மணிரத்னத்திற்கு கதை உருவாக்க தெரியாது


மணிரத்தனத்திற்கு கதை உருவாக்கத் தெரியாது; அவரால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று தயாரிப்பாளர் கோவை தம்பி கூறியுள்ளார். மணிரத்னம், கோவைத் தம்பி இடையேயான மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. 

இதயக் கோவில் நான் எடுத்த மோசமான படம். அந்த கதைக்குள் தெரியாமல் சிக்கிவிட்டேன் என்று மணிரத்னம் பேட்டி அளித்து இருந்தார். இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத் தம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது கோவை தம்பி அளித்துள்ள பேட்டியில், மணிரத்னம் ஸ்கூட்டரில் என் அலுவலகத்துக்கு வந்து வாய்ப்பு கேட்டார். நான் இதயக்கோவில் கதையை கொடுத்து இயக்கச் சொன்னேன். 

தற்போது 28 வருடத்துக்கு பிறகு அது மோசமான படம். அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார். 

கதை பிடிக்காவிட்டால் அப்போதே மறுத்து இருக்கலாம். அந்த நேரம் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். 

மணிரத்னத்துக்கு ஷாட் எடுக்க அப்போது சரியாக தெரியவில்லை. செட் போட்டு பணம் எல்லாம் வீணானது. கல்யாண மண்டபங்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து கொடுத்தேன். 

எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவும் காரணமாக இருந்தார். இதயகோவில் படத்தை நன்றாக இயக்கி இருந்தால் எனக்கு நிறைய லாபம் கிடைத்து இருக்கும். 

35 ரோலில் முடிக்க வேண்டிய படத்தை 70 ரோலுக்கு கொண்டு போய்விட்டார். இதனால் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. அவருக்கு கதை உருவாக்க தெரியாது, என்று கூறியிருக்கிறார். 

பொங்கல் விருந்தாக வருகிறது கமலின் விஸ்வரூபம்



மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள கமலின் விஸ்வரூபம் படம் எப்போது ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் விஸ்வரூம். 

இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

பயங்கரவாதத்தை மையமாக வைத்து உருவா‌கியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டும் இன்றி ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது. சோனி நிறுவனம் இதனை வெளியிடுகிறது. 

இந்நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல். 

ஜனவரி 11-ம் தேதி விஸ்வரூபம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது என்று கூறியுள்ளார். 

பொங்கல் விருந்தாக விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

ஆஸ்கர் பிலிம்சுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய பிந்து மாதவி


ஆதி நடித்த ஈரம் படத்தை இயக்கியவர் அறிவழகன். இவர் அந்த படத்தையடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் வல்லினம் என்ற படத்தை இயக்கி வருகிறார். 

நகுல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முதலில் பிந்து மாதவிதான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 

ஆனால் பின்னர், தமிழில் பல படங்கள் அவருக்கு கமிட்டானதால் வல்லினம் படத்துக்கு சரியாக கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார். 

இதனால் சிலமுறை படப்பிடிப்பு தேதி குறிக்கப்பட்ட பின்னர் கேன்சல் ஆகியிருக்கிறது.

இப்படி தொடர்ந்து பிந்து மாதவி டேக்கா கொடுத்ததால் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், பிந்து மாதவியை படத்திலிருந்தே தூக்கி கடாசி விட்டு இப்போது ஒரு பெங்களூர் நடிகையை ஒப்பந்தம் செய்து படமாக்கி வருகின்றனர். 

ஆனால் பிந்து மாதவி பத்து நாட்களாக நடித்த காட்சிகளை மீண்டும் ரீஷூட் செய்திருக்கிறார்கள். 

அந்தகாரணமாக, ஆஸ்கர் பிலிம்சுக்கு 25 லட்சம் வரை வீண் செலவாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

உதயநிதியுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா


திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான நடிகர் உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் பிரபாகரன் இயக்குகிறார். 

இவர் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர். 

உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் ஜோடியாக ஹன்சிகா நடித்து இருந்தார்.

 படம் வரவேற்பை பெற்றது. புது படத்தில் நடிக்க உதயநிதி கதை கேட்டு வந்தார். பிரபாகரன் சொன்ன காதலுடன் கூடிய காமெடி கதை பிடித்து இருந்ததால் ஒப்புக் கொண்டார்.

பின்னர் நாயகி தேர்வில் இறங்கினர். நயன்தாரா கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை அணுகினர். கதை சொல்லி பெரும் தொகை சம்பளமும் பேசினர். 

கதை நயன்தாராவுக்கு பிடித்தது. இதையடுத்து உதயநிதியுடன் நடிக்க சம்மதித்தார். 

இப்புதிய படத்தின் சூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. 

நயன்தாரா தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும், அட்லி இயக்கும் ராஜா ராணி படத்தில் ஆர்யா ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். 

இப்படங்களை முடித்து விட்டு உதயநிதி படத்துக்கு வருகிறார்.

இந்தி துப்பாக்கியில் பணியாற்ற சந்தோஷ் சிவன் மறுப்பு



விஜய் நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அம்சங்களில் ஒன்று அதன் ஒளிப்பதிவு. அதைச் செய்திருப்பவர் சந்தோஷ் சிவன். 

தற்போது அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் துப்பாக்கியை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். 

இந்திப் படத்துக்கும் சந்தோஷ் சிவனே ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கு சந்தோஷ் சிவன் மறுத்துவிட்டார். 

அக்ஷய்குமார் கேட்டும் முடியாது என்று சொல்லிவிட்டார். இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியதாவது: 

"கமர்ஷியல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது புதிதல்ல. தளபதி படத்துக்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். 

துப்பாக்கியில் சொல்லப்படும் மெசேஜ் பிடித்திருந்ததால் பணியாற்றினேன். 

ஒரே வேலையை திரும்ப செய்வது மாதிரி போரடிக்கிற விஷயம் எதுவும் கிடையாது. 

அதனால் துப்பாக்கியின் இந்தி ரீமேக்கில் பணியாற்றவில்லை. 2013ம் ஆண்டு ஒளிப்பதிவிலிருந்து விலகி இருக்கப்போகிறேன். 

