ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் ஜூலை இரண்டாவது வாரத்தில் ரிலீசாக இருக்கிறது.

க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பில், ‌வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, லட்சுமிராய், பிரேம்ஜிஅமரன், வைபவ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் "மங்காத்தா".

சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படத்‌தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாக "மங்காத்தா" படம் இருக்கும் என்று கூறுகின்றனர். கூடவே அஜீத்திற்கு இது 50வது படமும் கூட, இதனால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ‌ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக இப்படம் அஜீத் பிறந்தநாளில் ரிலீசாகும் என்று கூறப்பட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்கள், படம் தள்ளிபோனதால் ஏமாற்றம் அடைந்தனர். படத்தை தான் ரிலீஸ் செய்ய முடியவில்லை, பாட்டையாவது அஜீத் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணயிருந்த மங்காத்தா டீமிற்கு அதிலும் ஏமாற்றம் தான்.

கடைசியில் ஒரே ஒரு பாடலை மட்டும் புரோமசனல் சாங்காக அஜீத் பிறந்தநாளுக்கு முதல்நாளில் இண்டர்நெட்டில் வெளியிட்டனர். "விளையாடு மங்காத்தா..." என்று ஆரம்பக்கும் அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்‌பை பெற்றதால், அந்த ஒருபாடலை மட்டும் முழுமையாக சிலதினங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

இதனிடையே மங்காத்தா படம் எப்போது ரிலீசாகும் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. தற்போது மங்காத்தா டீம், ஐதராபாத்தில் இறுதிகட்ட சூட்டிங்கை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் சூட்டிங் முடிகிறது.

இதன்பின்னர் படத்தில் சில கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற இருக்கிறது. இந்த வேலைகள் ஜூன் மாதம் முழுவதும் நடைபெற இருப்பதால், ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். கூடவே படத்தின் ஆடியோவை ஜூன் மாதம் ரிலீஸ் செய்கின்றனர்

சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த், உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த சில வாரங்களாக, சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நுரையீரலில் படிந்துள்ள நீர் கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு, நவீன சிகிச்சை மேற்கொள்வதற்காக, ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவருடன், அவரது குடும்பத்தினரும் சென்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவ மைய மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை தெரிவிக்க, மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.

மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "இங்கு சிகிச்சை பெற்று வருவோர் சம்மதித்தால் மட்டுமே, அவர்களின் விவரம், நோய், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்கள், வெளியில் தெரிவிக்கப்படும் என்றன.

ரஜினி சிகிச்சை பெற்று வரும் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை, சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைக்கு பிரபலமானது.

ஆசியாவில் உள்ள மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங்கிற்கு, இந்த மருத்துவமனையில் தான், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

நல்லபடியா திரும்பி வருவேன் - ரஜினி

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக நேற்று (27ம்‌தேதி) இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தத்தில் இருந்த "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இதையடுத்து, உடல்நலம் தேறிய அவர், மீண்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பார்வையாளர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தனி வார்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை, அமெரிக்க நிபுணர்கள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

ரஜினியின் நுரையீரலில் அழுத்தமாக படிந்துள்ள நீர்கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருடன் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். ரஜினி இருந்த ஆம்புலன்ஸ் வேன், விமானம் வரை செல்ல முதல்வர் ஜெயலலிதா சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததால் விமானம் வரை ஆம்புலன்ஸ் சென்றது. பின்னர் ரஜினி மருத்துவ குழுவினரின் உதவியுடன் விமானத்தில் ஏற்றப்பட்டார்.

சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரஜினி சில வாரங்களுக்கு தங்கி சிகிச்சை எடுப்பார் என்றும், அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரஜினி வாய்ஸ் :

முன்னதாக ரஜினியின் வாய்ஸ் அடங்கிய சிடி ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார். அதில் பேசிய ரஜினி, நான் உங்க ரஜினிகாந்த் பேசுறேன். நான் நல்லா இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்க. நான் பணம் வாங்குறேன். நடிக்குறேன். அதுக்கு நீங்க என் மேல இவ்ளோ அன்பு செலுத்துறீங்க.

