ஓடி ஒளிய நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா : வடிவேலு

நிலமோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய்தியை அடுத்து, வடிவேலு தான் எங்கும் ஓடவில்லை என்றும், தலைமறைவாக இருப்பதற்கு நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா என்று கூறியுள்ளார்.

தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூர் பகுதியில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20லட்சத்திற்கு வாங்கியதாகவும், அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் வடிவேலு வாங்கியுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் என்பவர் புகார் கொடுத்திருந்தார்.

இந்தவழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு தலைறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் வடிவேலோ நான் எங்கும் ஓடவில்லை, போலீசார் எப்போது கூப்பிட்டாலும் விசாரணைக்கு வருவேன் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நிலமோசடி செய்ததாக என் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் நான் தலைமறைவாகிவிட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல்லணும்னா, இதில் ஏமாந்தவனே நான் தான்.

வாங்கிய இடத்தை பறிகொடுத்து போய் நிற்கிறேன். 2002-ல் அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன்.

அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன்.

அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால் விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.

உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். ஆனால் மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க.

நான், என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். எனக்கு படிப்பறிவு குறைவு, பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன்.

என் குல தெய்வமான அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு, மோசடி சொத்தை வாங்கி கொடுத்து என்னை ஏமாற்றி விட்டனர். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன்.

நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, அப்படியே போனாலும் ஒண்ணு சென்னைக்கு போவேன், இல்லேன்னா மதுரைக்கு போவேன்.

போலீஸ் தேடலுக்கு பயந்து போய் ஒளிய, நான் என்ன எனகவுன்டர் குற்றவாளியா...? நான் எங்கும் ஓட மாட்டேன். போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன் என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...