உத்தமவில்லனுக்காக வித்தியாசமான மேக்கப்பில் கமல்ஹாசன்


ஒன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும்போது, தனது கெட்டப்பை மாற்றிக்கொள்ள மேக்கப்பில் அதிக ஈடுபாடு காட்டுவார் கமல். 

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இந்தியன் படத்தில் தாத்தாவாக நடித்த வேடத்துக்காக தன்னை முழுசாக மாற்றிக்கொள்ள உடம்பை குறைத்தது மட்டுமின்றி, அதற்கான ஒப்பனை செய்து கொள்ளவும் ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 8 மணி நேரம் வரை செலவிட்டார்.

அதைத் தொடர்ந்து, அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்திற்காக ஒப்பனை மற்றும் உடை அலங்காரத்திற்கும் பெரும்பகுதி நேரத்தை செலவிட்ட கமல், தசாவதாரம் படத்தில் 10 விதமான வேடங்களுக்காக 10 மணி நேரம் வரை ஒவ்வொரு நாளும் செலவிட்டார். அப்படி கடினமாக அவர் உழைத்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெற்றன.

அப்படங்களைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்திலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து வரும் கமல் அடுத்து நடிக்கவிருக்கும் உத்தமவில்லன் படத்திலும் தன்னை வித்தியாசப்படுத்தி காட்டப்போகிறாராம். 

கே.பாலசந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் வித்தியாசமாக உருவாகியுள்ளதாம். அதனால் அதற்கேற்ப தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ள்போவதாக தெரிவித்துள்ள கமல், அதற்காக மேக்கப் மற்றும் காஸ்டியூமுக்காக மட்டும் ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் வரை செலவிடப்போகிறாராம். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஒரு மேக்கப்மேனும் வருகிறாராம்.

ஆக, இனி கமல் நடிக்கும் ஒவ்வொரு படத்திலுமே அவரை மாறுபட்ட தோற்றத்தில்தான் காண முடியும் என்கிற அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

நயன்தாராவுடன் மோதும் ஜெயம்ரவி


பேராண்மைக்குப்பிறகு தனது சாக்லேட் பாய் இமேஜிலிருந்து ஆக்ஷன் இமேஜ்க்கு மாறி வந்த ஜெயம்ரவி, ஆதிபகவன் படத்தில் ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கினார். 

அதோடு நில்லாமல், அப்படத்தில் நாயகியாக நடித்த நீதுசந்திராவுடனும் ஒரு சண்டை காட்சியில் நடித்திருந்தார்.

அதையடுத்து, இப்போது தனது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கும் படத்திலும் அப்பட நாயகியான நயன்தாராவுடன் ஒரு சண்டை காட்சியில் நடிக்கிறாராம் ஜெயம்ரவி. 

இப்படத்தில் நயன்தாரா கராத்தே தெரிந்த போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் அவர்களது சண்டை காட்சியை அதிரடியாக படமாக்குகிறாராம் ஜெயம்ராஜா.

ஏற்கனவே, பில்லாவில் ஆக்ஷன் பக்கம் மெல்லமாக திரும்பிய நயன்தாரா, ஈ படத்தில் ஜீவாவுடன் மோதினார். 

அதையடுத்து ஆரம்பம் படத்திலும் ஒரு சண்டை காட்சியில் நடித்தவர், கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்திலும் ஆக்ஷன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். 

ஆக பல படங்களில் ஆக்ஷன் வேடங்களில் நடித்து பக்காவாக தன்னை தயார்படுத்தி விட்ட நயன்தாரா, ஜெயம்ரவியுடன் மோதும் சண்டை காட்சியில் இதற்கு முந்தைய பைட் சீன்களை விட பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கூடுதல் சிரத்தை எடுத்து பயிற்சி எடுக்கப்போகிறாராம்.

விதார்த்தை குப்பை மேட்டில் புரட்டி எடுத்த இயக்குநர்



மைனா படம் மூலம் பிரபலமான நடிகர் விதார்த் தற்போது ஆள், உலா, விழித்திரு, பட்டைய கிளப்பனும் பாண்டியா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இதில் ஒரு படத்தில் விதார்த்தை குப்பை மேட்டில் புரட்டி எடுத்துள்ளார் இயக்குநர் ஒருவர். 

ஆனந்த் கிருஷ்ணா இயக்கி வரும் ஆள் படத்தில் தான் இந்த கூத்து நடந்துள்ளது. 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மோசமான நாள் வரும். அதுமாதிரி விதார்த்துக்கும் ஒரு மோசமான நாள் அமைந்தது. அது என்ன என்பது ஆள் படத்தின் கதை. 

கதையின் தேவை கருதி, தென்னிந்தியாவில் மிகப்பெரிய குப்பை கிடங்கு என்று அழைக்கப்படும் சென்னையில் உள்ள யானைக்கவுனி மற்றும் கல்யாணபுரம் போன்று சென்னையை சுற்றியுள்ள அத்தனை குப்பை மேடுகளிலும் விதார்த்தை புரட்டி எடுத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஆனந்த். 

படத்தின் முக்கியத்துவம் கருதி, விதார்த்தும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்துள்ளாராம் விதார்த். 

ரஜினி, கமலை இயக்குகிறார் ஷங்கர்

சிங்கம்-2 , பீட்சா-2 படங்களைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 உள்பட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில, இதுவரை இரண்டாம் பாகம் இயக்காமல் இருந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கும இரண்டாம் பாகம் இயக்கும் ஆசை மேலோங்கியிருக்கிறதாம்.

அதனால், 1996ல் கமலை இரண்டு வேடங்களில் இயக்கிய இந்தியன் படத்தையும், 2010ல் ரஜினியை இயக்கிய எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம். 

தற்போது விக்ரம நடிப்பில் ஐ படத்தை இயக்கி முடித்து விட்ட ஷங்கர், அடுத்தபடியாக ரஜினியை வைத்து எந்திரன்-2வை முதலில் தொடங்குகிறாராம்.

அதையடுத்து, கமலை வைத்து இந்தியன்-2வை இயக்குகிறாராம். தற்போது விஸ்வரூபம்-2 படத்தை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள கமல், அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் ஆகிய படங்களில நடிப்பதால், இந்த படங்களை முடித்து விட்டு ஷங்கர் இயககும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. 

மேலும், இந்த இரண்டு படங்களுமே இதுவரை எந்த தமிழ் படங்களும் உருவாகாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிறதாம்.

இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்


ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இது கதிர்வேலன் காதல்! 

தாத்தா கலைஞர் கருணாநிதி எனும் கே.கே. என்பதாலோ என்னவோ தான் நாயகராக நடிக்கும் படங்களில் எல்லாம் டைட்டிலில் இரண்டு கே வருவது மாதிரி பார்த்துக் கொள்ளும் சென்டிமெண்டில் இருப்பார் போலும் உதயநிதி! அந்த சென்டிமெண்ட்டும், கதிர்வேலன் காதலும் உதயநிதிக்கு கை கொடுத்திருக்கிறதா? பார்ப்போம் இனி...

