ராஜபாட்டை - முன்னோட்டம்

தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ராஜபாட்டை. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

தில், தூள், சாமி படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்க பக்கா கமர்ஷியல் படம் இது. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார்.

டைரக்டர் கே.விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிறுத்தை புகழ் அவினாஷ், நான் மகான் அல்ல வில்லன் அருள்தாஸ், ப்ரதீப் ரவாத், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிலமோசடி தொடர்பாகவும் அவற்றுக்கு பின்னே இருக்கும் மோசடி கும்பல் பற்றிய கதைதான் ராஜபாட்டை. படத்தில் விக்ரம் வில்லனிடம் இருக்கும் அடியாளாக ஜிம்பாயாக நடிக்கிறார்.

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வி.பி.சினிமா புரெடக்ஷன்ஸ் சார்பில் பிரசாத் வி.பொட்லாரி தயாரிக்கிறார்.

இவர் தயாரிக்கும் முதல்படம் இது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை, பாண்டிச்சேரி, ஹைதரபாத், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும், பாடல் காட்சிகள் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் படமாக்கியுள்ளனர்.

படத்தின் 75 சதவீத சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. மீதி படப்பிடிப்பு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் வளர்ந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரமிற்கு பக்கா கமர்ஷியல் படமாக ராஜபாட்டை இருக்கும்.

அரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி

மதுரையில் ஆடியோ வெளியிடுவது, மலேசியாவில் ஒற்றை பாடல் வெளியிடுவது... என கோலிவுட்டின் இசை வெளியீட்டு வைபவங்கள், கோடம்பாக்கத்துக்கு வெளியேயும் சமீபகாலமாக அரங்கேறி வரும் வேளையில், தன் இயக்கத்தில் உருவாகும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் படத்தொடக்க விழாவையே, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் ஆர்ப்பாட்டமாக நடத்தி முடித்தார் இயக்குநர் பாரதிராஜா.

அவரைத்தொடர்ந்து பழம் பெரும் அரசியல்வாதியும், படஅதிபரும், இயக்குநருமான முக்தா சீனிவாசனின் வாரிசும், திரைப்பட இயக்குநருமான வி.சீனிவாசன் சுந்தர் புதிதாக இயக்க இருக்கும் பத்தாயிரம்கோடி எனும் திரைப்படத்தின் தொடக்க விழாவை, பாண்டிச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை(30.11.11) 9 மணிக்கு நடத்த இருக்கிறார்.

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெறும் இப்படத்தின் தொடக்க விழாவில், காமிராவை முடுக்கி வைக்க இருப்பவர் புதுவை சட்டசபை உறுப்பினர் அஷோக் ஆனந்தன். மாயா கிரியேஷன் எனும் பேனரில் பத்தாயிரம் கோடி படத்தை என்.ஆர்.சீனிவாசன் தயாரிக்கிறார்.

அரசியல்வாதிகளின் வாரிசுகள், அரசியல் பிரபலங்கள் புடைசூழ படத்தின் தலைப்பு "பத்தாயிரம்கோடி" என்றிருப்பது தான், புதுவையில் இதன் தொடக்கவிழா இருப்பதைகாட்டிலும் கோடம்பாக்கத்தில் பலரது புருவங்ளை உயர செய்திருக்கும் சமாச்சாரமாகும்!

நயன்தாராவுக்கு தூண்டில் போடும் பிரபல நடிகர்

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம், ஆந்திராவில் சக்கபோடு போட்டுக் கொண்டிருப்பதால், தன்னுடைய படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர்.

ஒருபக்கம் திருமணத்திற்கு நாள் பார்த்து கொண்டிருக்கின்றனர் நயன்தாராவும்-பிரபுதேவாவும். மற்றொருபுறம் என்னடான்னா...? நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா. இந்தநேரம் பார்த்து அவரது மனசை கலைக்கும் வகையில், மீண்டும் நடிப்பதற்கு நிறைய ஆஃபர்கள் வந்து கொண்டு இருக்கிறதாம்.

கடைசியாக இவர் நடித்து வெளியான ஸ்ரீராம ராஜ்யம் படம் ஆந்திராவில் சக்கபோடு போட்டு கொண்டு இருக்கிறது. நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, சீதை வே‌டத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.

இந்தபடம் ஹிட்டாக நயன்தாராவின் நடிப்பும் ஒரு முக்கிய காரணமாம். படத்தில் சீதையாகவே வாழ்ந்திருந்தார் நயன்தாரா. நயன்தாராவின் நடிப்பை பார்த்து, தன்னுடைய படத்திலும் அவரைத்தான் நடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார் பிரபல நடிகர் நாகர்ஜூனா.

இவருக்கும் பல சரித்திர படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடி இருக்கிறது. இப்போது பாலகிருஷ்ணாவின் படம் ஹிட் என்றதும், தானும் அதுபோலவே ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அதுவும் தனக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.

ராம்கோபால் வர்மா, அடுத்து ராவணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதில்தான் சீதையாக நடிக்க வைக்க நயன்தாராவை தேடிக் கொண்டிருக்கிறார் நாகார்ஜூனா.


சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா, நடிப்பேன் என்றும், நடிக்கமாட்டேன் என்றும் உறுதியாக சொல்லவில்லை.

இதனால் மீண்டும் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படிதான் நயன்தாராவுக்கு இப்போது தூண்டில் போட்டிருக்கிறாராம் நாகர்ஜூனா.

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

"புதுப்பேட்டை" படத்திற்கு அப்புறம், நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் அண்ணன் செல்வராகவனும், கதாநாயகன் தம்பி தனுஷூம் இணைந்திருக்கும் திரைப்படம் தான் "மயக்கம் என்ன"!