இந்த வருடம் முழுவதும் ஒரு ஸ்கிரிப்பட் தயார் செய்து 2014ல் பிரமாண்ட படம் ஒன்றை இயக்கப்போகிறேன்" என்றார்.

துப்பாக்கி கேரளாவில் வசூல் சாதனை


விஜய் நடித்த துப்பாக்கி தமிழ்நாட்டில் நவம்பர் 13 தீபாவளி அன்று வெளியானது. தீபாவளியை அதிகம் கொண்டாடாத கேரளாவில் 126 தியேட்டர்களில் துப்பாக்கி வெளியானது. 

தீபாவளி அன்று அதிகாலையில் தமிழர்கள் எண்ணை தேய்த்து குளித்துக் கொண்டிருக்கும்போது பெரும்பாலான மலையாளிகள் துப்பாக்கி படத்தை பார்த்து விட்டார்கள். 

கேரளாவில் முக்கிய நகரங்களில் தீபாளியன்று அதிகாலை 4 மணிக்கும், 5 மணிக்கும் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது. 

ஆக தமிழர்களை விட துப்பாக்கியை முதலில் பார்த்து ரசித்தது மலையாளிகள்தான். 

விஷயம் அதுவல்ல, துப்பாக்கி வெளியான முதல் இரண்டு நாட்களில் நடந்த 600 காட்சிகளில் விநியோகஸ்தர்களுக்கு துப்பாக்கி அள்ளிக் கொடுத்தது 2 கோடி ரூபாய். 

பத்து நாட்களுக்கு பிறகு வந்து தொகை 6 கோடி ரூபாய். இன்னும் 50 நாட்கள் வரை அனைத்து தியேட்டர்களிலும் ஓடும் என்கிறார்கள். 

அப்படியென்றால் துப்பாக்கி கேரளாவில் வசூலிக்கப்போகும் தொகை  குறைந்த பட்சம் 15 கோடி என்கிறார்கள்.

இதற்கு முந்தைய தமிழ்பட வசூல் சாதனையை துப்பாக்கி முறியடிக்கும் என்கிறார்கள்.

மம்முக்காவும், மாலேட்டனும் துப்பாக்கிய பார்த்துட்டாங்களா...

சர்ச்சையை உருவாக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா


வாலி, குஷி என்று வேகமாக முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. 

ஆனால் பின்னர் அவருக்கும் ஹீரோ வேசம் போடும் ஆசை ஏற்பட்டதால், சில படங்களில் நடித்தவர், சில காலத்தில் காணாமல் போனார். 

இருப்பினும் தற்போது இசை என்ற படத்தின் மூலம் மீண்டும் மீண்டு வந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

ஆனால் இந்த ரவுண்டில் கண்டிப்பாக ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே களத்தில் இறங்கியுள்ளார். 

அதன்காரணமாக, இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே வெடிக்கும் ஈகோ பிரச்னையை மையப்படுத்தி கதை பண்ணியிருக்கிறார். 

இதில் இளையராஜாவாக பிரகாஷ்ராஜூம், ஏ.ஆர்.ரகுமானாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்களாம். 

அவர்களுக்கிடையே நடக்கும் தொழில் போட்டியும் இதில் இடம்பெற்றுள்ளதாம். 

அதனால் இந்த படம் திரைக்கு வரும் நேரத்தில் மேற்படி இசையமைப்பாளர்களின் எதிர்ப்பும், சர்ச்சையும் உருவாகும் என்று தெரிகிறது.

3,000 ஸ்கிரீன்களில் விஸ்வரூபம் ரிலீஸ்

கமல்ஹாசனின் அடுத்த படமான, "விஸ்வரூபம் வெளியாகும் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர், அவரது ரசிகர்கள். 

கமல்ஹாசனோ, இந்த விஷயத்தில் அவசரம் காட்டவில்லை. இந்தியிலும், தமிழிலும், ஒரே நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால், மிகவும் பொறுமையாக இருக்கிறார்.  

அதற்கான வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில்,  இந்தியில் மட்டும், 3,000 ஸ்கிரீன்களில், படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம். 

மாநில எல்லைகளை கடந்த கதைக் களம் என்பதால், இந்தியா முழுவதும், தன் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என, நம்பிக்கையுடன் காணப்படுகிறார், கமல்.

விஜய் படத்தில் மோகன்லால்


விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள் ளனர். மோகன்லால் ஏற்கனவே கமலுடன் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளார். 

தீபாவளிக்கு ரிலீசான விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். 

விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம். 

விஜய் தற்போது ‘மதராசபட்டணம்’ டைரக்டர் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். 

விஜயின் ‘துப்பாக்கி’ படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் சாதனை படைக்கிறது. 

இதையடுத்து படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு விஜய் விருந்து கொடுத்தார்.

போடா போடி - சினிமா விமர்சனம்


லண்டனில் வாழும் நாயகனாக சிம்பு. இவர், காதலிக்கலாமா? வேண்டமா? என்ற குழப்பத்துடன் அலைகிறார். இறுதியாக, காதலிக்கலாம் என்ற முடிவு செய்து நாயகியான வரலட்சுமியை சந்திக்கிறார். 

வரலட்சுமி லண்டனில் ஒரு டான்ஸ் கிளாஸில் சேர்ந்து டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். லண்டனில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும் என்பதே இவரது குறிக்கோள். 

இதற்கிடையே, சிம்புவுக்கும் இவருக்கும் காதல் மலர்கிறது. சிம்புவுக்கு தன் காதலி நடனப் பள்ளிக்கு செல்வது, அங்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது, அவள் நண்பர்களுடன் சகஜமாக கட்டி அணைப்பது, முத்தமிடுவது போன்ற நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. 

இதனால், இவர்களது காதலில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. இதனால் இருவரும் பிரிய முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள ஆழமான காதலால் பிரிய முடியாமல் தவிக்கிறார்கள். 

சிம்புவின் பிறந்த நாளன்று தனது வீட்டில் யாருமில்லை எனக் கூறி நாயகியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். 

