உலகநாயகன் கமல்ஹாசன், முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் நடிப்பதுடன், அப்படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இப்படத்தை லார்ட் ஆப் தி ரிங்ஸ் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் தயாரிக்கிறார்.
சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா கடந்த 3 தினங்களாக நடந்தது. இதில் கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மற்றும் படக்காட்சிகளை வெளியிட்டார்.
இதே விழாவில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போனும் கலந்து கொண்டார். அப்போது கமல்ஹாசனை பேரிஆஸ்போன் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் இணைந்து ஒரு `ஹாலிவுட் படத்தில் பணிபுரிவது என்று அப்போது முடிவு செய்தார்கள்.
இதுகுறித்து சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மேட்ரிக்ஸ், லார்ட் ஆப் தி ரிங்ஸ், போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் பேரி ஆஸ்போன். அவர், என்னுடன் இணைந்து படம் பண்ண விரும்புவதாக கூறினார்.
அதன்படி நான் அவரிடம் 9 கதைகள் சொன்னேன். அதில் ஒரு கதை அவருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும், அதனால் இக்கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
மேலும் இப்படத்தை என்னையே ஹீரோவாகவும், டைரக்டராகவும் பணியாற்ற சொன்னார். முதலில் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க சற்று தயங்கினேன். பின்னர் பேரி ஆஸ்போனின் வேண்டுகோளை ஏற்று இப்படத்தை நானே இயக்கி, நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.
நானும், பேரி ஆஸ்போனும் இணைந்து பணியாற்றும் இப்படம் இந்திய பாணியில், ஹாலிவுட் தரத்தில் இருக்கும். அதற்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என்று கூறினார்.
கமல்ஹாசனுக்கு கிடைத்த இப்படியொரு வாய்ப்பு அவருக்கு மட்டும் அல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த ஒரு மிகப்பெரிய கவுரவமாகும்.
மேலும் ஹாலிவுட் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து, படத்தையும் இயக்கும் முதல் இந்திய நடிகர், தமிழர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு கிடைத்து இருக்கிறது.
0 comments:
Post a Comment