நல்லபடியா திரும்பி வருவேன் - ரஜினி

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக நேற்று (27ம்‌தேதி) இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தத்தில் இருந்த "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இதையடுத்து, உடல்நலம் தேறிய அவர், மீண்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பார்வையாளர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தனி வார்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை, அமெரிக்க நிபுணர்கள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

ரஜினியின் நுரையீரலில் அழுத்தமாக படிந்துள்ள நீர்கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருடன் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். ரஜினி இருந்த ஆம்புலன்ஸ் வேன், விமானம் வரை செல்ல முதல்வர் ஜெயலலிதா சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததால் விமானம் வரை ஆம்புலன்ஸ் சென்றது. பின்னர் ரஜினி மருத்துவ குழுவினரின் உதவியுடன் விமானத்தில் ஏற்றப்பட்டார்.

சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரஜினி சில வாரங்களுக்கு தங்கி சிகிச்சை எடுப்பார் என்றும், அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரஜினி வாய்ஸ் :

முன்னதாக ரஜினியின் வாய்ஸ் அடங்கிய சிடி ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார். அதில் பேசிய ரஜினி, நான் உங்க ரஜினிகாந்த் பேசுறேன். நான் நல்லா இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்க. நான் பணம் வாங்குறேன். நடிக்குறேன். அதுக்கு நீங்க என் மேல இவ்ளோ அன்பு செலுத்துறீங்க.

உங்களுடைய பிரார்த்தனை, அன்புக்கு கைமாறா என்ன செய்வேன்னு, செய்யப்போறேன்னு தெரியல. என் பேன்ஸ் எல்லாரும் கடவுள் ரூபத்தில் இருக்குறதா நினைக்கிறேன். உங்க பிரார்த்தனையால சிங்கப்பூர் போயிட்டு நான் சீக்கிரமே, நல்லபடியா திரும்ப வந்து உங்களையெல்லாம் சந்திக்குறேன். உங்க அன்பால தலைநிமிந்து நிற்பேன், என்று கூறியுள்ளார்.


லதா ரஜினி அறிக்கை :

ரஜினியின் மனைவி லதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எனது கணவர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற தாங்கள் செய்து வரும் பூஜைகளுக்கும், கூட்டு பிரார்த்தனைகளுக்காக முதலில் நான் எனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் நலமுடன் உற்சாகமாகவும் உள்ளார்.

அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். அவரைப் பற்றி தேவையில்லாத செய்திகள் வந்து கொண்டிருப்பதை கண்டு தாங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறியுள்ளார்.


மருத்துவமனை அறிக்கை :

ரஜினி உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினிகாந்த் கடந்த 13ம்தேதி மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக அவருக்கு குடும்ப டாக்டர் மூலம் இசபெல்லா மருத்துவமனையில் 2 முறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேறி வருகிறார். நலமுடன் உள்ளார். அவரே உணவருந்துகிறார்.

குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கிறார். அவர் சூழ்நிலை மாற்றத்துக்காகவும், ஓய்வுக்காகவும் அதே நேரம் குறிப்பிட்ட பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...