உங்களுடைய பிரார்த்தனை, அன்புக்கு கைமாறா என்ன செய்வேன்னு, செய்யப்போறேன்னு தெரியல. என் பேன்ஸ் எல்லாரும் கடவுள் ரூபத்தில் இருக்குறதா நினைக்கிறேன். உங்க பிரார்த்தனையால சிங்கப்பூர் போயிட்டு நான் சீக்கிரமே, நல்லபடியா திரும்ப வந்து உங்களையெல்லாம் சந்திக்குறேன். உங்க அன்பால தலைநிமிந்து நிற்பேன், என்று கூறியுள்ளார்.


லதா ரஜினி அறிக்கை :

ரஜினியின் மனைவி லதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எனது கணவர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற தாங்கள் செய்து வரும் பூஜைகளுக்கும், கூட்டு பிரார்த்தனைகளுக்காக முதலில் நான் எனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் நலமுடன் உற்சாகமாகவும் உள்ளார்.

அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். அவரைப் பற்றி தேவையில்லாத செய்திகள் வந்து கொண்டிருப்பதை கண்டு தாங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறியுள்ளார்.


மருத்துவமனை அறிக்கை :

ரஜினி உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினிகாந்த் கடந்த 13ம்தேதி மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக அவருக்கு குடும்ப டாக்டர் மூலம் இசபெல்லா மருத்துவமனையில் 2 முறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேறி வருகிறார். நலமுடன் உள்ளார். அவரே உணவருந்துகிறார்.

குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கிறார். அவர் சூழ்நிலை மாற்றத்துக்காகவும், ஓய்வுக்காகவும் அதே நேரம் குறிப்பிட்ட பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று மொழிகளில் அர்ஜூன் நடிக்கும் காட்டுபுலி

கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து உருவாகும் படம் "காட்டுபுலி". இப்படத்தை கத்தார், வீர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்திபடங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய டினு வர்மா முதன்முறையாக அர்ஜூனை வைத்து இப்படத்தை இயக்குகிறார்.

உடற்பயிற்சி கூடம் ஒன்றில் அர்ஜூனை முதன்முதலாக சந்தித்த டினு வர்மா, அர்ஜூனின் ஒர்க்கிங் ஸ்டைலை பார்த்து பிடித்துபோய் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டுபகுதியில் த்ரில்லர் நிறைந்த படமாக காட்டுபுலி படத்தை இயக்கி வருகின்றனர்.

ரஜினீஷ் - சாயாலி பகத், அமீத் - ஹனாயா, ஜஹான்-ஜெனிபர் ஆகிய மூன்று ஜோடிகள் காட்டுக்குள் ஒரு ட்ரிப் போகிறார்கள். அங்கே ஒரு முக்கியமான நெருக்கடியில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அப்போது அர்ஜூன் - பிரியங்கா தேசாய் ஜோடியையும் அவர்களின் மகள் தன்யாவையும் சந்திக்கிறார்கள். காட்டுபகுதியில் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியிலிருந்து அர்ஜுன் எப்படி அவர்களை காப்பாற்றிக் கொண்டுவருகிறார் என்பது கதை.

தலைக்கோணம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தங்கியிருந்து இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள். ராட்சத பல்லி, சிறுத்தைப் புலி, அட்டை, விஷப் பாம்புகள் என காட்டின் அத்தனை கொடிய விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து இந்தப் படத்தை படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் 50 குதிரைகள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தக் குதிரைகளைத் தேடி சிறுத்தைப் புலிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இவற்றிடமிருந்து பாதுகாக்க ஏராளமான காவலர்களை நியமித்து குதிரைகளைப் பார்த்துக் கொண்டார்கள் காட்டுப் புலி குழுவினர்.

அர்ஜூனுக்கு மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படங்களில் இந்த காட்டுபுலி படமும் நிச்சயம் சேரும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் காட்டுபுலி குழுவினர்.

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: லண்டன் செல்கிறார் ரஜினி

சிறுநீரக பாதிப்புக்கு தொடர் சிகிச்சை பெற நடிகர் ரஜினிகாந்த் (60) இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில் லண்டன் செல்கிறார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு நெருக்கமான திரைப்படத் துறையினர் இதை ஊர்ஜிதப்படுத்தினர். திரைப்படத் துறையினரின் உதவியுடன் அவர் லண்டன் செல்கிறார்.

