நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த், உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த சில வாரங்களாக, சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நுரையீரலில் படிந்துள்ள நீர் கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு, நவீன சிகிச்சை மேற்கொள்வதற்காக, ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவருடன், அவரது குடும்பத்தினரும் சென்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவ மைய மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை தெரிவிக்க, மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.
மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "இங்கு சிகிச்சை பெற்று வருவோர் சம்மதித்தால் மட்டுமே, அவர்களின் விவரம், நோய், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்கள், வெளியில் தெரிவிக்கப்படும் என்றன.
ரஜினி சிகிச்சை பெற்று வரும் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை, சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைக்கு பிரபலமானது.
ஆசியாவில் உள்ள மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங்கிற்கு, இந்த மருத்துவமனையில் தான், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
0 comments:
Post a Comment