கதைப்படி, மதுரை பக்கத்து பெரிய இடத்துப்பிள்ளை உதயநிதி, ஐந்தாங்கிளாஸ் படிக்கும் காலத்தில் இருந்தே தீவிர ஆஞ்சநேயர் பக்தர்! பெண் வாடையே பிடிக்காதவர். 

ஆனால் அவரது தோஸ்த் சந்தானத்திற்கு காதல், பெண்கள்... என்றால் கொள்ளை இஷ்டம்! ஆனால் உதயநிதியின் ஆஞ்சநேய அவதாரங்களால் தன் காதலிகளை இழக்கும் சந்தானம், உதயநிதியின் சங்காத்தமே வேண்டாம் என கோயமுத்தூர் பக்கம் நவீனமாக கொழுப்பை குறைக்கும் லேகியம் விற்க போய்விடுகிறார். 

அதேநேரம் உதயநிதியின் உடன்பிறந்த அக்கா சாயாசிங்கும், கோயமுத்துக்காரர் பரத்ரெட்டியை காதலித்து கரம்பிடித்து கோவையில் செட்டிலாகிறார். 

புருஷனுடன் சின்ன ஊடலில் ஊருக்கு வந்திருக்கும் சாயா சிங் விஷயத்தில், காதல் திருமணம் என்பதால் உதயநிதியின் தந்தை நரேன் பட்டுக்கொள்ளாமல் இருக்க, அக்காவை மாமாவுடன் சேர்த்து வைக்க பிஸினஸ் விஷயமாக சேலம் போவதாக சொல்லிவிட்டு கோயமுத்தூர் போகின்றார் உதயநிதி!

அங்கு தன் அக்கா வீட்டு, எதிர்வீட்டு தேவதை நயன்தாராவை பார்த்து ஆஞ்சநேயர் பக்தர் அவதாரத்தை உதறிதள்ளும் உதயநிதி, நண்பர் சந்தானத்துடன் சேர்ந்து கொண்டு அம்மணியை கலாய்ப்பதும், பின் காதலிலும் விழுகிறார். அப்புறம்? அப்புறமென்ன.? 

நயன்தாராவின் நண்பர் என்று சொல்லிக்கொண்டு அவரை அடையத்துடிக்கும் நட்பு துரோகியின் முகத்திரையை நயன்தாராவுக்கு கிழித்துகாட்டி அவரிடம் நல்லபெயர் எடுக்கும் உதயநிதி மீது நயன்தாராவுக்கும் காதல் வருவதும், அந்த காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்று கொண்டனரா? இல்லையா.? என்பதும் தான் வித்தியாசமும், விறுவிறுப்புமான இது கதிர்வேலன் காதல் படத்தின் மிச்ச, சொச்ச கதை!

கதிர்வேலனாக உதயநிதி ஸ்டாலின் கூலிங்கிளாஸூம், எக்ஸ்பிரஸனுமாக ஒருமாதிரி சமாளித்து இருக்கிறார். நயன்தாராவுடனான காதல் காட்சிகளைக் காட்டிலும் அப்பா நரேன், அக்கா சாயாசிங், மாமா பரத்ரெட்டி, தோஸ்த் சந்தானம் இவர்களுடைய காம்பினேஷன் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார் உதயநிதி! 

நயன்தாரா ஜோடி என்றதும், உதயநிதியின் ஓரிஜினல் வூட்டுக்காரம்மா ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு உதயநிதியை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பியிருப்பாரோ? எனும் சந்தேகத்தை கிளப்புகிறது நயன்தாரா - உதயநிதி காதல் காட்சிகளில் உதயநிதியின் எக்ஸ்பிரஷன் மற்றும் வைபிரேஷன்கள்! 

இதையெல்லாம் மீறி, அப்பா நரேனிடம் க்ளைமாக்ஸில், எல்லா பிள்ளைகளும் தங்கள் மனதில் காதல் மலர்ந்ததும் அப்பா, அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம், ஆனால் எத்தனை பெற்றோர் பிரண்ட்ஸாக பழகுகிறீர்கள்? கெளரவம், அது, இது... என்று காதலுக்கு எதிர்ப்பு தானே சொல்கிறீர்கள்... என ஒட்டுமொத்த காதலர்கள் சார்பாக உருகும்போது உதயநிதிக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லத் தோன்றுகிறது! வாவ்!!

நயன்தாரா வழக்கம்போலவே பவித்ரா எனும் அழகு பதுமையாக வந்து முதுமை நிரம்பியவர்களையும் உசுப்பேற்றுகிறார்.

மயில்வாகணன் சந்தானம் தான் கதிர்வேலனின் காமெடி, கமர்ஷியல் வாகனம். எதுக்கு நீ சண்டைக்கு போற பாக்யராஜ் மாதிரி வாட்ச், மோதிரத்தை எல்லாம் கழட்டி வக்கிற...? என கேட்பதில் தொடங்கி எல்லா பெண்களும், சூர்யா மாதிரி பையன் வேணும் தான் பார்ப்பாங்க... 

ஆனால் கடைசியில ஏரியா பையனுக்கு தான் உஷாராவாங்க... என இந்தக்காலத்து இளம் பெண்களை வம்புக்கு இழுப்பது வரை... சீனுக்கு சீன் தியேட்டரை அதிர விடுகிறார்!

நரேன், ஜெயப்பிரகாஷ், சுந்தர், பரத், முருகதாஸ், சரண்யா பொன்வண்ணன், சாயாசிங், வனிதா, கலாகல்யாணி, நீது நீலாம்பரன் எல்லோரும் தங்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்! 

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் கதிர்வேலன் காதலை மேலும் பலமாக்குகின்றன. 

அடிக்கடி உதயநிதி 5-ங்கிளாஸில் இருந்து ஆஞ்சநேயர் பக்தர் என்பதும், சாயாசிங் ஊரிலிருந்து, உதயநிதிக்கு அடிக்கடி போனில் எதிர்வீட்டுப் பெண்ணை பார்த்துடாத... என்பது, உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும், எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில், இது கதிர்வேலன் காதல் - ஓ.கே.!

மொத்தத்தில், உதயநிதியின் - ஓ.கே. ஓ.கே., அளவு இல்லாவிட்டாலும் கதிர்வேலன் காதல் - ஓ.கே.,எனும் அளவில் இருப்பது ஆறுதல்!!

போலீஸ் ஸ்டோரி(ஹாலிவுட்) - சினிமா விமர்சனம்


தங்கையின் மரணத்துக்கு பழி வாங்கும், ஒரு அண்ணனின் கதையை, த்ரில்லராக தர முயற்சி செய்திருக்கிறார் ஜாக்கி சான். ஆனால், இந்த, போலீஸ் ஸ்டோரியில், அதிக சாகசங்கள் இல்லை. 

கேப்டன் ஜான் (ஜாக்கி சான்), கடமை காரணமாக, மருத்துவமனையில் இருந்த மனைவியைக் காப்பாற்ற முடியாமல் இழக்கிறார். 