கடந்த மாதம் மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு பிரச்னை இருந்து வருகிறது. இப்போது அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராணா படப்பிடிப்பு தொடக்க விழா அன்று..."இரோஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிடெட்' நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் "ராணா' படப்பிடிப்பு சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவில் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது;

இந்த படப்பிடிப்பின் தொடக்க தினத்தன்று நடிகர் ரஜினிகாந்த்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 25 நாள்களாக ரஜினிகாந்த் உடல்நலக் குறைவுடன் உள்ளார்.

உடல்நலக் குறைவு-அடிப்படைக் காரணம் என்ன? மருத்துவ ரீதியாக ரத்த அழுத்தத்துக்கும் சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, நடிகர் ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகச் செயல்பாட்டில் ஓசையின்றி பிரச்னைகள் ஆரம்பித்திருந்தன.

சிறுநீரகத்தில் பாதிப்பு என்ன? மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு ரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மூச்சுத் திணறல்-அதீத உடல் சோர்வுக்கான காரணங்களை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

சிறுநீரகத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவு சேரும் உப்புச் சத்து ("யுரியா'), பொட்டாஷியச் சத்து, கிரியாட்டினின் பாஸ்பேட்டிலிருந்து பிரியும் கிரியாட்டினின் எனும் வேதிப்பொருள் ஆகியவற்றை சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும்.

அதாவது, ரத்தத்தில் "யூரியா' எனப்படும் உப்புச் சத்து அளவு 40 மில்லிகிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்; பொட்டாஷியச் சத்து 4.5 மில்லிகிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்; கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு தொடக்கத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளிலேயே மேலே குறிப்பிட்ட உப்புச் சத்து, பொட்டாஷியச் சத்து, கிரியாட்டினின் அளவுகள் அதிகமாக இருந்தன. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

அதீத சோர்வு, மூச்சுத் திணறல் ஏன்? சிறுநீரகச் செயல்பாடு ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைத் தீர்மானிக்கும் "எரித்ரோபாய்ட்டின்' ஹார்மோன் உற்பத்தியில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரத்தத்தில் இயல்பாக 14 கிராம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு (ரத்த சோகையைத் தடுப்பது.) அவருக்குக் குறைந்தது. அதீத உடல் சோர்வு ஏற்பட்டதற்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்ததும் காரணம். சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாகவே மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மே 13 முதல்...: கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சை பெற்று நடிகர் ரஜினி வீடு திரும்பினார். எனினும் மூச்சுத் திணறல் தொடர்ந்ததால், மே 13-ம் தேதி இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தனி அறையில் அனுமதிக்கப்பட்டார்.

இதய மருத்துவ நிபுணர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவினர் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மூச்சுத்திணறல் பிரச்னையைச் சீராக்க மே 18-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 22) தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மீண்டும் தனி அறைக்கு மாற்றப்பட்டார். சிறுநீரக பாதிப்பு காரணமாக இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


உணவில் கட்டுப்பாடு :

சிறுநீரக பாதிப்பு காரணமாக உப்பு, புரதச் சத்து குறைவான உணவையே சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குளிர் பானங்களை அவர் இனி சாப்பிடக் கூடாது; பாதாம்-பிஸ்தா-முந்திரி உள்ளிட்டவை மற்றும் கீரைகளையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


நலமாக உள்ளார் :

தனி அறையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நலமாக உள்ளார். தொலைக்காட்சி பார்க்கிறார். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறார். எனினும் சிறுநீரக பாதிப்புக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை பெற அவரை லண்டன் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.

அடுத்து சிம்புதேவனுடன் இணைகிறார் தனுஷ்

தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் தனுஷ், சிறிதும் ஓய்வின்றி அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து புக்காகி கொண்டே இருக்கிறார். தற்போது வேங்கை படத்தை முடித்துள்ளார்.

இப்படத்தை டைரக்டர் ஹரி இயக்கியுள்ளார். தமன்னா அவருக்கு ‌ஜோடியாக நடித்துள்ளார். ஹரியின் முந்தைய படங்களை போன்று இந்தபடமும் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகியுள்ளது.

