விஸ்வரூபம்-2 - தீபாவளிக்கு ரிலீஸ்


விஸ்வரூபம் வெற்றியை தொடர்ந்து, கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம்-2 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. 

பல்வேறு தடைகளை கடந்து கமலின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் விஸ்வரூபம். 

இப்படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் தொடரும் என சொல்லியிருந்தார் கமல். அதன்படி விஸ்வரூபம்-2 பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. 

கமலே இயக்கி, நடித்து வரும் இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட நடிகர்-நடிகையரே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் ஷூட்டிங்கை தற்போது தாய்லாந்தில் முகாமிட்டு படமாக்கி வருகிறார் கமல். தாய்லாந்தை தொடர்ந்து பாங்காக்கிலும், இறுதிகட்ட படப்பிடிப்புகள் டில்லியிலும் நடைபெற இருக்கிறது. 

அதனைத்த‌ொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெறுகிறது. இறுதியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

ஹன்சிகாவை அதிர வைத்த புதுவரவு நடிகை


தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகை ஹன்சிகாதான். அதோடு முன்னணி நடிகர்களின் படங்களாகவும் வைத்திருக்கிறார். 

அதனால் இப்போதைக்கு தன்னை வீழ்த்த நடிகைகள் இல்லை என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது. 

ஆனால், புதிதாக கேரளத்தில் இருந்து வந்துள்ள லட்சுமிமேனன் வேகவேகமாக படங்களை கைப்பற்றியிருப்பதால், மனதளவில் அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஹன்சிகா.

அதனால், லட்சுமிமேனனைப்பற்றிய செய்திகளை தனது உதவியாளர்கள் மூலம் திரட்டி வருகிறாராம் ஹன்சிகா. 

அதில் கும்கி, சுந்தரபாண்டியன், படங்களுக்குப்பிறகு இப்போது அவர் கைவசம் 4 படங்கள் உள்ளன், விஷால், சித்தார்த், சசிகுமார், விமல், கெளதம் என பேசப்படும் நடிகர்களின் படங்களாக வைத்திருக்கிறார். 

இத்தனைக்கும் துளியும கவர்ச்சி காட்டாமல் அவரது கால்சீட் பாக்கெட் நிரம்பி உள்ளது என்றும் ஹன்சிகாவிடம் தெரிவித்துள்ளர்களாம்.

இதனால், சேட்டையைப்போன்று நடித்து வரும் படங்கள் ஊத்திக்கொண்டால், அடுத்து புதிய படங்களுக்கு வழியில்லாத நிலை தனக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் இருக்கும் ஹன்சிகா, தமிழில் நடித்தபடியே தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று இப்போது புதிய தெலுங்கு படங்களுக்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளாராம்.

ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்


மலையாளத்தில் கிரிக்கெட் வீரர்களை மையப்படுத்தி உருவாகி வந்த மதுவில்லினட்டம்வரே என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வந்தார் இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த். 

ஆனால் இப்போது அவர் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பதால், அப்படத்தில் இருந்த அவர் நடித்த காட்சிகளை நீக்கியுள்ளனர்.

ஆனால், அதே மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் சூதாட்டத்தை மையமாக வைத்து தற்போது ஒரு படம் தயாராகிறது. 

அந்த படத்துக்கு கிரிக்கெட் என்றும் பெயர் வைத்து விட்டனர். அதில் முக்கிய கதாபாத்திரம் ஸ்ரீசாந்த் சம்பந்தப்பட்டதுதானாம். 

அவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்த கிரேஸ், அவர் ஆட்டத்தில் காட்டிய வேகம் தொடங்கி கடைசியில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கை எப்படியெல்லாம் வீணடித்து விட்டார் என்ற கோணத்தில் கதை செல்கிறதாம்.

அதோடு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் இந்த கதையில் திருத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்களாம். 

2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு


இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். கடந்த சட்டபை தேர்தல் பிரசாரத்தில் திமுக சார்பில் களமிறக்கப்பட்ட வடிவேலு, தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். 

இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, இப்போது யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. 

படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார். இந்தப் படத்துடன் மேலும் 3 படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறாராம்..

நேரம் - சினிமா விமர்சனம்


"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "பீட்சா", "சூது கவ்வும்" படங்களின் வரிசையில் வித்தியாசமான கதையம்சத்தில் விறுவிறுப்பாக வெளிவந்திருக்கும் படம் தான் "நேரம்". 

என்ன ஒரே மாற்றம்.? விஜய் சேதுபதிக்கு பதில் இதில் நிவின் எனும் புதுமுகம் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கிறார் அவ்வளவே!

அமெரிக்காவில் சின்னதாக ஒரு பாம் வெடிக்க (குண்டு அல்ல...), இந்தியாவில் "நேரம்" ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய ஐ.டி. கம்பெனி வேலை பறிபோகிறது. 

தங்கையின் திருமணத்திற்காக ஊரையே தன் வட்டித் தொழிலால் கட்டி மேய்க்கும் வட்டி ராஜா எனும் சிம்ஹாவிடம் கைநீட்டி கொஞ்சம் பணம் அதிக வட்டிக்கு வாங்குகிறார். கூடவே சின்ன வயது முதல் கூட படித்த வேணி எனும் நாயகி நஸ்ரியா நசிம்மை காதலிக்க தொடங்குகிறார். 

முதலில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளும் வேணியின் அப்பா தம்பிராமையா, நிவினுக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். 

வேணி, வெற்றியுடன் ஓடிப்போய் வாழ வீட்டை விட்டு கிளம்புகிறார். அதேநாளில் வட்டிராஜாவுக்கு ஐம்பதாயிரம் வட்டி பணத்தை செட்டில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வெற்றி!

வீட்டில் இருந்து வெளியேறிய வேணி, வெற்றிக்காக வெயிட் பண்ணும்போது பட்டபகலில் தனது தங்க செயினை வழிப்பறி கொள்ளையர்களிடம் பறி கொடுக்கிறார். 

அதே நேரம் வெற்றியும், நண்பரிடம் வட்டிராஜாவுக்கு கொடுக்க வாங்கி வந்த ஐம்பதாயிரம் பணத்தை பிட்பாக்கெட் பேர்வழிகளிடம் பறிகொடுத்துவிட்டு பரிதவித்து போகிறார். 

