ஜில்லா - சினிமா விமர்சனம்




தயாரிப்பாளர் சூப்பர் குட் ஆர்.பி. சௌத்ரியின் 25 ஆண்டு கால திரைப்பட தயாரிப்புபணியில் 85வதாக தயாராகி வெளிவந்திருக்கும் திரைப்படம், காவலன், நண்பன், துப்பாக்கி ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து தலைவா தோல்விக்குப்பின் வெளிவந்திருக்கும் விஜய்யின் 56வது திரைப்படம், 

புதியவர் ஆர்.டி. நேசனின் இயக்கத்தில் முதல் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாகவே திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் ஜில்லா!

சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. 

அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! 

அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். 

அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! 

தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் ஜில்லா வின் மீதிக்கதை!

இளைய தளபதி விஜய், தனக்கே உரிய ஸ்டைலில் சக்தியாக சக்தி காட்டியிருக்கிறார். மோகன்லால் - பூர்ணிமா மீதான அப்பா அம்மா பாசத்திலாகட்டும், மகா - நிவேதா, விக்வேஷ் - மகத் மீதான சகோதர பாசத்திலாகட்டும், வில்லன்களை அடித்து நொறுக்கும் அதிரடியிலாகட்டும், காஜல் அகர்வாலுடனான காதலில் ஆகட்டும் அனைத்திலும் ஸோ குட் சக்தி - விஜய்!

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... 

நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

மோகன்லால் கிட்டத்தட்ட விஜய்யின் காவலன் படத்தில் ராஜ்கிரண் ஏற்றிருந்த பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்றாலும்.. விஜய் மாதிரியே இந்த சிவன் பக்கத்தில் நின்னு பார்த்திருப்ப.. எதிர்த்து நின்னு பார்க்குறியா.. என்றும், இந்த சிவன் கால் படுற இடம் மட்டுமல்ல, நிழல் படுற இடம் கூட எனக்கே சொந்தமாயிரும் என்றும் அடிக்கிற டயலாக்குகளில் தியேட்டர் அதிர்கிறது. அவர் விஜய்யுடன் போடும் ஆட்டங்களும் சூப்பர்ப்!

காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

கணேஷ் ராஜவேலின் ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். டி. இமானின் இசையில் பாடல்கள் எட்டு ( கரோக்கி டிராக்குகள் உட்பட) அத்தனையும் குட்டு! ஆர்.டி. நேசனின் எழுத்து, இயக்கத்தில் முன்பாதி சற்றே ஜவ் வாக இழுத்தாலும், பின்பாதி பரபரப்பாக பட்டையை கிளப்பி இருக்கிறது. 

விஜய் அ.தி.மு.க., பார்டர் போட்ட டி. சர்ட்டுடன் ஒரு பாடலில் ஆடுவது, லாஜிக் இல்லாமல் போலீஸ் ஆவது... உள்ளிட்ட காமெடிகள் இருந்தாலும், ஜில்லா - நல்லாவே இருக்கிறது. ஆனாலும் இயக்குநர் பார்ட் 2 பில்டப்புடன் படத்தை முடித்திருப்பது கொஞ்சம் ஓவர்!

ஜில்லா கட்டும் கல்லா!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...