ஒரு பழைய காருக்கும், அதனால் ஈர்க்கப்படும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் உணர்வுகளின் சங்கமமே பண்ணையாரும் பத்மினியும். ஊருக்கு நல்லது செய்யும் பண்ணையாரும், (ஜெயபிரகாஷ்) அவரது மனைவி செல்லம்மாளும் (துளசி), இரவலாக வந்த பிரிமியர் பத்மினி காரின் மேல், அலாதி பாசம் கொள்கின்றனர்.
கார் ஓட்ட தெரியாத பண்ணையார், வேலைக்கு வைக்கும் ஓட்டுனர் முருகேசன் (விஜய் சேதுபதி) காரின் பால் ஈர்க்கப்படுகிறான்.
ஒரு கட்டத்தில், காரே பண்ணையாருக்கு சொந்தமாகி விட, அந்த சந்தோஷம் நிலைக்க விடாமல், பிறந்த வீட்டிலிருந்து ஏதையாவது சுருட்டிக் கொண்டு போவதிலேயே குறியாக இருக்கும் பண்ணையாரின் மகள் உஷா (நீலிமாராணி), காரை கொண்டு போய் விடுகிறாள். காருக்காக ஏங்குகின்றனர் பண்ணையார் தம்பதியும், முருகேசனும், பத்மினி திரும்ப அவர்களுக்கு கிடைத்தாளா? என்பதை இனிமையாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் அருண்குமார்.
சம்பவங்கள் ஏதும் இன்றி, காரைச் சுற்றியே கதை வலம் வருவது, ஒரு கட்டத்தில், தீராத அலுப்பைத் தருகிறது. சுவாரஸ்யம் சேர்க்க பண்ணையார் தம்பதிகளின் ஊடல் கலந்த காதலையும், முருகேசனின் காதலி, மலர்விழி (ரம்மி ஐஸ்வர்யா ராஜேஷ்) கதையையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
துளசிக்கு, இது குறிப்பிடத்தக்க படம். சரிதாவுக்கு அடுத்து, பெரிய கண்களுடன், அவர் காட்டும் உணர்வு பாவங்கள், முதன்மையிடம் பெறுகின்றன. ஜெயபிரகாஷ் கார் பித்து கொண்ட, பெரியவர் பாத்திரத்தில், வெளுத்து வாங்குகிறார். விஜய சேதுபதி, ஒரு ஓட்டுனராக வாழ்ந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிகம் வேலை இல்லை. வந்த வரையில் சோடையில்லை. விஜய சேதுபதியின் உடல் மொழி, பல இடங்களில் அவருக்குள் இருக்கும் தேர்ந்த நடிகரை அடையாளம் காட்டுகிறது.
பழைய கார் பற்றிய கதை என்பதால், காட்சிகளை மெகா சிரியல் அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம். வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள், இன்னமும் வெறுப்பேற்றுகின்றன.
ஆனாலும், அறிமுக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் சரக்கு உள்ளவர் என்பதை, சில பாடல்கள் உணர்த்துகின்றன. எனக்காக பொறந்தாயே என்ற பாடல் இன்னும் சில நாட்களுக்கு நினைவில் நிற்கும். கோகுல் பினாய், கண்களை உறுத்தாத கோணங்களில் படம் பிடித்திருக்கிறார்.
இயல்பு தன்மை மாறாமல் இயக்கி இருக்கிறார் அருண்குமார். திரைக்கதை என்னும் வித்தையை, அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில், ''பண்ணையாரும் பத்மினியும் - இனிய பயணம்!''
0 comments:
Post a Comment