அப்போது, சிம்புவுக்கு தெரியாமலேயே அவரது பிறந்தநாளை கொண்டாட நினைக்கும் அவரது சித்தப்பா கணேஷூம், அவரது மனைவியும் இவர்களை பார்த்துவிடுகிறார்கள். உடனே, இருவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதற்கு இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள். 

ஆனால் இதற்கு சிம்பு சில கண்டிஷன்கள் போடுகிறார். அதன்படி, டான்ஸ் கிளாஸ் போகக்கூடாது. மற்றவர்களுடன் நெருக்கமாக பழகக்கூடாது என்று வரலட்சுமிக்கு கட்டளையிடுகிறார். இது தனக்கு ஒத்துவராது என்று வரலட்சுமி கோபித்துக் கொண்டு சென்றுவிடுகிறார். 

பின்பு, தான் ஒருநாள் உன் பேச்சை கேட்கவேண்டும், மற்றொரு நாள் என் பேச்சை நீ கேட்கவேண்டும் என்ற நிபந்தனையோடு வரலட்சுமி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதற்கு சிம்புவும் சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. 

வரலட்சுமியை நடனப் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு சிம்புவுக்கு கணேஷ் யோசனை கூறுகிறார். அதன்படி, சிம்புவும் வரலட்சுமியும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். 

இதைப்பற்றி ஒன்றும் அறியாத வரலட்சுமி, ஒருகட்டத்தில் இவர்களின் திட்டத்தை அறிந்து கொள்கிறார். இதுகுறித்து சிம்புவுடன் சண்டைபோட, அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களின் குழந்தை விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறது. இதனால் விரக்தியடைந்த வரலட்சுமி சிம்புவை பிரிந்து செல்கிறார். 

இறுதியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? வரலட்சுமியின் நடனக் கலைஞர் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை. 

இப்படத்தில் சிம்பு, இளமை துடிப்புடன், மிடுக்கான இளைஞனாக வலம் வருகிறார். தனது முந்தைய படங்களில் உள்ளதுபோல், பஞ்ச் வசனங்களும், பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லாமல் மென்மையான நடிப்பில், ஆக்ரோஷமான வசனங்களை குடும்ப பாணியில் பேசியிருப்பது அழகு. 

வரலட்சுமி தனது முதல் படம் என்பதே தெரியாமல் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லண்டன் வாழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது மிகச்சரியானது. 

முற்பாதியில் கதை எங்கு செல்கிறது என்பது சற்று சிந்திக்க வைத்தாலும், பிற்பாதியில் கதையை விறுவிறுப்பபாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். முழுக்க முழுக்க இளைஞர்களுக்காகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். 

தரண் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. ‘லவ் பண்லாமா? வேணமா?’, ‘ஐ ஆம் ஏ குத்து டான்ஸர்’ பாடல்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று ஆட வைக்கின்றன. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் டன்கன் டெல்போர்ட் ஒளிப்பதிவில் லண்டனின் அழகை மேலும் அழகாக காட்டியிருக்கிறார். படத்தின் இளமையான தோற்றத்துக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா என்றால் அது மிகையல்ல. 

நாகரீகம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்களின் பாசமும், பண்பாடும் என்றுமே மாறாது என்பதை சொல்ல முன்வந்த இயக்குனருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். 

மொத்தத்தில் ‘போடா போடி’ இளமை துள்ளல்.

துப்பாக்கி - சினிமா விமர்சனம்


கேப்டன்" விஜயகாந்த், "ஆக்ஷ்ன் கிங்" அர்ஜூன் பாணியில் "இளையதளபதி" விஜய் ஓர் நேர்மையான இராணுவ வீரராக, இந்திய தேசத்தை காக்க களம் இறங்கி இருக்கும் படம்தான் "துப்பாக்கி!" 

ஆனால் கேப்டன், ஆக்ஷ்ன் கிங் பாணியில் அரைத்த மாவையே... சாரி, அழித்த தீவிரவாதிகளையே மீண்டும் மீண்டும் அழிக்காமல், "எய்தவன் இருக்க அம்பை நோவதேன்..." எனும் எக்காலத்திற்கும் ஏற்ற பழமொழிக்கேற்ப, "ஸ்லீப்பர் செல்ஸ்" எனப்படும் தீவிரவாதத்தில் ஈடுபடும் கூலிகளை மட்டுமின்றி அவர்களது பாஸையே பந்தாடுவதும், இந்திய ராணுவத்தில் சக வீரர்களுக்கே தெரியாமல் உளவுப்பிரிவிலும், முக்கிய பொறுப்பில் இருப்பதும் அந்த பொறுப்பை பயன்படுத்தி லீவிற்கு ஊருக்கு வரும் விஜய், மும்‌பையின் பல்வேறு இடங்களை தாக்க வரும் தீவிரவாதிகளை மிலிட்டரி நண்பர்கள் உதவியுடன் ஒற்றை ஆளாக ஒழித்து கட்டுவதுடன் "ஒன்மேன் ஆர்மி"யாக செயல்பட்டு அவர்களது "தல"யாக செயல்படும் மூளையின் தலைமையிடத்தையும் ஒற்றை துப்பாக்கி, கொஞ்சம் வெடிமருந்துகளுடன் தகர்த்தெரிவதும் தான் "துப்பாக்கி" படத்தின் புதுமை!

ராணுவ வீரராக விஜய், புதிய கெட்-அப்பில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். கேம்பில் சகவீரர்களோடும், சொந்த ஊர் திரும்பியதும் போலீஸ் நண்பன் சத்யனோடும், விஜய் பண்ணும் காமெடிகள் கலாட்டா. 

நாட்டை காட்டிக் கொடுக்கும் அதிகார துரோகி‌கள் முன் 2 துப்பாக்கிகளை வைத்து, "இது லோக்கல், இது என்னோடது. இந்த லோக்கல் துப்பாக்கியால நீயா சுட்டுகிட்டா, அது தற்கொலை, உன் பிள்ளைக்கு வேலை பொண்டாட்டிக்கு பென்ஷன் எல்லாம் கிடைக்கும். 