கதைப்படி வெவ்வேறு வேலைகள், லட்சியங்கள் உண்டென்றாலும், 24 மணிநேரமும் ஒன்றா‌கவே இருக்கும் நண்பர்கள் கார்த்திக், சுந்தர், சங்கர், ரம்யா, பத்மினி, மாதேஷ், ரமேஷ் உள்ளிட்டவர்கள்.

ஆண், பெண் இருபாலரும் உண்டென்பதால் இவர்களிடையே சிலருக்குள் காதலும், சிலரிடையே வெறும் சகோதரத்துவமும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பீரும், பிராந்தியுமாக தழைத்தோங்குகிறது.

ஒரு கட்டத்தில் யாமினி எனும் அழகிய யுவதியை சில நாட்கள் பழகி, பின் இருவருக்கும் ஒத்துப்போனால் தன் காதலியாக அடையும் எண்ணத்தில், தங்கள் டீமுக்கு அழைத்து வருகிறார் சுந்தர்.

ஆரம்பத்தில் யாமினியை, அந்த டீமில் சேர்த்து கொள்ள மறுத்து, கலாய்க்கும் டீமின் ஜீனியஸ் என்றழைக்கப்படும் கார்த்திக், பின் யாமினியின் கண் அசைவுகளிலும், காதல் வலையிலும் கவிழ்கிறார். நட்பு தப்பாய் போன வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், நட்பிற்காக காதலை விட்டுக்கொடுக்கும் சுந்தர், கார்த்திக்கின் மாஜி காதலிக்கும், வாழ்க்கை கொடுக்கிறார்


கார்த்திக்கும்-யாமினியும் கல்யாணம் கட்டிக்கொண்டு இல்லறத்தில் இனிமை காண்கின்றனர். சில வருடங்கள் உருண்டோடியதும், இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் சின்னதொரு விபத்து, கார்த்திக்கின் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வர, சிறந்த புகைப்பட கலைஞராக வர துடிக்கும் கார்த்திக், காதல் மனைவியை துன்புறுத்தும் சைக்கோவாக மாறுகிறார்.

கணவரின் சைக்கோ தனங்களை ‌பொறுத்துக் கொண்டு கார்த்திக்கின் மனைவி யாமினியும், சுந்தர் உள்ளிட்ட நண்பர்களும், கார்த்திக்கை உலகத்தின் நம்பர்-1 புகைப்பட கலைஞராக மாற்ற உறுதுணையாக இருப்பதே "மயக்கம் என்ன" படத்தின் மீதிக்கதை!

ஜூனியஸ் கார்த்திக்காக, தனுஷ் மெய்யாலுமே ஜீனியஸாக தன் நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டு நடித்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ். அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மட்டும், தம்பி தனுஷூக்கு ஒரு லுக் வழக்கம் போலவே இப்படத்திலும் கிடைத்திருக்கிறதென்றால் மிகையல்ல! என்னதான் மனநலம் பாதிக்கப்பட்டவர், கோபக்காரர் என்றாலும், ஆத்திரத்தில் மனைவியை தள்ளிவிட்டு, அவரது கரு கலையை காரணமாகும் தனுஷ், விபரம் புரிந்ததும் வருத்தம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்.

அவ்வாறு இல்லாமல் வீட்டில் படிந்திருக்கும் இரத்த கறையை துடைக்க உதவி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

யாமினியாக, நாயகி ரிச்சா கங்கோபாத்தியாயே நச் தேர்வு! கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் என இந்தகாலத்திலும் வாழும் மார்டன் யுவதி! சில இடங்களில் நடிப்பில் தனுஷையே ஓரங்கட்டி விடுகிறார் பலே! பலே!! நாயகன், நாயகி தவிர சுந்தராக வரும் சுந்தர், சங்கராக வரும் மதி, ரம்யா எனும் சோனி, பத்மினியாக-பூஜா பாலு, மாதேஷாக-ரவிபிரகாஷ், ரமேஷாக-ராஜிவ் சவுத்ரி உள்ளிட்டவர்களும் பிரமாதம்!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம்! அதிலும் ஜி.வி.பிரகாஷின் இசையில், தனுஷ் பாடியிருக்கும் "ஓட, ஓட..." பாடலும், "காதல் என் காதல்..." உள்ளிட்ட படத்தின் ஆறு பாடல்களுமே காதிற்கினிய கானங்கள்!

பாடல்கள் அனைத்தையும் எழுதியது போன்றே, படத்தையும் கவித்துமாக எழுதி, இயக்கி இருக்கிறார் செல்வராகவன்! போலித்தனம் இல்லாமல், இன்றைய சமூகத்தை அபட்டமாக படம் பிடித்து காட்டியிருக்கும் செல்வராகவன், அதை இன்னும் சற்றே, விறுவிறுப்பாக சொல்லி இருந்திருந்தார் என்றால் "மயக்கம் என்ன"! தயக்கம் இல்லாமல் "பி" மற்றும் "சி" சென்டர்களையும் கவர்ந்திருக்கும்!

விஜய்‌ நடிக்கும் துப்பாக்கி

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில்

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது.

விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

’3' படத்தில், தனுஷ் எழுதி அவரே பாடியிருக்கும் கொலவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனராம். தமிழ் சேனல்கள் மட்டுமல்லாமல், வட இந்திய டிவிக்களிலும் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் போடப்பட்டு ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல் படமான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

"ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற அந்தப் பாடலை தனுஷ் எழுதி, அவரே பாடியிருக்கிறார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 4 நாட்களில் இந்தப் பாடலை 10 லட்சம் பேர் கேட்டிருக்கிறார்களாம்.

