கடின உழைப்பிற்கும், அதிக ஈடுபாட்டுக்கும் பெயர் போனவர் சீயான் விக்ரம் என்று, அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்திலேயே தெரியும். "ராவணன்" படத்திற்கு பிறகு விக்ரம் கஷ்டப்பட்டு நடித்திருக்கும் படம் தான் "தெய்தவத்திருமகள்".
மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார் விக்ரம். படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் "மதராசப்பட்டினம்" புகழ் விஜய். "தெய்வத்திருமகள்" படம் பற்றிய ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ் இதோ...
* மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக, கிருஷ்ணா எனும் கேரக்டரில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம். இந்த கேரக்டருக்காக, 10கிலோ எடையை குறைத்தது மட்டுமில்லாமல், சூட்டிங் நடந்த கிட்டத்தட்ட 100நாளும் கடும் உணவு கட்டுபாட்டை கடைப்பிடித்தாராம்.
* கிருஷ்ணா கதாபாத்திரத்திற்காக 2 மாதம் பாத்வே என்ற மனநல காப்பகத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசி, பழகி, அவர்களை நன்கு கவனித்து, தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். நிச்சயம் இதற்காக அவருக்கு ஒரு பெரிய சலாம் போடலாம்.
* இதுவரை கவர்ச்சியாகவே வந்த அனுஷ்காவை, இந்த படத்தில் சற்று வித்யாசமாக பார்க்கலாம். படத்தில் அவருடைய கேரக்டர் வக்கீல் கேரக்டராம். இதுவரை தான் நடித்த கேரக்டர்களிலேயே இதுபோன்று எந்த படத்திலும் அமையவில்லை என்று சிலதினங்களுக்கு முன்னர் அவரே கூறியிருந்தார். அந்தளவுக்கு அனுஷ்காவின் கேரக்டர் பவர்ஃபுல்லானதாம்.
* இதேபோல் மற்றொரு நடிகையான அமலா பால், இந்த படத்தில் ஸ்வேதா என்ற கனமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கேரக்டருக்காக தன்னை மிக துள்ளியமாகவும், அழகாகவும், வெளிப்படுத்தியுள்ளதால் டைரக்டர் விஜய், விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் அமாலா பாலை பாராட்டினார்களாம்.
* காமெடிக்கு பெயர் போனவர் நடிகர் சந்தானம். இதுவரை ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கி வந்த சந்தானம், முதன்முறையாக அனுஷ்காவுடன் சேர்ந்து காமெடியில் அசத்தியிருக்கிறாராம். மேலும் காமெடியனாகவும், ஒரு முக்கிய காட்சியில் கண்ணீரும் சிந்தி அவருடைய முழு நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருக்கிறாராம்.
* இப்படத்தில் விக்ரமுடன் ஒன்றிப்போய் இருக்கும் மற்றொரு கேரக்டர் மும்பையை சேர்ந்த சாரா என்ற குழந்தை நட்சத்திரம். படத்தில் உள்ள வனசங்களை உச்சரிக்க பலவித பயிற்சி கொடுத்து சாராவை பேச வைத்துள்ளனர். அவர்களது முயற்சிக்கு நல்ல பலனாக, தனக்கு கொடுக்கப்பட்ட வசனங்களை மிக அழகாக பேசி, நடித்து அசத்தினாராம்.
சூட்டிங்கின் போது ஒருநாள் விக்ரம்-சாரா சம்பந்தப்பட காட்சியை படமாக்கி கொண்டு இருந்தனர். அப்போது விக்ரமிடம், சாரா கேள்வி கேட்பது போன்றும், இதற்கு விக்ரம் பதிலளிக்க சற்று யோசித்து சொல்வது போன்றும் காட்சி. ஆனால் விக்ரம் டயலாக்கை மறந்து விட்டார் என்று எண்ணி, விக்ரமின் வசனத்தை சாரா முணுமுணுத்து இருக்கிறார்.
இதைக்கேட்ட மொத்த யூனிட்டும் சாராவை பாராட்டினார்களாம். கூடவே கெட்டிக்காரி சாரா என்று சொல்லி பெயரிட்டாராம் விக்ரம்.
* படத்தில் கிருஷ்ணாவாக நடித்திருக்கும் விக்ரம், அந்த கேரக்டரில் இருந்து வெளியே வர ரொம்பவே கஷ்டப்பட்டாராம். கண்ணாடி முன் நின்று, பார்த்து பேசிதான் அவரால் அந்த கேரக்ட்டரை விட்டு வெளியேற முடிந்ததாம்.
ஆனாலும் சில நேரங்களில் முழுநேர கிருஷ்ணாவாகவேதான் இருந்தாராம். அப்படி ஒருநாள் விக்ரமிடம் அனுஷ்கா ஏதோ பேச, விக்ரமோ கிருஷ்ணா மாதிரியே பதிலளித்தாராம். இதைக்கண்டு அனைவரும் வியந்து போனார்களாம்.
* இப்படத்தின் ஒரு முக்கிய அம்சமாக தேவைப்பட்டது கோர்ட். இதற்காக கலை இயக்குநர் சந்தானம், நிஜ கோர்ட்களுக்கு எல்லாம் சென்று அங்குள்ள பொருட்கள், தேவைப்பட்ட பல விஷயங்களையும் சேகரித்து, இப்படத்திற்காக ஒரு கோர்ட்டையே உருவாக்கி கொடுத்திருப்பதை படம் பார்த்த பின்னர் எல்லோரும் நம்புவார்கள்.
* இப்படத்தின் சூட்டிங் பெரும்பாலும் சென்னை மற்றும் ஊட்டி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்பாதி ஊட்டியில் பிரமாண்ட செட் போட்டும், பிற்பாதி சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளிலும் காட்சி அமைத்திருக்கின்றனர்.
* படத்தின் சூட்டிங் காட்சிகளில் போது பலருக்கும் விக்ரம்மை அடையாளம் தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் விக்ரமின் நடிப்பை பார்த்து முதியவர் ஒருவர் பாவம் பைத்தியம் என்று கூறினாராம். அந்தளவுக்கு கேரக்டரோடு ஒன்றிப்போய் இருந்திருக்கிறார் விக்ரம்.
* முதல் முறையாக ஹாலிவுட்டில் வசூல் சாதனை படைக்கும் அம்சங்கள் இந்த படத்தின் ஒரு பாட்டில் இடம் பெறுகிறது. முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்குமாம்.
* இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், தான் பணியாற்றிய படங்களிலேயே, இந்தபடத்திற்கு தான் பின்னணி இசை அருமையாக அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். அதிலும் படத்தின் உச்சக்கட்ட காட்சியில் 10 நிமிடங்களுக்கு சிம்ஃபொனி இசை அமைத்திருப்பது நம் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகப்படுத்தும்.
* இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் நீரவ்ஷா, முதன்முறையாக விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் வரும் காட்சிகளின் வடிவமைப்பு ஒரு கனவு போல சுகமாகவும், அழகாகவும் பதிவாக்கி இருக்கிறார். அதிலும் ஊட்டியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம்.
* இயக்குநர் விஜய் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனியின் வெற்றிக்கூட்டணி இந்த படத்திலும் தொடர்கிறது. அவரும், அவரது குழுவினரும் தான் எனது முதல் விமர்சகர்கள் என்று கூறும் விஜய், ஆண்டனியின் படத்தொகுப்பு தெய்வத்திருமகள் படத்தை எங்கோ கொண்டு சென்றிருக்கிறது என்று பெருமையாக கூறுகிறார்.