இந்நிலையில் ஊரில் இருந்து வெற்றியை தேடி வரும் அவரது தங்கை புருஷன், வரதட்சனை பணத்தின் மீதியை பிஸினஸ் செய்யப்போகிறேன் பேர்வழி... என வாங்கி போக வருகிறார். 

வேணியின் அப்பா போலீஸ்க்கு போகிறார். காத்திருக்கும் காதலி, தேடும் போலீஸ், டவுரி மீதியை கேட்கும் மச்சான், வட்டி ராஜாவின் கெடு என ஏகப்பட்ட சிக்கலில் தனது கெட்ட நேரத்தால் சிக்கி தவிக்கும் ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு நல்ல நேரம் பிறந்ததா?, இழந்ததை எல்லாம் மீட்டாரா? என்பது நேரம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

"உன்னை கட்டிக்கப்போறவ ரொம்ப கஷ்டப்படுவா... என எங்கம்மாவும், ப்ரண்ட்ஸூம் சொல்லுவாங்க, கஷ்டப்பட வர்ரியா..." என தன் காதலை நாசுக்காக வெளிப்படுத்தும் வெற்றி எனும் நிவின், வட்டிராஜாவிடம் பணம் வாங்க போன இடத்தில் அவர் பண்ணும் சேட்டைகளால் காட்டு முகபாவனைகள், தேர்ந்த நடிகர்களையே திக்குமுக்காட செய்துவிடும் ரகம்! மனிதர் முதல் படத்திலேயே பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து விடுகிறார். கீப்இட் அப் நிவின்!

நாயகர் மாதிரியே, நாயகி வேணியாக வரும் நஸ்ரியா நசீமும் நடிப்பிலும் சரி, குடும்பபாங்கிலும் சரி செம சூப்பர்ப்! அம்மணி அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கிளாமர் காட்டினார் என்றால் தமிழ் சினிமாவின் நம்பர்-ஒன் இடத்திற்கு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

வில்லன் வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, செம சூப்பர்ப்பா! கழுத்து நிறைய தங்கசங்கிலிகளும், கூட இரண்டு கருப்பு சிவப்பு அடியாட்களுமாக படு பந்தாவாக வட்டி வசூலிக்கும் இவரது பாணியே தனி. டச்போனை ஆப்ரேட் செய்யத்தெரியாமல் "பத்தாயிரம் ரூபாய்க்கு போன் பட்டன் இல்லை... வேஸ்ட்!" என அவர் அலுத்துக் கொள்ளும் ஒரு காட்சி போதும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது!

வேணியின் அப்பா தம்பிராமையா, எஸ்.ஐ., கட்டகுஞ்சாக வரும் ஜான் விஜய், நாசர், அவரது தம்பி மாணிக்கம் அலைஸ் மாணிக் - அனந்த்நாக், லைட்ஹவுஸ் - ரமேஷ் திலக், காளான் - ஆனந்த், ஜான் - சபரீஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் பலே சொல்ல வைக்கும் படைப்புகள்!

அதேநேரம் ஊரிலேயே ஒரே ஒரு வட்டிக்காரர் இருப்பது மாதிரியும், அவரிடமே ஹீரோ, ஹீரோவிடம் பிக்பாக்கெட் அடிக்கும் ஆசாமிகள், ஹீரோவுக்கு வேலை தரும் நாசரின் தம்பி என எல்லோரும் அநியாய வட்டிக்கு கடன் வாங்கியிருப்பது, எஸ்.ஜான் விஜய்க்கு கட்ட குஞ்சு என வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கும் இயக்குனர், நாயகியின் அப்பா தம்பி ராமைய்யாவுக்கு சரவணன் என சாதாரணமாக அவரது வயதுக்கு பொருந்தாத பெயரை சூட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைபாடு இருந்தாலும், டைட்டில் கார்டு போடும் இடத்தில் விதவிதமான கை கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், காலமானிகள் என ஆரம்பத்திலேயே நம்மை வாய்பிளக்க வைக்கும் இயக்குனர், அடுத்தடுத்த காட்சிகளிலும் நமது திறந்த வாயை மூட விடாமல் இறுதிவரை அழைத்து செல்வது சிலிர்ப்பு!

ராஜேஷ் முருகேஷனின் மிரட்டும் பின்னணி இசையும், ஆனந்த் சி.சந்திரனின் அசத்தும் ஒளிப்பதிவும், பிரதீப்பாலாரின் டைமிங் வசனங்களும், அல்போன்ஸ் புத்ரனின் எழுத்து - இயக்கத்தில் "நேரத்தை - நல்ல நேரம்" ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "நேரம்" - ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இப்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் "நல்ல நேரம்!"

ஸ்ருதிஹாசனை கவர்ந்த கிரிக்கெட் வீரர்

பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகை என்ற பட்டியலில் இடம் பிடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். 

ஏற்கனவே சித்தார்த்துடன் பழகி வருவதாக ஆந்திராவில் பற்றி எரிந்தது. அதையடுத்து, இப்போது மெக்ஸிம் இதழுக்கு படுகவர்ச்சியான போஸ் கொடுத்தது, டி டே படத்தில் விலைமாதுவாக நடிப்பது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 

இந்தநிலையில் தற்போது, கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதி நெருங்கி பழகி வருவதாக செய்திக்ள பரவியுள்ளன. 

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் ரெய்னா. சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான நடந்த போட்டியில் 52 பாலில் 99 ரன்களை குவித்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த ரெய்னா, ஸ்ருதியையும் கவர்ந்துவிட்டாராம். 

அதையடுத்து, ரெய்னாவை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தினார் ஸ்ருதி. அப்படி தொடங்கிய அவர்கள் நட்பு இப்போது இன்னும் வளர்ந்துவிட்டதாம். இருவரும் அடிக்கடி சந்தித்து மனம் விட்டு பேசி வருகிறார்களாம். 

6 கெட்டப்பில் அசத்தும் ராகவா லாரன்ஸ்


முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனா படத்தை இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ் இப்போது மூன்றாம் பாகத்தை தொடங்கிவிட்டார். 

