ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா? - கவுண்டவுன் ஸ்டார்ட்


எம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ரசிகர்களின் மோதலில் தொடங்கியது கருப்பு வெள்ளை பொங்கல். எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடர்ந்தது ஹாட் பொங்கல். 

சினிமா கலர் பூசிக்கொண்ட பிறகு ரஜினி, கமல் என அந்த பொங்கல் கொஞ்சம் காரசாரமாகவே பொங்கியது. இப்போது விஜய், அஜீத் பொங்கல். அந்த கவுண்டவுன் நாளை முதல் ஸ்டார்ட். போட்டிக்கு முன்னால் சின்ன ட்ரைய்லர் ஓட்டிப்பார்க்கலாமா...

* "விஜய்" மூன்றெழுத்து, "அஜீத்" மூன்றெழுத்து, "ஜில்லா" மூன்றெழுத்து, "வீரம்" மூன்றெழுத்து, இருவரும் எதிர் பார்க்கும் "வெற்றி" மூன்றெழுத்து. எப்பூடி.

* விஜய், மோகன்லால் என்ற கேரளத்து களரி வீரனோடு களம் இறங்குகிறார். அஜீத் விதார்த், பாலா, முகிஷ், சுஹைல் என்ற சகோதரர்களின் துணையோடு களம் இறங்குகிறார்.

* விஜய்க்கு கள்ளசிரிப்பழகி காஜல் அகர்வால் ஜோடி. அஜீத்துக்கு தகதக தக்காளி தமன்னா ஜோடி. இரண்டு பேருமே நடிப்பிலும், அழகிலும் "சபாஷ் சரியான போட்டி" என களத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்கள்.

* விஜய்யை இயக்கி இருப்பவர் முருகா என்ற ஒரு சுமாரான படத்தை இயக்கிய நேசன். அஜீத்தை இயக்கியவர் தெலுங்கில் இரண்டு ஹிட் படங்களையும், தமிழில் சிறுத்தை என்ற ஹிட் படத்தையும் இயக்கிய சிவா.

* இரண்டு பேரையுமே சண்டை போட வைத்திருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. "இரண்டு பேருமே டூப் போடாமல் சண்டை போட்டிருக்கிறார்கள். விஜய்யும், மோகன்லாலும் போடும் சண்டையில் இருவரின் இமேஜையும் காப்பாற்றி இருக்கிறேன்" என்றும், "அஜீத் போடும் சண்டையில் அனல் பறக்கும், காலில் இருக்கும் பிரச்னையை பொருட்படுத்தாமல் புகுந்து விளையாடி இருக்கிறார்" என்று பேட்டிகளை தட்டிவிட்டு சேம் சைட் கோல் போட்டிருக்கிறார் சில்வா.

* இரண்டு கதைகளுமே இந்த நிமிடம் வரைக்கும் படு சீக்ரெட். கசிந்த வரையில் கதை இதுதான். மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய், வளர்ப்பு மகன் என்று தெரியாமல் அப்பா மீது உயிரையே வைத்திருப்பார். 

மதுரையில் பெரும் புள்ளியான மோகன்லாலுக்கு எந்த பிரச்னை என்றாலும் அவருக்கே தெரியாமல் மகன் விஜய் முன்னால் நின்று முடித்து வைப்பார். மகனின் அசுர வளர்ச்சியும், செல்வாக்கும் அப்பா மோகன்லாலுக்கு பிடிக்காது. ஏன் பிடிக்காது என்றால். 

தனது அடுத்த வாரிசாக அவர் தன் சொந்த மகன் மகத்தை கொண்டு வர நினைக்கிறார். அதற்கு விஜய் தடையாக இருப்பாரோ என்று கருதி தனது அஸ்திரங்களை விஜய்க்கு எதிராக திருப்புவார். 

