கேரளாவிலும் பவர் ஸ்டார் கைவரிசை - ஒரே நாளில் மூன்று புகார்கள்


கேரளாவை, சேர்ந்த நகை கடை பங்குதாரரிடம், 21.50 லட்சம் ரூபாய் மோசடி, ஓசூரை சேர்ந்தவரிடம், 10 லட்சம் ரூபாய் மோசடி என, நடிகர், "பவர் ஸ்டார் சீனிவாசன் மீது, ஒரே நாளில், மூன்று புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

கேரள மாநிலம், கண்ணூரை சேர்ந்த தேவதாசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார்.

புகார் மனு விவரம்:  கண்ணூரில் உள்ள நகைகடையில் பங்குதாரராக உள்ளேன். தொழிலை விரிவு படுத்த திட்டமிட்டிருந்தேன். 2010ல், நடிகர், "பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான, "பாபா டிரேடிங் கம்பெனியின், ஏஜென்ட் என்று, சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் அறிமுகமானார். 

கடனுதவி பெற, ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். மறு வாரம், சென்னை அண்ணாநகரில், உள்ள, "பாபா டிரேடிங் கம்பெனியில், சீனிவாசனை சந்தித்து, "6 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்றேன். இதையடுத்து என் சொத்து விவரங்களை, சீனிவாசன் கேட்டறிந்தார். 

பின், 5.35 ‌கோடி ரூபாய், கடன் பெற ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு கமிஷனாக, 21.50 லட்சம் ரூபாய்கமிஷனாக தர வேண்டும் எனவும் கூறினார்.

கடந்த, 2010 ஆகஸ்ட், 13ம் தேதி, 21 லட்சம் ரூபாய்க்கு வரைவோலையும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் கொடுத்தேன். இதை பெற்றுக் கொண்ட அவர், "பத்து நாட்களில் பணம் கிடைத்து விடும் என, உறுதி அளித்தார்.

 இதையடுத்து, கடன் தொகை பெற, பல முறை அவரை சந்தித்தேன். ஆனால், அவர் பணம் பெற்றுத் தரவில்லை. கடந்த, 2010, செப்டம்பர் மாதம், துபாயில் உள்ள என் நகை கடையை பார்வையிட வேண்டும் என்றார். 

சீனிவாசன் மற்றும் அவரது சகாக்கள், இரண்டு பேரை, 1.60 லட்சம் ரூபாய்செலவு செய்து, அழைத்து சென்றேன். குவைத்தில் இருந்து திரும்பிய சில நாட்களில், பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக, மீண்டும் அவர் உறுதி அளித்தார். 

பின், 2012, மே மாதம், அண்ணா நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு, சென்றேன். அவர் யெஸ் பேங்க், நுங்கம்பாக்கம் கிளையில், மாற்றத்தக்க வகையில், 2 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். 

அதை வங்கியில் கொடுத்து பணம் பெற முயன்ற போது, கையெழுத்து மாறி இருப்பதாக கூறி, திருப்பி கொடுத்து விட்டனர். அப்போது தான், "பவர் ஸ்டார் சீனிவாசன் என்னை ஏமாற்றுவதை உணர்ந்தேன். கடந்த ஜனவரி, முதல் வாரம், சென்னை அண்ணாநகரில், சீனிவாசனை சந்தித்து, "எனக்கு கடன் வேண்டாம். நான் கொடுத்த, 21. 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்து விடுங்கள் என்றேன். 

ஜனவரி, 12ம் தேதி, அண்ணா நகரில் உள்ள, கோடக் மகிந்திரா வங்கி கிளையில், மாற்றத்தக்க வகையில், 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தார். அதை, வங்கியில் கொடுத்தபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.எனவே, கடன் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த "பவர் ஸ்டார் சீனிவாசன், அவரது ஏஜென்ட் கிறிஸ்டோபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த சென்ன கிருஷ்ணன், தனக்கு, 1 கோடி ரூபாய் கடன், வாங்கி தருவதாக கூறி, கமிஷனாக, 10 லட்சம் ரூபாய்வாங்கி ஏமாற்றி விட்டார் என, புகார் செய்துள்ளார். அண்ணாநகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர், தனக்கு வாடகை பாக்கியாக, 1.80 லட்சம் ரூபாய்தர வேண்டும் என, புகார் செய்துள்ளார். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...