராஜ், இப்பாட்டுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.

கிராமத்து தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற ஏராளமான ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 200கிராமத்து நடன கலைஞர்கள் நயம்காட்ட 150 வெளிநாட்டு நடனக்காரர்கள் ஆடி வெளிநாட்டுக்கலை நயம் காட்டியுள்ளனர். படத்தில் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமோ அதுபோல இந்தபாடலும் பலமடங்கு பிரம்மாண்டமாக இருக்குமாம்.

* இப்படத்தின் சூட்டிங்கில் விஜய் நடிக்க தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள்கூட லேட்டாக வந்ததில்லையாம். அவரால் ஐந்து நிமிடம் கூட சூட்டிங் தாமதமானதில்லையாம். படத்தில் ஒவ்வொரு காட்சியையும், உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து கொடுத்திருப்பதாக கூறும் இயக்குநர், விஜய்க்கு இந்தபடம் உச்சகட்ட ‌காமெடி படமாகவும் அமையும் என்று கூறுகிறார்.

* படத்தின் தூணாக ஒளிப்பதிவாளர் ப்ரியன் அமைந்திருக்கிறார். ஒவ்‌வொரு காட்சியையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம். இவர் ஏற்கனவே சாமி, திமிரு, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

* வேட்டைக்காரன் படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் இசை வ‌ரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தில் விஜய்‌யை பாடவைக்கலாம் என்று முயற்சித்து இருக்கிறார். ஆனால் கடைசியில் விஜய் ஆண்டனியை பாடும்படி செய்துவிட்டார் விஜய்.

* படத்தில் மொத்தம் 5பாடல்கள், 6சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர்.

கமல்ஹாசனின் ட்ராபிக் ஆசை

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ட்ராபிக் படம் நடிகர் கமல்ஹாசனை மிகவும் கவர்ந்துவிட்டதாம், ஆகையால் அதன் தமிழ் ரீ-மேக்கில் கமல் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


டைரக்டர் ராஜேஸ் பிள்ளை இயக்கத்தில், சீனிவாசன், ரகுமான், ரம்யா நம்பீசன், ஆசிப் அலி, அனுப் மேனன், சந்தியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ட்ராபிக். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு அல்லாமல் பலரின் பாராட்டையும் பெற்றது.


இதனிடையே இப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். ஆ‌கையால் இப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ராஜேஸ் பிள்ள‌ை இப்படத்தை தமிழிலும் இயக்க தீவிர முயற்சி காட்டி வருகிறார்.


இந்தநேரம் பார்த்து கமலே நடிக்க ஆர்வம் தெரிவித்ததால் அவரிடம் நடிக்க சம்மதமா என்று கேட்டுள்ளார் ராஜேஸ். கமலும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.


மேலும் விசா பிரச்சனையால் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விஸ்வரூபம் படம் தள்ளிபோகும் எனத் தெரிகிறது. அதற்குள் ட்ராபிக் படத்தை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் கமல்.


விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதவனுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா

இந்தியில் சக்க போடு போட்ட தானு வெட்ஸ் மானு படம் தமிழில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் மாதவனுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார்.


தமிழில் முன்னணி நடிகராக இருந்த மாதவன், இப்போது இந்தி படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.


சமீபத்தில் இந்தியில் இவரது நடிப்பில் வெளிவந்த மானு வெட்ஸ் தானு படம் சூப்பர் ஹிட்டானதுடன் வசூலில் சாதனை புரிந்தது.


அத்துடன் மாதவனுக்கு இந்தியில் ஒரு நடிகராக அங்கீகாரம் அளித்தது. இப்படத்தில் மாதவனுக்கு சமமாக கங்கனா ரனாவத்தும் நடித்து இருந்தார்.


இப்போது இந்தபடம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் மாதவனே ஹீரோவாக நடிக்கிறார். கங்கனா வேடத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இவர்கள் இருவரும் ஏற்கனவே லேசா லேசா, மன்மதன் அம்பு படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவுக்கு முதல் அடி!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது.


ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்.


இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.


தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள்.


வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.


பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே. வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.

பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தன்னுடைய நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான இஷா சர்வானியை விரைவில் திருமணம் ‌செய்ய இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பைனலில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை கைப்பற்றி 28ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை(21) வீழ்த்தினார் இந்திய வேகபந்து வீச்சாளர் ஜாகீர் கான்.

உலக கோப்பையை கைப்பற்றியது மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியது என்று மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஜாகீர். இந்த சந்தோஷத்துடன் இன்னொரு சந்தோஷமும் ஜாகீருக்கு சேர்ந்திருக்கிறது.

அது அவருடைய திருமணம். ஜாகீர் கான் தன்னுடைய நீண்டகால தோழியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான இஷா சர்வானியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி, இந்தியாவில் சுற்றுபயணத்தை முடித்து கொண்டு தங்களது நாட்டிற்கு திரும்பும் போது இருஅணி வீரர்களும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.

அப்போதுதான் ஜாகீரும், இஷா சர்வானியும் முதன்முதலில் சந்தித்து கொண்டனர். பார்த்த உடன் இருவருக்கும் காதல் வந்துவிட்டது.

அதன்பின்னர் இருவரும் ஒன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்தனர். இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்குள் தொடர்ந்த இந்த உறவு 2007ம் ஆண்டுக்கு பிறகு முறிந்தது. அதன்பின்னர் சில ஆண்டுகளாக இருவருக்குமிடையே எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தது.

இப்போது மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்கள் இருவருக்கும் தி‌ருமணம் நடைபெற இருப்பதாக இருவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹீரோவாகிய உதவி டைரக்டர்கள்

பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக இருந்த சுரேஷ் குரு, ஜோதிராஜ், சிவா, கென்னடி ஆகியோர் மைதானம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகின்றனர்.

நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் 4பேரில் ஒருவன் தன் நண்பனுக்கே துரோகம் செய்கிறார். அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து "மைதானம்" என்ற படத்தை இயக்கி இருக்கிறார் எம்.எஸ்.சக்திவேல்.

இவர் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்து இருக்கிறார்.

படம் குறித்து அவர் கூறியதாவது "ஒவ்வொரு காலகட்டத்திலும், கதையை நம்பி மட்டுமே புதுமுகங்கள் அறிமுகமாகி வெற்றி பெறுவதுண்டு. "ஒருதலை ராகம்" முதல் "சுப்பிரமணியபுரம்" வரை பல படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அதேபோல் என்னுடைய படத்தில் நான்கு புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இவர்கள் அனைவரும் பிரபல இயக்குநர்கள் அகத்தியன், பாரதி ராஜா, ராமநாரயணன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் குரு, ஜோதிராஜ், சிவா மற்றும் கென்னடி ஆகியோர் இந்தபடத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகின்றனர்.

இவர்களுடன் டைரக்டர் அகத்தியன், ரமா, ஸ்வாசிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். நா.முத்துக்குமார் பாடல்களை எழுத, சபேஷ்-முரளி இசையமைக்கிறார்கள்.

எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.டேவிட், ஜே.டி.சசீஷ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கின்றனர்.

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள காரத்தொழுவு என்ற கிராமத்தில் 300 வருட பாரம்பரியமுள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலாயுதம்

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்".

இப்படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியாவும், ஹன்சிகா மோத்வானியும் நடிக்கின்றனர். ஜெனிலியா பத்திரிகையாளராகவும், ஹன்சிகா கிராமத்து பெண்ணாகவும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் ரூ.1.25கோடியில் 1000நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்.

அத்துடன் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரையும் பயன்படுத்தி இருக்கிறார் ராஜா. இப்படத்தின் 90சதவீத சூட்டிங் பணிகள் நிறைவடைந்து விட்டது.

தற்போது இறுதிகட்ட சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் பிறந்தநாளன்று படம் திரைக்கு வருகிறது.

விஜய் அரசியலுக்கு வரமாட்டார் - எஸ்.ஏ.சி

எனது மகன் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனரான எஸ்.ஏ.சி., கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.


அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படி பல்டி அடித்திருக்கிறார். விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்; இப்போதைக்கு விஜய் அரசியலுக்கு வர மாட்டார்; விஜய்‌ அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்;


விஜய்யால் அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும்... என்றெல்லாம் அவ்வப்போது வடிவேலு காமெடி போலவே வருவார்... ஆனா வர மாட்டார்... என்று கூறி வரும் சந்திரசேகர் இப்போது அடித்திருக்கும் பல்டி, விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்பதுதான்.


அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எங்கள் இயக்க தொண்டர்கள் அசுர வேகத்தில் அ.தி.மு.க. அணிக்கு வேலை செய்கிறார்கள்.


ஆனால், தற்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் வாய்ப்பு இல்லை. அதேபோல விஜய் அரசியலுக்கு வர மாட்டார். விஜய் அரசியலுக்கு வருவதற்காக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.


ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தான் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் விஜய் நேரடிப் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமாக இருக்கிறது.


நான் தி.மு.க. ஆதரவாளராக இருந்தேன். எனக்கே வெறுப்பு வந்து விட்டது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல், விலைவாசி உயர்வு, மின் தடை ஆகியவை மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது.


அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். வாரிசுகள் அந்தந்த தொழிலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அந்த தொழிலையே கபளீகரம் செய்வது தான் தவறு, என்றார்.

வானம் படத்தின் பஞ்சபூதங்கள்

சிம்பு நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "வானம்" படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் நடித்திருப்பவர்களை பஞ்சபூதங்கள் என்று கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ்.


தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட்டான "வேதம்" படம் தமிழில் "வானம்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், சரண்யா, சோனியா அகர்வால் என்று ஒரு நட்சத்‌திர பட்டாளமே நடித்துள்ளது.


வேதம் படத்தை இயக்கிய க்ரிஷ், வானம் படத்தையும் இயக்கி இருக்கிறார். வி.டி.வி. சார்பில் கணேஷ் தயாரிக்கிறார். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே வானம் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களை பஞ்சபூதங்கள் என்று கூறி வர்ணிக்கிறார் தயாரிப்பாளர் ‌கணேஷ்.


அதன்படி காதலுக்காக எதையும் செய்யும் கேபிள் ராஜாவாக வரும் சிம்புவை(ஆகாயம்) என்றும், பாடகர் பரத் சக்கரவர்த்தியாக வரும் பரத்தை(காற்று) என்றும், பாலியல் தொழிலாளி சரோஜாவாக வரும் அனுஷ்காவை(நீர்) என்றும், பொதுமக்கள் நலனுக்காக பாடுபடும் பிரகாஷ்ராஜ்யை(நெருப்பு) என்றும், வறுமையை போக்க பிழைப்பு தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் சரண்யாவை(பூமி) என்கிறார்.


பஞ்சபூதங்கள் போல், இவர்கள் ஐந்து பேரும் தான் படம் முழுக்க பயணித்து தங்களது வாழ்வில் எப்படி வெற்றி பெறுகின்றனர் என்பதை மிக அழகாக படமாக்கி இருக்கும் படம் தான் வானம். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.1.25கோடியில் வேலாயுதம் படத்தின் ஓபனிங் சாங்

விஜய் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் "வேலாயுதம்" படத்தின் ஓபனிங் சாங் ரூ.1.25கோடியில் சுமார் 1000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.


"காவலன்" படத்திற்கு அடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானியும், ஜெனிலியாவும் நடித்து வருகின்றனர்.


விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். ஜெயம், எம்.குமரன் சன்/ஆப் மகாலெட்சுமி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் ராஜா இப்படத்தை இயக்கி வருகிறார்.


இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் டாம் டெல்மரை வைத்து சண்டைக்காட்சியை படமாக்கினர்.


இந்த சண்டைகாட்சியை முடித்த கையோடு, படத்தின் ஓபனிங் சாங்கையும் எடுத்துவிட்டார் ராஜா. "புரியாத சொல்லுக்குள்..." என்று ஆரம்பிக்கும் இப்படத்தின் ஓபனிங் சாங்கிற்காக விஜய்யுடன் சேர்ந்து சுமார் 1000 நடன கலைஞர்கள் ஆடியுள்ளனர். இந்த ஒரு பாட்டை மட்டும் ரூ.1.25 கோடியில் மிக பிரம்மாண்டமாக எடுத்து இருக்கிறார் டைரக்டர் ராஜா.