அது தெரிந்தும் விஜய் கடைசி வரை அப்பாவுக்காகவே உழைப்பார். அதை கடைசியில் உணர்ந்து சொந்த மகனை விட வளர்ப்பு மகன் விஜய்யே சிறந்தவன் என்பதை மோகன்லால் உணர்வார். இது ஜில்லாவோட கதை. 

* கிராமத்து அஜீத்துக்கு நான்கைந்து தம்பிகள். இவர்கள் பண்ணாத பஞ்சாயத்து கிடையாது. அடிக்காத ஆள் கிடையாது. அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தலைகொடுக்கவும், தலை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் தம்பிகள். 

தம்பிகள் சிலருக்கு காதல் வர... அண்ணனுக்கு கல்யாணம் நடந்தால்தானே தங்களுக்கும் நடக்கும் என்று கருதும் தம்பிகள், அண்ணனுக்கு தமன்னாவை பெண் பார்க்கப்போன இடத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். 

அந்த பிரச்னையை தீர்க்க அண்ணன் போராட. அண்ணனுடன் அண்ணி தமன்னாவை சேர்த்து வைக்க தம்பிகள் போராட கமகம கிராமத்து விருந்து வீரத்தோட கதை.

* ஜில்லாவுக்கு மெலடி கிங் இமான் இசை. வீரத்துக்கு குத்துப்பாட்டு கிங் தேவிஸ்ரீபிரசாத் இசை. பாட்டுல ரெண்டு பேருமே பட்டைய கிளப்பிட்டாங்க. பின்னணி இசையில என்ன பண்ணியிருக்காங்கன்னு படத்துலதான் பார்க்கணும்.

* விஜய்யின் கேரக்டர் பெயர் சக்தி, அஜீதின் கேரக்டர் பெயர் விநாயகம். புராணத்தில் சக்தியின் மூத்த மகன்தான் விநாயகம். ஆனால் சக்தியை விட அதிக சக்தி கொண்டவர் விநாயகம்.

* விஜய்க்கு கிருதாவுடன் இணைந்த சின்ன தாடி கெட்அப். அஜீத் மங்காத்தா, ஆரம்பம் படங்களின் தொடர்ச்சியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட்-அப். விதவிதமான மார்டன் டிரஸ் விஜய் காஸ்ட்யூம். வெள்ளை வேட்டி சட்டை அஜீத் காஸ்ட்யூம். பாடல்களில் மட்டும் கோட் சூட்.

* விஜய்யுடன் காமெடியில் கலக்குவது சூரி, அஜீத்துடன் காமெடியில் கலக்குவது சந்தானம். எனவே சந்தானம், சூரி போட்டியும் பொங்கலில் பொங்குகிறது.

* இரண்டு படத்திலுமே பாட்டு, பைட்டு, ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் அயிட்டங்கள் பக்காவாக இருக்கும். இல்லாத ஒரே விஷயம் லாஜிக்.

* ஜில்லாவை தயாரித்திருப்பது வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ். வீரத்தை தயாரித்திருப்பது பாரம்பரியமிக்க நிறுவனமான விஜயா புரொடக்ஷன்.

* இரண்டு படங்களுமே எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்துவிட்டது. சேட்டிலைட் ரைட்சும் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிமிடம் புரட்யூசர்கள் இருவருமே வெரி ஹேப்பி. படத்தை வாங்கியவர்களும், பார்க்கும் ரசிகனும் ஹேப்பியா என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்து விடும்.

* ஜில்லா உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் மட்டும் 300 தியேட்டர். வீரம் உலகம் முழுவதும் 1300 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் 150 தியேட்டர். இரண்டு படங்களுமே ஜனவரி 19 வரை அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் புக்கிங்.

* எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த போக்கிரி-ஆழ்வார் மோதலில் ஜெயித்தது போக்கிரி. இப்போது ஜில்லா-வீரம். ஜெயிக்கப்போவது யார்? அல்லது இருவருமா? நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தெரிந்து விடும். 

கவுண்டவுன் ஸ்டார்ட்....!!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...