விஸ்வரூபம் வெளியீட்டில் தடுமாறுகிறார் கமல்


கமல் நடித்த விஸ்வரூபம் வெளியீட்டில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. தொடர்ந்து கமல் தடுமாறி வருகிறார். 

டிடிஎச்சில் முதலிலும், பின்னர் தியேட்டரிலும் வெளியிடப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த கமல் அதன் பிறகு இரண்டையும் ஒரே நாளில் வெளியிட இருப்பதாக சொன்னார். 

இதற்கு தியேட்டர், டிடிஎச் இரண்டு தரப்பிலுமே பலத்த எதிர்ப்பு கிளம்ப இப்போது 25ந் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என்ற அறிவித்தார். டிடிஎச்சில் வெளியிடுவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

முதலில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் திரையிடப்படும் என்று அறிவித்தவர் இப்போது தெலுங்கு, தமிழில் மட்டும் என்று அறிவித்திருக்கிறார். 

தியேட்டரில் வெளியிடப்படும் தேதியை அவர் அறிவித்து விட்டதால் டிடிஎச் நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. முதலில் தியேட்டரில் வெளியிட்டால் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதி தவிடுபொடியாகி விடும். 

அவர்களுக்கு பணத்தை திருப்பித் தரவேண்டியது இருக்கும். எங்கள் பெயருக்கும் களங்கம் வரும். இதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டோம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ்சுக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள்.

இந்த நிலையில் இன்று தியேட்டர் அதிபர்கள், மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டுக்கூட்டம் சேம்பரில் நடந்தது. இதில் "கமல் முதலில் விஸ்வரூபத்தை தியேட்டரில் வெளியிட்டால் அவருக்கு 500 தியேட்டர்கள் கொடுத்து அவர் படம் ஓடும்வரை வேறு படங்களை திரையிடாமல் அவர் முதலீடு செய்த 100 கோடியை வசூலித்து கொடுத்து விடுவது" என்று பேசி முடிவு செய்திருக்கிறார்கள். 

இதைக் கேட்டு சந்தோஷப்பட்ட கமல் அந்த கூட்டத்திற்கு வந்து தனது நன்றியை தெரிவித்தார். தியேட்டர் அதிபர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கமலுக்கு மோதிரம் அணிவித்து மகிழ்ந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் கமல் பேசியதாவது:

"வருகிற 25ந் தேதி தமிழ்நாட்டில் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியாகிறது. டிடிஎச்சில் ஒளிபரப்புவது குறித்து அந்த பங்காளிகளுடன் பேசி அறிவிப்பேன். இவர்கள் எனது உறவினர்கள். 

என் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள். நான்தான் அம்பு என்று கருதிவிட்டேன். எனது எல்லா கடனையும் தீர்ப்பதற்காகத்தான் இந்தப் படத்தை எடுத்தேன். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பட்ட கடனைத் தவிர மற்ற கடன்களை அடைத்துவிடுவேன். 

எல்லா பிரச்சினைகளில் இருந்தும, சோர்விலிருந்தும் வெளிவந்து விடுவேன்" என்று செண்டிமெண்டாக பேசினார். டிடிஎச் குறித்து நிருபர்கள்  கேட்ட சரமாரி கேள்விக்கு அதுபற்றி பின்னர் சொல்கிறேன். விரைவில் நல்ல செய்தி வரும் என்று மட்டும் சொன்னர்.

தியேட்டர்காரர்கள் மீது நம்பிக்கை வந்தவிட்ட நிலையில் டிடிஎச் நிறுவனங்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று கமல் திணறி வருகிறார். அதனால் 25ந் தேதி ரிலீஸ் என்பதும் உறுதியானதல்ல. அதிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...