அதனால், தன் ஒரே மகளின் வெறுப்புக்கு ஆளாகிறார். மதுக்கூடம் (பார்) நடத்தும் வூவோடு, அவர் மகளுக்கு காதல் ஏற்படுகிறது. வூ, நல்லவனல்ல என்கிற ஜாங்கின் பேச்சை, அவள் கேட்க மறுக்கிறாள்.

வூ, தந்திரமாக, ஜாங்கை தன் விடுதிக்கு வரவழைக்கிறான். அவரை பிணைக்கைதியாக்கி, சிறையில் இருக்கும் குற்றவாளி நிஷாலோவை விடுவிக்க கோருகிறான். 

ஆனால், அவன் நோக்கம் வேறு. தன் தங்கையின் மரணத்திற்கு காரணமான நிஷோலாவை பழி வாங்கவே, இந்தக் கடத்தல் நாடகத்தை அவன் அரங்கேற்றுகிறான். கேப்டன் ஜாங், அவன் திட்டங்களை முறியடித்து, தன் மகளையும், நிஷாலோவையும் காப்பாற்றினாரா? என்பதை, பரபரப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் டிங் ஷெங். 

தன் வயதிற்கேற்ற பாத்திரத்தில் ஜாக்கி ஜொலிக்கிறார். ஒரு பாசத் தகப்பனாக அட்டகாச நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனாலும், அவரது காமெடி சண்டைகளை ரசித்துப் பார்க்கும் கூட்டம், இந்த அவதாரத்தில் அவரை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே. 

ஜாக்கியைத் தவிர, எல்லாருமே தட்டையான சீன புதுமுகங்கள் என்பதால், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டுகிறது. காட்சிகளுடன் ஒன்ற முடியவில்லை என்பது நிஜம். தங்கைப் பாசம், தந்தை பாசம் என்று தடம் மாறியதால், வழக்கமான ஜாக்கி சான் படம் போல், சுவாரஸ்யமாக இல்லை. நகைச்சுவை, மருந்துக்கு கூட இல்லை என்பது கூடுதல் மைனஸ். 

அதிரடி சண்டை படங்களில் நடிக்க மாட்டேன் என்று ஒதுங்கப்போகும் ஜாக்கி, தன் கடைசி சாகசப் படத்தில், அதிக பட்சம் அவரது பிராண்ட் காமெடி கைகலப்பை காட்டியிருப்பார் என்று நம்பிப் போனால், ஏமாற்றம் தான் ஏற்படும்.

மொத்தத்தில், ''போலீஸ் ஸ்டோரி - போலி ஸ்டோரி!''

விஜய்யின் 57வது படம் தீரன்


திடுதிப்பென்று படங்களுக்கான டைட்டிலை அறிவித்தால் பிரச்னைகள் பலரூபங்களில் வருகிறது என்பதால், சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு உடனடியாக டைட்டிலை அறிவிப்பதில்லை. 

அந்த வகையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அஞ்சான் என்று அறிவித்தார்கள்.

அதையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்திற்கும் சமீபத்தில்தான் இது நம்ம ஆளு என்று பெயர் வைத்தனர். 

ஆனால், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் மற்றும் சிம்பு நடித்து வரும் படங்கள், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தலைப்பும் அறிவிக்கப்படவில்லை.

இதில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 57-வது படத்திற்கு வாள் என்று தலைப்பு வைத்திருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் கசிந்தன. ஆனால், பின்னர் அதை அவர்கள் மறுத்து விட்டனர். 

அதைத் தொடர்ந்து இப்போது தீரன் என்ற பெயரை முருகதாசும், விஜய்யும் பரிசீலித்துக்கொண்டிருப்பதாக அப்பட வட்டாரம் கிசுகிசுக்கிறது.

இதற்கிடையே, ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரைக்கும் அப்படத்தின் டைட்டிலை அறிவிக்காமல் இருந்தபோது, அஜீத்தின் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தது போல், இப்போது விஜய் ரசிகர்களும் இந்த தாமதத்தினால் குழம்பிப்போய் கிடக்கிறார்கள்.

அஜீத், விஜய்யாக மாறிய சிம்பு-சந்தானம்


இரண்டு ஆண்டுகளாக சிம்பு நடித்து வரும் இரண்டு படங்களில் ஒன்று வாலு, இன்னொன்று வேட்டை மன்னன். 

இந்த படங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் சிம்பு, பின்னர் அப்படியே போட்டு விட்டு வேறு படங்களில் நடிக்கச்சென்று விடுவார். 

இருப்பினும் அந்த படங்கள் இன்னமும் முடிவடையாத நிலையில, தற்போது பாண்டிராஜ், கெளதம்மேனன் இயக்கும் படங்களிலும் பிசியாகி விட்டார்.

இந்த நிலையில், தற்போது வாலு படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கும் சிம்பு, அதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார். 

அதனால், தனது காட்பாதரின் படத்துக்கு எப்போதுமே முதலிடம் கொடுக்கும் சந்தானமும், படத்தின் நாயகியான ஹன்சிகாவும் சிம்பு கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், படத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்று திட்டமிட்ட சிம்பு, படத்தில் ஏதாவது ஒரு வகையில் அஜீத், விஜய்யை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டவர், ஒரு காட்சியில் தான் அஜீத் மாஸ்கையும், சந்தானத்தை விஜய் மாஸ்கையும் அணிந்து செல்வது போன்று படமாக்கியிருக்கிறார். 

இந்த காட்சி படத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் படம் திரைக்கு வரும்போது பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.

துப்பாக்கி இந்தி ரீமேக்கில் விஜய்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் விஜய் நடித்த துப்பாக்கி தமிழில் பெரிய ஹிட். இப்போது முருகதாஸ் துப்பாக்கியை, ஹாலிடே என்ற டைட்டிலில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். 

விஜய் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கிறார். காஜல் அகர்வால் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்யை கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்க அக்ஷய் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். காரணம் அவரின் ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டில் அக்ஷய் குமாருடன் ஆடினார். 

அதேபோல இந்தப் படத்திலும் ஒரு காட்சியிலாவது அவர் நடிக்க வேண்டும் என்று அக்ஷய் விரும்புகிறார்.

அதேப்போல ஏ.ஆர்.முருகதாசும் விஜய்யை வைத்து நேரடி இந்திப் படம் ஒன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார். 

இதனால் விஜய்யை மெல்ல மெல்ல இந்தி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அவரை இதில் நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து விஜய்யிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், பாடல் காட்சி வேண்டாம் புதிதாக ஒரு கேரக்டர் உருவாக்கினால் அதில் ஓரிரு காட்சிகளில் நடிக்க தயாராக இருப்பதாகவும் விஜய் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

சிலிப்பர் செல்லை கூண்டோடு அழிக்கும் அக்ஷய் குமார் டீமை பாராட்டி அவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் உயர் ராணுவ அதிகாரியாக விஜய் நடிக்கலாம் என்றும், இந்த காட்சி படத்தின் இறுதி காட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த படமாக தேர்வாகிறது ஸ்லம்டாக் மில்லினியர்


கடந்த 64 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. 

