2012 தீபாவளி திரை விருந்து - ஓர் சரவெடி முன்னோட்டம்



ஒவ்வொரு வருடமும் போன்று இந்த வருட தீபாவளி திருநாளையும் பிரமாண்டமாக எதிர்நோக்கி காத்திருக்கிறது தமிழ் திரையுலகமும் அதன் உலகளாவிய ரசிகர்கள் வட்டாரமும். 

ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒரு டஜன் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் என்றும், ஒரு வாரத்திற்கு முன்பு வரை அரைடஜன் படங்களாவது நிச்சயம்!’ என்ற ரீதியிலும் செய்திள் கசிந்து, கடைசியாக “துப்பாக்கி’, “போடா போடி’, “அம்மாவின் கைப்பேசி’, “காசிகுப்பம்’ என நான்கே நான்கு படங்கள் மட்டுமே நாளை 2012 தீபாவளி ரிலீஸ் எனும் நிலையில் இருக்கிறது. 

அவைகளும் கூட சொன்னபடி திரைக்கு வருவது சாத்தியமா? என்பது சத்தியமாக இந்நன்நாளில் நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ணனுக்கே வெளிச்சம்.

இனி தீபாவளி தினத்தில் ரீலீஸாவதாக இபுருக்கும் மேற்படி நான்கு தமிழ் திரைபடங்கள் பற்றிய “நச்-டச்’ முன்னோட்டம்... உங்களுக்காக...

துப்பாக்கி

கள்ளத்துப்பாக்கி, நல்ல துப்பாக்கி பஞ்சாயத்து, கோர்ட், கேஸ் எல்லாம் முடிந்து ஒருவழியாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில், ஹாரீஸ் ஜெபராஜ் இசையில் இளைய தளபதி விஜய் - காஜல்அகர்வால் ஜோடி நடித்து தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது துப்பாக்கி! 

அண்டர் வேர்ல்டு கதைகளம் என்றாலும் லவ், ஆக்ஷன், சென்டிமெண்ட் காமெடி, கலர்ஃபுல் என்று அத்தனை ஜனரஞ்சக சமாச்சாரத்திலும் உச்சத்தை தொட்டிருப்பதாக நம்பப்படும் துப்பாக்கி தீபாவளிக்கு சரமாரியாக வெடிப்பது உறுதியாகிவிட்டது!

போடா போடி

“மன்மதன்’, “வல்லவன்’ டைப் சிம்பு படமென்றாலும் சிம்பு “யங் சூப்பர் ஸ்டார் (?)’ எஸ்.டி.ஆர் (!) ஆன பின்பு வெளிவர இருக்கும் லவ் சப்ஜெக்ட் (“ஒஸ்தி’ ஆக்ஷன் கம் லவ் படமாக்கும்...) படமென்பதால் எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் எகிறவைத்திருப்பது நிஜம்! 

சிம்பு “அலைஸ்’ எஸ்.டி.ஆர். ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் அறிமுகமாக இருப்பதும் இப்படத்தை “நான் அவன் இல்லை’, “அஞ்சாதே’ உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமி சந்த் ஜபக் பிரமாண்டமாக தயாரித்திருப்பதும், ஜெமினி பிலீம் சர்க்யூட் ரிலீஸ் செய்வதும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன், தரண்குமார் உள்ளிட்ட இளம் டெக்னீஷியன்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் “போடா போடி’ படத்தின் பெரும்பலம் என நம்பலாம்!

அம்மாவின் கைபேசி

ஒளி ஓவியர், இலக்கிய காவலர், சமூக ஆர்வலர் என எண்ணற்ற முகம் கொண்ட தங்கர் பச்சானின் திரைப்படம்! பெற்ற தாயை முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு செல்லும் இன்றைய சிட்டி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லும் விதமாக படமாகியிருக்கும் “அம்மாவின் கைப்பேசி’ படத்தில் தங்களுடன் சாந்தனு பாக்யராஜும், இனியா “வாகைசூடவா’வும் இணைந்திருப்பது இந்த பேமிலி டிராமா படத்தை மேலும் பலத்த எதிர்பார்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது!

காசிகுப்பம்

சையது இப்ராஹிம் நல்லாசியுடன், அசோக் சி லோதா வழங்க பாலமுருகன் பிலிம்ஸ் தயாரித்து இருக்கும் "காசிகுப்பம்" படத்தை எழுதி இயக்கி நாயகராகவும் நடித்திருக்கும் புதியவர் அருண் ரொம்பவே துணிச்சல்காரர். 

இல்லையென்றால் படத்தை தீபாவளி மெகா பட்ஜெட் படங்களுடன் ரீலீஸ் செய்யத் துணிவாரா? ஒரு குப்பத்தில் கொடூரங்களை பறைசாற்றும் "காசிக்குப்பம்" படத்தில் லிவிங்ஸ்டன், கீர்த்தி சாவ்லா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும் உண்டு என்பது ஆறுதல்.

இந்த “4’ படங்கள் தவிர தீபாவளிக்கு 4 நாட்கள் முன்னதாகவே, இசைஞானி இளையராஜாவின் இசையை மட்டுமே நம்பி ரிலீஸ் ஆகியுள்ள ராஜ்பா ரவிசங்கரின் “அஜந்தா’வும் தீபாவளி ரேஸில் தான் இருக்கிறது. இதில் எது ஜெயித்தது என்பது நாளை மதியத்திற்கு மேல் தெரியவரும். 

தீபாவளி ரேஸில் கலந்து கொண்ட அனைத்து படங்களுக்கும், அதில் நடித்த திரைவுலகினர் மற்றும் இதர திரைவுலகினர் அனைவருக்கும் தினமலரின்  தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...