அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி

ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... என்று அந்தர் பல்டியடித்து வசனம் பேசுவார். அரசியல்ல மட்டுமல்ல... சினிமாவிலும் இதெல்லாம் சாதாரணம்தான்.


ஆளும்கட்சிகளுக்கு ஜால்ரா அடித்து காக்கா பிடித்தே பழகிவிட்ட திரையுலக காக்கா கூட்டம் இனி அதிமுக பக்கம் ‌போகும்; கருணாநிதியை புகழ்பாடியவர்கள் எல்லாம் இனி முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடிக் கொண்டிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?.


தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு வரை திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த நடிகர் வடிவேலு, இப்போது தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால், அதிமுகவும் ஒரு பெரிய கட்சிதான்; மக்கள் விரும்பியதால் ஜெயலலிதா முதல்வர் ஆகியிருக்கிறார், என்று கூறியுள்ளார்.


சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் ஒரு தொகுதி விடாமல் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தவர் நடிகர் வடிவேலு. செல்லும் இடங்களில் இல்லாம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து வடிவேலுவின் பேச்சை கேட்டு ஆர்ப்பரித்தனர்.


வடிவேலுவும் சொந்த பகை காரணமாக ‌தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன், டம்மி பீசு, குடிச்சிட்டு உளறுகிறான்... என்பன போன்ற வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அதையும் ரசிகப்பெருமக்கள் ரசித்து கேட்டனர். பிரபலமான நடிகர் என்பதால்தான் இப்படி கூட்டம் கூடியிருக்கிறது என்பதை உணராத வடி‌வேலுவும், தி.மு.க.வும் எல்லாம் ஓட்டுக்களாக மாறும் என கணித்தனர்.


ஆனால் அவர்களது கணிப்பு பொய்த்துப் போய், தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. (இப்படியெல்லாம் நடக்கும் என முன்கூட்டியே தெரிந்ததாலோ என்னவோ தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி ஒரு வார்த்தைகூட பேசவில்லை வடிவேலு)


தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வரும் என்பதை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே கணித்த நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து அவசரம் அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் தோல்வி குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார்.


இதற்கிடையில் சென்னையில் அவரது வீட்டை தாக்க தேமுதிகவினர் முயற்சி செய்ததால், சென்னைக்கு வர வேண்டாம் என்று போலீசார் வடிவேலுவை கேட்டுக் கெண்டனர். இதனால் மதுரையிலேயே பதுங்கியிருக்கும் வடிவேலு, தேர்தல் தோல்வி பற்றி அந்தர் பல்டியடித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.


அவர் அளித்துள்ள பேட்டியில், ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை. எனக்கும், விஜயகாந்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது, ஒரு படப்பிடிப்பில்தான். அவரை, வருங்கால முதல்-அமைச்சர் என்று வசனம் பேச சொன்னார்கள். நான், அப்படி பேச மறுத்து விட்டேன். ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன்.


மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள். தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர்.


ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்? இது, நல்லாயில்லை. அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...