அதாவது சினிமா கலைஞர்களின் நோபல் பரிசு. ஆஸ்கர் விருது வழங்கி வரும் அமைப்பு கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கர் விருது வென்ற படங்களிலேயே எந்த படம் சிறந்த படம் என்று ஒரு போட்டியை இணைய தளத்தில் அறிவித்து ரசிகர்களை ஓட்டளிக்க வைத்திருக்கிறது. 

இந்த ஓட்டெடுப்பு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல்கட்ட வாக்கெடுப்பின் முடிவில் கடந்த 64 ஆண்டுகளில் சிறந்த படமாக ஸ்லம்டாக் மில்லினியர், நோ கண்ட்ரி பார் ஒல்டு மேன் என்ற இரண்டு படங்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. 

இறுதியாக 48 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்லம்டாக் மில்லினியர் முதல் இடத்தை பிடித்துள்ளது. விரையில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு துவங்க இருக்கிறது. அதிலும் ஸ்லம்டாக் மில்லியனிரே வெற்றி பெறும் என்கிறார்கள். 

2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினியர் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த எடிட்டிங், சிறந்த சிறப்பு சத்தம் என 7 விருதுகளை பெற்றிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும், இன்னொரு உயரம் காத்திருக்கிறது.

சினிமாவை கண்டு கொள்ளாத தமிழக பட்ஜெட்


தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து துறைகளையும் தொட்டுச் சென்ற பட்ஜெட் சினிமா பற்றி மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. 

தற்போது திரைப்படங்களுக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. வரிவிலக்கு குழு அமைக்கப்பட்டு அந்த குழு சிபாரிசு செய்யும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். 

ஆளும் கட்சிக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்பதுதான் வரிவிலக்கு குழு பார்க்கும் முதல் தகுதி. இதனால் இந்த குழுவை கலைத்து விட்டு அனைத்து படங்களுக்கும் 15 சதவிகித வரி விதிக்கலாம். 

அல்லது வரியை முழுமையாக ரத்து செய்யலாம் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதுபற்றிய எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.

நலிந்த தரமான படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இது வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதிக்காக 400 படங்கள் காத்திருப்பதாக சொல்கிறார்கள். அதுபற்றிய அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. சென்னையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு எதிரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இதற்கு முந்தைய அரசும் சரி தற்போதைய அரசும் சரி எந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை.

தரமணி எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம், திரைப்பட கல்லூரி ஆகியவற்றை புணரமைக்கவும், நவீனபடுத்தவும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. கடந்த அரசால் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கப்பட்ட திரைப்பட நகரம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 

பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்க இருப்பதாக பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த இலவச வீட்டுமனை குறித்தும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.

பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அது பற்றியும் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. சினிமா நூற்றாண்டு விழா நடந்தபோது அதற்காக 10 கோடி ரூபாயை முதல்வர் அள்ளிக் கொடுத்தார். அதனால் பட்ஜெட்டில் சினிமாவுக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும் என்று திரையுலகினர் நம்பி இருந்தார்கள். ஆனால் கிடைத்தது ஏமாற்றமே.

பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்


ஒரு பழைய காருக்கும், அதனால் ஈர்க்கப்படும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் உணர்வுகளின் சங்கமமே பண்ணையாரும் பத்மினியும். ஊருக்கு நல்லது செய்யும் பண்ணையாரும், (ஜெயபிரகாஷ்) அவரது மனைவி செல்லம்மாளும் (துளசி), இரவலாக வந்த பிரிமியர் பத்மினி காரின் மேல், அலாதி பாசம் கொள்கின்றனர். 

கார் ஓட்ட தெரியாத பண்ணையார், வேலைக்கு வைக்கும் ஓட்டுனர் முருகேசன் (விஜய் சேதுபதி) காரின் பால் ஈர்க்கப்படுகிறான்.

ஒரு கட்டத்தில், காரே பண்ணையாருக்கு சொந்தமாகி விட, அந்த சந்தோஷம் நிலைக்க விடாமல், பிறந்த வீட்டிலிருந்து ஏதையாவது சுருட்டிக் கொண்டு போவதிலேயே குறியாக இருக்கும் பண்ணையாரின் மகள் உஷா (நீலிமாராணி), காரை கொண்டு போய் விடுகிறாள். காருக்காக ஏங்குகின்றனர் பண்ணையார் தம்பதியும், முருகேசனும், பத்மினி திரும்ப அவர்களுக்கு கிடைத்தாளா? என்பதை இனிமையாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் அருண்குமார்.

சம்பவங்கள் ஏதும் இன்றி, காரைச் சுற்றியே கதை வலம் வருவது, ஒரு கட்டத்தில், தீராத அலுப்பைத் தருகிறது. சுவாரஸ்யம் சேர்க்க பண்ணையார் தம்பதிகளின் ஊடல் கலந்த காதலையும், முருகேசனின் காதலி, மலர்விழி (ரம்மி ஐஸ்வர்யா ராஜேஷ்) கதையையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர். 

துளசிக்கு, இது குறிப்பிடத்தக்க படம். சரிதாவுக்கு அடுத்து, பெரிய கண்களுடன், அவர் காட்டும் உணர்வு பாவங்கள், முதன்மையிடம் பெறுகின்றன. ஜெயபிரகாஷ் கார் பித்து கொண்ட, பெரியவர் பாத்திரத்தில், வெளுத்து வாங்குகிறார். விஜய சேதுபதி, ஒரு ஓட்டுனராக வாழ்ந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிகம் வேலை இல்லை. வந்த வரையில் சோடையில்லை. விஜய சேதுபதியின் உடல் மொழி, பல இடங்களில் அவருக்குள் இருக்கும் தேர்ந்த நடிகரை அடையாளம் காட்டுகிறது. 

பழைய கார் பற்றிய கதை என்பதால், காட்சிகளை மெகா சிரியல் அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம். வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள், இன்னமும் வெறுப்பேற்றுகின்றன. 

ஆனாலும், அறிமுக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் சரக்கு உள்ளவர் என்பதை, சில பாடல்கள் உணர்த்துகின்றன. எனக்காக பொறந்தாயே என்ற பாடல் இன்னும் சில நாட்களுக்கு நினைவில் நிற்கும். கோகுல் பினாய், கண்களை உறுத்தாத கோணங்களில் படம் பிடித்திருக்கிறார். 

இயல்பு தன்மை மாறாமல் இயக்கி இருக்கிறார் அருண்குமார். திரைக்கதை என்னும் வித்தையை, அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், ''பண்ணையாரும் பத்மினியும் - இனிய பயணம்!''

யுவன் இஸ்லாம் மதம் மாறிய பின்னணி!


ஏ.ஆர்.ரஹ்மானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். 

இதனை அவரே, ஆம் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். 

சமீபத்தில் அவர் இசையமைப்பில் வெளிவந்த பிரியாணி படம் தான் அவரது 100வது படமாகும். அப்பாவை போன்று இவரும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். 