இதனிடையே படத்தின் ஆடியோ எப்போது ரிலீசாகும் என்று ஏங்கி போய் இருக்கின்றனர் ரசிகர்கள். ஏற்கனவே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 4பாடல்களை கம்போசிங் பண்ணி முடித்துவிட்டார். இதனால் இம்மாதம் ஏப்ரல் 31ம் தேதி ஆடியோ ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பிறந்தநாளன்று படம் ரிலீசாகிறது.

தீபாவளிக்கு ரிலீசாகிறது நண்பன்

பொதுவாக ஷங்கர் படம் என்றாலே முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்போது இவரது இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் "நண்பன்" படம் ஓராண்டிற்கு உள்ளே முடியும் என்றும், இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.


இந்தியில் சக்கபோடு போட்ட "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வருகின்றனர்.


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஷங்கர் எப்பவும் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுப்பார். ஆனால் நண்பன் பட சூட்டிங்கோ ஜெட் வேகத்தல் சென்று கொண்டு இருக்கிறது.


கடந்த மாதம் தான் ஊட்டியில் தனது சூட்டிங்கை துவக்கினார். ஆனால் அதற்குள் 2கட்ட சூட்டிங்கை முடித்துவிட்டார். இன்னும் சிலதினங்களில் மூன்றாம் கட்ட சூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறார். அத்துடன் படத்திற்கான இசையமைப்பு வேலையும் வேகமாக நடைபெற்று வருகிறது.


நண்பன் படத்திற்காக தற்போது லண்டனில் மியூசிக் கம்போசிங் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஹாரிஸ், இரண்டு பாடல்களை கம்போசிங் பண்ணி முடித்துவிட்டார். விரைவில் மீதி பாடல்களையும் முடிக்க இருக்கிறார்.


இதனால் படத்தின் ஆடியோவை செம்படம்பர் மாதம் வெளியிட முடிவுசெய்துள்ளனர். அத்துடன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஏப்ரல் 14ல் தெய்வத்திருமகன் இசை வெளியீடு

டைரக்டர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் தெய்வத்திருமகன் படத்தின் இசை வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியீடப்படுகிறது.


கிரீடம், மதராசப்பட்டினம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் விஜய் அடுத்து சீயான் விக்ரம்மை வைத்து "தெய்வத்திருமகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.


இப்படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலா பால் ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தை முடித்து பின்னரும், படத்திற்கான தலைப்பு வைப்பதில் ஏகப்பட்ட பிரச்சனை. ஆரம்பத்தில் தெய்வமகன் என்று பெயரிடப்பட்ட இப்படம் பின்னர் பிதாவாக மாறியது.


பின்னர் அந்த பெயரும் யாரோ பதிவு செய்து வைக்க அதையும் மாற்றி இறுதியில் தெய்வத்திருமகன் என்று பெயரிட்டனர்.


இப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து வருகிற மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


இவர் ஏற்கனவே விஜய்யின் கிரீடம், மதராசப்பட்டினம் படத்திற்கும் இசையமைத்து இருந்தார். தமது முந்தைய படங்கள் போலவே தெய்வத்திருமகன் படத்தின் பாடலும் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி

சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங்குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தியா கூறியுள்ளார்.


அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்.


நடிகர் வடிவேலு, விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தை கட்சி பாகுபாடு இல்லாமல் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்து சிரிக்கிறார்கள்.


வடிவேலுவின் பிரசாரம் மக்களை எளிதில் சென்று வருவதாலோ என்னவோ ஆளும்கட்சி தொலைக்காட்சிகளில் வடிவேலு பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.


இதுஒருபுறம் இருக்க, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விந்தியா பிரசாரத்தில் குதித்துள்ளார்.


நேற்று அவர் ‌பிரசாரத்தின்போது பேசுகையில், வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது. திமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம்.


இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை. மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன்.


கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு, என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...