முதல் இரண்டு பாகங்களையும் விட மெகா ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக ஒரு வருடமாக கதை பண்ணி வந்த லாரன்ஸ், இப்போது படப்பிடிப்பு நடத்த ஆயத்தமாகி விட்டார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக முதலில் லட்சுமிராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் அவரை நீக்கிவிட்டு டாப்சியை புக் பண்ணிய லாரன்ஸ், இசையமைப்பாளராக முதலில் விஜய் ஆண்டனியிடம் பேசியிருந்தவர் இப்போது அவரையும் நீக்கி விட்டு எதிர் நீச்சல் படத்துக்கு ஹிட் பாடல்களைக்கொடுத்த அனிருத்தை புக் பண்ணியுள்ளார்.

மேலும் முதல் இரண்டு பாகங்களை விட இந்த படத்தை அதிக திகில் காட்சிகளுடன் படமாக்கவிருக்கும் லாரன்ஸ், இப்படத்துக்காக 6 விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறாராம். அதனால் இப்படம் மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறதாம். 

தனுஷை நெகிழ வைத்த விஜய்


துப்பாக்கி படத்தின் வெற்றி விஜய் வட்டாரத்தை மேலும் பரபரப்படையச் செய்திருக்கிறது. அதோடு, அப்படத்தில் நடித்தமைக்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. 

அதில் ஒன்று விஜய் அவார்ட்ஸ். இந்த விருதினை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றார் விஜய். அப்போது விருதினை வாங்க மேடைக்குச்சென்ற அவர், இந்த விருதினை சிறந்த நடிகருக்காக எனக்கு அளித்திருக்கிறார்கள். 

ஆனால், என்னைவிட ஒரு சிறந்த நடிகர் எனக்கு முன்னாடி அமர்ந்திருககிறார் என்று தனுஷை சுட்டிக்காட்டி சொன்னார். விஜய்யின் இந்த பேச்சைக்கேட்டு அரங்கம் நிறைந்த கரவொலி எழுந்தது.

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் விஜய்யே மேடையில் தன்னை சிறந்த நடிகர் என்று சொன்னதைக்கேட்டு மனமுருகிப்போனார் தனுஷ். 

அதையடுத்து உடனடியாக தனது டுவிட்டரில், விஜய் சாரின் பேச்சு ரொம்ப உயர்வானது. என்றைக்குமே என்னைவிட அவர்தான் சிறந்த நடிகர். உயர்ந்த நடிகர் என்று பதிவு செய்துள்ளார் தனுஷ். 

மேலும், இந்த ஆண்டு எனக்கு ரெண்டு விருது கிடைத்துள்ளது. ஒன்று விஜய் விருது, இன்னொன்று விஜய் சாரின் பாராட்டு விருது என்றும் பதிவு செய்திருக்கிறார்.

அம்மாவிடம் துடப்பக்கட்டையால் அடி வாங்கிய நடிகை


தமிழில் ஜெயம்ரவியுடன் தாம்தூம் என்ற படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத். தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் இவர், மும்பையில் அன்னையர் தினத்தையொட்டி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். 

அப்போது அங்கு வந்த அனைவரும் அவரவர் அம்மாவைப்பற்றி பேச, கங்கணாவும் தனது அம்மாவைப்பற்றி பேசினாராம்.

அப்போது, எல்லா அம்மாக்களும் தங்கள் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்குமபோது தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் என் அம்மா அப்படி செய்ததில்லை. 

சமஸ்கிருத ஆசிரியையான அவர் ரொம்ப கண்டிசனானவர். பள்ளியில் மாணவ-மாணவியர் அவரைப்பார்த்து பயப்படுவது போலவே நானும் பயப்படுவேன்.

மேலும், வீட்டு வேலைகளான சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது என அனைத்து வேலைகளையும் நான் செய்திருக்கிறேன்.அந்த வகையில் நடிப்பைத்தவிர அனைத்தையும் என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால் ரொம்ப கோபக்காரரான அவர், நான் தவறு செய்கிறபோது பலமுறை என்னை துடப்பக்கட்டையால் அடித்திருக்கிறார் என்று தனது கடந்த காலத்தைப்பற்றி பேசிய கங்ணா ரனாவத், என் அம்மா புண்ணியத்தால் எனக்கு சினிமாவில் பிழைப்பு இல்லையென்றால், வீட்டு வேலை செய்தாவது பிழைத்துக்கொள்வேன் என்று ஜாலியாக பேசி கைதட்டல்களை அள்ளிக்கொண்டாராம்.

டெபாசிட் இழக்காத நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,


அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் நாகராஜ சோழன் தனது செல்வாக்கையும், முதல் மந்திரியின் ஊழல் மற்றும் கொலை, கொள்ளைகளை மிரட்டி, அரசியலில் துணை முதல் மந்திரி பதவியை பெற்றுக் கொள்கிறார். 

ஏற்கெனவே, கொலை, கொள்ளை, ஊழலில் திளைத்திருந்த நாகராஜ சோழனுக்கு துணை முதல் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும் கூடுதலாக ஆட்டம் போடுகிறார். 

வெளிநாட்டு வியாபாரிகள் காட்டுக்குள் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கும் நாகராஜ சோழன், அவர்களுக்காக காட்டை அழித்து சாலை அமைத்து தர சம்மதம் தெரிவிக்கிறார். 

அதற்காக வனத்துறை அதிகாரிகள் கையொப்பம் அளிக்க நாகராஜ சோழன் உத்தரவிட, ஆனால் வனத்துறை அதிகாரிகளோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

இதனால் கோபமடைந்த நாகராஜ சோழன் அவர்களை கொல்ல முடிவெடுக்கிறார். நாகராஜ சோழன் செய்யும் அனைத்து தில்லுமுள்ளுகளுக்கும் மணிவண்ணனும் உடந்தையாக இருந்து வருகிறார். 

மறுமுனையில், சமூக சேவகரான சீமான், தனது அக்கா மற்றும் அவரது மகள்களுடன் ஒரு மலைக் கிராமத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது அக்கா மகளான கோமல் சர்மாவுக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் முடிவெடுக்கப்படுகிறது. கோமல் சர்மா அதே மலைக் கிராமத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 

வனத்துறை அதிகாரிகளை கொல்ல நாகராஜ சோழனின் அடியாட்கள் இவர்கள் இருக்கும் கிராமத்திற்குள் நுழைகிறார்கள். வனத்துறை அதிகாரிகளை ஓட ஓட விரட்டி நடு ரோட்டில் படுபயங்கரமாக வெட்டிக் கொல்கிறார்கள். இதை பார்க்கும் கோமல்சர்மா விரக்தியாகி தனக்கு திருமணம் வேண்டாம் என உதறித் தள்ளுகிறார். 