இந்நிலையில் முதல் மனைவியுடன் விவாகரத்து, பிறகு அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் மனக்கசப்பு என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் இருந்தார் யுவன். இதற்கிடையே அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக ஏற்கனவே தவகல்கள் வெளியான நிலையில் இப்போது அவரே தான் மதம் மாறியதை உறுதி செய்துள்ளார். 

இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் , கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். 

எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை . 

எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! ( இறைவனுக்கு நன்றி !) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார். 

உ - சினிமா விமர்சனம்



எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன் "உ எனும் பிள்ளையார் சுழியையும் அதைத்தொடர்ந்து ஒருசில பட்டைகளையும் போட்டு அதில் பொட்டும் வைத்து தொடங்குவது நம் வழக்கம்!

இத்திரைப்படத்தின் நாமகரணம் எனப்படும் டைட்டிலே "உ என்பதும், சில நாட்களுக்கு முன் டிரையிலராக வெளியிடப்பட்டு திரையிட்டபோது "உ எனும் பிள்ளையார் சுழி டைட்டிலாக ஒளிர்ந்தபோது பின்னணியில் ஒலித்த ஓசைகளால் இப்படம் மீடியாக்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது! 

நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அறிமுக இயக்குநர் ஆஷிக், அந்த ஊலை ஓசையை ஒழித்து கட்டிவிட்டு படத்தை வெளியிட்டிருப்பதற்காகவே இயக்குநரை முதற்கண் பாராட்ட வேண்டும்!

அடுத்ததாக ஒரேமாதிரி கதை சொல்லும் தமிழ் சினிமாக்களில் இருந்து ஒரேயடியாக விலகி, இப்படியும் படமெடுக்கலாம் என தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிதாக ஒரு "ரூட்டை போட்டுக் கொடுத்து அதற்கு பிள்ளையார்சுழி போட்டிருப்பதற்காக இயக்குநரை மீண்டும், மீண்டும் பாராட்டியே ஆக வேண்டும்!

கதைப்படி வழுக்கை வசப்பட்டும், வாழ்க்கை வசப்படாத துணை-இணை சினிமா இயக்குநர் கணேஷிற்கு ஒரு படக்கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது.

 தன் அறை "கம் துறை நண்பர்களை தன்னுடன் இணைத்து பணிபுரிய அழைக்கிறார். அவர்கள் கணேஷை கேலி செய்வதோடு "உன்னால் எல்லாம் படம் இயக்க முடியுமா?! என கேள்வியும் கேட்டு "சவுடால் சவாலும் விடுகின்றனர்!

இதில் பீல் ஆகும் கணேஷ், புல்மப்பில் நியூசென்ஸில் போலீஸில் சிக்குகிறார். அங்கு தன்னை மாதிரியே நான்சென்ஸ் புட்டி, குட்டி, பெட்டி கேஸ்களில் சிக்கி பேஜாராகி வீற்றிருக்கும் 4 இளைஞர்களை சந்திக்கும் கணேஷ், அந்தநால்வரையுமே தன் உதவியாளர்கள் ஆக்கி உருப்படியான சீன்களை பிடித்து ஒருமாதிரி ஜோரானதொரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர் பக்குலனிடம் சொல்லி படமெடுக்க கிளம்புகிறார். 

அவரை அவரது அறை-துறை, அரை-குறை நண்பர்கள் தங்களது சாவலில் ஜெயிப்பதற்காக ஆள்பலம் காட்டி படமெடுக்க விடாமல் தடுக்க பார்க்க, அவர்களை தனது அறிவுபலத்தால் கணேஷ் ஜெயிப்பதும், படமெடுத்து ரிலீஸ் செய்வதும்தான் "உ படத்தின் கதை! 

உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக உயரும் கணேஷின் இந்த வெற்றிக்கதையுடன் அவர் இயக்கும் படக்கதையையும் கலந்துகட்டி கலர்புல்லாக கதை சொல்லியிருப்பதற்காக இயக்குநர் ஆஷிக்கை இன்னும் ஒருமுறை பாராட்டலாம்!

தம்பி ராமைய்யா, வருண், மதன்கோபால், "ஸ்மைல் செல்வா, சத்யசாய், ராஜ்கமல், சவுந்திராஜா, காளி, ராஜசிவா, டீப்ஸ், ஆஜித், மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், "யோகி தேவராஜ் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 

அதிலும் கணேஷ் - தம்பி ராமைய்யா, புரடியூசர் பக்குலன் - பயில்வான் பற்றி சிலநேரங்களில் வாயால பேசுறார், சில நேரங்கள்ல பேசுறார்... என அவரது வாயுத்தொல்லை பற்றிபேசும்போது தியேட்டர் அதிர்கிறது. 

எல்லோரையும் கலாய்க்கும் தம்பி ராமைய்யாவையே கலாய்க்கும் "கவுண்டர் பிராக்டீஸ், புரடியூசர் பக்குலன் - பயில்வான் ரங்கநாதன், மணி சார் ஓ.கே. சொன்னாதான் ஓ.கே. என கதைகேட்பாளர் மணி - "யோகி தேவ்ராஜ்க்கு தரப்படும் பில்-டப் எல்லாமே படத்திற்கு பலவந்தமாக, அதேநேரம் படுபாந்தமாகவும் பலம் சேர்க்கும் பாத்திரங்கள் என்பது சூப்பர்ப்! ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது நம்முன் நிற்கும் ஒரே கேள்வி.?!

அபிஜித் ராமசாமியின் இசை, முருகன் மந்திரத்தின் பாடல்வரிகள், ஜெயபிரகாஷின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பலங்களுடன் எம்.ஆர்.ராதாவை இம்மிட்டேட் செய்து வில்லனும் அவரது கையாட்களும் பேசி போரடிக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் சலிப்பு உள்ளிட்ட பலவீனங்களும் இருந்தாலும், ஆஷிக்கின் எழுத்து-இயக்கத்தில் "உ - "ஓஹோ!

ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த பெருமை

உலகின் மிக அழகான பெண்கள் யார் யார்? என, அமெரிக்காவை சேர்ந்த இணையதள பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இதற்காக, உலகம் முழுவதும், 40 லட்சம் ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். இதில், இத்தாலியை சேர்ந்த, மோனிகா யெல்லுசி என்ற நடிகை, அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

இரண்டாவது இடத்தை அமெரிக்க நடிகை கேத் ஆப்டனும், மூன்றாவது இடத்தை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியும் பிடித்துள்ளனர். நான்காவது இடம், ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது. தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும், தீபிகா படுகோனேவுக்கு, இந்த வாக்கெடுப்பில், 29வது இடமே கிடைத்துள்ளதாம். 

ரம்மி - சினிமா விமர்சனம்


ஒரு பழைய காதல் கதையை, நவீன உத்திகளோடு சொல்ல முயற்சித்திருக்கிறது, ரம்மி ஆனால்... இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யம் கம்மி. 

கடந்த, 1987களின் மதுரையும், அதைச் சார்ந்த கிராமங்களும். வடகாடு கிராமத்திலிருந்து, சக்தி (இனிகோ பிரபாகர்) முதல் முறையாக, சிவகங்கை கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறான். 

