யா யா - சினிமா விமர்சனம்


‘டைமிங்’ நடிகர்கள் ‘மிர்ச்சி’ சிவாவும் சந்தானமும் இணைந்து கலக்கி கலகலக்க வைத்து, களகளத்து, களைத்து, கலைந்து போயிருக்கும் படம்தான் ‘யா... யா...’

அதாகப்பட்டது, அம்மா ரேகா, ராமராஜன் ரசிகை என்பதால் மகன் சிவாவுக்கு ராமராஜன் எனப்பெயர் சூட்டி அவரது முறைப்பெண் ‘காதல்’ சந்தியாவுக்கு கனகா எனப்பெயர் (நல்லவேளை ‘கரகாட்டக்காரன்’ கனகா எனப் பெயர் சூட்டவில்லை..) சூட்டி இவருக்கு அவர், அவருக்கு இவர் என வளர்த்து ஆளாக்குகின்றனர். 

ஆனால், ‘போனால் அரசு வேலைக்குத்தான் போவேன்..’ என்று வைராக்கியத்துடன் வேலை வெட்டி எதற்கும் போகாம அப்பா காசிலும் அடுத்தவங்க பணத்திலும் குவாட்டர், கட்டிங், சைடிஸ் என ஜபர்தஸ்துடன் வாழுகின்ற சிவா, தன் பெயரை தோனி என மாடர்னாக மாற்றிவைத்துக் கொண்டு கீதா-தன்ஷிகா பின் காதல் கத்திரிக்காய் என்று அலைகிறார்.

மற்றொரு பக்கம் சந்தானத்தின்  அப்பா ராஜ்கிரண் ரசிகர் என்பதால் அவருக்கு ராஜ்கிரண் எனப் பெயர்சூட்டி வளர்த்து ஆளாக்க, வெட்டி ஆபீசராக திரியும்‌ அவரும் ஷேவாக் என்னும் கிரிக்கெட் பிளேயர் மீதுள்ள அபிமானத்தில் பெயர் மாற்றத்துடன் தோனியின், அதாங்க ராமராஜன் என்னும் சிவாவின் நண்பராக அவருக்கு தன்ஷிகாவுடனான காதலுக்கு உதவுவதுபோல் சில சுயலாபங்களுக்காக உபத்திரவம் செய்கிறார். 

கூடவே, சிவாவின் மாமன் மகள் ‘காவலர்’ சந்தியாவை (‘காதல்’ சந்தியாவேதன் படத்தின் இவர் பெண் கான்ஸ்டபிள்...) ‘லவுஸ்’ வயப்படுகிறார். (நல்லவேளை ‘ராஜ்கிரண்’ சந்தானத்திற்கும் ராமராஜனின் முறைப்பெண் கனகா மாதிரி மீனா, சங்கீதா என இரண்டு அத்தை, மாமா மகள்கள் இல்லை..)! அப்புறம்? அப்புறமென்ன? சந்தானம் அவருக்கு பின்னால் இருக்கும் தேவதர்ஷினி உள்ளிட்டவர்களின் தடை பல கடந்து சிவா - தன்ஷிகாவின் காதல் கைகூடியதா? சந்தானம் - சந்தியாவின் திடீர் காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா?! என்பது க்ளைமாக்ஸ்!

‘மிர்ச்சி’ சிவா ராமராஜன் ‘அலைஸ்’ தோனியாக நிறைய பேசுகிறார். நிறைய குடிக்கிறார். கொஞ்சமாக காதலிக்கிறார். கொஞ்சம் கொஞ்சம் சந்தானம், சந்தியா, டாக்டர் சீனிவாசன், அப்பா இளவரசு, அம்மா ரேகா, உடன்பிறப்பு ஸ்டெபி உள்ளிட்டவர்களையும் சேர்த்து நம்மையும் கலாய்த்து கலகலப்பூட்டுகிறார். 

ஆங்காங்கே ‘கடி’க்கவும் செய்கிறார். இனியும் சிவா, இது மாதிரி கதைகளில் ‘காமெடி’, ‘கடி’ படங்களில் நடிப்பதைக் குறைத்து கதையம்சம் நிறைந்த படங்களில், பேச்சைக்குறைத்து நடிப்பது நலம் பயக்கும்!

சந்தானம் ராஜ்கிரண் ‘அலைஸ்’ ஷேவாக் ‘அலைஸ்’ சச்சினாக (அது ‌எப்போ?) பேசும் வசனங்கள் கண்டு தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. ‘புலிக்கு முன்னாலேயே போன மானும், பொண்ணுங்க பின்னாடி போன ஆணும் தப்பி பிழைத்ததா சரித்திரம் கிடையாது...’ என்னும் வசனத்தில் தொடங்கி, ‘புல்லா  தண்ணி அடிச்ச பசங்களைகூட நம்பிடலாம். ஆனா புள்ள பூச்சியாட்டம் இருக்கும் பொண்ணுங்களை நம்பமுடியாது என்பது வரை படத்திற்கு இருநூறு, முந்நூறு காமெடி ‘பன்ச்’ வசனங்களை எங்குதான் சந்தானம் கவ்வி பிடிக்கிறாரோ?! எல்லாமே காமெடி சரவெடி!

‘பவர் போன ஸ்டார்’ சீனிவாசன், தனுஷ், அஜீத், விஜய், கமல், ரஜினி கெட் அப்புல வந்து பயமுறுத்துகிறார். ரசிகர்கள் பாவம்!

தன்ஷிகாவின் கவர்ச்‌சி சந்தியாவின் நடிப்பு முதிர்ச்சி இரண்டும் படத்திற்கு பெரும்பலம். ரேகா, ஸ்டெபி, தேவதர்ஷினி, இளவரசு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.. அதில் சிவாவுக்கு ரூட்டு போட்டு சீனிவாசனை பிக்அப் பண்ணும் தேவதர்ஷினியின் ‘பல்’லும் சொல்லும்‌ திகிலூட்டுகின்றன என்றாலும் காம நெடியில்லா காமெடி!

விஜய் எபினேசரின் இனிய இசை, வெற்றியின் அழகிய ஒளிப்பதிவு என எல்லாம் இருந்தும் ஐ.ராஜசேகரின் எழுத்தும் இயக்கமும் வெறும் காமெடியை மட்டுமே நம்பி இருப்பது சற்றே திகட்டுகிறது!

மொத்தத்தில் ‘யா... யா...’ - ‘சும்மா ‘வாய்யா’ - சிரிச்சுட்டு ‘போய்யா’!’ என்னும் அளவிலேயே இருக்கிறது!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...