விஜய் அரசியலுக்கு வரமாட்டார் - எஸ்.ஏ.சி

எனது மகன் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனரான எஸ்.ஏ.சி., கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.


அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படி பல்டி அடித்திருக்கிறார். விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்; இப்போதைக்கு விஜய் அரசியலுக்கு வர மாட்டார்; விஜய்‌ அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்;


விஜய்யால் அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும்... என்றெல்லாம் அவ்வப்போது வடிவேலு காமெடி போலவே வருவார்... ஆனா வர மாட்டார்... என்று கூறி வரும் சந்திரசேகர் இப்போது அடித்திருக்கும் பல்டி, விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்பதுதான்.


அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எங்கள் இயக்க தொண்டர்கள் அசுர வேகத்தில் அ.தி.மு.க. அணிக்கு வேலை செய்கிறார்கள்.


ஆனால், தற்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் வாய்ப்பு இல்லை. அதேபோல விஜய் அரசியலுக்கு வர மாட்டார். விஜய் அரசியலுக்கு வருவதற்காக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.


ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தான் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் விஜய் நேரடிப் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமாக இருக்கிறது.


நான் தி.மு.க. ஆதரவாளராக இருந்தேன். எனக்கே வெறுப்பு வந்து விட்டது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல், விலைவாசி உயர்வு, மின் தடை ஆகியவை மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது.


அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். வாரிசுகள் அந்தந்த தொழிலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அந்த தொழிலையே கபளீகரம் செய்வது தான் தவறு, என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...