இது ஒரு புதிய சாதனை என்கிறார்கள். வெளிநாட்டவர்களும் இணையத்தில் இந்தப் பாடலைக் கேட்டு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

முருகன் சென்டிமெண்ட் - திருச்செந்தூரில் விஜய்

வேலாயுதம் ஹிட் ஆனதில் இருந்து நடிகர் விஜய் முருகன் சென்டிமெண்ட் நம்ப ஆரம்பித்து விட்டார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் சூட்டிங்கை திருச்செந்தூரில் இருந்து தொடங்கும்படி கூறியிருக்கிறாராம்.

வேலாயுதம் படம் ஹிட் ஆனதால் வேலாயுதக்கடவுள் முருகன் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.

அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய்.

படத்தின் தொடக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம்.

சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.

எ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ்.

திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய், அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியும்தானே?!

விஸ்வரூபத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜா குமார்

ஒருவழியாக விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி கிடைச்சாச்சு. அவர் பெயர் பூஜா குமார். இவர் நியூயார்க்கில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு நடிகர் கமல் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம்.

ஆரம்பத்தில் இந்தபடத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் நடிப்பதாக இருந்தார்.

இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்த வேளையில், படத்தின் சூட்டிங் தள்ளிபோனதால் விலகிக்கொண்டார் சோனாக்ஷி. இதனையடுத்து ஒரு நல்ல நடிகையை தேடி வந்தார் கமல்.

அனுஷ்கா, ஸ்ரேயா என்று பல நாயகிகளின் பெயர் அடிபட்டது. ஆனால் எந்த ஒரு நடிகையும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் படத்தின் நாயகி இல்லாமலே விஸ்வரூபம் படத்தை தொடங்கினார் கமல். தொடர்ந்து சூட்டிங் நடந்து வரும் நிலையில், விஸ்வரூபம் படத்திற்கான நாயகியை உறுதி செய்துள்ளார் கமல்.

இதுகுறித்து கமல் அளித்த பேட்டியில், விஸ்வரூபம் படத்தில் பூஜா குமார் என்றை பெண்ணை கதாநாயகியாக்கியுள்ளேன். அவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். நல்ல திறமையான நடிகை," என்று கூறியுள்ளார்.

இந்த பூஜா குமார் தமிழுக்கு ஒன்றும் புதுமுகம் கிடையாது. இவர் ஏற்கனவே கேயார் இயக்கத்தில் வெளிவந்த காதல் ரோஜாவே என்ற படத்தில் நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல பாலிவுட்டில் சில படங்களிலும் தலைகாட்டியுள்ளார்.

இவர் தற்போது நியூயார்க்கில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

என்னோட இந்த நிலைமைக்கு காரணம் என் அம்மாதான் - த்ரிஷா

என்னோட இந்த நிலைமைக்கு காரணமே என் அம்மாதான் என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கி கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகப் போகிறார் என்று செய்தி வெளியான பிறகும், சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.

அம்மணியின் மார்க்கெட் மேலும் கூடியிருப்பதால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தையும் சற்று நிதானப்படுத்தி விட்டாராம் த்ரிஷாவின் அம்மா உமா.

தற்போது தெலுங்கில் இரண்டு படம், தமிழில் சமரன் மற்றும் ஒரு புதிய படம் என பிஸியாக இருக்கும் த்ரிஷா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தன் தாயை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

"எனக்கு எல்லாமே என் அம்மாதான். என் முதல் பெஸ்ட் பிரண்டும் அவர்தான். எப்போதும் எதுக்கும் தடை போட மாட்டார். அவர் விருப்பங்களை என்மீது திணிக்க மாட்டார். நான் சினிமாவுக்கு வரும்முன்பு மாடலிங் பண்ணேன்.

அதற்காக படிப்பு பாதிக்கப்பட்டது. ஆனால் என் அம்மா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மாடலிங் செய்ய அனுமதித்தார். மாடலிங், மிஸ் சென்னை, என மாடலிங்கில் என் கேரியர் கிராஃப் ஏறியபோதுதான் இயக்குனர் பிரியதர்ஷன் நடிக்க அழைத்தார்.

என்னுடைய முதல் படமான லேசா லேசா படம் தோற்றதும் சினிமாவே வேண்டாம்னு விலக நினைச்சேன்.

ஆனால் என் அம்மாதான் அப்போது எனக்கு மனவலியை தந்தாங்க. அடுத்தடுத்த படங்களில் எனக்கு பாராட்டு... வெற்றி எல்லாமே கிடைச்சிடுச்சி.

இன்று நான் ஒரு பெரிய நடிகையாக இருக்கிறேன் என்றால், அதற்கு என் அம்மாதான் முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார் த்ரிஷா.

நமீதா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி

நடிகை நமீதாவை பார்த்து பலகாலமாகி விட்டதே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நற்செய்தியாக, நமீதா நடிக்கும் புதிய படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.


ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஐதராபாத்தில் போட்டனர்.


இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபற்றி நமீதா அளித்துள்ள பேட்டியில், எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது. இதுவரை கவர்ச்சி பாத்திரங்கள், போலீஸ் என்று நான் செய்துள்ளேன்.


ஆனால் இந்தப்படத்தில்தான் கிராமத்து பெண் வேடத்தில் வரப் போகிறேன். என்னைச் சுற்றி நடப்பது போல கதையை வைத்துள்ளனர். பெண்களுக்கான படம் இது.


