எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்


நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் “உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என குலதெய்வத்திடம் வேண்டுகிறார். 

அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல் பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார். 

வேண்டுதலின்படி தனது குலசாமியின் பெயரான ‘குஞ்சிதபாதசாமி’ என்ற பெயர் சிவகார்த்திகேயனுக்கு வைக்கப்படுகிறது. வளர்ந்து பெரியவனாகி, தனியார் கம்பெனியில் வேலை செய்யும் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய பெயரை அனைவரும் சுருக்கி அழைப்பது மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டாக்குகிறது. 

இதனால் வேலையை விட்டுவிடுகிறார். இவர் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் பெயர் சரியில்லை என்று சொல்லி இவரது காதலை ஏற்க மறுக்கிறார். 

விரக்தியடைந்த சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரிஷ் என்று மாற்றி அதை பதிவும் செய்கிறார். தனது இருப்பிடத்தையும் மாற்றிக் கொள்கிறார். இதையடுத்து பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ப்ரியா ஆனந்தை சிவகார்த்திகேயன் சந்திக்கிறார்.  

பார்த்தவுடனேயே அவர்மீது காதல் வயப்படும் சிவகார்த்திகேயன், அவருடன் நட்பாக பழகி இறுதியில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். 

ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயனின் பழைய பெயர் ப்ரியா ஆனந்த்-க்கு தெரிய வருகிறது. இந்த சிறு விஷயத்தை தன்னிடம் மறைத்ததற்காக சிவகார்த்திகேயன் மீது கோபப்படுகிறார் பிரியா ஆனந்த். அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். 

இந்நிலையில், பெரிதளவில் ஏதாவது சாதித்தால் தனது பழைய பெயர் மறைந்துவிடும் என்ற நண்பனின் யோசனைப்படி, சென்னையில் நடக்கும் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற முடிவெடுக்கிறார். 

அவருக்கு பயிற்சியளிக்க ஜெயபிரகாஷை சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் பிரியா ஆனந்த். ஆனால், ஜெயபிரகாஷோ தனது மாணவியான நந்திதாவை சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளிக்க அனுப்புகிறார். 

இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று மராத்தான் போட்டியில் கலந்துகொண்டு சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? அவமானமாக கருதும் தனது பெயரை அழித்தாரா? தனது காதலியான ப்ரியா ஆனந்த்தை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை. 

நாயகனான சிவகார்த்திகேயன் குஞ்சிபாதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவஸ்தைபடுவதாகட்டும், ப்ரியா ஆனந்தை துரத்தி துரத்தி காதலிப்பதாகட்டும், முதல் பாதியில் காமெடியில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ஆனால் பிற்பாதியில் ஓட்ட வீரனாக ஸ்கோர் பண்ண வேண்டிய இடத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டார். 

முற்பாதியில் டீச்சராக வரும் ப்ரியா ஆனந்த்-க்கு தனது முந்தைய படங்களைவிட இப்படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நிறைவாக செய்திருக்கிறார். பிற்பாதியில் இவர் அவ்வளவாக தலைகாட்டாதது ஏமாற்றத்தை தருகிறது. 

பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாக, சிவகார்த்திகேயனுக்கு பயிற்சியாளராக வருகிறார் ‘அட்டக்கத்தி’ நந்திதா. அருமையான கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார். 

சிவகார்த்திகேயனின் நண்பனாக வரும் சதீஷ் தன்னுடைய பங்குக்கு பின்னியெடுத்திருக்கிறார். சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களில் ஒரு புது காமெடி கூட்டணியை உருவாக்கலாம். மனோபாலா, மதன்பாப் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியுள்ளனர். 

நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் நம் சந்ததியின் அடையாளம். எனவே பெயரை மாற்றுவதைவிட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்ற அழகான சமூக கருத்தை நகைச்சுவை, செண்டிமென்ட் கலந்து சொன்னதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

அனிருத் இசையில் ஏற்கெனவே பாட்டுக்கள் அனைத்தும் செம ஹிட்டாகியுள்ளன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்றாக கணித்து இசையமைத்திருக்கிறார். 

‘லோக்கல் பாய்ஸ்’ என்ற பாடல் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருந்தாலும், தனுஷ், சிவா, நயன்தரா ஆகியோரின் குத்தாட்டம் ரசிகர்களை குதூகலிக்க வைத்திருக்கிறது. 

ஒரு மனிதனுக்குள் மாறி மாறி தோன்றும் இரு உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. ‘வெளிச்ச பூவே’ பாடல் அழகாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

படத்தின் முதற்பாதியை காமெடிகளை கட்டினாலும், பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது. அடுத்து என்ன காட்சி என்பதை முன்பே ஊகிக்கும் விதமான காட்சிகளே நிறைய அமைந்திருக்கிறது. சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். 

மற்றபடி ‘எதிர்நீச்சல்’ ஜாலியாக பயணம் செய்யலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...