அங்கே, அவன் கண்களில் படும் மீனாட்சி (காயத்ரி), பூலாங்குறிச்சியை சேர்ந்தவள். கண்டவுடன் காதல் வயப்படும் சக்தி, அவன் பால், மெல்ல ஈர்க்கப்படும் மீனாட்சி என, ஒரு பாதி படம் போகிறது.

சக்தியின் அறை நண்பனாக வரும் ஜோசப்பின் (விஜய் சேதுபதி), அம்மாவும் இறந்து விட்ட நிலையில், ஆதரவில்லாமல் அனாதை ஆகிவிட, அவனை, தன் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறது, சக்தியின் குடும்பம். 

மீனாட்சியின், பெரியப்பா மகள் சொர்ணம் (ஐஸ்வர்யா ராஜேஷ்), ஜோசப்பின் மேல் மையலாகிறாள். அதை விரும்பாத, அவளது குடும்பம், ஜோசப்பை போட்டுத் தள்ளிவிட, தன் தந்தையை வெட்டிச் சாய்த்து, சிறை செல்கிறாள் சொர்ணம்.

பாரதிராஜா காலத்து கதை. ஆனால், ராஜா முகமதின் எடிட்டிங்கும், பாலாவின் இயக்கமும் ஓரளவு விறுவிறுப்பை தக்க வைக்கின்றன. இனிகோ பிரபாகர், தன் பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளார். 

விஜய் சேதுபதி, நட்புக்காக செய்த படம் போல, வழக்கமான, அவரது அலப்பறைகள் ஏதுமில்லை. அருணாச்சலமாக வரும் சூரி, சுவடு பதியாமல் மறைந்து போகிறார். காயத்ரிக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனால், ஐஸ்வர்யா கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு பள பளக்கிறார்.

இமான், வரம் கிடைத்த அசுரன் போல, இசைஞானியை ஞாபகப்படுத்தும் விதமாக, அட்டகாசமான பாடல்களையும், பின்னணி இசையையும் சேர்த்து, படத்தை ரம்மியமாக்கி இருக்கிறார். 

பாறைகள், கோவில் மண்டபத் தூண்கள், இடையில் பாயும் வெயில் என, அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். கூட மேலே கூடை வச்சு கூடலூறு போறவளே, எதுக்காக என்னை நீ பாத்தே என்ற பாடல்களில், தேனிசையை அள்ளித் தந்திருக்கிறார் இமான்.

தினம் ரெண்டு பல்லு பூண்டு காலையிலே சாப்பிடு. கேசுக்கும் நல்லது நம்ம கிளாசுக்கும் நல்லது என்பது போன்ற வசனங்கள், சிரிப்பலைகளை விசிறுகிறது.

மொத்தத்தில், 'ரம்மி - டம்மி'

முருங்கைக்காயை பீல் பண்ண வைத்த டைரக்டர்கள்


லட்டு படத்தில் தனது கதையை அப்படியே கையாண்டதால் டோட்டல் அப்செட்டாகிப்போனார் முருங்கைக்காய் மன்னன். காரணம், தனது மகனை வைத்து அந்த கதையைத்தான் அவர் ரீமேக் செய்ய நினைத்திருந்தார். ஆனால், லட்டு வெளியான பிறகு அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டார்.

அதையடுத்து, மகனுக்காக ஒரு கதையை ரெடி பண்ணியவர், தான் ஏற்கனவே நடித்த ஒரு படத்தின் டைட்டீலை வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால, இப்போது அந்த டைட்டீலை அவரது சிஷ்யரான மெரினா டைரக்டர் விரல்வித்தையை வைத்து தான் இயக்கும் படத்திற்கு சூட்டி விட்டார்.

இதனால் மேலும் ஷாக்காகி இருக்கிறாராம் முருங்கைக்காய். வேட்டியைத்தானே உருவினார்கள். அதான் கோவனம் இருக்கிறதே என்று பார்த்தால், இப்போது அதையும் சேர்த்தல்லவா உருவிக்கொண்டு செல்கிறார்கள். ஆக நமக்கென்று எதையும் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கே என்று புலம்பத் தொடங்கியிருக்கிறாராம் மனிதர்.

அஜீத்துக்கு சிபாரிசு செய்த ரஜினி


கோச்சடையான் படத்தை முடித்து விட்ட ரஜினி, அதற்கடுத்து கே.எஸ்.ரவிக்குமார், கே.வி.ஆனந்த் போன்றவர்களின் படங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. 

ஆனால், பின்னர் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் அந்த செய்தி குறித்து மறுப்பு செய்தி வெளியிட்டு விட்டனர். அதனால், அடுத்தபடியாக ஐ படத்தை இயக்கியுள்ள பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்தான் ரஜினி நடிப்பார் என்றொரு செய்தி உலவத் தொடங்கியது.

மேலும், ஏப்ரல் மாதம் கோச்சடையான் படமும் ரிலீசாவதோடு, ஐ படமும் விரைவில் ரிலீசாகயிருப்பதால், இந்த யூகங்கள் கிட்டத்தட்ட உண்மையாகி விடுவது போன்ற சூழலும் நிலவியது. 

அதற்கேற்ப, சிவாஜி, எந்திரனுக்குப்பிறகு ரஜினிக்காக ஒரு மாறுபட்ட கதையை உருவாக்கிய ஷங்கர், சமீபத்தில் அதை ரஜினியை சந்தித்து சொன்னாராம்.

அந்த கதையை ஆர்வமுடன் கேட்ட ரஜினி, என்னென்ன டெக்னாலஜியை பயன்படுத்தப்போகிறீர்கள் என்றெல்லாம் விசாரித்திருக்கிறார். 

ஆனால், கடைசியில், இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று ஷங்கர் கேட்டதற்கு, கதை நன்றாக உள்ளது. ஆனால் எனக்குத்தான் செட்டாகுமா? என்பது சந்தேகமாக உள்ளது என்று இழுத்தாராம்.

அதோடு, இந்த கதையில் என்னை விட அஜீத் நடித்தால் இன்றைய சூழலில் பிரமாதமாக இருக்கும் என்று தனது கருத்தை சொல்லியிருக்கிறார். 

மேலும், இந்த கதையைப்பற்றி அஜீத்தையும் தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார் ரஜினி. அதையடுத்து அஜீத், ஷங்கரை தொடர்பு கொள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாம். 

அதனால் ஐ படத்தின் ரிலீசுக்குப்பிறகு இதுபற்றிய தகவல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

பஞ்சாயத்துக்கு வர தயாராகும் படம்

பறவை படத்தையும், பழகிய யானை படத்தையும் எடுத்த டைரக்டர் இப்போது மீன் படத்தை எடுத்துக்கிட்டிருக்காரு. 

இதுவரைக்கும் எடுத்ததையெல்லாம் திருப்தி இல்லாம திரும்ப திரும்ப எடுத்துக்கிட்டிருக்காராம். இதனால தயாரிப்பு செலவு எகிறிக்கிட்டிருக்காம். 