ஆக்ஷனும் படத்தில் உண்டு. எனது திறமையை முழுமையாக வெளிக் கொணரும் வகையிலான கதை இது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

அசினுக்கு முத்தம் கொடுத்து தொல்லை கொடுக்கும் நடிகர்

அசினின் தீவிர ரசிகராகிபோன பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான், அசினுக்கு தினமும் வெப்சைட் மூலம் முத்தம் கொடுத்து ‌தொல்லை கொடுக்கிறாராம்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகை அசின், கஜினி படம் மூலம் இந்திக்கு சென்றார்.

அசினுக்கு கஜினி படத்திற்கு பிறகு வேறு எந்த படமும் சரியாக போகவில்லை என்றாலும் அம்மணிக்கு, அங்குள்ள ரசிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு.

இந்நிலையில், பாலிவுட் நடிகரும், இயக்குநருமான கமால் ஆர் கான் என்பவர் தினமும் அசினுக்கு வெப்சைட் மூலம் முத்தம் கொடுத்து தொ‌ல்லை கொடுக்கிறாராம்.

அவர் தன்னுடைய மைக்ரோ ப்ளாக்கில், காலையில் எழுந்து அசினுக்கு குட்மார்னிங் சொல்ல தொடங்குவது மட்டுமின்றி, அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளுகிறாராம்.

நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க, செக்ஸியாக இருக்கீங்க, உங்க நடிப்பு நல்லா இருக்கு என்று சொல்வதுடன், உங்களுக்கு எனது முத்தங்களும் என்று குறிப்பிட்டுள்ளாராம்.

அசினுக்கு தனியாக மைக்ரோ பிளாக் வெப்சைட் எதுவும் கிடையாது. ஆனால், அசினின் நெருங்கிய தோழிகள், இதுபற்றி அசினிடம் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டதும் அசின் அதிர்ச்சியடைந்தாராம். மேலும் இந்தபிரச்சனைக்கு என்ன தீர்வு என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறாராம்.

பில்லா-2 வில் அஜித்துடன் மீனாக்ஷி தீட்சித் குத்தாட்டம்

மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் பில்லா-2வில், தூக்குடு படம் மூலம் பிரபலமான நடிகை மீனாக்ஷி தீட்சித் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா-2 எடுக்கப்பட்டு வருகிறது.

படத்தின் நாயகனாக அஜித்தும், நாயகியாக பார்வதி ஓமணக்குட்டனும் நடித்து வருகின்றனர். சக்ரி டோல்டி இப்படத்தை இயக்கி வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பில்லா-2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.

முதற்கட்ட சூட்டிங் ஐதரபாத்தில் 30நாளும், 2ம் கட்ட சூட்டிங் கோவாவில் 39நாளும் முடிந்து, தற்போது 3ம் கட்ட சூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் தூக்குடு படம் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீட்சித், அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஏற்கனவே பில்லா படத்தில் "செய் ஏதாவது செய்...." என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதுபோல், அஜித்-மீனாக்ஷி ஆடிய இந்தபாடலும் நிச்சயம் ஹிட்டாகும் என்று கூறுகின்றனர்.

ஜோடி சேர காத்திருக்கும் சிம்பு - த்ரிஷா

நடிகர் சிம்புவும், நடிகை த்ரிஷாவும் ஜோடி சேர காத்திருக்கிறார்கள். "அலை" படத்தில் முதல்முறையாக சிம்புவும், த்ரிஷாவும் நடித்தனர். அந்தப்படம் வெற்றி பெறவில்லை.

பல ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்த படம் "விண்ணைத்தாண்டி வருவாயா". டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

சிம்பு - த்ரிஷா ஜோடி பேசப்பட்டது. படத்தில் காட்டியதுபோலவே நிஜத்திலும் த்ரிஷாவை விட இளையவர் சிம்பு.

இந்த வயது வித்தியாசமே "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தை வெற்றி பெறச் செய்தது என்றே சொல்லலாம்.

அந்த படத்தை தொடர்ந்து வேறு படங்களில் பிஸியாக இருக்கும் இருவரையும் மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிம்பு கூறுகையில், "த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது சந்தோஷமான விஷயம். அப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்," என்றார்.

த்ரிஷா கூறுகையில், "சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அவருக்கும் எனக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த பட வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

நான் நிஜவாழ்வில் நடிக்காதவன் - கமல்ஹாசன்

சினிமாவில் தான் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நான் நடிக்காதவன் என்று, பேராசிரியர்.ஞானசம்பந்தனின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தமின் "இலக்கியச் சாரல்", "ஜெயிக்கப்போவது நீதான்", "மேடைப் பயணங்கள்", "சந்தித்ததும் சிந்தித்ததும்", "சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்" ஆகிய 5 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது, நானும், ஞானசம்பந்தமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் ஞானசம்பந்தம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதில் இருந்து நண்பர்களாகிவிட்ட நாங்கள் அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் பேசுவோம்.

சந்திக்க முடியவில்லை என்றால் தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு பேசுவோம். சொல்லப்போனால், நான் ஒரு வகையில் சுயநலவாதியும் கூட. எனக்கும் ஒரு சுயநலம் உண்டு. கற்றறிந்தவர்கள், ஞானம் உள்ளவர்களுடன் பேசிப் பழகி அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சுயநலம். நானும், ஞானசம்பந்தமும் பல ஆண்டுகளாக நண்பர்கள்.

அவரிடம் நான் பல அறிவுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.


ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி கையை ஆட்டாமலேயே அனைவரையும் சிரிக்கை வைப்பார். நாகேஷோ தன் பாடி லாங்குவேஜால் அனைவரையும் சிரிக்க வைப்பார்.