இதற்கு அடுத்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் 50 சதவீத சூட்டிங் முடிவடைந்து உள்ளது.

இந்நிலையில் இரண்டாம் உலகம் படத்திற்கு அடுத்து, டைரக்டர் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தனுஷூடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறைஎண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

அஜீத்தை இயக்க போட்டி போடும் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா

அஜீத்தை வைத்து தங்களது திரையுலக பயணத்தை தொடங்கிய பிரபல டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்(தீனா), மற்றும் எஸ்.ஜே.சூர்யா(வாலி), மீண்டும் அஜீத்தை வைத்து ஒரு படத்தை இயக்க போட்டி போட்டு வருகின்றனர்.

அஜீத்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தீனா படத்தையும், எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தையும் கொடுத்து தங்களது திரை பயணத்தை தொடங்கினார். இரண்டு படங்களுமே அஜீத்திற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்கள்.

அதிலும் குறிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா படம் அஜீத்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது. மேலும் அஜீத்தை தல என்று செல்லமாக அழைக்க வைத்ததும் தீனா படம் தான்.

முதல்படத்திலேயே ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து பிரபல டைரக்டர்கள் வரிசையில் சேர்ந்தனர் எஸ்.ஜே.சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாஸூம்.

இந்நிலையில் மீண்டும் அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்க முருகதாஸ் மற்றும் எஸ்.‌ஜே.சூர்யாவும் கடுமையாக போட்டி போடுவதாக தெரிகிறது. இருவரும் ஒரு கதையை ரெடி பண்ணி அஜீத்திடம் காண்பித்துள்ளனர்.

அதில் முருகதாஸின் கதை பிடித்து போக அவருக்கு ஓ.கே., சொன்னதாக தெரிகிறது. அதேசமயம் எஸ்.ஜே.சூர்யாவையும் ஒதுக்காமல் தங்களுடைய படத்திலும் நடிப்பதாக கூறியிருக்கிறார் அஜீத். தற்போது அஜீத் மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து சக்ரி டோலட்டி இயக்கும் பில்லா-2வில் நடிக்கிறார். பில்லா-2விற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிப்பார் எனத் தெரிகிறது

பாலிவுட்டுக்கு போய்கிறது காதல்!

கடந்த 2004ம் ஆண்டு, டைரக்டர் ஷங்கரின் தயாரிப்பில், பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில், பரத், சந்தியா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் "காதல்".

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், மாபெரும் வெற்றி பெற்றதோடு நடிகர் பரத்தும், சந்தியாவுக்கும் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில் இப்படம் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் டைரக்டர் விக்ரமாதித்யா மோத்வானே இயக்க இருக்கிறார்.

ஏக்தா கபூர் தயாரிக்கிறார். இளம் நடிகர் பிரதிக் பாபர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

சமீபமாக பாலிவுட் படங்கள் கோலிவுட்டிலும், கோலிவுட் படங்கள் பாலிவுட்டிலும் ரீ-மேக் ஆவது அதிகரித்து கொண்டே இருக்கிறது.

ரஜினி உடல்நிலை : மனைவி லதா பேட்டி

உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று முன்தினம் இரவு உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

டாக்டர் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். "ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார். அவர் குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும், என்று ரஜினிகாந்த் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். நள்ளிரவே டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மூச்சுத்திணறல் காரணமாக செயற்கை சுவாசமும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிந்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களும் குவிந்தனர். யாரையும் மருத்துவமனைக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்த போது, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் நலமுடன் உள்ளார் என்று மட்டும் பதிலளிக்கப்பட்டது. இதற்கிடையே ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மருமகன் தனுஷ், ராமச்சந்திரா மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்தணிகாசலம் ஆகியோர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கினர்.


லதா ரஜினிகாந்த் கூறுகையில், "அவர் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. அவர் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து விசாரிக்க உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதை தவிர்க்கவும், அமைதியான சூழல் வேண்டும் என்பதற்காக தான் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். டயாலிசிஸ் சிகிச்சை என்பது டாக்டர்கள் அவருக்கு அளிக்கும் சிகிச்சையின் ஒரு பகுதி.