அதுவே நான் சுட்டு செத்தா உன் குடும்பமே நடுத் தெருவுக்கு வரும்..." என்று பன்ச் டயலாக் பேசியபடி அவர்களை தீர்த்துகட்டுவதில் அதிரடி விஜய் அலட்டல் இல்லாமல் தெரிகிறார் பலே பலே! 

அதே மாதிரி காஜல் அகர்வாலிடம் எனக்கு தம் அடிக்கிற பொண்ணுங்களைத்தான் பிடிக்கும் என கலாய்க்கும் இடங்களில் ரொமான்டிக் விஜய்யும் தூள் பரத்துகிறார்.

விஜய் மாதிரியே காஜல் அகர்வாலும், காதல் அதிரடியாக பெண் பார்க்க யூனிபார்முடன் வரும் விஜய்யை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என தொடர்ந்து கலாய்ப்பதில் தொடங்கி கவர்ச்சி கடலில் மூழ்கி முத்தெடுப்பது வரை... ரசிகர்களை தன் வலைக்குள் வீழ்த்தி விடுகிறார். 

சத்யனுக்கு சரிசமமாக ‌காமெடியில் களைகட்டும் ஜெயராம், மும்பை போலீஸாக, விஜய்யின் நண்பனாக வரும் சத்யன், வில்லன் வித்யூத் ஜம்வால் எல்லோரும் கச்சிதம்!

துப்பாக்கி படத்தின் மற்றுமொரு ஹீரோ சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு என்றால் மற்றொரு வில்லன் ஹாரீஸ் ஜெயராஜின் இசை என்று சொல்லி ஆக வேண்டும்! என்னாச்சு ஹாரிஸ்க்கு எந்த ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லையே...?!

ஆக்ஷ்ன் படங்கள் என்றாலே லாஜிக் மீறல்கள் இல்லாமலா...? ‌ஏகப்பட்டது இருக்கிறது! அதிலும் இந்திய ராணுவத்தில் இருக்கும் ஓர் இளம் ராணுவ வீரர், சொந்த ஊரான மும்பைக்கு லீவிற்கு வருவதும், வந்த இடத்தில் அந்த ஊர் போலீஸ்க்கு சட்டபடி தெரிவிக்காமலே, மொத்த தீவிரவாத கூட்டத்தையும் ஒழித்து கட்டுவதும் நம்பமுடியாத கதை தான் என்றாலும், மும்பை தாக்குதல்களுக்கு முன் இப்படியும் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே! என்று யோசிக்க வைக்கும் விதத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜெயித்திருக்கிறார்!

ஆக மொத்தத்தில் மிலிட்டரி மேஜிக் படமான "துப்பாக்கி - நிச்சயம் வெற்றி துப்பாக்கி!!"

துப்பாக்கி பட சர்ச்சை விவகாரம்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படம் துப்பாக்கி. இந்த படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்னைகள் பூதாகரமாக வெடிப்பது வாடிக்கையாகி விட்டது. 

அந்த வகையில் தற்போது திரைக்கு வந்துள்ள அப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக ஒருசாரர் போர்க்கொடி பிடித்துள்ளனர். 

மேலும், இரு தினங்களுக்கு முன் முஸ்லீம் கட்சியைச்சேர்ந்த 60 பேர் விஜய் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது அவர்கள் போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து விஜய் வீடு மற்றும் சென்னையில் துப்பாக்கி படம் திரையிடப்பட்டுள்ள பல முக்கிய தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை துப்பாக்கி படக்குழுவினர் சந்திப்பதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் கடைசி நேரத்தில் பிரஸ் மீட் கேன்சல் செய்யப்பட்டது. காரணம், யாராவது நிருபர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளைக்கேட்டு, அவர்களுக்கு ஏதாவது பதில் கொடுக்க, அதையே அவர்கள் வேறு மாதிரியாக திரித்து எழுதி விட்டால், அடுத்து வேறு ரூபத்தில் பிரச்னைகள் வெடிக்கும் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளார்கள்.

இசையமைப்பாளராக நடிக்கும் பாக்யராஜ்

அந்த 7 நாட்கள் படத்தில் இசையமைப்பாளராக முயற்சிக்கும் வேடத்தில் நடித்திருந்தார் கே.பாக்யராஜ். 

ஆனால், அப்படத்தில்  அவர் நடித்த பாலக்காட்டு மாதவன் என்ற கேரக்டர் பெயரையே தலைப்பாக வைத்து, தற்போது தயாராகி வரும், "பாலக்காட்டு மாதவன் படத்தில் பெரிய இசையமைப்பாளர் வேடத்தில் நடித்துள்ளார் பாக்யராஜ். 

இந்த கேரக்டரை, அவரே விரும்பி ஏற்று நடிப்பதால், கூடுதல் ஈடுபாட்டோடு நடிக்கும் அவர், தனது கெட்டப்பையும் இப்போதைய இசையமைப்பாளர்கள் போன்று மாற்றி நடித்து வருகிறார். 

இந்த படத்தில், முதலில் மூன்று நாட்கள் மட்டுமே  நடிக்கவிருந்த அவர்,  இப்போது அப்படத்துக்கு, 10 நாட்களுக்கு  மேலாக கால்ஷீட் கொடுத்துள்ளார்.

நயன்தாராவின் புது அவதாரம்

ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில், சீதை வேடத்தில், பவ்யமாக நடித்த நயன்தாரா, தற்போது ராணாவுடன் நடித்துள்ள, "கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தில், கிளாமராக நடித்துள்ளார். 

இப்படம், "ஓங்காரம் என்ற பெயர் மாற்றத்துடன் தமிழுக்கும் வர உள்ளது. இதுபற்றி நயன்தாரா கூறும் போது, "ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடம் என்பதால், அந்த கேரக்டருக்கு ஏற்ப, மாறி நடித்தேன். 

ஆனால், சாதாரண மாடர்ன் கேரக்டர்கள் என்கிற போதும், முழுசாக போர்த்திக் கொண்டு நடித்தால், ரசிகர்களிடம் எடுபடாது. அதனால் தான் ராணாவுடன் நடித்த படத்தில் கதைக்கும், காட்சிக்கும் அவசியப்பட்ட இடங்களில் சற்று கிளாமராக நடித்தேன். 

