அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் நாகராஜ சோழன் தனது செல்வாக்கையும், முதல் மந்திரியின் ஊழல் மற்றும் கொலை, கொள்ளைகளை மிரட்டி, அரசியலில் துணை முதல் மந்திரி பதவியை பெற்றுக் கொள்கிறார்.
ஏற்கெனவே, கொலை, கொள்ளை, ஊழலில் திளைத்திருந்த நாகராஜ சோழனுக்கு துணை முதல் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும் கூடுதலாக ஆட்டம் போடுகிறார்.
வெளிநாட்டு வியாபாரிகள் காட்டுக்குள் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கும் நாகராஜ சோழன், அவர்களுக்காக காட்டை அழித்து சாலை அமைத்து தர சம்மதம் தெரிவிக்கிறார்.
அதற்காக வனத்துறை அதிகாரிகள் கையொப்பம் அளிக்க நாகராஜ சோழன் உத்தரவிட, ஆனால் வனத்துறை அதிகாரிகளோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த நாகராஜ சோழன் அவர்களை கொல்ல முடிவெடுக்கிறார். நாகராஜ சோழன் செய்யும் அனைத்து தில்லுமுள்ளுகளுக்கும் மணிவண்ணனும் உடந்தையாக இருந்து வருகிறார்.
மறுமுனையில், சமூக சேவகரான சீமான், தனது அக்கா மற்றும் அவரது மகள்களுடன் ஒரு மலைக் கிராமத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது அக்கா மகளான கோமல் சர்மாவுக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் முடிவெடுக்கப்படுகிறது. கோமல் சர்மா அதே மலைக் கிராமத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
வனத்துறை அதிகாரிகளை கொல்ல நாகராஜ சோழனின் அடியாட்கள் இவர்கள் இருக்கும் கிராமத்திற்குள் நுழைகிறார்கள். வனத்துறை அதிகாரிகளை ஓட ஓட விரட்டி நடு ரோட்டில் படுபயங்கரமாக வெட்டிக் கொல்கிறார்கள். இதை பார்க்கும் கோமல்சர்மா விரக்தியாகி தனக்கு திருமணம் வேண்டாம் என உதறித் தள்ளுகிறார்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்த டெல்லியிலிருந்து சிபிஐ வருகிறது. சிபிஐ இந்த கொலைக்குண்டான ஆதாரத்தை திரட்டுகிறது. இந்நிலையில், தன்னை எதிர்த்த வனத்துறை அதிகாரிகளை தீர்த்துக் கட்டிய நாகராஜ சோழன், காடுகளை அழிக்க தீவிரமாகிறார். ஆனால், அந்த காடுகளில் காலங்காலமாக வாழும் பூர்வக்குடி மக்கள், காடுகளை அழிக்க விடமாட்டோம் என போராட்டம் நடத்துகின்றனர். இவர்களுக்கு சீமானும் ஆதரவாக இருக்கிறார்.
இறுதியில் நாகராஜ சோழன் காட்டை அழித்து தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி கண்டாரா? சீமானின் போராட்டம் வெற்றியடைந்ததா? என்பதே மீதிக்கதை.
நாகராஜசோழன், சிபிஐ ஆபீசர் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சத்யராஜ். நாகராஜ சோழன் கதாபாத்திரத்தில் நக்கல், நையாண்டி, லூட்டி என தனக்கே உண்டான பாணியில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிபிஐ ஆபீசர் வேடத்தில்தான் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த பதவிக்குண்டான கம்பீரம் இல்லாததுதான் குறை.
மணிவண்ணன் சத்யராஜின் உதவியாளராக வருகிறார். இவர் பேசும் அரசியல் நையாண்டி பேச்சுக்கள், சமீபகால அரசியலையும், அரசியல்வாதிகளையும் தாக்கும்படி இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் படத்தில் சத்யராஜின் மகனாக வருகிறார். இவர் செய்யும் அரசியல் காமெடியாக இருக்கிறது. ரகுவண்ணனின் கேரக்டர் நேர்த்தியாகவும், தேவையானதாக இருந்தாலும், அவரை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
சமூக சேவகராக வரும் சீமானுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. 2-3 சீன்களில் மட்டுமே தலைகாட்ட வைத்துவிட்டு அவரது கதாபாத்திரத்தை ஆழப் பள்ளத்தில் போட்டு புதைத்துவிட்டார்கள். படத்தில் இரண்டு நாயகிகளின் நடிப்பும், அவர்களின் கேரக்டர்களும் படத்தில் ஒட்டாமல் பயணிக்கிறது.
ஒரு அரசியல் காமெடி படத்தை கொடுக்கவேண்டும் என்ற முயற்சியில் இயக்குனர் மணிவண்ணன் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அமைதிப்படை படத்தின் முதல் பாகத்தை பார்த்தவர்களுக்கு இப்படம் கொஞ்சம் அதிருப்தியைத்தான் அளிக்கும். மணிவண்ணன் – சத்யராஜ் இந்த இருவரின் நடிப்பைத் தவிர்த்து படத்தில் வேறுவிஷயங்களில் இயக்குனர் மணிவண்ணன் கவனம் செலுத்தவில்லை.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதோடு ஒட்டவில்லை. டி.சங்கரின் ஒளிப்பதிவில் மலை சார்ந்த இடங்கள் அடிக்கும் அக்னி வெயிலில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றது.
ஒன்றுக்கொன்று சரியான தொடர்பு இல்லாத துண்டு துண்டான காட்சிகள் வைத்து ரசிப்புத் தன்மையை குறைத்து விட்டார்கள். இருந்தாலும், மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணிக்காக ரசிக்கலாம்.
மொத்தத்தில் ‘நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,’ டெபாசிட் இழக்கவில்லை.
1 comments:
நல்ல விமர்சனம்..
www.amarkkalam.net
Post a Comment