இந்த கொலை குறித்து விசாரணை நடத்த டெல்லியிலிருந்து சிபிஐ வருகிறது. சிபிஐ இந்த கொலைக்குண்டான ஆதாரத்தை திரட்டுகிறது. இந்நிலையில், தன்னை எதிர்த்த வனத்துறை அதிகாரிகளை தீர்த்துக் கட்டிய நாகராஜ சோழன், காடுகளை அழிக்க தீவிரமாகிறார். ஆனால், அந்த காடுகளில் காலங்காலமாக வாழும் பூர்வக்குடி மக்கள், காடுகளை அழிக்க விடமாட்டோம் என போராட்டம் நடத்துகின்றனர். இவர்களுக்கு சீமானும் ஆதரவாக இருக்கிறார். 

இறுதியில் நாகராஜ சோழன் காட்டை அழித்து தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி கண்டாரா? சீமானின் போராட்டம் வெற்றியடைந்ததா? என்பதே மீதிக்கதை. 

நாகராஜசோழன், சிபிஐ ஆபீசர் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சத்யராஜ். நாகராஜ சோழன் கதாபாத்திரத்தில் நக்கல், நையாண்டி, லூட்டி என தனக்கே உண்டான பாணியில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிபிஐ ஆபீசர் வேடத்தில்தான் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த பதவிக்குண்டான கம்பீரம் இல்லாததுதான் குறை. 

மணிவண்ணன் சத்யராஜின் உதவியாளராக வருகிறார். இவர் பேசும் அரசியல் நையாண்டி பேச்சுக்கள், சமீபகால அரசியலையும், அரசியல்வாதிகளையும் தாக்கும்படி இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது. 

மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் படத்தில் சத்யராஜின் மகனாக வருகிறார். இவர் செய்யும் அரசியல் காமெடியாக இருக்கிறது. ரகுவண்ணனின் கேரக்டர் நேர்த்தியாகவும், தேவையானதாக இருந்தாலும், அவரை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

சமூக சேவகராக வரும் சீமானுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. 2-3 சீன்களில் மட்டுமே தலைகாட்ட வைத்துவிட்டு அவரது கதாபாத்திரத்தை ஆழப் பள்ளத்தில் போட்டு புதைத்துவிட்டார்கள். படத்தில் இரண்டு நாயகிகளின் நடிப்பும், அவர்களின் கேரக்டர்களும் படத்தில் ஒட்டாமல் பயணிக்கிறது. 

ஒரு அரசியல் காமெடி படத்தை கொடுக்கவேண்டும் என்ற முயற்சியில் இயக்குனர் மணிவண்ணன் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அமைதிப்படை படத்தின் முதல் பாகத்தை பார்த்தவர்களுக்கு இப்படம் கொஞ்சம் அதிருப்தியைத்தான் அளிக்கும். மணிவண்ணன் – சத்யராஜ் இந்த இருவரின் நடிப்பைத் தவிர்த்து படத்தில் வேறுவிஷயங்களில் இயக்குனர் மணிவண்ணன் கவனம் செலுத்தவில்லை. 

ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதோடு ஒட்டவில்லை. டி.சங்கரின் ஒளிப்பதிவில் மலை சார்ந்த இடங்கள் அடிக்கும் அக்னி வெயிலில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றது. 

ஒன்றுக்கொன்று சரியான தொடர்பு இல்லாத துண்டு துண்டான காட்சிகள் வைத்து ரசிப்புத் தன்மையை குறைத்து விட்டார்கள். இருந்தாலும், மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணிக்காக ரசிக்கலாம். 

மொத்தத்தில் ‘நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,’ டெபாசிட் இழக்கவில்லை.

வில்லத்தனமான நடிகையின் எதிர்பார்ப்பு

மணியார் படத்தில் கடலாடி வந்த நாயகிக்கு படம் நன்றாக ஓடாததால் செம வருத்தம். 

முதல் படமே ஊற்றிக் கொண்டதே என்ற தவிப்பில் இருக்கிறார். 

அடுத்து ஜீவருடன் ஜோடி சேர்ந்துள்ள படமாவது கைகொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். 

இப்படத்தில் அவருக்கு கனமான வேடமாம். வில்லத்தனமான நாயகியாக வருகிறார். 

இந்த படம் நடிகையின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருக்கும் என்கின்றனர்.

ரஜினி, கமல், சரத்குமார், விஜய் படங்களை திரையிட எதிர்ப்பு


சமீபகாலமாக இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த்திரையுலகம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதோடு பல்வேறு தீர்மானங்களையும் நிறைவேற்றி வருகிறது. 

இதனால் இலங்கையில் உள்ள சில அமைப்புகள் முக்கிய தமிழ் நடிகர்களின் படங்களை இலங்கை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக, ராவணா சக்தி என்ற அமைப்பு இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்திற்கு முன்பாக கடந்த புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

அப்போது, சிங்களர்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வரும் தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் இலங்கையின் உள்நாட்டில் திரையிட வேண்டிய தேவையில்லை. 

முக்கியமாக ரஜினி, கமல், சரத்குமார், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தனர். 

அதனால் அவர்களின் படங்களை இலங்கையில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பும் கோரிக்கை வைத்துள்ளதாம்.

ஆனால், தென்னிந்திய திரைப்படங்களை இலங்கையில் திரையிடக்கூடாது என்று அந்த அமைப்பு கோருவது அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கே என்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. 

இளவட்ட ஹீரோக்களை அதிர வைத்த சிவகார்த்திகேயன்


சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாகியிருக்கிறார். 

இவர் மெரினா, 3, மனம் கொத்திப்பறவை ஆகிய படங்களில் நடித்து வந்தபோது இந்த அளவுக்கு வளருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 

கேடி பில்லா கில்லாடி ரங்காவில் ஒப்பந்தமானபோதுகூட நாம்தான் சிவகார்த்திகேயனை விட முன்னணி நடிகர் என்று தில்லாகத்தான களமிறங்கினார் விமல். 