மற்றபடி, ஓவராக கிளாமர் காண்பிக்கவில்லை. தமிழிலும், அஜீத்துடன் நடிக்கும் படம், ஆர்யாவுடன் நடிக்கும், "ராஜாராணி படம் ஆகியவற்றில், ரசிக்கத் தூண்டும் வகையில், கிளாமராக நடித்து வருகிறேன் என்கிறார்.

டைரக்டர்களை டீலில் விட்ட தனுஷ்


கோடம்பாக்கத்திலுள்ள விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களே இன்னும் தமிழ்நாட்டு எல்லையை கடந்து வடக்கே செல்ல நினைக்கவில்லை. 

ஆனால் 3 படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி என்ற ஒரே பாடல் மூலம் தனுஷ் தற்போது பாலிவுட்டில் கோலேச்சிக்கொண்டிருக்கிறார். 

அவர் நடித்து வரும் ராஞ்சா என்ற மெகா பட்ஜெட்டில் தயாராகிறதாம். இதையடுத்து புதிய படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறாராம்.

இதன்காரணமாக, தமிழ் சினிமாவில் தன்னை நம்பி படம் இயக்கும் சில இயக்குனர்களே மறந்தே விட்டாராம் தனுஷ். 

இதில் களவாணி, வாகைசூடவா படஙகளை இயக்கிய சற்குணம் அடுத்து தனுசை வைத்து சொட்ட வாளக்குட்டி என்ற படத்தை இயக்குவதற்காக மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறார். 

அதேபோல், மரியான் படத்தை இயக்கும் பரத்பாலாவோ பாதி படப்பிடிப்பை முடித்து விட்டு மீதியை எப்போது முடிப்பது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டு நிற்கிறார். 

எப்போது படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்று தனுஷை கேட்டால், இதோ சொல்றேன், அதோ சொல்றேன் என்று எந்த தீர்க்கமான முடிவையும் சொல்ல மாட்டேன் என்கிறாராம். 

இதனால் மேற்படி இரண்டு இயக்குனர்களும் ஆளுக்கொரு பக்கமாக புலம்பிக்கொண்டு திரிகின்றனர்.

என்னை விட என் தம்பி பெரிய நடிகன் - ஆர்யா


முன்பெல்லாம் சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்தவர்கள், ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால் இப்போது சினிமா குடும்ப தொழில் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. 

அப்பா இருந்தால் மகனும் வருகிறார், அண்ணன் இருந்தால் தம்பியும் சினிமாவுக்கு வருகிறார். இல்லையேல் வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 

இந்த நிலையில், சூர்யாவைத் தொடர்ந்து அவரது தம்பி கார்த்தி வந்தது போல் இப்போது ஆர்யாவைத் தொடர்ந்து அவரது தம்பி சத்யாவும் நடிகராகியிருக்கிறார்.

இந்த சத்யாவை ஏற்கனவே தனது சொந்த தயாரிப்பான படித்துறை என்ற படத்திலேயே நடிகராக்கினார் ஆர்யா. ஆனால் அந்த படம் இன்னமும் வெளியாகவிலலை. 

இந்நிலையில், சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் தான் இயக்கும் முதல் படமான புத்தகத்தில் சத்யா நாயகனாக்கியுள்ளார். என் தம்பி சத்யாவுக்கு பெரிதாக நான் நடிப்பு எதுவுமே சொல்லிக்கொடுத்ததில்லை. 

நடிக்க விரும்பினான். நான் ஓகே சொல்லி விட்டேன். ஆனால் முதல் படத்திலேயே அவனது நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. அந்த வகையில் என்னைவிட என் தம்பி பெரிய நடிகனாக வருவான் என்கிறார் ஆர்யா.

தர்ம அடிவாங்கிய இயக்குனர்



குடும்ப சென்டிமென்ட் வைத்து படம் இயக்கும் மதுரமான இயக்குனர் அவர். தற்போது மதுரை டூ தேனி செல்லும் பஸ்சில் நடக்கும் சுவையான சம்பவங்களை வைத்து ஆண்களும், பெண்களும் என்ற பொருள்படும்படியான ஒரு படத்தை இயக்கி வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு தேனி பக்கம் இதன் படப்பிடிப்பு நடந்தது. வழக்கமாக மதுரை பக்கம் படம் எடுத்தால் மதுரையில் உள்ள துணை நடிகர்களை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

இதை மீறி இயக்குனர் இங்கிருந்தே ஆட்களை திரட்டிக் கொண்டு போயிருக்கிறார். 

இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று நியாயம் கேட்டுள்ளனர். 

ராத்திரி வாங்க பேசிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர். சென்றவர்களும் படப்பிடிப்பு தடைபட வேண்டாம் என்று திரும்பி விட்டார்கள். 

இரவு இயக்குரும் நடிகர் நடிகைளும் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கேட்டிருக்கிறார்கள். 

அப்போது புல் மப்பில் இருந்த இயக்குனர் வந்தவர்களை ஆபாச வார்த்தைகளால் கர்ஜிக்க, நானும் மதுரைக்காரன்தான்னு சவுண்ட் விட வந்தவர்கள் இயக்குனருக்கு தர்மஅடி கொடுத்தனர். 

தடுக்க வந்தவர்களுக்கும் சரமாரியா அடி விழுந்தது. முகமெல்லாம் வீங்கிய இயக்குனர் லோக்கல் போலீசில் புகார் கொடுத்தாராம். 

குடித்துவிட்டு ஆபாசமாக திட்டி தாக்கியதாக எதிர்தரப்பும் புகார் கொடுத்திருக்கிறதாம்.

2012 தீபாவளி திரை விருந்து - ஓர் சரவெடி முன்னோட்டம்



ஒவ்வொரு வருடமும் போன்று இந்த வருட தீபாவளி திருநாளையும் பிரமாண்டமாக எதிர்நோக்கி காத்திருக்கிறது தமிழ் திரையுலகமும் அதன் உலகளாவிய ரசிகர்கள் வட்டாரமும். 

ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒரு டஜன் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் என்றும், ஒரு வாரத்திற்கு முன்பு வரை அரைடஜன் படங்களாவது நிச்சயம்!’ என்ற ரீதியிலும் செய்திள் கசிந்து, கடைசியாக “துப்பாக்கி’, “போடா போடி’, “அம்மாவின் கைப்பேசி’, “காசிகுப்பம்’ என நான்கே நான்கு படங்கள் மட்டுமே நாளை 2012 தீபாவளி ரிலீஸ் எனும் நிலையில் இருக்கிறது. 

அவைகளும் கூட சொன்னபடி திரைக்கு வருவது சாத்தியமா? என்பது சத்தியமாக இந்நன்நாளில் நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ணனுக்கே வெளிச்சம்.

இனி தீபாவளி தினத்தில் ரீலீஸாவதாக இபுருக்கும் மேற்படி நான்கு தமிழ் திரைபடங்கள் பற்றிய “நச்-டச்’ முன்னோட்டம்... உங்களுக்காக...

துப்பாக்கி

கள்ளத்துப்பாக்கி, நல்ல துப்பாக்கி பஞ்சாயத்து, கோர்ட், கேஸ் எல்லாம் முடிந்து ஒருவழியாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில், ஹாரீஸ் ஜெபராஜ் இசையில் இளைய தளபதி விஜய் - காஜல்அகர்வால் ஜோடி நடித்து தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது துப்பாக்கி! 

அண்டர் வேர்ல்டு கதைகளம் என்றாலும் லவ், ஆக்ஷன், சென்டிமெண்ட் காமெடி, கலர்ஃபுல் என்று அத்தனை ஜனரஞ்சக சமாச்சாரத்திலும் உச்சத்தை தொட்டிருப்பதாக நம்பப்படும் துப்பாக்கி தீபாவளிக்கு சரமாரியாக வெடிப்பது உறுதியாகிவிட்டது!

போடா போடி

“மன்மதன்’, “வல்லவன்’ டைப் சிம்பு படமென்றாலும் சிம்பு “யங் சூப்பர் ஸ்டார் (?)’ எஸ்.டி.ஆர் (!) ஆன பின்பு வெளிவர இருக்கும் லவ் சப்ஜெக்ட் (“ஒஸ்தி’ ஆக்ஷன் கம் லவ் படமாக்கும்...) படமென்பதால் எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் எகிறவைத்திருப்பது நிஜம்! 

சிம்பு “அலைஸ்’ எஸ்.டி.ஆர். ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் அறிமுகமாக இருப்பதும் இப்படத்தை “நான் அவன் இல்லை’, “அஞ்சாதே’ உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமி சந்த் ஜபக் பிரமாண்டமாக தயாரித்திருப்பதும், ஜெமினி பிலீம் சர்க்யூட் ரிலீஸ் செய்வதும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன், தரண்குமார் உள்ளிட்ட இளம் டெக்னீஷியன்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் “போடா போடி’ படத்தின் பெரும்பலம் என நம்பலாம்!

அம்மாவின் கைபேசி

ஒளி ஓவியர், இலக்கிய காவலர், சமூக ஆர்வலர் என எண்ணற்ற முகம் கொண்ட தங்கர் பச்சானின் திரைப்படம்! பெற்ற தாயை முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு செல்லும் இன்றைய சிட்டி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லும் விதமாக படமாகியிருக்கும் “அம்மாவின் கைப்பேசி’ படத்தில் தங்களுடன் சாந்தனு பாக்யராஜும், இனியா “வாகைசூடவா’வும் இணைந்திருப்பது இந்த பேமிலி டிராமா படத்தை மேலும் பலத்த எதிர்பார்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது!

காசிகுப்பம்

சையது இப்ராஹிம் நல்லாசியுடன், அசோக் சி லோதா வழங்க பாலமுருகன் பிலிம்ஸ் தயாரித்து இருக்கும் "காசிகுப்பம்" படத்தை எழுதி இயக்கி நாயகராகவும் நடித்திருக்கும் புதியவர் அருண் ரொம்பவே துணிச்சல்காரர். 

இல்லையென்றால் படத்தை தீபாவளி மெகா பட்ஜெட் படங்களுடன் ரீலீஸ் செய்யத் துணிவாரா? ஒரு குப்பத்தில் கொடூரங்களை பறைசாற்றும் "காசிக்குப்பம்" படத்தில் லிவிங்ஸ்டன், கீர்த்தி சாவ்லா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும் உண்டு என்பது ஆறுதல்.

இந்த “4’ படங்கள் தவிர தீபாவளிக்கு 4 நாட்கள் முன்னதாகவே, இசைஞானி இளையராஜாவின் இசையை மட்டுமே நம்பி ரிலீஸ் ஆகியுள்ள ராஜ்பா ரவிசங்கரின் “அஜந்தா’வும் தீபாவளி ரேஸில் தான் இருக்கிறது. இதில் எது ஜெயித்தது என்பது நாளை மதியத்திற்கு மேல் தெரியவரும். 

தீபாவளி ரேஸில் கலந்து கொண்ட அனைத்து படங்களுக்கும், அதில் நடித்த திரைவுலகினர் மற்றும் இதர திரைவுலகினர் அனைவருக்கும் தினமலரின்  தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மனைவியை கொடுமைப்படுத்தும் பிரகாஷ்ராஜ்


சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த படம் "கலெக்டர்காரு பாரியா". பிரகாஷ்ராஜ், பூமிகாக நடித்துள்ளனர். 

மனைவியை கொடுமைப் படுத்தும் கொடுமையான கணவன் பிரகாஷ்ராஜ், அவர் மனைவி பூமிகா. 

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல் அவர் பொங்கி எழும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. 

கிருபாகர் ரெட்டி இயக்கி உள்ளார். டி.என்.பி.கதிரவன் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். ஸ்ரீரமணா பிலிம்ஸ் வெளியிடுகிறது. 

