தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து துறைகளையும் தொட்டுச் சென்ற பட்ஜெட் சினிமா பற்றி மட்டும் கண்டுகொள்ளவே இல்லை.
தற்போது திரைப்படங்களுக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. வரிவிலக்கு குழு அமைக்கப்பட்டு அந்த குழு சிபாரிசு செய்யும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.
ஆளும் கட்சிக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்பதுதான் வரிவிலக்கு குழு பார்க்கும் முதல் தகுதி. இதனால் இந்த குழுவை கலைத்து விட்டு அனைத்து படங்களுக்கும் 15 சதவிகித வரி விதிக்கலாம்.
அல்லது வரியை முழுமையாக ரத்து செய்யலாம் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதுபற்றிய எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
நலிந்த தரமான படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இது வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிக்காக 400 படங்கள் காத்திருப்பதாக சொல்கிறார்கள். அதுபற்றிய அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. சென்னையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு எதிரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இதற்கு முந்தைய அரசும் சரி தற்போதைய அரசும் சரி எந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை.
தரமணி எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம், திரைப்பட கல்லூரி ஆகியவற்றை புணரமைக்கவும், நவீனபடுத்தவும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. கடந்த அரசால் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கப்பட்ட திரைப்பட நகரம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்க இருப்பதாக பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த இலவச வீட்டுமனை குறித்தும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அது பற்றியும் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. சினிமா நூற்றாண்டு விழா நடந்தபோது அதற்காக 10 கோடி ரூபாயை முதல்வர் அள்ளிக் கொடுத்தார். அதனால் பட்ஜெட்டில் சினிமாவுக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும் என்று திரையுலகினர் நம்பி இருந்தார்கள். ஆனால் கிடைத்தது ஏமாற்றமே.
0 comments:
Post a Comment