ஆனால், படம் திரைக்கு வந்தபோது கைதட்டலை வாங்கிச்சென்றதோ சிவகார்த்திகேயன்.

இப்போது, எதிர்நீச்சல் படத்தில் இன்னும் வளர்ந்து நிற்கிறார் அவர். தியேட்டரில் அவர் பேசும் காமெடிகளை கேட்டு தியேட்டரே அதிருவதாக கேள்விப்பட்டு விமல் உள்ளிட்ட இளவட்ட நடிகர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்களாம். 

நமக்கு பிறகு வந்த ஒரு டி.வி தொகுப்பாளர் நம்மை மிஞ்சி வளர்ந்து நிற்கிறாரே என்று பேசிக்கொள்ளும் அவர்கள், இனி சிவகார்த்திகேயன் மாதிரியான வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து அவர்கள் வளருவதற்கு நாமளும காரணமாகிவிடக்கூடாது என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

முன்னணி ஹீரோக்களுக்கு தூது விடும் அமலாபால்


மைனாப்புகழ் அமலாபால், இப்போது தலைவா படத்தில், விஜய்யுடன் நடித்து முன்னணி நடிகை என்று மார்தட்டிக்கொள்கிறார். 

என்றபோதும், அந்த படம் வந்தால்தான் தெரியும் அவர் நடித்திருக்கிறாரா? இல்லை நாலு பாட்டுக்கு வந்து நடனமாடியிருக்கிறாரா? என்பது தெரியும் என்று கோலிவுட் மென்று கொண்டிருக்கிறது. 

ஆனால், அமலாவோ, இந்த படத்தில நடித்திருக்கிற பரபரப்பை வைத்து அடுத்து மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

குறிப்பாக, சில மேல்தட்டு, இயக்குனர்கள், ஹீரோக்கள் ஆகியோரின் பெயர்களை பட்டியலிட்டுக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிற பெயரில் அவர்களுடன் மீட்டிங் போட்டு, உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு மனக்குறையாக உள்ளது. எனது குறையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும் என்று ஆத்மார்த்தமான வேண்டுகோளை வைக்கிறாராம் அமலாபால்.

ஆனால், தற்போது அமலாபாலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்பதால், அவர் சந்தித்த இயக்குனர், ஹீரோக்கள் என்ற யாருமே அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லையாம். 

இருப்பினும் மனம்தளராத அமலாபால், ஆந்திராவில் மையம் கொண்டபடியே இங்கிருப்பவர்களுக்கு தொடர்ந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார்.

பட்டைய கிளப்பும் அஜீத்-தனுஷ் பட டிரைலர்கள்


அஜீத்தின் புதியபட டிரைலரும், தனுஷின் முதல் இந்திபடமான ராஞ்சனா பட டிரைலரும் இணையதளங்களில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த டிரைலரை பார்த்து ரசித்துள்ளனர். 

பில்லா-2 படத்திற்கு பிறகு அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்  இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆனபோதும் படத்திற்கு இன்னும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

கடந்த மே-1ம் தேதி, அஜீத் பிறந்தநாளில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் தலைப்பு வெளியிடப்படவில்லை. இருந்தபோதும் அஜீத் ரசிகர்களுக்காக படத்தின் டீசர் ஒன்று வெளியிடப்பட்டது. 

சுமார் 40 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீசர் வெளியிடப்பட்ட முதல் நாளே லட்சக்கணக்கான ரசிகர்கள் இணையதளங்களில் பார்வையிட்டுள்ளனர். 

டீசர் வெளியிடப்பட்ட நாள்முதல் இதுநாள் வரை சுமார் 20 லட்சம் பேர் அஜீத்தின் புதிய பட டீசர் பார்த்து ரசித்துள்ளனர். அதேப்போல் தனுஷின் முதல் இந்திப்படமான ராஞ்சனா படத்தின் டிரைலரும் கடந்தவாரம் வெளியானது. 

அந்தப்படத்தின் டிரைலரும் ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனு‌ஷின் டிரைலரையும் சுமார் 20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். தனுஷின் மற்றொரு படமான மரியான் பட டிரைலரையும் சுமார் 8லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 

இதில் தனுஷ் படங்களின் டிரைலரை காட்டிலும் அஜீத் பட டிரைலருக்கு தான் அதிக மவுசு, அதனால் இன்னும் சில தினங்களின் தனுஷ் பட டிரைலரை முந்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்



காதல் பிரச்சினையில் வேலை பார்க்கும் இடத்தில் கைகலப்பாகி வேலை இழந்த ஒருவன், விலையுயர்ந்த சொகுசு காரை ஓட்டவேண்டும் என்ற ஆசையில், பைவ் ஸ்டார் ஓட்டல் வேலையை தொலைத்த மற்றொருவன், நயன்தாராவுக்கு கோயில் கட்டி, பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி சென்னைக்கு வரும் இன்னொருவன் ஆகிய மூவரும் ஒரே அறையில் நண்பர்களாக தங்கியிருக்கிறார்கள். 

மறுமுனையில் சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் விஜய் சேதுபதி, பெரிய இடத்தில் கை வைக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, மாட்டிக்கொண்டால் அடிபணிந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 விதிமுறைகளின்படி கடத்தல் வேலைகளை செய்துவருகிறார். இவருக்கு அவ்வப்போது ஐடியா சொல்பவராக, ‘மாமா மாமா’ என்று ஒரு நிழல் உருவமாக வலம் வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. 

வேலையை இழந்த மூன்று நண்பர்களும் ஒருநாள் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், இன்னொரு கும்பலுக்கும் தகராறு வருகிறது. இந்த தகராறில் நண்பர்கள் கூட்டமும் தாக்கப்பட, அங்கிருந்து தப்பித்து விஜய் சேதுபதியிடம் சேர்ந்து வெளியேறுகிறார்கள். 

மூவரையும் தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்லும் விஜய் சேதுபதி, தன்னுடைய கடத்தல் வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்த முடிவெடுக்கிறார். இதற்கு நண்பர்களில் இரண்டு பேர் சம்மதிக்க ஒருவன் மட்டும் பின்வாங்குகிறான். பின்னர் அவனும் வந்து இணைகிறான். மூவரும் இணைந்து சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள். 