அதுபோல, ஞானசம்பந்தமுக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி. அவருடைய நகைச்சுவை இயல்பாக இருக்கும். தான் அறிந்த விஷயங்களை, புலமையை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இயல்பான நகைச்சுவையில் தெரிவித்துவிடுவார்.

இந்த புத்தகங்களிலும் அந்த எளிமை உள்ளது. அதனால் இவை நிச்சயம் மக்களைச் சென்றடையும்.

நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து நாடக மேதை டி.கே.எஸ்.சண்முகத்திடம் பல முறை கேட்டிருக்கிறேன். அது தெரிந்தால் நீ பெரிய நடிகனாகிவிடுவாய் என்று கூறிய அவர் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்துள்ளார்.

பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காததால் தான் நான் இன்னும் என்னை ஒரு மாணவனாகவே கருதி பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். பள்ளிப் படிப்பை முடித்திருந்தால் இந்த கற்கும் ஆர்வம் இருந்திருக்குமோ, இல்லையோ? ஆத்திகம், நாத்திகம் பேசுவர்களிடம் நான் பேசியிருக்கிறேன்.

அவ்வாறு பேசும்போது எனக்குத் தேவையான விஷயங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். நான் சினிமாவில் கடவுள் பக்தன், குள்ளன் போன்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நடித்ததில்லை.

இவ்வாறு கமல் பேசினார்.

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிறார் விஜய்

இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய், சின்னத்திரை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன? அதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே இதனை வரவேற்பார்கள். வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி.

நிஜமாகவே இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று பணம் சம்பாதித்த புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும்.

இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் தமிழில் நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தோல்வியில்தான் முடிந்தது. அதன்பின் இதே மாதிரியான நிகழ்ச்சிகளை வெவ்வேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும், முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.

அதன்படி, நிகழ்ச்சியை பிரபலமான ஒருவரை வைத்துதான் நடத்த வேண்டும் என்பது நிகழ்ச்சியாளர்களின் ஒரே எண்ணம். நிகழ்ச்சியை நடத்த பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அவர்களின் ‌ஒ‌ரே சாய்ஸ் விஜய் மட்டுமே.

எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் என்று விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இறங்கி வந்தாராம் விஜய்.

இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.

நயன்தாரா சீதையாக நடித்த படம் 17ம்தேதி ரிலீஸ்

நடிகர் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவியா ஆகப்போகும் நடிகை நயன்தாரா கடைசியாக சீதை வேடத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் வருகிற 17ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.

நயன்தாரா கடந்த ஆகஸ்டு மாதம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து, இந்து மதத்துக்கு மாறினார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆர்யசமாஜத்துக்கு சென்று ஹோமம் வளர்த்து மந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார்.

பிரபுதேவாவுக்கும்-நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. பிரபுதேவா இந்து என்பதால் அவர் மதத்துக்கு மாறி விட்டார்.

அத்துடன் தெலுங்கில் கடைசியாக `ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்திலும் நடித்தார். இப்படத்தில் ராமராக பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடியும் வரை நயன்தாரா அசைவ உணவு சாப்பிடவில்லை. சீதை கேரக்டருக்காக விரதம் இருந்து நடித்தார். இந்த படத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் விசேஷ அனுமதியும் பெற்று இருந்தார்.

படப்பிடிப்பில் கடைசி நாளில் எல்லோருக்கும் கண்ணீர் மல்க வணக்கம் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார். படப்பிடிப்பு குழுவினர் நயன்தாரா மேல் பூக்களை தூவி வழியனுப்பி வைத்தனர். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. சினிமாவுக்கு முழுக்க போட்டுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நயன்தாராவின் ராம ராஜ்ஜியம் படம் வருகிற 17ம்தேதி ரிலீசாகிறது. இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்க்க நயன்தாரா ஆர்வமாக இருக்கிறார்.

இந்த படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் இடையே போட்டா போட்டியும் ஏற்பட்டுள்ளது.

வசூலில் நம்பர் ஒன்னை இழந்த ரா ஒன்

ரிலீசான முதல் வாரம் வசூலில் நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்த ஷாரூக்கானின் ரா ஒன், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பின்தங்கிவிட்டது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்திப் படம் ஷாரூக்கானின் ரா ஒன்.


அசாதாரண பப்ளிசிட்டி மூலம் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பினர் இந்தப் படத்துக்கு.தீபாவளியன்று இந்தப் படம் உலகம் எங்கும் பிரமாண்டமாக வெளியானது.


துவக்கநாளில் மிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், இரண்டாம் நாளே ரூ 30 கோடிக்கும் அதிகமாக ஈட்டியது. 9 நாட்களில் ரூ 200 கோடியைத் தாண்டிவிட்டது ரா ஒன். ஆனால், இந்தவாரம் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


"வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. தயாரிப்பாளர் இப்போதைக்கு தப்பித்துவிட்டார். தனது முதலீட்டின் மீது 30 சதவீதம் வரை லாபம் பார்த்துள்ளார்.


இன்னும் ஓரிரு வாரங்கள் நல்ல வசூலுடன் ஓடியிருந்தால் இந்தப் படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்திருக்கும். ஆனால் இந்த வாரம் மொத்தமே ரூ 14 கோடி வசூலித்துள்ளது. பல தியேட்டர்களில் படம் தூக்கப்பட்டு வருகிறது," என்கிறார் பிரபல சினிமா வர்த்தக பார்வையாளர் கோமல் நாதா.


பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், "நிச்சயம் ரா ஒன் வெற்றிப் படமே. ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றிப்படமல்ல. இருந்தாலும் நிகரலாபமாக ரூ 125 கோடியை நெருங்கிவிட்டது," என்றார்.