படத்துக்கு பெண் அடிமை இல்லை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். "உயர்தர குடும்பத்து பெண்கள் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கிறார்கள். 

காரில் வருகிறார்கள், போகிறார்கள் அவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறோம். 

உண்மையில் அவர்கள் சந்தோஷமாக இருப்பதாக நடிக்கிறார்கள். அந்த உண்மையை சொல்லும் படம். 

இது ஆந்திராவுக்கு மட்டுமல்ல எல்லா மொழிக்கும் பொருந்துகிற படம்" என்கிறார் இயக்குனர் கிருபாகர் ரெட்டி.

டி.வி பெட்டியில இந்த கதைதானே ஒடுது பாஸ்...!!

நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் வெங்கட்பிரபு


தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்தவர் ரிச்சா. அந்த இரண்டு படங்களிலுமே நல்ல பர்பாமென்ஸ் செய்திருந்தார். என்றபோதும் இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அதன்பிறகு அவரை புக் பண்ண படாதிபதிகள் தயங்கினர். 

அதனால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் பிரவேசித்தார் ரிச்சா. அங்கு அவரது நடிப்புத் திறமைக்கு வாய்ப்பு கிடைக்காதபோதும், அவரது கவர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டதோடு, தாராளமாக சம்பளமும் கொடுத்து ரிச்சாவை ஆதரித்து வருகின்றனர்.

இருப்பினும் தமிழில் நடித்தால் தனது ரேஞ்ச் இன்னும் எகிறும் என்று நினைத்த ரிச்சா மீண்டும் மீண்டும் தமிழ்ப்படங்களுக்கு கல்லெறிந்து வந்தார். அப்படி அவர் குறி வைத்த படம்தான். கார்த்தி நடிக்கும் பிரியாணி. 

ஆனால் இந்தபடத்துக்கு முதலில் ரிச்சாவுக்கு சான்ஸ் தருவதாக சொல்லியிருந்த அப்பட இயக்குனரான வெங்கட்பிரபு, பின்னர் ஹன்சிகாவின் கால்சீட் கிடைத்ததால், கடைசி நேரத்தில் ரிச்சாவை கழட்டி விட்டு விட்டார். 

இதனால் கொதித்தப்போனார் அவர். பிரியாணி படத்தில்நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தெலுங்கு படத்தைகூட தவிர்த்தேன். ஆனால் இயக்குனர் வெங்கட்பிரபு என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார். 

அவர் நடிகைகள் கிள்ளுக்கீரையாக நினைக்கிறார். அவருக்கு காலம் சரியான பாடம் புகட்டும் என்று தனது ஆதங்கத்தை கோலிவுட் நண்பர்களிடம் கொட்டித்தீர்த்து வருகிறார் ரிச்சா.

தனது காதல் இயக்குனருக்கு விருந்து வைத்த அமலாபால்


தளபதி நடிகரை வைத்து அடுத்து படம் இயக்கப்போகும் அந்த தாண்டவம் இயக்குனர், தனது அபிமானத்துக்குரிய பால் நடிகையையே அப்படத்திற்கு நாயகியாக்கி அம்மணியின் அன்புக்கு மேலும் பாத்திரமாகிவிட்டார். 

இதனால் முந்தைய தாண்டவம் படத்தில் தன்னை அவர் கழட்டி விட்டதால் கடுப்பில் இருந்த பால் நடிகை, இப்போது இத்தனை பெரிய வாய்ப்பை அவர் கொடுத்த சந்தோசத்தில் திக்கு முக்காடிப்போனாராம். 

அதனால் சேதியறிந்ததும், ஆந்திராவிலிருந்து அடுத்தகணமே பறந்து வந்து காதல் இயக்குனர் முன்பு நின்றிருக்கிறார். 

இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த இயக்குனர், காதல் நடிகைக்கு தன் கையாலே ஸ்வீட் கொடுத்து மேலும் அவரை தித்திக்க வைத்திருக்கிறார்.

இதையடுத்து, இத்தனை நாளும் தன்னை அவர் ஏமாற்றி விட்டதாக எண்ணி, காதல் மனதை மூடியே வைத்திருந்த பால் நடிகை, மனக்கதவை திறந்து அவருடன் மனம் விட்டு பேசியிருக்கிறார். 

அதோடு, தான் தங்கும் ஸ்டார் ஹோட்டலுக்கு அவரை அழைத்து சென்று சூப்பர் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் நடிகை. 

ஆக, இத்தனை நாளும் காதல் கனெக்சனை கட் பண்ணியிருந்தவர்கள் இப்போது மீண்டும் மணிக்கணக்கில் பேசத் தொடங்கி விட்டார்களாம். 

கதை விவாதம் ஒரு பக்கம், காதல் நடிகையுடனான இனிப்பான விவாதம் மறு பக்கம் என படு பிசியாகி விட்டார் தாண்டவம் இயக்குனர்.

தீபாவளிக்கு கள்ளத்துப்பாக்கி வெடிக்கவில்லை - துப்பாக்கி வெடிக்குமா?


தீபாவளிக்கு "துப்பாக்கி", "கள்ளத்துப்பாக்கி", "கும்கி", "போடா போடி", "அம்மாவின் கைப்பேசி", "அஜந்தா", "காசிகுப்பம்" என இன்னும் ஏகப்பட்ட பெரிய சிறிய படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இன்னமும் இருக்கிறது! 

ஆனால் இதில் சொற்ப எண்ணிக்கை படங்களே தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்பதுதான் நிஜம் என்கிறது கோடம்பாக்கம்! 

ஆடியோ ரிலீஸ் வரை, தீபாவளி ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வந்த "கும்கி", தீபாவளி ரேஸில் இல்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. 

"துப்பாக்கி" இன்னமும் டைட்டில் உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் சமரசமாகி, சமாதானம் ஏற்பட்டுவிட்டாலும் கூட முழுதாக கோர்ட் தீர்ப்பு வராததால் தீபாவளிக்கு முன்னதாக 9ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு அதன்பின் தீபாவளி 13ம் தேதி ரிலீஸ் என்றாகிவிட்டது. 

