கோ ( KO ) - விமர்சனம்

நல் அரசியலை விரும்பும் ஒரு நடுநிலை பத்திரிகை புகைப்பட கலைஞனின் பேராட்டமும், ஏமாற்றமும் அவனால் அரசியலிலும், சமூகத்திலும் ஏற்படும் மாற்றமும், ஏற்றமும்தான் "கோ" படத்தின் மொத்த கதையும்!


பிரபல வங்கியில் பெரும்பணத்தை துப்பாக்கி முணையில் கொள்ளையடித்து தப்பும் நக்சலைட் கும்பலை துரத்தி, துரத்தி படம்பிடித்து போலீஸில் சிக்க வைப்பதின் மூலம் ஒரேநாளில் பிரபலமாகிறார் தின அஞ்சல் பத்திரிகை புகைப்பட கலைஞர் அஸ்வின் எனும் ஜீவா!


இந்த காட்சியில் சுறுசுறுப்பாக ஆரம்பமாகும் அவரது துப்பறியும் பத்தி‌ரிகையாளர் புத்தி எலக்ஷன் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாஸராவ் தன் பதவி ஆசைக்காக 13வயது சிறுமியை திருமணம் செய்யும் காட்சிகளை பதிவு செய்து பத்திரிகையில் பிரசுரித்து பரபரப்பு கிளப்புவது, "சி.எம்." பிரகாஷ்ராஜ் எக்குத் தப்பாய் கேள்வி் கேட்ட நிருபரை செருப்பால் அடிப்பதை படம் எடுத்து அதே எலக்ஷன் நேரத்தில் அவருக்கு ஆப்பு வைப்பது.


எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி இந்த இரண்டுமே எலக்ஷனில் தோற்றுப்போக காரணமாக இருந்து படித்த இளைஞர்களால் புதிதாய் பிறந்த "இறகு" கட்சி ஜெயிப்பதற்கு காரணமாவது... என படம் முழுக்க பத்திரிகை புகைப்பட கலைஞராக பட்டையை கிளப்பி இருக்கிறார் ஜீவா.


அதிலும் ஆரம்பத்தில் வங்கி கொள்ளையர்கள் தப்பும் வேனை காமிராவும் கையுமாக ஜீவா ‌ச்சேஸ் செய்யும் காட்சிகள் செம த்ரில்! அதே த்ரில் க்ளைமாக்ஸில் கண்ணி வெடியும் காலுமாக தனக்கும், சமுதாயத்திற்கும் நம்பிக்கைத் துரோகம் செய்த நண்பனை தீர்த்து கட்டிவிட்டு ஜீவா தப்புவது வரை விறுவிறுப்பாக படம் பிடிக்கப்பட்டிருப்பது தான் "கோ" படத்தின் பெரிய பலம்!


ஜீவாவிற்கு ஜோடியாக புரட்சிப் பெண் பத்தி‌ரிகையாளராக வலம் வரும் ரேணுகா நாராயணன் பாத்திரத்தில் வரும் கார்த்திகா, அவரது அம்மா மாஜி நாயகி ராதா மாதிரி 16 அடி பாய ரெடி என்றாலும், படத்தில் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதால் பரபரப்பான சில காட்சிகளிலும், ஃபாரின் லொகேஷன் பாடல் காட்சிகளிலும் 8 அடி மட்டும் பாய்ந்து, கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் அம்மணி.


அடுத்தடுத்த படங்களில் 32 அடி பாய்வதற்கு வாழ்த்துக்கள்!


முன் பாதியில் நல்லவன், பின்பாதியில் வில்லனாக வரும் அஜ்மல், இன்று அரசியலில் குதிக்கத் துடிக்கும் நடிகர்களையும், அவர்களுக்கு ஓட்டு போடாதீங்க... இவங்களுக்கு போடுங்க... என கை காட்டும் சினிமா இயக்குநர்களின் ஒரிஜினல் முகங்களையும் தோலுரித்து காட்டியிருப்பது போலவே தெரிகிறது. பேஷ் பேஷ்!.


அஜ்மலும், அவரது பாத்திரமும் ஹீரோ ஜீவாவை ‌போலவே "கோ" படத்தின் பெரும் பலம்! பியா, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாஸராவ், போஸ் வெங்கட், ஜெகன், ராஜா, வனிதா என எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு!


சமூகத்திலும், அரசியலிலும் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை முதன்முதலாக அடிமட்ட தொண்டன் முதல் அரசியல்வாதிகள் வரை உணர்த்தியிருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ரொம்பவே துணிச்சல்காரர்.


அவரது துணிச்சலுக்கு பக்கபலமாக இருந்திருக்கும் எழுத்தாளர்கள் சுபா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் ரிச்சர் எம்.நாதன், படத்தொகுப்பாளர் ஆண்டனி, வெளியிட்டாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்!


மொத்தத்தில் பத்திரிகையாளர்கள் படும் பாட்டையும், அவர்களது புகழையும் பாடும் "கோ" - "ஆஹா-ஓஹோ!".

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...