இந்த சிகிச்சை தேவை என்பதால் டாக்டர்கள் மேற்கொண்டனர். இதை வைத்து உடலின் பாகங்கள் செயல்படவில்லை என்று கூறக்கூடாது. டாக்டர் குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் வார்டுக்கு அவர் வருவார். விரைவில் வீடு திரும்புவார். மீடியாக்கள் உட்பட யாரும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றார்.

டாக்டர் தணிகாசலம் கூறுகையில், "ரஜினிகாந்த் ஒரு ஆரோக்கியமான மனிதர். படப்பிடிப்புக்களுக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடியவர். அவருக்கு சளி பிடிப்பது என்பது இயற்கை தான். அதன் மூலம் மற்ற சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. பெரிய டாக்டர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஒரு டாக்டர் என்ற முறையில் நோயாளியை பற்றி, அவருடைய முழு தகவல்களையும் சொல்ல முடியாது.

ஆனால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். இன்று (நேற்று) காலை கூட என்னிடம் "ஜோக் அடித்தார். காலை 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டார். இட்லி சாப்பிடும் அளவிற்கு உடல் ஆரோக்கியமாக தான் இருக்கிறது. ரஜினிகாந்திற்கு மூச்சுத்திணறல், பேதி இருந்தது. நுரையீரலில் உள்ள நீரை வெளியே எடுப்பதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளோம் என்றார்.

நடிகர் தனுஷ் கூறுகையில், "அவர் நலமுடன் உள்ளார். ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். திருநெல்வேலியில் கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. யாரும் அதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றார்.

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி

ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... என்று அந்தர் பல்டியடித்து வசனம் பேசுவார். அரசியல்ல மட்டுமல்ல... சினிமாவிலும் இதெல்லாம் சாதாரணம்தான்.


ஆளும்கட்சிகளுக்கு ஜால்ரா அடித்து காக்கா பிடித்தே பழகிவிட்ட திரையுலக காக்கா கூட்டம் இனி அதிமுக பக்கம் ‌போகும்; கருணாநிதியை புகழ்பாடியவர்கள் எல்லாம் இனி முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடிக் கொண்டிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?.


தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு வரை திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த நடிகர் வடிவேலு, இப்போது தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால், அதிமுகவும் ஒரு பெரிய கட்சிதான்; மக்கள் விரும்பியதால் ஜெயலலிதா முதல்வர் ஆகியிருக்கிறார், என்று கூறியுள்ளார்.


சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் ஒரு தொகுதி விடாமல் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தவர் நடிகர் வடிவேலு. செல்லும் இடங்களில் இல்லாம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து வடிவேலுவின் பேச்சை கேட்டு ஆர்ப்பரித்தனர்.


வடிவேலுவும் சொந்த பகை காரணமாக ‌தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன், டம்மி பீசு, குடிச்சிட்டு உளறுகிறான்... என்பன போன்ற வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அதையும் ரசிகப்பெருமக்கள் ரசித்து கேட்டனர். பிரபலமான நடிகர் என்பதால்தான் இப்படி கூட்டம் கூடியிருக்கிறது என்பதை உணராத வடி‌வேலுவும், தி.மு.க.வும் எல்லாம் ஓட்டுக்களாக மாறும் என கணித்தனர்.


ஆனால் அவர்களது கணிப்பு பொய்த்துப் போய், தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. (இப்படியெல்லாம் நடக்கும் என முன்கூட்டியே தெரிந்ததாலோ என்னவோ தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி ஒரு வார்த்தைகூட பேசவில்லை வடிவேலு)


தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வரும் என்பதை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே கணித்த நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து அவசரம் அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் தோல்வி குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார்.


இதற்கிடையில் சென்னையில் அவரது வீட்டை தாக்க தேமுதிகவினர் முயற்சி செய்ததால், சென்னைக்கு வர வேண்டாம் என்று போலீசார் வடிவேலுவை கேட்டுக் கெண்டனர். இதனால் மதுரையிலேயே பதுங்கியிருக்கும் வடிவேலு, தேர்தல் தோல்வி பற்றி அந்தர் பல்டியடித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.