பிப்ரவரி மாதம் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்

பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.

அவரை திருமணம் செய்துகொள்வதற்காக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், கொச்சியிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார்.

பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்களாம்.

அதற்காக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்.

ஜெனிலியாவுக்கு நடிக்க தடை

தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர சொல்லி பலமுறை வலியுறுத்தியும், நடிகை ஜெனிலியா உறுப்பினராகததால், அவருக்கு நடிக்க தடை விதித்துள்ளது தெலுங்கு நடிகர் சங்கம்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜெனிலியா.

இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர், நடிகையர், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக ஜெனிலியாவிடமும் பலமுறை எடுத்து கூறப்பட்டுள்ளது.ஆனால் ஜெனிலியா இ‌தைப்பற்றி கவலைப்படவே இல்லை.

இந்நிலையில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகர் சங்கம், உறுப்பினர் ஆகும்வரை தெலுங்கு படங்களில் நடிக்க ஜெனிலியாவுக்கு தடை விதித்துள்ளது.

தற்போது ராணா டகுபதியுடன் ஜோடி சேர்ந்து "நா இஷ்டம்" என்ற படத்தில் ஜெனிலியா நடித்து வருகிறார். இந்த பட வேலைகள் முடிந்தவுடன் இந்த தடை அமலுக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காரணத்திற்காக த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி, தமன்னா ஆகியோருக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

நவ-18 முதல் தனுஷின் மயக்கம் என்ன

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள "மயக்கம் என்ன" படம் நவம்பர்-18 முதல் உலகெங்கும் ரிலீசாக இருக்கிறது. "ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு டைரக்டர் செல்வராகவன், அவரது தம்பி தனுஷை வைத்து இயக்கிருக்கும் படம் "மயக்கம் என்ன".

தனுஷூக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபாத்தியாயே நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்தநிலையில், கடந்த தீபாவளியன்றே இப்படம் வெளிவருவதாக இருந்தது.

ஆனால் தியேட்டர் பிரச்சனை, செல்வராகவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது போன்ற காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது.

இந்நிலையில் நவம்பர் மாதம் படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில், இம்மாதம் 18ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமிட்டுமின்றி "காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" படங்களின் வெற்றிக்கு பிறகு தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் வெளிவர இருக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர்களின் ரசனைதான் என்னை உயர்த்துகிறது - கமல்

நடிகர் கமல்ஹாசன் இன்று(07.11.11) 58-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் மூலம் ரத்ததானம், உடல் உறுப்புகள் தானம் மற்றும் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு விடுக்கும் செய்தி என்னவென்று கேட்கிறார்கள். ரசனையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுதான் முக்கியம் உங்களுக்கு நல்ல ரசனை இருக்க வேண்டும். அப்போதுதான் என் தொழில் நல்ல தொழிலாக இருக்கும். உங்கள் ரசனை உயர உயர நானும் உயர்வேன்.

என்னுடைய தனிப்பட்ட கூட்டம் ஒன்றுள்ளது. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், சினிமா, நடிகன், நட்சத்திரம், அந்தஸ்து என்பதெல்லாம் தற்காலிகமானது என்று திண்ணமாக நம்புபவன் நான்.

அதையும் தாண்டி, ஒரு நிலையை நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சின்னமாக, நாம் வாழ்ந்ததற்கான சாயல்களை வடுவாக இல்லாமல் சின்னமாக விட்டுச் செல்ல வேண்டுமானால், அது வரும் சந்ததியினர் - சமுதாயம், நாம் வாழ்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருப்பது போன்றவைதான்.

அதைத்தான் என் சகோதரர்களுக்கு, நானும் கற்றுக் கொண்டு அவர்களுக்கும் கற்றுத் தர முயற்சித்து வருகிறேன்.

முடிந்தவரை என் வாழ்க்கையை அப்படி வாழ்வதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களையும் ஈடுபடுத்துகிறேன். இதான் நான் என் ரசிகர்களுக்கு சொல்லுவது. நானும் என் ரசிகன்தான்.

என்னுடைய கடுமையான விமர்சகனும்கூட. அப்படித்தான் நீங்களும் இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை நான் நடிகன், கலைஞன். மலர் போன்றவன். அதனால் அதை எப்படிப் பாதுகாக்கணுமோ அப்படி பாதுகாத்துக் கொள்வேன்.

விமர்சனங்களை மெலிதாகச் சொல்லி, வாடிவிடாமல் இருக்க அவ்வப்போது பாராட்டு தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க வேண்டும். அதைத்தான் நானும் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

வேலாயுதம் - விஜய்யின் ஆயுதம் - விமர்சனம்

விஜய் ரசிகர்களுக்கு, விஜய் படைத்திருக்கும் தீபாவளி விருந்து "வேலாயுதம்". லாஜிக் பார்க்காமல் போனால், விஜய்யின் மேஜிக்கை காட்சிக்கு காட்சி மற்றவர்களும் ரசித்துவிட்டு வரலாம்!

கதைப்படி, தமிழக உள்துறை மந்திரியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள், தென் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் பல இடங்களில் பாம் வைத்து, பல உயிர்களை தீர்த்துகட்ட திட்ட தீட்டி சென்னையில் ஊடுருவுகின்றனர்.

இதனிடையே பெரிய அளவில் கள்ளநோட்டு அச்சடிப்பது, விபச்சாரத்திற்கு பெண்களை கடத்தி விற்பது என எண்ணற்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மந்திரி கும்பலின் முகத்திரையை கிழிக்க முயற்சிக்கின்றனர் பத்திரிக்கை நிருபர்களான ஜெனிலியாவும் அவரது சகாக்களும்.