"கள்ளத்துப்பாக்கி" தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமானதால் நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. "போடா போடி" பைனான்ஸ் டெபிசீட்டில் சிக்கியுள்ளதாக கேள்வி!

 "அஜந்தா" நீண்ட நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்து ஒருவழியாக தீபாவளிக்கு முன்பாக 9ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னமும் தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளை தங்களது வசம் வைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள "நீர்ப்பறவை" படம் மற்றும் தீபாவளிக்கு திட்டமிடப்படாத இன்னும் சில படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக ரெடியாகி வருவதாகவும் தெரிகிறது!

நிஜம் தீபாவளி அன்று தான் தெரியும்!!

நடிகர்களுக்கு எதிராக நடிகர் சங்க செயலாளர்


நடிகர்களுக்கு எதிராக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாவி பேசி வரும் பேச்சுக்கள் முன்னணி நடிகர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் ராதாரவி நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்தாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் நடிகர், நடிகைகளின் சம்பள பிரச்னைகளில் பஞ்சாயத்து பேசி வாங்கிக் கொடுத்து இருதரப்பினரிடமும் கமிஷன் பெற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகர்களுக்கு எதிரான அவர் தொடர்ந்து பேசி வருவது குறித்து வருகிற சங்க கூட்டத்தில் பிரச்னையை கொண்டு வர பெரிய நடிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் சத்திரம் பேருந்து நிலையம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியது இதுதான் "அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்களின் காலில் விழுந்து வணங்கினார்கள் நடிகர்கள். 

காரணம் தயாரிப்பாளர்கள்தான் முதலாளிகள். ஆனால் இன்றைக்கு காலை வாருபவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு புரட்யூசரை யாருக்கும் தெரியவில்லை. பெரிய படம் எடுத்த புரட்யூசர்களைகூட இவர் இன்ன படம் எடுத்தார் என்றுதான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. 

ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இயக்குனரும், நடிகரும் உட்கார்ந்து வெற்றியை கொண்டாடுகிறார்கள். தைரியமாக பணம்போட்டு படம் எடுத்த தயாரிப்பாளரை யாரும் கண்டுகொள்வதில்லை. 

தயாரிப்பாளர்களும் நடிகர்களின் பின்னால் ஓடுகிறார்கள். நடிகர்களுக்கு படத்துக்கு படம் சம்பளம் உயர்த்திக் கொடுத்து அவர்களை பெரிய ஆளாக ஆக்குபவர்கள் தயாரிப்பாளர்கள். ஒரு படம் ஓடாவிட்டாலும் அதில் நடித்த நடிகர் அடுத்த படத்துக்கு சம்பளத்தை உயர்த்தி விடுகிறார். 

வில்லனாக நடிக்கும் ஒரு சாதாரண நடிகர் 25 லட்சம் சம்பளம் கேட்கிறார்" என்று பேசினார். ராதாரவியின் இந்த பேச்சு நடிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்குத்துங்றது இதுதானோ...

கோச்சடையானிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் திடீர் விலகல்


ரஜினியின் கோச்சடையான் படத்தின் மேற்பார்வை பொறுப்பை ஏற்று இருந்த டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதில் டைரக்டர் மாதேஷ் அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

ரஜினி நடிப்பில், அவரது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கோச்சடையான். இதில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். 

இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, ருக்மணி, நாசர், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

வரலாற்று கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. 

இப்படத்தின் மேற்பார்வை பொறுப்பை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கவனித்து வந்தார். இந்நிலையில் படத்தில் ஷூட்டிங் எல்லாம் முடிந்து கிராபிக்ஸ், சவுண்ட் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும்நிலையில், ரவிக்குமார் திடீரென மேற்பார்வை பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். 

அவருக்கு பதில் விஜய்யின் மதுர, பிரசாந்த்தின் சாக்லேட், கடைசியாக வினய்யின் மிரட்டல் போன்ற படங்களை இயக்கிய மாதேஷ் அந்த பொறுப்பை ஏற்று இருக்கிறார். 

கோச்சடையான் மேற்பார்வை பொறுப்பிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் திடீரென விலகி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதேசமயம் ரவிக்குமார் இந்தியில் சாமி பட ரீ-மேக் வேலையை துவங்கி இருப்பதால் இப்படத்திலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.  

என்னோட வளர்ச்சியில் ரஜினி, கமல் அக்கறை - விஜய்


என்னோட வளர்ச்சி பாதையில் ரஜினி, கமல் இரண்டு பேருமே ரொம்ப அக்கறையா இருக்காங்க என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 

தொடர்ந்து அதிரடி பஞ்ச் டயலாக்குகளும், அதிரடி ஆக்ஷ்ன்களும் உள்ள கமர்ஷியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய், சமீபகாலமாக தனது ரூட்டை மாற்றியுள்ளார். 

காவலன், நண்பன் என்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் துப்பாக்கி படத்தினை மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார் விஜய். 

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, ரஜினி சார் திடீர் திடீர்னு போன் பண்ணுவார். உங்க ஸ்டில்லை பார்த்தேன், சூப்பரா இருக்கு. 

உங்களோட அடுத்தப்படம் என்ன என்று ரொம்ப ஆர்வமா விசாரிப்பார். அதேப்போல் கமல் சாரை பார்க்க அவரோட அலுவலகத்துக்கு ஒருமுறை போய் இருந்தேன். 

அப்போ நிறைய அட்வைஸ் கொடுத்தார். ஐந்து படங்களுக்கு ஒரு படமாவது நீங்க வித்தியாசமா, மாற்றமா ஒரு படம் கொடுங்க என்று சொன்னார். அவர் சொன்னதை இப்போ தான் என்னால் செய்ய முடிந்தது. 

காவலன், நண்பன், துப்பாக்கி போன்ற படங்களில் நடிப்பதற்கு கமல் சாரோட அட்வைஸ் தான் காரணம். என்னோட வளர்ச்சி பாதையில் ரஜினி, கமல் இரண்டு பேரும் அக்கறையாக இருக்காங்க என்று கூறியுள்ளார். 
Related Posts Plugin for WordPress, Blogger...