அவர் அளித்துள்ள பேட்டியில், ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை. எனக்கும், விஜயகாந்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது, ஒரு படப்பிடிப்பில்தான். அவரை, வருங்கால முதல்-அமைச்சர் என்று வசனம் பேச சொன்னார்கள். நான், அப்படி பேச மறுத்து விட்டேன். ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன்.


மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள். தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர்.


ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்? இது, நல்லாயில்லை. அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.

ஒட்டமெடுத்த திமுக திரையுலக ஜால்ராக்கள்

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திரையுலகின் ஜாம்பவான்களாக, அதிகாரத்தில், தலைவர் பதவியில் இருந்த ராம.நாராயணன், வி.சி.குகநாதன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கும் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன்.


இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.


பெப்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள வி.சி.குகநாதன் அளித்துள்ள பேட்டியில், `திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன்.


தொடர்ந்து அதை செய்ய முடியுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.


முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் ஏராளமான பாராட்டு விழாக்களை எடுத்தவர்கள்தான் இந்த ராம.நாராயணனும், வி.சி.குகநாதனும். அதேபோல கருணாநிதி பங்கேற்கும் திரையுலகம் தொடர்பான அனைத்து விழாக்களிலும் இவர்கள் 2 பேரும் ஆஜராகி கருணாநிதி திரைத்துறைக்கு செய்த சலுகைகளை குறிப்பிட்டு பாராட்டி பேசி கருணாநிதியை சந்தோஷப்படுத்துவார்கள்.


பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் தமிழ் திரையுலகம் கருணாநிதிக்காக நடத்திய பாராட்டு விழாவில் அரசியல்வாதி கெட்-அப்பில் கலந்து கொண்ட அஜித் பேசும்போது, ஒரு பிரச்னைன்னா திரைத்துறையில, பதவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க.


நாங்க ஊர்வலம் எடுக்கப் போறோம்னு அறிக்கை விடுறாங்க. பதவில இருக்கிற ஒரு சிலர், நடிகர்கள் எல்லாரும் கலந்துக்கணும்னு சொல்லி மிர‌ட்டி வர வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. வராவிட்டா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க.


அதுக்கு பயந்து வரவேண்டியிருக்கு, என்று நியாயமான கருத்துக்களை தெரிவித்து ஒட்டுமொத்த திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார். அதன் பிறகு அஜித் சந்தித்த பிரச்னைகள் ஏராளம்.


இன்று கருணாநிதி ஆட்சி மாறியதும், பதவியை விட்டு விலகும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் அஜித் விவகாரத்தில் ரொம்பவே மூக்கை நுழைத்தார். பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஊரோடு ஒத்துப் போகணும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.


தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலோ கொண்டு வந்தோமோ... அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம், என்று மிரட்டும் தொனியில் பேசினார். பின்னர் அஜித், கருணாநிதியை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிறகே பிரச்னை முடிவுக்கு வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

இனி போயஸ் கார்டனா? அறிவாலயமா? குழப்பத்தில் வடிவேலு!

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார்.

தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌

அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.


இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு!

ஹன்சிகாவை மிரட்டும் ஆந்திர புயல் ரிச்சா!

தமன்னா புகழ் பாடிய தமிழ்சினிமா, சிலபல காரணங்களால் டாப்ஸியை புகழோ புகழென்று புகழ்ந்தது. அதன் பிறகு அவரையும் கைகழுவிவிட்டு ஹன்சிகா பக்கம் திரும்பியது பார்வை.


இப்போது ஹன்சிகாவை மிரட்ட ஆந்திராவில் இருந்து களமிறங்கியிருக்கிறது ஒரு புயல். அவர் பெயர் ரிச்சா. ஆந்திராவில் இருந்து. முதலில் அம்மணியின் அழகை நம்பி அழைத்தவர் செல்வராகவன்தான்.


தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆன்ட்ரியா அதிரடியாக நீக்கப்பட்டு அங்கே அமர்த்தப்பட்டார் ரிச்சா.


செல்வராகவனைத் தொடர்ந்து சிம்புவும் தனது அடுத்த படமான ஒஸ்தியில் அம்மணியை புக் பண்ணி விட்டாராம்.