தங்களை பற்றிய உண்மை அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப நினைக்கிறது ரவுடி கும்பல்! அதில் அதிர்ஷடவசமாக தப்பி பிழைக்கும் ஜெனிலியா, மந்திரி கும்பலின் குண்டு வெடிப்பு சதியை எச்சரிக்கை கடிதமாக எழுதி, அதை நிச்சயம் தடுப்பேன்...என்று எழுதி வைத்துவிட்டு, எதேச்சையாக அதனடியில் வேலாயுதம் என்று ஒரு பெயரையும் குறித்து வைத்துவிட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக பொதுமக்கள் சிலரது உதவியோடு மருத்துவமனையில் மரணபடுக்கையில் கிடக்கிறார்.

ஜெனிலியாவின் கற்பனை கதாபாத்திரமான வேலாயுதமாக, கிராமத்தில் பால் விற்கும் தொழில் செய்யும் வேலாயுதமான விஜய், எப்படி விஸ்வரூபமெடுக்கிறார்? ஆக்ஷ்ன் காட்சிகளில் எவ்வாறு அடித்து தூள் பரத்துகிறார்..?

மந்திரி கும்பலுடன் கூட்டணி அமைத்து, நாச வேலைகளில் இறங்கும் தீவிரவாத கும்ப‌லை எதுமாதிரி எல்லாம் ஒழித்து கட்டுகிறார்...? என்பது தான் "வேலாயுதம்" படத்தின் மீதிக்கதை மட்டுமல்ல... மொத்த கதையும்கூட!

வேலாயுதமாக விஜய், தங்கை பாசத்துடன் கிராமத்தில் செய்யும் சேட்டைகளில் ஆகட்டும், சிட்டிக்கு வந்து தீவிரவாதிகளையும் அவர்களுக்கு அடைக்கலம் தரும் மந்திரி கும்பலையும் வேட்டையாடுவதிலாகட்டும் அக்மார்க் விஜய் முத்திரையை பதித்து, தன் பரமவிசிறிகளை மட்டும் திருப்தி படுத்தியிருக்கிறார்.

பிற தரப்பினரையும் திருப்திபடுத்த, அரசியலில் புது முடிவு எடுத்து திருப்திபட்டுக்கொண்ட மாதிரி, நடிப்பிலும் புதிய முயற்சியில் இறங்கலாம் விஜய்...! மற்றபடி காதல், மோதல், காமெடி, டிராஜிடி, சென்டிமெண்ட் எல்லாவற்றிலும் வழக்கம் போலவே ஸ்கோர் செய்து படத்தை ஜனரஞ்சகமாக தூக்கி நிறுத்த இயக்குநருடன் சேர்ந்து ரொம்பவே மெருகேட்டிருக்கிறார் விஜய்!

பெண் பத்திரிக்கை நிருபராக ஜெனிலியா, விஜய்யின் கிராமத்து முறைப் பெண்ணாக ஹன்சிகா மோத்வானி, விஜய்யின் பாசக்கார தங்கையாக சரண்யா மோகன், மூவரில் தங்கை சரண்யா மோகனுக்கே முக்கியத்துவமும், நடிக்கும் வாய்ப்பும் ஜாஸ்தி என்பதால் க்ளைமாக்ஸில் இறந்தும் நம் மனதில் நிற்கிறார்.

ஸ்பீடாக சந்தானம் பண்ணும் சேட்டைகள் வழக்கம் போலவே கொஞ்சம் காமெடி, நிறைய காமநெடி. பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், பிளாக் பாண்டி, பரோட்டா சூரி என எக்கச்சக்க பேர் படத்தில் உண்டென்றாலும், நல்ல போலீஸாக வரும் சாயாஜி ஷிண்டே உள்ளிட்டவர்களே நடிப்பில் மிளிர்கிறார்கள், தெரிகிறார்கள் என்பது வேலாயுதம் படத்தின் பலம், பலவீனம் இரண்டுமாகும்!

படத்தின் ஆரம்ப காட்சியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்... தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு, உள்துறை அமைச்சர் சதி என விஜயகாந்த் பட ரேன்ஜூக்கு பில்-டப்புகளை கொடுத்துவிட்டு, அடுத்த ரீலிலேயே தங்க‌ை பாசம், கிராமத்து பால்காரன் என படத்தின் முன்பாதி மொத்தமும் காமெடி விஜய்யையே காட்டி, பின்பாதி படத்தில் ஆக்ஷ்னில் அடித்து தூள் பரத்துவது என்னதான் எம்.ஜி.ஆர்., காலத்து புதிய டிரண்ட் என்றாலும், சற்றே போரடிப்பதும், அது விஜய்க்கு பொருந்தாமலிருப்பதும், "வேலாயுதம்" படத்தின் மைனஸ் பாயிண்டுகளில் ஒன்று.

அதை முடிந்தவரை மறக்கடித்து, மழுங்கடித்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் இதமான இசையும், ப்ரியனின் பதமான ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல்!

ஒருபக்கம் வேகமாக ஓடும் ரயிலை நிறுத்துவது, பொது மக்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது, மற்றொரு பக்கம் தங்கை பாசம், காதலி மீதான நேசம் என விஜயகாந்த் பாணியில், விஜய்யின் கொள்ளை பரப்பு படமாக, ஆஸ்கர் ரவிச்சந்திரனின் துட்டில், "வேலாயுதம்" படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் ஜெயம் ராஜா! பலே.பலே!!

ஆக மொத்தத்தில் "வேலாயுதம்" - விஜய்யின் "ஆயுதம்!"

