உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று முன்தினம் இரவு உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
டாக்டர் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். "ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார். அவர் குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும், என்று ரஜினிகாந்த் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். நள்ளிரவே டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூச்சுத்திணறல் காரணமாக செயற்கை சுவாசமும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிந்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களும் குவிந்தனர். யாரையும் மருத்துவமனைக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்த போது, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் நலமுடன் உள்ளார் என்று மட்டும் பதிலளிக்கப்பட்டது. இதற்கிடையே ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மருமகன் தனுஷ், ராமச்சந்திரா மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்தணிகாசலம் ஆகியோர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கினர்.
லதா ரஜினிகாந்த் கூறுகையில், "அவர் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. அவர் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து விசாரிக்க உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதை தவிர்க்கவும், அமைதியான சூழல் வேண்டும் என்பதற்காக தான் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். டயாலிசிஸ் சிகிச்சை என்பது டாக்டர்கள் அவருக்கு அளிக்கும் சிகிச்சையின் ஒரு பகுதி.
இந்த சிகிச்சை தேவை என்பதால் டாக்டர்கள் மேற்கொண்டனர். இதை வைத்து உடலின் பாகங்கள் செயல்படவில்லை என்று கூறக்கூடாது. டாக்டர் குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் வார்டுக்கு அவர் வருவார். விரைவில் வீடு திரும்புவார். மீடியாக்கள் உட்பட யாரும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றார்.
டாக்டர் தணிகாசலம் கூறுகையில், "ரஜினிகாந்த் ஒரு ஆரோக்கியமான மனிதர். படப்பிடிப்புக்களுக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடியவர். அவருக்கு சளி பிடிப்பது என்பது இயற்கை தான். அதன் மூலம் மற்ற சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. பெரிய டாக்டர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஒரு டாக்டர் என்ற முறையில் நோயாளியை பற்றி, அவருடைய முழு தகவல்களையும் சொல்ல முடியாது.
ஆனால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். இன்று (நேற்று) காலை கூட என்னிடம் "ஜோக் அடித்தார். காலை 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டார். இட்லி சாப்பிடும் அளவிற்கு உடல் ஆரோக்கியமாக தான் இருக்கிறது. ரஜினிகாந்திற்கு மூச்சுத்திணறல், பேதி இருந்தது. நுரையீரலில் உள்ள நீரை வெளியே எடுப்பதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளோம் என்றார்.
நடிகர் தனுஷ் கூறுகையில், "அவர் நலமுடன் உள்ளார். ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். திருநெல்வேலியில் கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. யாரும் அதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றார்.
0 comments:
Post a Comment