துப்பாக்கி - சினிமா விமர்சனம்


கேப்டன்" விஜயகாந்த், "ஆக்ஷ்ன் கிங்" அர்ஜூன் பாணியில் "இளையதளபதி" விஜய் ஓர் நேர்மையான இராணுவ வீரராக, இந்திய தேசத்தை காக்க களம் இறங்கி இருக்கும் படம்தான் "துப்பாக்கி!" 

ஆனால் கேப்டன், ஆக்ஷ்ன் கிங் பாணியில் அரைத்த மாவையே... சாரி, அழித்த தீவிரவாதிகளையே மீண்டும் மீண்டும் அழிக்காமல், "எய்தவன் இருக்க அம்பை நோவதேன்..." எனும் எக்காலத்திற்கும் ஏற்ற பழமொழிக்கேற்ப, "ஸ்லீப்பர் செல்ஸ்" எனப்படும் தீவிரவாதத்தில் ஈடுபடும் கூலிகளை மட்டுமின்றி அவர்களது பாஸையே பந்தாடுவதும், இந்திய ராணுவத்தில் சக வீரர்களுக்கே தெரியாமல் உளவுப்பிரிவிலும், முக்கிய பொறுப்பில் இருப்பதும் அந்த பொறுப்பை பயன்படுத்தி லீவிற்கு ஊருக்கு வரும் விஜய், மும்‌பையின் பல்வேறு இடங்களை தாக்க வரும் தீவிரவாதிகளை மிலிட்டரி நண்பர்கள் உதவியுடன் ஒற்றை ஆளாக ஒழித்து கட்டுவதுடன் "ஒன்மேன் ஆர்மி"யாக செயல்பட்டு அவர்களது "தல"யாக செயல்படும் மூளையின் தலைமையிடத்தையும் ஒற்றை துப்பாக்கி, கொஞ்சம் வெடிமருந்துகளுடன் தகர்த்தெரிவதும் தான் "துப்பாக்கி" படத்தின் புதுமை!

ராணுவ வீரராக விஜய், புதிய கெட்-அப்பில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். கேம்பில் சகவீரர்களோடும், சொந்த ஊர் திரும்பியதும் போலீஸ் நண்பன் சத்யனோடும், விஜய் பண்ணும் காமெடிகள் கலாட்டா. 

நாட்டை காட்டிக் கொடுக்கும் அதிகார துரோகி‌கள் முன் 2 துப்பாக்கிகளை வைத்து, "இது லோக்கல், இது என்னோடது. இந்த லோக்கல் துப்பாக்கியால நீயா சுட்டுகிட்டா, அது தற்கொலை, உன் பிள்ளைக்கு வேலை பொண்டாட்டிக்கு பென்ஷன் எல்லாம் கிடைக்கும். 

அதுவே நான் சுட்டு செத்தா உன் குடும்பமே நடுத் தெருவுக்கு வரும்..." என்று பன்ச் டயலாக் பேசியபடி அவர்களை தீர்த்துகட்டுவதில் அதிரடி விஜய் அலட்டல் இல்லாமல் தெரிகிறார் பலே பலே! 

அதே மாதிரி காஜல் அகர்வாலிடம் எனக்கு தம் அடிக்கிற பொண்ணுங்களைத்தான் பிடிக்கும் என கலாய்க்கும் இடங்களில் ரொமான்டிக் விஜய்யும் தூள் பரத்துகிறார்.

விஜய் மாதிரியே காஜல் அகர்வாலும், காதல் அதிரடியாக பெண் பார்க்க யூனிபார்முடன் வரும் விஜய்யை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என தொடர்ந்து கலாய்ப்பதில் தொடங்கி கவர்ச்சி கடலில் மூழ்கி முத்தெடுப்பது வரை... ரசிகர்களை தன் வலைக்குள் வீழ்த்தி விடுகிறார். 

சத்யனுக்கு சரிசமமாக ‌காமெடியில் களைகட்டும் ஜெயராம், மும்பை போலீஸாக, விஜய்யின் நண்பனாக வரும் சத்யன், வில்லன் வித்யூத் ஜம்வால் எல்லோரும் கச்சிதம்!

துப்பாக்கி படத்தின் மற்றுமொரு ஹீரோ சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு என்றால் மற்றொரு வில்லன் ஹாரீஸ் ஜெயராஜின் இசை என்று சொல்லி ஆக வேண்டும்! என்னாச்சு ஹாரிஸ்க்கு எந்த ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லையே...?!

ஆக்ஷ்ன் படங்கள் என்றாலே லாஜிக் மீறல்கள் இல்லாமலா...? ‌ஏகப்பட்டது இருக்கிறது! அதிலும் இந்திய ராணுவத்தில் இருக்கும் ஓர் இளம் ராணுவ வீரர், சொந்த ஊரான மும்பைக்கு லீவிற்கு வருவதும், வந்த இடத்தில் அந்த ஊர் போலீஸ்க்கு சட்டபடி தெரிவிக்காமலே, மொத்த தீவிரவாத கூட்டத்தையும் ஒழித்து கட்டுவதும் நம்பமுடியாத கதை தான் என்றாலும், மும்பை தாக்குதல்களுக்கு முன் இப்படியும் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே! என்று யோசிக்க வைக்கும் விதத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜெயித்திருக்கிறார்!

ஆக மொத்தத்தில் மிலிட்டரி மேஜிக் படமான "துப்பாக்கி - நிச்சயம் வெற்றி துப்பாக்கி!!"

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...