இந்நிலையில், நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தி அந்த பழியை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். இந்த கடத்தல் வேலைக்கு விஜய் சேதுபதி கும்பலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். முதலில் மறுக்கும் விஜய் சேதுபதி, பின்பு ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார். 

இதன்படி, ஒருநாள் அரசியல்வாதியின் மகனை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக வேறொரு கும்பல் அவனை கடத்திச் சென்றுவிடுகிறது. அவர்கள் செல்லும் இடத்தை அறிந்துகொள்ளும் விஜய் சேதுபதி கும்பல், மறுநாள் போலீஸ் உடை அணிந்து அங்கு சென்று பார்க்கின்றனர். 

அங்கு மயக்க நிலையில் தனியாக இருக்கும் அரசியல்வாதியின் மகனை தூக்கிக் கொண்டு வருகின்றனர். அவனை கடத்தியதும் அரசியல்வாதிக்கு போன் போட்டு மகனை கடத்திவிட்டதாகவும், விடவேண்டுமென்றால் 2 கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். ஆனால், இதற்கு அடிபணியாத அரசியல்வாதி போலீஸ் உதவியை நாடுகிறார். 

இதனால் பயந்துபோன விஜய் சேதுபதி கும்பல், அவனை விட்டுவிட துணிகிறது. ஆனால், அரசியல்வாதியின் மகனோ, தன்னுடைய அப்பா மூலம் பணம் கேட்டால் கிடைக்காது. தன்னுடைய யோசனையின்படி செய்தால் பணம் கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின்படி பணத்தை வாங்க ஐடியா கூறுகிறான். 

அதற்கு விஜய் சேதுபதியும் ஒத்துக்கொள்கிறார். அரசியல்வாதியின் மகன் ஐடியாப்படி பணத்தையும் வாங்கி விடுகின்றனர். இறுதியில் பங்கு பிரிக்கும்போது பிரச்சினை வர, விஜய் சேதுபதி கும்பலை விபத்தில் சிக்கவைத்து அங்கிருந்து பணத்துடன் தப்பிவிடுகிறான் அரசியல்வாதியின் மகன். 

இதற்கிடையில் தன்னுடைய மகனை கடத்திய கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு சைகோ போலீஸ்காரரை நியமிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இறுதியில், பணத்தோடு ஓடிச்சென்ற அரசியல்வாதியின் மகனிடமிருந்து விஜய் சேதுபதி கும்பல் பணத்தை வாங்கினார்களா? இந்த கடத்தல் கும்பல் போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை. 

அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இவர், இதுவரை நடித்த படங்களில் நாயகியை கட்டிப் பிடித்து நடிப்பது போன்ற காட்சி இல்லாத குறையை இந்த படத்தின் மூலம் நிவர்த்தி செய்து கொண்டார்போலும். 

படத்தின் முதல் பாதி முழுவதும் அரைகுறை உடையுடன் நாயகியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுகிறார். படத்தில் கூறும் வசனம்போல், படம் முழுக்க மனுஷன் வாழ்ந்திருக்கிறார் என்ற பொறாமையை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறார். படத்திற்காக கொஞ்சம் குண்டாகியிருக்கிறார். 

கடத்திவிட்டு பணம் பெறுவதற்காக இவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறது. நண்பர்களாக வரும் மூன்று பேரும் குறும்படங்கள் மூலம் பரிச்சயமான முகம் என்றாலும், வெள்ளித்திரையில் மேலும் பளிச்சிடுகிறார்கள். மூவரின் நடிப்பும் வெகுபிரமாதம். 

இவர்களுடைய பயம் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது. எதார்த்தமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய மூவருக்கும் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. சஞ்சிதா ஷெட்டி அழகாக இருக்கிறார். ‘மாமா மாமா’ என்று விஜய் சேதுபதியுடனேயே வலம்வந்து நம்மையும் வசீகரிக்கிறார். 

முதல்பாதி வரை படம் முழுவதும் நிரம்பியிருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், வெள்ளைச்சட்டை, தோளில் துண்டு, மிடுக்கான தோற்றம், மிரட்டும் தொணியில் பார்வை என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். 

இவருடைய மகனாக நடித்திருக்கும் கருணாகரனின் திருட்டு முழிப் பார்வையும், குரூரத்தனமான இவருடைய செய்கையும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன. 

சைகோ போலீஸ் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி படத்தில் பேசாமலேயே மிரட்டுகிறார். எந்த ஒரு செயலுக்கும் முகபாவனையிலேயே தனது முடிவை சொல்லிவிடும் இவரை, கடைசியில் சிரிப்பு போலீசாக மாற்றியதுதான் ஏமாற்றம். 

முதலமைச்சராக வரும் ராதாரவி, அமைச்சரின் மனைவியாக வரும் ராதா என அனைவரும் தங்கள் நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள். 

ஒரு கடத்தல் கதையை சீரியஸாகவும், அதே நேரத்தில் காமெடியாகவும் சொல்லிய இயக்குனர் நலன் குமாராசாமிக்கு பாராட்டுக்கள். 

இந்த படத்தின் நிஜ ஹீரோவே திரைக்கதைதான். யூகிக்க முடியாத கதை, கதாபாத்திரங்கள் போக்கை எல்லா இடத்திலும் என்ஜாய் செய்யமுடியும் என்பதை திரைக்கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். 

அதேபோல், படத்தில் கேரக்டருக்கு தகுந்தாற்போல் அவர்களது பெயரையும் தேர்வு செய்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். விஜய் சேதுபதியின் 5 விதிமுறைகள், கடத்திய பிறகு பெற்றோரிடம் பணத்தை பெறுவதற்காக பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்கவைக்க கூடியவை. 

மேலும், ‘கடத்தல் வேலைக்கு குருட்டுத்தனமான முட்டாள் தனம் வேண்டும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும்’ என்பது போன்ற அறிவார்த்தமான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. 

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பாடல்களும், பிண்ணனி இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை. 

ஒளிப்பதிவாளர் தினேஷும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார். 

மொத்தத்தில் ‘சூது கவ்வும்’ நிச்சயம் வெல்லும்.

