சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய வித்தியாசமும், விறுவிறுப்பும் மிக்க வெற்றிப்படங்களை இயக்கிய மிஷ்கின், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் வித்தியாசமான படம்தான் நந்தலாலா.
அவர் இயக்கத்தில் வெளிவந்த மற்ற படங்களைப் போன்று விறுவிறுப்பு இல்லாமல் விருது படங்களைப் போன்று வித்தியாசமான கதையும், காட்சியமைப்புகளும்தான் நந்தலாலா படத்தின் பலமும் பலவீனமும். இப்படம் வெளிவராமல் எத்தனையோ நட்கள் தாமதமானதில் இருந்தே இது எத்தனை நல்ல படம் என புரிந்திருக்கும்.
பாட்டியின் அரவணைப்பில் வளரும் சிறுவன் ஒருவன் பள்ளி சுற்றுலாவிற்கு போவதாக பாட்டியிடமும், வேலைக்கார அம்மாவிடமும் சொல்லிவிட்டு சுற்றுலாவுக்குப் போகாமல் தன் தாயை தேடி தன் தாய் இருப்பதாக பாட்டி சொல்லி வரும் கிராமத்திற்கு கிளம்புகிறான்.
அதேநேரம், சின்ன வயதிலேயே தன் தாயால் மனநல காப்பகத்தில் விடப்படும் மனநோயாளியான கதையின் நாயகனும் தன் தாயை தேடி காப்பக காவலாளி ஒருவரை அடித்துப் போட்டு விட்டு அவரது உடையில் தாயை தேடி கிளம்புகிறார். தாயைத் தேடி செல்லும் இந்த இருவரும் எதிர்பாராதவிதமாக ஒன்று சேர, இருவரும் சேர்ந்து தங்களது அம்மாக்களை தேடி கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் நந்தலாலா படத்தின் மொத்த கதையும்!
இத்துனோன்டு கதையை இயக்குனர் மிஷ்கின் காட்சிப் படுத்தியிருக்கும் விதம்தான் வித்தியாசமோ வித்தியாசம். அதிலும் இவரது கிராமத்து பெயர் தாய்வாசல் என்றும், அந்த சிறுவனின் பெயர் அன்னை வயல் என்றும் சென்டிமெண்ட்டால் பெயர் சூட்டியிருப்பதில் தொடங்கி, பரபரப்பான நெடுஞ்சாலைகளில் நடந்தே வரும் இருவரும் பண்ணும் சேட்டைகள் வரை சகலத்திற்கும் கோட்டை விடாமல் மிக அழகாக ஒரு படத்தை முயற்சித்திருக்கிறார் டைரக்டர் எனும் வகையில் மிஷ்கினுக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லத் தோன்றுகிறது.
கதையின் நாயகராக மிஷ்கின் கலக்கலாக நடித்திருக்கிறார். அதுவும் முட்ட முட்ட முழிக்கும் தனது விழிகளாலேயே தனது மன வியாதியை வெளிப்படுத்தும் இடங்கள் சூப்பர்ப். அதேநேரம் சிறுவனின் தாய் வேறு ஒருவருடன் வாழ்வதை சிறுவனிதம் மறைக்கும் அளவிற்கு விவரம் தெரிந்த மிஷ்கினுக்கு, பேண்ட்டை போட்டுக் கொள்ளத் தெரியாதது, சின்னதம்பி பிரபு மாதிரி நம்ப முடியாமல் இருக்கிறது.
அதேமாதிரி அவர் கையில் பிடித்துக் கொண்டே திரியும் பேண்ட்டை பாதி படத்திற்கு மேல் ஒரு நாடா மூலம் கட்டி விடும் பள்ளி மாணவி, சைக்கிளில் போய் டிராக்டரில் திரும்பி வரும் காட்சிகள், மிலிட்டரி கெட்-அப்பில் பைக்கில் இரண்டு குண்டு ஆசாமிகள் வரும் காட்சிகளும், டிரக் - லாரி உள்ளிட்டவைகளில் மிஷ்கினும், சிறுவனும் தப்பிக்கும் இடங்களும் வேறு ஏதோ அயல்நாட்டு மொழிப்படங்களில் பார்த்த ஞாபகம்.
விலைமாதுவாக வரும் ஸ்னிக்தா,னும் அவரை பழங்கால காரில் துரத்தும் கிழவரும், லாரியில் ஹாரனை பிடுங்கி வந்து அதனால் மிஷ்கின் அடிபடும் இடங்களும், இளநீர் காரரிடம் இளநீர் திருடி, பின் அவரது மயக்கம் தாகத்திற்கே இளநீர் தரும் இடங்களும் மிஷ்கினின் இயக்கத்திற்கு சான்று.
மிஷ்கின் மாதிரியே விலைமாதராக வரும் ஸ்னிக்தா, பள்ளி மாணவி, இளநீர் வியாபாரி, மனநோயாளியாக வரும் ரோஹினி, பள்ளி சிறுவன் என சகலரும் பளிச் என்று நடித்திருக்கிறார்கள்.
விருதை மட்டுமே குறிவைத்து படம் வேகமே இல்லாமல் பயணிக்கும் விதம் வெறுப்பை ஏற்படுத்தினாலும், ரசனை மிகுந்தவர்களுக்கு லாலா கடை இனிப்பு இந்த நந்தலாலா என்றால் மிகையல்ல..!
0 comments:
Post a Comment