கன்னட சினிமாவை இயக்குவதற்காக, எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, தன்னை மோசடி செய்து விட்டார் என்று கூறி, அப்படத்தின் கதாநாயகி நயானா, இயக்குனர் ரிஷியை செருப்பால் துரத்தி துரத்தி அடித்தார்.
குடி போதையில் ரிஷி, ரகளையில் ஈடுபட்டதாக, பட கதாநாயகன் குற்றம் சாட்டினார். கன்னட சினிமா இயக்குனர் ரிஷி. இவர், "கொட்டலாலோ பூ காய் (கொடுக்காத பூவும், காயும்) என்ற கன்னட திரைப்படத்தை இயக்கி வந்தார். இதன் கதாநாயகியாக, நயானா கிருஷ்ணா நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்ததால், திரைப்படம் வெளியீடு சம்பந்தமாக, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியிலுள்ள ஓட்டல் ஒன்றில், நிருபர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், திரைப்படம் தொடர்பானவர்கள் உட்பட, பலரும் கலந்து கொண்டனர்.
நடிகை நயானா கூறுகையில், ""கொட்டலாலோ பூ காய் திரைப்படத்துக்காக, இயக்குனர் ரிஷி, என்னிடம், எட்டு லட்சம் ரூபாய் வாங்கியிருந்தார். இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை. எனக்கு திரைப்பட வினியோக உரிமையை தருவதாக ஆசை வார்த்தை கூறியிருந்தார்; அதுவும் தரவில்லை. என்னை அவர் மோசடி செய்து விட்டார், என, அவரது முன்னிலையிலேயே குற்றம் சாட்டினார்.
இதை கேட்ட, இயக்குனர் ரிஷி அதிர்ச்சியடைந்தார். நயானா கூறுவதை மறுத்த ரிஷிக்கும், நயானாவுடன் வந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு நடந்தது. முதலில் நடிகையின் உதவியாளர், ரிஷியை தாக்கினார்.
ஆத்திரமடைந்த நயானா, தன் செருப்பை கழற்றி, ரிஷியை மாறி மாறி அடித்தார். இதை எதிர்பாராத ரிஷி, அறையிலிருந்து ஓட்டம் பிடித்தார். பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த ஓட்டல் அறையில், ஒரே களேபரமாகக் காணப்பட்டது. தலைவிரி கோலமாக நடிகை காணப்பட்டார்.
நடிகை கும்பலிடமிருந்து தப்பித்த ரிஷி, ஓட்டலின் வெளியே நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறினார். அந்த நேரத்திலும், நடிகையும், நடிகையுடன் வந்தவர்களும் ரிஷியை தாக்கினர். இதற்கிடையில், உப்பார்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர்.
ஆட்டோவில் இருந்த இயக்குனரை மீட்டு, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த ரகளையால், பத்திரிகையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது. உப்பார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். நயானாவின் செயலை, இயக்குனர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
படத்தின் கதாநாயகனான, கன்னட நடிகர் தனுஷ் கூறியதாவது: நடிகை நயானா, இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. இயக்குனர் ரிஷி குடி பழக்கம் உள்ளவர். பல முறை நயானாவை, கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்; இதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
அவர்கள் இடையே உள்ள கொடுக்கல், வாங்கல் பற்றி தெரியாது. பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் குடித்து விட்டு தான் வந்துள்ளார். இதனால் தான், இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு தனுஷ் கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர் மஞ்சுளா கூறுகையில், ""படப்பிடிப்புக்கு வராமல், நடிகை நயானா பலமுறை முரண்டு பிடித்துள்ளார். அவர்களிடையே உள்ள கொடுக்கல், வாங்கல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; ஓட்டலில் நடந்த அடிதடி பற்றியும் தெரியாது, என்றார்.
0 comments:
Post a Comment