படப்பிடிப்புக்காக குடியிருந்த வீட்டையே கொளுத்திய சசிகுமார்


சுந்தரபாண்டியனைத் தொடர்ந்து சசிகுமார் நடித்து வரும் புதிய படம் குட்டிப்புலி. இந்த படத்தில் அவருடன் லட்சுமிமேனன், சரண்யா, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முத்தையா படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. பெண் தான் கடவுள். பெண் தான் வீரம் என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இப்படத்தில், தீப்பிடிக்கும் வீட்டிற்குள் இருந்து சசிகுமார் தப்பிச்செல்வது போன்ற ஒரு காட்சியை படமாக்கினார்களாம். அதற்காக ஒரு நபர் குடியிருந்த தனது வீட்டையே தர முன்வந்தாராம்.

இதையடுத்து அந்த வீட்டில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீயை கொளுத்தி படமாக்கியுள்ளனர். அதையடுத்து, வீட்டை படப்பிடிப்புக்காக கொடுக்க முன்வந்த அந்த நபருக்கு அதே இடத்தில் புதிய வீட்டையும் கட்டிக்கொடுத்தார்களாம்.

எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்


நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் “உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என குலதெய்வத்திடம் வேண்டுகிறார். 

அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல் பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார். 

வேண்டுதலின்படி தனது குலசாமியின் பெயரான ‘குஞ்சிதபாதசாமி’ என்ற பெயர் சிவகார்த்திகேயனுக்கு வைக்கப்படுகிறது. வளர்ந்து பெரியவனாகி, தனியார் கம்பெனியில் வேலை செய்யும் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய பெயரை அனைவரும் சுருக்கி அழைப்பது மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டாக்குகிறது. 

இதனால் வேலையை விட்டுவிடுகிறார். இவர் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் பெயர் சரியில்லை என்று சொல்லி இவரது காதலை ஏற்க மறுக்கிறார். 

விரக்தியடைந்த சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரிஷ் என்று மாற்றி அதை பதிவும் செய்கிறார். தனது இருப்பிடத்தையும் மாற்றிக் கொள்கிறார். இதையடுத்து பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ப்ரியா ஆனந்தை சிவகார்த்திகேயன் சந்திக்கிறார்.  

பார்த்தவுடனேயே அவர்மீது காதல் வயப்படும் சிவகார்த்திகேயன், அவருடன் நட்பாக பழகி இறுதியில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். 

ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயனின் பழைய பெயர் ப்ரியா ஆனந்த்-க்கு தெரிய வருகிறது. இந்த சிறு விஷயத்தை தன்னிடம் மறைத்ததற்காக சிவகார்த்திகேயன் மீது கோபப்படுகிறார் பிரியா ஆனந்த். அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். 

இந்நிலையில், பெரிதளவில் ஏதாவது சாதித்தால் தனது பழைய பெயர் மறைந்துவிடும் என்ற நண்பனின் யோசனைப்படி, சென்னையில் நடக்கும் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற முடிவெடுக்கிறார். 

அவருக்கு பயிற்சியளிக்க ஜெயபிரகாஷை சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் பிரியா ஆனந்த். ஆனால், ஜெயபிரகாஷோ தனது மாணவியான நந்திதாவை சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளிக்க அனுப்புகிறார். 

இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று மராத்தான் போட்டியில் கலந்துகொண்டு சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? அவமானமாக கருதும் தனது பெயரை அழித்தாரா? தனது காதலியான ப்ரியா ஆனந்த்தை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை. 

நாயகனான சிவகார்த்திகேயன் குஞ்சிபாதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவஸ்தைபடுவதாகட்டும், ப்ரியா ஆனந்தை துரத்தி துரத்தி காதலிப்பதாகட்டும், முதல் பாதியில் காமெடியில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ஆனால் பிற்பாதியில் ஓட்ட வீரனாக ஸ்கோர் பண்ண வேண்டிய இடத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டார். 

முற்பாதியில் டீச்சராக வரும் ப்ரியா ஆனந்த்-க்கு தனது முந்தைய படங்களைவிட இப்படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நிறைவாக செய்திருக்கிறார். பிற்பாதியில் இவர் அவ்வளவாக தலைகாட்டாதது ஏமாற்றத்தை தருகிறது. 

பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாக, சிவகார்த்திகேயனுக்கு பயிற்சியாளராக வருகிறார் ‘அட்டக்கத்தி’ நந்திதா. அருமையான கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார். 

சிவகார்த்திகேயனின் நண்பனாக வரும் சதீஷ் தன்னுடைய பங்குக்கு பின்னியெடுத்திருக்கிறார். சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களில் ஒரு புது காமெடி கூட்டணியை உருவாக்கலாம். மனோபாலா, மதன்பாப் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியுள்ளனர். 

நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் நம் சந்ததியின் அடையாளம். எனவே பெயரை மாற்றுவதைவிட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்ற அழகான சமூக கருத்தை நகைச்சுவை, செண்டிமென்ட் கலந்து சொன்னதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

அனிருத் இசையில் ஏற்கெனவே பாட்டுக்கள் அனைத்தும் செம ஹிட்டாகியுள்ளன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்றாக கணித்து இசையமைத்திருக்கிறார். 

‘லோக்கல் பாய்ஸ்’ என்ற பாடல் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருந்தாலும், தனுஷ், சிவா, நயன்தரா ஆகியோரின் குத்தாட்டம் ரசிகர்களை குதூகலிக்க வைத்திருக்கிறது. 

ஒரு மனிதனுக்குள் மாறி மாறி தோன்றும் இரு உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. ‘வெளிச்ச பூவே’ பாடல் அழகாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

படத்தின் முதற்பாதியை காமெடிகளை கட்டினாலும், பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது. அடுத்து என்ன காட்சி என்பதை முன்பே ஊகிக்கும் விதமான காட்சிகளே நிறைய அமைந்திருக்கிறது. சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். 

மற்றபடி ‘எதிர்நீச்சல்’ ஜாலியாக பயணம் செய்யலாம்.

சந்தானம் வேண்டவே வேண்டாம் - உறுதியாக சொன்ன கார்த்தி


கார்த்தி நடித்த சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் உள்பட சில படங்களில் அவருடன் இணைந்து காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம். 

ஆனால் இடையினில் என்ன நடந்ததோ இப்போது தனது படங்களுக்கு சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கண்டிசனாக சொல்கிறாராம் கார்த்தி.