ஹன்சிகா வந்த புதிதில் இருந்த எழுச்சி இப்போது இந்த ரிச்சாவுக்கும் இருக்கிறது என்கிறது கோடம்பாக்கம்! நிலைமையை உணர்ந்த ரிச்சா, சென்னையில் ஒரு மேனேஜரை நியமித்து கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்.


ஹன்சிகா மோகம் சரிந்ததற்கு காரணம், அவர் நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் என இரண்டு படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளித்ததால்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

தபாங் ரீ-மேக்கில் சிம்புவுக்கு ஜோடி கிடைச்சாச்சு

இந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "தபாங்" படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது.

இப்படத்தை தில், தூள், கில்லி போன்ற ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் தரணி இயக்குகிறார். "குருவி" படத்திற்கு பின் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தரணி இப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் ஹீரோவாக நமது சிம்பு என்ற எஸ்.டி.ஆர்., நடிக்கிறார். படத்தில் சிம்புவுக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், இறுதியாக தெலுங்கு நடிகை ரிச்சா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தமன் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை 9ம் தேதி திங்கள் அன்று துவங்குகிறது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி தபாங் படத்தின் தயாரிப்பாளரும், சல்மான்கானின் சகோதராருமான அர்பாஸ் கான் பங்கேற்கிறார்.

தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்

நடிகை தமன்னா காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார்.


அந்தப் பட சூட்டிங்கின்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.


இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்று திருமணம் முடித்து, குழந்தை குட்டியென்று சந்தோஷமாக வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார். அதனால் நம் காதலுக்கும் பெற்றோர் பச்சைக் கொடி காட்டுவார் என எதிர்பார்த்திருந்தார். தமன்னாவிடமோ என் காதலை (பெற்றோரிடம்) சொல்ல நேரமில்லை... என்று பையா பட பாட்டை பாடிக் கொண்டிருந்தார் அந்த நடிகர்.


இதற்கிடையில் விஷயம் கேள்விப்பட்ட அப்பா, நடிகரை கண்டித்ததுடன் இனிமேல் அந்த பெண்ணுடன் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவையும் போட்டிருக்கிறார். இந்த ஜோடியை வைத்து படம் எடுக்க நினைத்த முக்கிய புள்ளிகளிடமும் ‌வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தந்தைக்குலம்.


அதனால் அடுத்தடுத்து சினிமாவில் ஜோடி சேர வாய்ப்பில்லாமல் போனது அந்த ஜோடிக்கு. இப்போது நிஜத்திலும் ஜோடி சேர முடியாத அளவுக்கு நடிகருக்கு திருமணத்தை நிச்சயித்து விட்டனர்.


அதனால்தான் அம்மணி இனி தமிழ்ப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் 2009ம் ஆண்டு 5 படங்களில் நடித்த தமன்னா, 2010ல் 9 படங்கள் நடித்திருந்தார். திரைக்கு வந்த ஹிட் படங்களில் எல்லாம் தமன்னா தரிசனம் ரசிகர்களுக்கு கிடைத்தது. ஆனால் 2011ம் ஆண்டில் இதுவரை அவர் நடித்து ஒரே ஒரு படம்தான் வந்துள்ளது. இன்னும் ஒரேயொரு படம்தான் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்பு நடிகர் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு சிலகாலம் முழுக்கு போட்டிருந்தார். பின்னர் ஒரு வழியாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த நயன், தனக்கு ஆறுதல் சொன்ன நடிகர் பிரபுதேவாவிடம் மனதை பறிகொடுத்து, ஊரறிய கல்யாணம் பண்ண நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே வரிசையில் இப்போது தமன்னா காதல் முறிவுக்கு பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டேன் என்று கூறி தெலுங்கு பக்கம் ஐக்கியமாகும் முடிவில் இருக்கிறாராம்!

தள்ளிபோகிறது வேலாயுதம்

அஜீத்தின் மங்காத்தா படம் போன்றே, விஜய்யின் வேலாயுதம் படமும் அவரது பிறந்தநாளில் ரிலீசாகாது எனத் தெரிகிறது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம்.

ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா. அதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் ‌தான் முடியும் எனத் தெரிகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

முன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...