இதுநாள் வரை முன்னணி கதாநாயகிகள் மட்டுமே தமிழ்சினிமாவில் பெரும்பாலும் கடவுள் அவதாரம் எடுத்து வந்தனர். சீடன் படத்தில் முன்னணி நடிகர் தனுஷ் கடவுள்..., அதுவும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதாரம் எடுத்து அசத்தியிருப்பதுதான் விசேஷம்.
தனுஷ் - தமிழ்க் கடவுள் என்றதும் ஏதோ பக்திப்படம்தான் சீடன் என்றும், அதில் தனுஷ் வேலும், மயிலுமாக கலகலவென்று சிரித்தவண்ணம் கடவுளாக காட்சியளித்தபடி யாமிருக்க பயமேன்? என கேட்பாரா? என்றால் அதுதான் இல்லை. அப்புறம்?
அதுதான் கதை! அதாகப்பட்டது., பழனி மலை அடிவாரத்தி்ல ஒரு பெரிய வீடு. பாரம்பரியம் மிக்க அந்த வீட்டில் ஒரு பாட்டியும், அந்த பாட்டியை பார்த்துக் கொள்ள இரண்டு பாட்டிகளும், அந்த மூன்று பாட்டிகளுக்கும் பணிவிடை செய்ய ஒரு வயசுப்பெண்ணும் வாழ்கின்றனர்.
அன்பும், பண்பும் நிறைந்த அந்த வாயசுப்பெண்ணுக்கு சின்ன வயது முதலே முருக கடவுள் மீது அளவுக்கு அதிகமான காதல். அதேமாதிரி ஒரு காதல் அந்த வீட்டுக்கு வரும் பாட்டியின் பேரன் மீதும் ஏற்படுகிறது. அனாதையான அவளுக்கும், அவள் காதலுக்கும், அவள் வணங்கும் முருகப்பெருமான் எந்த விதத்தில் உதவுகிறார்?! என்பதுதான் சீடன் படத்தின் மொத்த கதையும்!
கதாநாயகி அனன்யாவின் காதலுக்கு உதவும் கடவுளாக தனுஷ், முருக கடவுளாகவே வராமல் சமையல் கலைஞர் மடப்பள்ளி சரவணனாக வந்து காய்கறிகழை கழுவிவிட்டு நறுக்கணும், நறுக்கிட்டு கழுவக் கூடாது என்பதில் தொடங்கி, கீரையில் கொஞ்சம் தயிர் சேர்த்து சமைத்தால் அதன் நிறமும் மாறாது, சுவையும் கூடுதலாக இருக்கும்... என்பது வரை தனுஷ் தரும் டிப்ஸ்கள் சூப்பர் என்றால், கடவுளின் அவதாரமாக நாளைக்கு எல்லாம் மாறும்... என உணர்ந்து வாழ வேண்டும் என்பதில் தொடங்கி, மிகப்பெரும் வாழ்க்கையை தரப்போறவங்களுக்கு மிகப்பெரும் கஷ்டத்தையும் தருவான் கடவுள் என்பது வரை... அவர் பேசும் தத்துவங்களும் சூப்பரோ சூப்பர்! தனுஷ் இந்த வயதிலேயே நடிப்பில் கரை கண்டுவிட்டார் என்றால் மிகையல்ல. பேஷ்! பேஷ்..!!
கதாநாயகி அனன்யாவுக்கு படத்தில் நடிக்க நிறையவே வாய்ப்பு. அதனை சரியாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அம்மணி! அவரை மாதிரியே அவரது காதலராக வரும் ஜெய்கிருஷ்ணாவும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.
ஆனால் சாப்ட்டான பாட்டி, ஆப்ட்டான அம்மா என்று தனக்கு அமைந்து இருந்தும், காதலை சொல்லி ஹீரோ பர்மிஷன் வாங்க அவ்வளது தயக்கம் காட்டுவதுதான் நாடகம் போன்று போரடிக்கிறது. அதேமாதிரி க்ளைமாக்ஸில், எனக்கு கொடுத்த வாக்கை காபந்து செய்யப் போகிறாயே... என பாட்டி உருகுவதும், அனன்யா குயிலை பிடித்து கூண்டில் அடைத்து... குஷ்பு ஸ்டைலில் ஒரு பாட்டை பாடுவதும் போர்.
அந்த பாடல் இல்லாமலேயே எல்லாம் தெரிந்த பாட்டி, பேரன் ஜெய் கிருஷ்ணா கையில் அனன்யாவை பிடித்துக் கொடுத்திருந்தால் சீடன் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
பாட்டியாக செம்மீன் ஷீலா (!), அம்மா சுஹாசினி, பொன்வண்ணன், மயில்சாமி, மீரா கிருஷ்ணன், இளவரசு, உமா பத்மநாபன் என டஜன் கணக்கில் நட்சத்திரங்கள் இருந்தும், சீடனை காப்பாற்றுவது தனுஷூம், தினாவின் இசையும், இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவின் வசனமும்தான்.
சீடன் : தனுஷை நல் வேடன் என நிரூபித்திருக்கிறது
1 comments:
நல்ல விமர்சனம். இதையும் படிங்க. http://manasaali.blogspot.com/2011/02/blog-post.html
Post a Comment