அவர் குழப்பத்துலேயே படம் எடுக்குறதால இதுவரைக்கும் 6 கேமராமேன்கள் அவருடன் கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு ஆளை விட்டாப் போதும்னு ஒதுங்கி ஓடிட்டாங்களாம். 

விரைவிலேயே இது பஞ்சாயத்துக்கு வரப்போகுதாம்.

ஆயா வடை சுட்ட கதையும் சினிமாவாகிறது


பாட்டி பேரன்களுக்கு சொன்ன கதையில் ரொம்ப பாப்புலர், ஆயா வடை சுட்ட கதை. ஆயா சுட்ட வடைய காக்கா திருடிச் செல்வதும், காக்காவிடம் இருந்து நரி ஏமாற்றி பறிப்பதுமான கதையில் பல தத்துவங்கள் இருக்கிறது.

இந்த தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஆயா வட சுட்ட கதை என்ற பெயரிலேயே ஒரு படம் எடுக்கிறார்கள். "ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 100 குடும்பம் இருக்குதுன்னா. 

அதுல ஒரு குடும்பத்துக்கு ஒரு நாலைஞ்சு குடும்பத்தைத்தான் தெரியும். ஆனால் பால்போடுறவங்க, தண்ணி கேன் சப்ளை பண்றவங்க, செக்யூரிட்டி ஆகியோர் எல்லாரையும் தெரியும். 

இத வச்சிக்கிட்டு அப்பார்ட்மெண்டுக்குள்ள ஆயா வட சுட்ட கதைய சொல்றோம். இதுல யார் ஆயா, யார் நரி, யார் காக்காங்கறது படம் பார்க்கும்போது தெரியும். புல்அண்ட் புல் காமெடி படம் கொஞ்சம் காதலும் இருக்கு" என்கிறார் டைரக்டர் பனிந்ரா.

அவிடேஜ் என்கிற நியூபேஸ் ஹீரோ. சுபர்னாங்க மாடல் அழகி ஹீரோயினா அறிமுகமாகுறாங்க. இவர்கள் தவிர நடிக்கிற அத்தனை பேருமே புதுமுகங்கள்.

பவர் கட்டான பவர் நடிகர்


பண மோசடியில் சிக்கி கம்பி எண்ணி விட்டு வந்தபிறகு, அந்த பவர் நடிகரை யாருமே கண்டு கொள்வதில்லையாம். 

அதனால் லட்டு படத்தில் தன்னை நடிக்க வைத்த வாசனை காமெடியனை சந்தித்து தன்னையும் காமெடி கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்து விட்டாராம் நடிகர்.

ஆனால், பவரை கொஞ்சம் விட்டால் நம்ம மார்க்கெட்டை அவுட் பண்ணி விடுவார். 

இவர் விசயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேணடும் என்று ஏற்கனவே உஷாராகி விட்ட வாசனை, ஏறெடுத்துகூட பார்க்கவில்லையாம். 

அதையடுத்து, தன்னிச்சையாக முயற்சி எடுத்த கம்பெனிகளும், திடீர் திடீரென்று ஜெயிலுக்கு போய் விடும் இவரை நம்பி எப்படி சான்ஸ் கொடுப்பது என்று பவரிடம் சிக்காமல் நழுவிக்கொள்கிறார்களாம்.

இதனால், சினிமாவில் என்னைப்போல் ஒரே படத்தில் ஓகோவென்று பேசப்பட்டவரும் இல்லை. 

அந்த ஒரே படத்திற்கு பிறகு சீபோ என்கிற நிலைக்கு தள்ளப்பட்டவரும் இல்லை என்று தன் நிலையை சொல்லி பரிதாபமாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம். ஆக, பவர் கட்டாகிப்போய் கிடக்கிறார் பவர்.

சிம்புவுக்கு இன்னொரு ஜோடி தேடுகிறார் பாண்டிராஜ்




சிம்பு ஹீரோவாக நடிக்க, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, தம்பி குறளரசன் இசை அமைக்க, மாஜி காதலி நயன்தாரா நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்க தயாராகிவருகிறது இது நம்ம ஆளு. 

இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்த கட்டமாக பாடல் காட்சிகள் எடுக்க வேண்டும். 

வெளிநாட்டில் எடுக்கலாம் என்பது சிம்புவின் ஆசை. நயன்தாரா அதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கவில்லை.

கடைசி கட்ட ஷூட்டிங்கில்தான் அடுத்த பரபரப்பு இருக்கிறது. படத்தில் திடீரென்று நயன்தாரா கமிட்டாகி படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்ததைபோல அடுத்த அதிரடி இருக்கிறது. 

கதைப்படி சிம்புவின் முதல் காதல் தோற்றுவிடும், காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று திரியும் சிம்புவுக்கு பெற்றவர்கள் நயன்தாராவை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விடுவார்கள். 

6 மாதத்துக்கு பிறகுதான் கல்யாணம். அதுக்குள்ள லவ் பண்ணிக்குங்க என்பதுதான் பெற்றவர்களின் கண்டிஷன். 

அவர்களுக்கு லவ் வந்துச்சா வரலியா? லவ் வந்து கல்யாண நேரத்தில் பழைய காதலி திரும்பி வந்தாரா? சிம்புவுக்கு இருந்த மாதிரியே நயன்தாராவுக்கும் ஒரு முதல் காதல் இருந்ததா? இந்த விபரத்தையெல்லாம் சொன்னால் பாண்டிராஜ் சார் கோவிச்சுக்குவார்.

இப்போ விஷயத்துக்கு வருவோம். கடைசி ஷெட்யூல் பரபரப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? சிம்புவின் முதல் காதலி யார்? என்பதுதான். அதாவது முதல் காதலியாக நடிப்பவர் யார் என்பது? 

அந்த கேரக்டரை நயன்தாரா அளவுக்கு பவர்புல்லான ஒரு ஹீரோயின் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் கருதுகிறார். இதனால் தீவிரமாக ஹீரோயின் வேட்டை நடக்கிறது. 

"அவரை அந்த கேரக்டர்ல நடிக்க வச்சிட்டீங்கன்னா கோடியை கொட்டிக் கொடுத்து படத்தை வாங்கிக்கிறோம்"னு டிஸ்ட்ரிபியூட்டர்களும், தியேட்டர்காரர்களும் சொல்லியிருக்காங்களாம். அவர்கள் சொல்லும் அந்த ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி.

நடந்தாலும் நடக்கும் பாஸ். எவ்வளவோ நடந்திருச்சு இது நடக்காதா?

கோலி சோடா - சினிமா விமர்சனம்



தங்களுக்கென தனியாக அடையாளம் வேண்டுமென போராடும், வாலிபத்தை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நான்கு சிறுவர்களுக்கும், அவர்களுக்கான அடையாளத்தையும் சிதைத்து அவர்களை அடக்கி ஆளவும் நினைக்கும் பணபலமும், படை பலமும் நிரம்பிய ஒரு பெரிய மனிதரது ஆட்களுக்குமிடையே நடக்கும் மோதலும், கிடைக்கும் நல்ல தீர்வும் தான் கோலி சோடா படத்தின் மொத்த கதையும்!

