ரம்மி - சினிமா விமர்சனம்


ஒரு பழைய காதல் கதையை, நவீன உத்திகளோடு சொல்ல முயற்சித்திருக்கிறது, ரம்மி ஆனால்... இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யம் கம்மி. 

கடந்த, 1987களின் மதுரையும், அதைச் சார்ந்த கிராமங்களும். வடகாடு கிராமத்திலிருந்து, சக்தி (இனிகோ பிரபாகர்) முதல் முறையாக, சிவகங்கை கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறான். 

அங்கே, அவன் கண்களில் படும் மீனாட்சி (காயத்ரி), பூலாங்குறிச்சியை சேர்ந்தவள். கண்டவுடன் காதல் வயப்படும் சக்தி, அவன் பால், மெல்ல ஈர்க்கப்படும் மீனாட்சி என, ஒரு பாதி படம் போகிறது.

சக்தியின் அறை நண்பனாக வரும் ஜோசப்பின் (விஜய் சேதுபதி), அம்மாவும் இறந்து விட்ட நிலையில், ஆதரவில்லாமல் அனாதை ஆகிவிட, அவனை, தன் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறது, சக்தியின் குடும்பம். 

மீனாட்சியின், பெரியப்பா மகள் சொர்ணம் (ஐஸ்வர்யா ராஜேஷ்), ஜோசப்பின் மேல் மையலாகிறாள். அதை விரும்பாத, அவளது குடும்பம், ஜோசப்பை போட்டுத் தள்ளிவிட, தன் தந்தையை வெட்டிச் சாய்த்து, சிறை செல்கிறாள் சொர்ணம்.

பாரதிராஜா காலத்து கதை. ஆனால், ராஜா முகமதின் எடிட்டிங்கும், பாலாவின் இயக்கமும் ஓரளவு விறுவிறுப்பை தக்க வைக்கின்றன. இனிகோ பிரபாகர், தன் பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளார். 

விஜய் சேதுபதி, நட்புக்காக செய்த படம் போல, வழக்கமான, அவரது அலப்பறைகள் ஏதுமில்லை. அருணாச்சலமாக வரும் சூரி, சுவடு பதியாமல் மறைந்து போகிறார். காயத்ரிக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனால், ஐஸ்வர்யா கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு பள பளக்கிறார்.

இமான், வரம் கிடைத்த அசுரன் போல, இசைஞானியை ஞாபகப்படுத்தும் விதமாக, அட்டகாசமான பாடல்களையும், பின்னணி இசையையும் சேர்த்து, படத்தை ரம்மியமாக்கி இருக்கிறார். 

பாறைகள், கோவில் மண்டபத் தூண்கள், இடையில் பாயும் வெயில் என, அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். கூட மேலே கூடை வச்சு கூடலூறு போறவளே, எதுக்காக என்னை நீ பாத்தே என்ற பாடல்களில், தேனிசையை அள்ளித் தந்திருக்கிறார் இமான்.

தினம் ரெண்டு பல்லு பூண்டு காலையிலே சாப்பிடு. கேசுக்கும் நல்லது நம்ம கிளாசுக்கும் நல்லது என்பது போன்ற வசனங்கள், சிரிப்பலைகளை விசிறுகிறது.

மொத்தத்தில், 'ரம்மி - டம்மி'

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...