ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இது கதிர்வேலன் காதல்!
தாத்தா கலைஞர் கருணாநிதி எனும் கே.கே. என்பதாலோ என்னவோ தான் நாயகராக நடிக்கும் படங்களில் எல்லாம் டைட்டிலில் இரண்டு கே வருவது மாதிரி பார்த்துக் கொள்ளும் சென்டிமெண்டில் இருப்பார் போலும் உதயநிதி! அந்த சென்டிமெண்ட்டும், கதிர்வேலன் காதலும் உதயநிதிக்கு கை கொடுத்திருக்கிறதா? பார்ப்போம் இனி...
கதைப்படி, மதுரை பக்கத்து பெரிய இடத்துப்பிள்ளை உதயநிதி, ஐந்தாங்கிளாஸ் படிக்கும் காலத்தில் இருந்தே தீவிர ஆஞ்சநேயர் பக்தர்! பெண் வாடையே பிடிக்காதவர்.
ஆனால் அவரது தோஸ்த் சந்தானத்திற்கு காதல், பெண்கள்... என்றால் கொள்ளை இஷ்டம்! ஆனால் உதயநிதியின் ஆஞ்சநேய அவதாரங்களால் தன் காதலிகளை இழக்கும் சந்தானம், உதயநிதியின் சங்காத்தமே வேண்டாம் என கோயமுத்தூர் பக்கம் நவீனமாக கொழுப்பை குறைக்கும் லேகியம் விற்க போய்விடுகிறார்.
அதேநேரம் உதயநிதியின் உடன்பிறந்த அக்கா சாயாசிங்கும், கோயமுத்துக்காரர் பரத்ரெட்டியை காதலித்து கரம்பிடித்து கோவையில் செட்டிலாகிறார்.
புருஷனுடன் சின்ன ஊடலில் ஊருக்கு வந்திருக்கும் சாயா சிங் விஷயத்தில், காதல் திருமணம் என்பதால் உதயநிதியின் தந்தை நரேன் பட்டுக்கொள்ளாமல் இருக்க, அக்காவை மாமாவுடன் சேர்த்து வைக்க பிஸினஸ் விஷயமாக சேலம் போவதாக சொல்லிவிட்டு கோயமுத்தூர் போகின்றார் உதயநிதி!
அங்கு தன் அக்கா வீட்டு, எதிர்வீட்டு தேவதை நயன்தாராவை பார்த்து ஆஞ்சநேயர் பக்தர் அவதாரத்தை உதறிதள்ளும் உதயநிதி, நண்பர் சந்தானத்துடன் சேர்ந்து கொண்டு அம்மணியை கலாய்ப்பதும், பின் காதலிலும் விழுகிறார். அப்புறம்? அப்புறமென்ன.?
நயன்தாராவின் நண்பர் என்று சொல்லிக்கொண்டு அவரை அடையத்துடிக்கும் நட்பு துரோகியின் முகத்திரையை நயன்தாராவுக்கு கிழித்துகாட்டி அவரிடம் நல்லபெயர் எடுக்கும் உதயநிதி மீது நயன்தாராவுக்கும் காதல் வருவதும், அந்த காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்று கொண்டனரா? இல்லையா.? என்பதும் தான் வித்தியாசமும், விறுவிறுப்புமான இது கதிர்வேலன் காதல் படத்தின் மிச்ச, சொச்ச கதை!
கதிர்வேலனாக உதயநிதி ஸ்டாலின் கூலிங்கிளாஸூம், எக்ஸ்பிரஸனுமாக ஒருமாதிரி சமாளித்து இருக்கிறார். நயன்தாராவுடனான காதல் காட்சிகளைக் காட்டிலும் அப்பா நரேன், அக்கா சாயாசிங், மாமா பரத்ரெட்டி, தோஸ்த் சந்தானம் இவர்களுடைய காம்பினேஷன் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார் உதயநிதி!
நயன்தாரா ஜோடி என்றதும், உதயநிதியின் ஓரிஜினல் வூட்டுக்காரம்மா ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு உதயநிதியை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பியிருப்பாரோ? எனும் சந்தேகத்தை கிளப்புகிறது நயன்தாரா - உதயநிதி காதல் காட்சிகளில் உதயநிதியின் எக்ஸ்பிரஷன் மற்றும் வைபிரேஷன்கள்!
இதையெல்லாம் மீறி, அப்பா நரேனிடம் க்ளைமாக்ஸில், எல்லா பிள்ளைகளும் தங்கள் மனதில் காதல் மலர்ந்ததும் அப்பா, அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம், ஆனால் எத்தனை பெற்றோர் பிரண்ட்ஸாக பழகுகிறீர்கள்? கெளரவம், அது, இது... என்று காதலுக்கு எதிர்ப்பு தானே சொல்கிறீர்கள்... என ஒட்டுமொத்த காதலர்கள் சார்பாக உருகும்போது உதயநிதிக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லத் தோன்றுகிறது! வாவ்!!
நயன்தாரா வழக்கம்போலவே பவித்ரா எனும் அழகு பதுமையாக வந்து முதுமை நிரம்பியவர்களையும் உசுப்பேற்றுகிறார்.
மயில்வாகணன் சந்தானம் தான் கதிர்வேலனின் காமெடி, கமர்ஷியல் வாகனம். எதுக்கு நீ சண்டைக்கு போற பாக்யராஜ் மாதிரி வாட்ச், மோதிரத்தை எல்லாம் கழட்டி வக்கிற...? என கேட்பதில் தொடங்கி எல்லா பெண்களும், சூர்யா மாதிரி பையன் வேணும் தான் பார்ப்பாங்க...
ஆனால் கடைசியில ஏரியா பையனுக்கு தான் உஷாராவாங்க... என இந்தக்காலத்து இளம் பெண்களை வம்புக்கு இழுப்பது வரை... சீனுக்கு சீன் தியேட்டரை அதிர விடுகிறார்!
நரேன், ஜெயப்பிரகாஷ், சுந்தர், பரத், முருகதாஸ், சரண்யா பொன்வண்ணன், சாயாசிங், வனிதா, கலாகல்யாணி, நீது நீலாம்பரன் எல்லோரும் தங்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் கதிர்வேலன் காதலை மேலும் பலமாக்குகின்றன.
அடிக்கடி உதயநிதி 5-ங்கிளாஸில் இருந்து ஆஞ்சநேயர் பக்தர் என்பதும், சாயாசிங் ஊரிலிருந்து, உதயநிதிக்கு அடிக்கடி போனில் எதிர்வீட்டுப் பெண்ணை பார்த்துடாத... என்பது, உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும், எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில், இது கதிர்வேலன் காதல் - ஓ.கே.!
மொத்தத்தில், உதயநிதியின் - ஓ.கே. ஓ.கே., அளவு இல்லாவிட்டாலும் கதிர்வேலன் காதல் - ஓ.கே.,எனும் அளவில் இருப்பது ஆறுதல்!!
0 comments:
Post a Comment