அதாகப்பட்டது ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி - கிஷோர், சித்தப்பா - பாண்டி, குட்டிமணி - முருகேஷ், சேட்டு - ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். 

காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். 

குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி - சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.

ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். 

இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் நால்வரும் பேஷ், பேஷ்!

சாந்தினி - யாமெனி, ஏடிஎம் - ஸ்ரீநிதி, ஆச்சி - சுஜாதா, நாயுடுவின் மனைவிகள் மீனாள் சகோதரிகள் உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!

சிறுவர்களுக்கு உதவும் மந்திராவாதி(சும்மா பெயரில் மட்டும் தான்...) - இமான் அண்ணாச்சி, கோயம்போடு மார்க்கெட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் நாயுடு - மது, அவரது மைத்துனர் மயிலாக வரும் ஆர்.கே., விஜய் முருகன் (இவர் இப்படத்தின் கலை இயக்குநராகவும் பட்டையை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது...) உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் கோயம்பேடு வாசிகளாகவே கோலோச்சி இருப்பது கோலி சோடாவின் பெரும் பலம்! 

அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க... என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி - இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். 

இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை... பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை... என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது. காரணம் வசனகர்த்தா இயக்குநர் பாண்டிராஜ்! வாவ்!!

4 சிறுவர்களும் பசங்க படத்தை ஞாபகப்படுத்துவது மாதிரி நடித்திருப்பது, யதார்த்தமான கதையை யதார்த்தமாக முடிக்காமல், டிராமாவாக, சினிமாவாக... முடித்திருப்பது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும் எஸ்.என்.அருணகிரியின் இசைபலம், பாண்டிராஜின் வசனபலம், ஆண்டனியின் படத்தொகுப்பு பலம் உள்ளிட்ட சிறப்புகளோடு விஜய் மில்டனின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், கோலி சோடா - பன்னீர் சோடாவாக இனிக்கிறது!!

நடிக்க வந்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்குஇசையமைத்துள்ளார். 

அலியா பட்,ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில், படகா கட்டி என்றஒரு பாடலையும் பாடியுள்ளார்.

இந்த படத்தின், பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். 

இயக்குனர், இம்தியாஸ் அலி. இதில், ரகுமானை, பாடலுக்கு ஏற்ப, நடிக்க வைத்து உள்ளாராம். இதை, ரகுமானே, இணையதளத்தில் தெரிவித்துள்ளார். 

ஜெய்யின் செண்டிமென்டை நினைத்து அலறும் நடிகைகள்


சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். 

காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக கருதப்பட்டு வருகிறது. அப்படித்தான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-ஸ்வாதி இருவரும் நடித்தபோதும் அவர்களைப்பற்றி கலர் கலராக காதல் கிசுகிசுக்கள் புகைந்தன. 

அதற்கு அவர்கள் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், இப்படியெல்லாம்கூட இலவச விளம்பரம் கிடைக்கிறதே என்று ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

அதையடுத்து, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோதும் ஜெய்யுடன், அஞ்சலியை இணைத்து காதல் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த மலையாள நடிகை நஸ்ரியாவையும் அவருடன் இணைத்து வழக்கம்போல் காதல் செய்திகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கு நஸ்ரியா மறுப்பு சொன்னபோதும், ஜெய் மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் முதலில் சிக்கிய ஸ்வாதி, சுப்ரமணியபுரம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு படமில்லாமல் ஆந்திராவுக்கு திரும்பி விட்டார். 

அதையடுத்து, படுவேகமாக வளர்ந்து கொண்டிருந்த அஞ்சலியோ, எங்கேயும் எப்போதும் படத்தையடுத்து சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் கோடம்பாக்கத்தையே காலி பண்ணி விட்டு ஓட்டம் பிடித்து விட்டார். 

அவர்களைத் தொடர்ந்து நஸ்ரியாவோ, வேகமாக படங்களில் புக்காகி வந்தவர், இப்போது பகத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிக்கொண்டு நடிப்புக்கே குட்பை சொல்லி விட்டார். ஆக, ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அத்தனை நடிககளுமே காணாமல் போய் விட்டார்கள்.

இந்த சேதி, தற்போது ஜெய்யுடன் நடித்து வரும் புதுமுக நடிகைகளுக்கு தெரியவர, கலவரமான மனநிலையுடனேயே இருக்கிறார்களாம். ஜெய்யுடன் சிரித்து பேசினால்கூட அது காதல் செய்தியாகி இந்த ஒரு படத்தோடு தாங்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அவர் தங்களைப்பார்த்து சிரித்து பேசினால்கூட முகத்தை வெறப்பாக வைத்துக்கொண்டே நிறகிறார்களாம் நடிகைகள். 

மேலும் அடுத்தடுத்து ஜெய்யுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்டு எந்த நடிகையிடம் சென்றாலும், ஆளை விடுங்க சாமி என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்களாம்.

மில்க் நடிகையின் மேரேஜ் அவசரம்

மார்க்கெட்டும், மவுசும் குறைந்து விட்டதால் அடுத்து திருமணம்தான் என்று முடிவு செய்துவிட்டாராம் பால் நடிகை. 

வெற்றி இயக்குனரை கல்யாணத்துக்கு நாள் குறிக்கச் சொல்லி டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாராம். 

அடுத்து ஒரு கமர்ஷியல் ஹிட் படத்தை கொடுத்துவிட்டுத்தான் கல்யாணத்தை பற்றி யோசிக்கணுன்னு வெற்றி இயக்குனர் கறாராக சொல்லிட்டாராம். 

போன வருஷம் வரைக்கும் கல்யாணத்துக்கு அவர் அவசரப்படுத்தினார். 

இந்த வருஷம் இவரே இறங்கி வந்தும் வெற்றி இயக்குனர் பேக் அடிக்கிறாராம்.

மணிரத்னம் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய்


1997-ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யாராய். 

அதன்பிறகு ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். 

அதேபோல் இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பெரிய ரவுண்டே வந்து கொண்டிருந்தார்.

மேலும், அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும் நடிப்பை தொடர்ந்து வந்தார். 

ஆனால், 2010-ல் ஹீரோயின் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கர்ப்பமானதால், அதன்பிறகு நடிப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மகள் ஆரத்யாவை பெற்றெடுத்தார். 

இப்போது மகளுக்கு இரண்டரை வயதாகும் நிலையில், இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் ரீ-என்ட்ரி ஆவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், பின்னர் அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டார் ஐஸ்.

ஆனால், இப்போது அவரை அறிமுகம் செய்த மணிரத்னம் அடுத்த தமிழ், தெலுங்கில் நாகார்ஜூனா-மகேஷ்பாபுவைக் கொண்டு இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

குழந்தை பெற்றெடுத்த பிறகு உடல் பெருத்து விட்டதால், இப்போது மீண்டும் தன்னை ஸ்லிம்மாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யாராய் இறங்கியிருக்கிறாராம். 

இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, நாகார்ஜூன்னாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...