அதேபோல், சிங்கம்-2 படத்தில் விவேக் இருந்தாலும், மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சந்தானத்தையும் கதைக்குள் திணித்திருக்கிறார் டைரக்டர் ஹரி. 

இதையடுத்து, தான் கார்த்தியை வைத்து இயக்கும் அருவா படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்கும் முடிவில் இருந்தார் ஹரி. 

ஆனால் கார்த்தி குறுக்கிட்டு, எக்காரணம் கொண்டு சந்தானம் வேண்டாம். வேறு யாராவது காமெடியனை போடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்துள்ளாராம் ஹரி.

ஆனால் இதுபற்றி, சந்தானத்தின் மீது கார்த்திக்கு அப்படி என்னதான் கோபம்? என்று விசாரித்தால், அவர் மீது எந்த கோபமும் இல்லை. 

எப்போதும் போல் அவர்கள் நண்பர்களாகத்தான் உள்ளார்கள். தொடர்ந்து இருவரும் இணைந்து காமெடி செய்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகவே தெரியும் என்பதால்தான், அவருடன் தொடர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார் கார்த்தி என்கிறார்கள். 

வாலுவால் சிம்பு டென்ஷன்

ஹன்சிகாவுடன், சிம்பு நடித்து வரும், "வாலு படம்,  கிட்டத்தட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதே,"வாலு என்ற பெயரில், இன்னொரு படத்தின் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால், டென்ஷனில் இருக்கிறார் சிம்பு. 

அந்த இன்னொரு, "வாலு படக்குழுவோ, "சென்னையிலுள்ள பீமண்ணன் பேட்டை பகுதியில் வாழ்ந்த வாலு என்பவரை பற்றிய கதையில், எங்கள் படம் உருவாகியுள்ளது. 

அதனால், "வாலு டைட்டில் தான் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர். 

ஆக, சிம்புவைப் போலவே இவர்களும், "வாலு டைட்டிலை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தெரிகிறது. 

அதனால், "வாலு யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான், பார்க்க வேண்டும்.

கேரளாவிலும் பவர் ஸ்டார் கைவரிசை - ஒரே நாளில் மூன்று புகார்கள்


கேரளாவை, சேர்ந்த நகை கடை பங்குதாரரிடம், 21.50 லட்சம் ரூபாய் மோசடி, ஓசூரை சேர்ந்தவரிடம், 10 லட்சம் ரூபாய் மோசடி என, நடிகர், "பவர் ஸ்டார் சீனிவாசன் மீது, ஒரே நாளில், மூன்று புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

கேரள மாநிலம், கண்ணூரை சேர்ந்த தேவதாசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார்.

புகார் மனு விவரம்:  கண்ணூரில் உள்ள நகைகடையில் பங்குதாரராக உள்ளேன். தொழிலை விரிவு படுத்த திட்டமிட்டிருந்தேன். 2010ல், நடிகர், "பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான, "பாபா டிரேடிங் கம்பெனியின், ஏஜென்ட் என்று, சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் அறிமுகமானார். 

கடனுதவி பெற, ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். மறு வாரம், சென்னை அண்ணாநகரில், உள்ள, "பாபா டிரேடிங் கம்பெனியில், சீனிவாசனை சந்தித்து, "6 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்றேன். இதையடுத்து என் சொத்து விவரங்களை, சீனிவாசன் கேட்டறிந்தார். 

பின், 5.35 ‌கோடி ரூபாய், கடன் பெற ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு கமிஷனாக, 21.50 லட்சம் ரூபாய்கமிஷனாக தர வேண்டும் எனவும் கூறினார்.

கடந்த, 2010 ஆகஸ்ட், 13ம் தேதி, 21 லட்சம் ரூபாய்க்கு வரைவோலையும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் கொடுத்தேன். இதை பெற்றுக் கொண்ட அவர், "பத்து நாட்களில் பணம் கிடைத்து விடும் என, உறுதி அளித்தார்.

 இதையடுத்து, கடன் தொகை பெற, பல முறை அவரை சந்தித்தேன். ஆனால், அவர் பணம் பெற்றுத் தரவில்லை. கடந்த, 2010, செப்டம்பர் மாதம், துபாயில் உள்ள என் நகை கடையை பார்வையிட வேண்டும் என்றார். 

சீனிவாசன் மற்றும் அவரது சகாக்கள், இரண்டு பேரை, 1.60 லட்சம் ரூபாய்செலவு செய்து, அழைத்து சென்றேன். குவைத்தில் இருந்து திரும்பிய சில நாட்களில், பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக, மீண்டும் அவர் உறுதி அளித்தார். 

பின், 2012, மே மாதம், அண்ணா நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு, சென்றேன். அவர் யெஸ் பேங்க், நுங்கம்பாக்கம் கிளையில், மாற்றத்தக்க வகையில், 2 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். 

அதை வங்கியில் கொடுத்து பணம் பெற முயன்ற போது, கையெழுத்து மாறி இருப்பதாக கூறி, திருப்பி கொடுத்து விட்டனர். அப்போது தான், "பவர் ஸ்டார் சீனிவாசன் என்னை ஏமாற்றுவதை உணர்ந்தேன். கடந்த ஜனவரி, முதல் வாரம், சென்னை அண்ணாநகரில், சீனிவாசனை சந்தித்து, "எனக்கு கடன் வேண்டாம். நான் கொடுத்த, 21. 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்து விடுங்கள் என்றேன். 

ஜனவரி, 12ம் தேதி, அண்ணா நகரில் உள்ள, கோடக் மகிந்திரா வங்கி கிளையில், மாற்றத்தக்க வகையில், 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தார். அதை, வங்கியில் கொடுத்தபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.எனவே, கடன் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த "பவர் ஸ்டார் சீனிவாசன், அவரது ஏஜென்ட் கிறிஸ்டோபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த சென்ன கிருஷ்ணன், தனக்கு, 1 கோடி ரூபாய் கடன், வாங்கி தருவதாக கூறி, கமிஷனாக, 10 லட்சம் ரூபாய்வாங்கி ஏமாற்றி விட்டார் என, புகார் செய்துள்ளார். அண்ணாநகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர், தனக்கு வாடகை பாக்கியாக, 1.80 லட்சம் ரூபாய்தர வேண்டும் என, புகார் செய்துள்ளார். 
Related Posts Plugin for WordPress, Blogger...