தொடர் மழையால் தள்ளி போகிறது ஒஸ்தி

தொடர் மழை காரணமாக "ஒஸ்தி" படம் ரிலீஸ் மேலும் சில நாட்களுக்கு தள்ளிபோகிறது. இந்தியில் சல்மான் கான், நடிப்பில் சூப்பர், டூப்பர் ஹிட்டான "தபாங்" படம், தமிழில் "ஒஸ்தி" என்ற பெயரில் உருவாகியுள்ளது.

தரணி இயக்கத்தில், சிம்பு ஹீரோவாகவும், ரிச்சா ஹிரோயினாகவும் நடித்துள்ளனர், தமன் இசையமைத்துள்ளார். படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சூட்டிங் எல்லாம் முடிந்த நிலையில் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருந்தனர்.

ஆனால் படத்தில் சில வேலைகள் முடியாததால் நவம்பர் மாதம் 2வது வாரத்திற்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பருவமழை தீவிரமடையத் துவங்கியுள்ளது. இதனால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் இன்றி காற்றாடுகிறது. இதனால் தியேட்டர் அதிபர்கள் புலம்பி வருகின்றனர்.

இப்படி இருக்கையில், ஒஸ்தி படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் தயங்கி வருகின்றனர்.

இதனால் படத்தை மேலும் சில தினங்களுக்கு தள்ளிப்போட்டுள்ளனர். இம்மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் பார்த்திபன் மகள்

மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார். தனது அடுத்த படத்திற்கு நாயகியாக நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவை அவர் தேர்வு செய்துள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேச்சு நிலவுகிறது.

கீர்த்தனா, சினிமா உலகிற்கு ஒன்றும் புதிதல்ல. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவன்-சிம்ரனின் மகளாக நடித்துள்ளார்.

கீர்த்தனாவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்த மணிரத்னம் தற்போது அவரை ஹீரோயினாகவும் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளார்.


மணிரத்னத்தின் இந்த புதிய படத்தில் ஹீரோயின் உறுதி செய்யப்படாத நிலையில் பிற நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

மணிரத்னத்தின் புதிய பட ஹீரோயின் வாய்ப்பு கீர்த்தனாவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குழந்தைகளுக்காக சிகரெட் பிடிப்பதை நிறுத்திய நடிகர்

தனது குழந்தைகளுக்காக சிகரெட் பிடிப்பதை ஹாலிவுட் நடிகர் பிராட்பிட் நிறுத்தியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட்பிட். இவர் நடிகை ஏஞ்சலினா ஜூலியுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்த தம்பதி ஷகாரா, ஷிலோ, மாட்டாஸ் உள்ளிட்ட 7 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றனர். நடிகர் பிராட்பிட்டுக்கு சிகரெட் பிடிப்பதில் அலாதி பிரியம்.

கணக்கின்றி சிகரெட்டுகளை ஊதி தள்ளுவார். இதனால் உடல் நலத்துக்கு கேடு விளையும் என அவரது மனைவி நடிகை ஏஞ்சலினா ஜோலி அறிவுரை கூறி வந்தார்.

ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாத அவர் திடீரென சிகரெட் பிடிப்பதை கை விட்டார். அதற்கு அவரது குழந்தைகள்தான் காரணமாம்.

பிராட்பிட் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதை பார்த்த அவரது குழந்தைகள் ஷகாரா, ஷிலோ ஆகியோர் சிகரெட்டை ஹாயாக ஊதி தள்ளினர்.

இதை பார்த்த பிராட்பிட் மனம் மாறியிருக்கிறார்.

தன்னை பார்த்து தன் குழந்தைகள் இது போன்ற கெட்ட பழக்கத்தை பழகுகின்றனர் என்பதை புரிந்து கொண்ட அவர், சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டாராம்.

ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடுக்கவில்லை - ரிச்சா

ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என்று சிம்பு, ஒருபோதும் என்னிடம் சொன்னது இல்லை, இதெல்லாம் வெறும் வதந்தி தான் என்று நடிகை ரிச்சா கூறியுள்ளார்.

தமிழுக்கு வந்திருக்கும் தெலுங்கு புதுவரவு ரிச்சா கங்கோபாத்தியாயே. இவர் தனுஷ் உடன் "மயக்கம் என்ன", சிம்புவுடன் "ஒஸ்தி" படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாகவில்லை. ஆனாலும் அம்மணிக்கு, தமிழில் ஏகப்பட்ட வரவேற்பு.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ஜீவாவுடன் ஒருபடத்தில் நடிக்க ரிச்சாவுக்கு அழைப்பு வந்ததாகவும், அதில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதம் தெரிவித்து, பின்னர் முடியாது என்று கூறிவிட்டதாகவும், இதற்கு காரணம் சிம்பு தான் ரிச்சாவை, ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் வந்தது. ஆனால் இதனை ரிச்சா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஜீவாவுடன் நடிக்க என்னை யாரும் அழைக்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று என்னை சிம்பு தடுத்ததாக வந்த செய்தி எப்படி உண்மையாக முடியும்.

அதுவெறும் வதந்திதான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரையும் தலையிட விடுவது இல்லை. எனக்கென்று சுயபுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே "கோ" படத்தில் ஜீவா நடித்தது முதலே, ஜீவாவுக்கும்-சிம்புவுக்கும் இடையே மோதல் உண்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் மனைவி மரணம்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

இசைஞானி எனும் பட்டத்தை உடைய இவருக்கு ஜீவா எனும் மனைவியும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

அப்பாவை போல யுவன் சங்கர் ராஜாவும் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். அதேபோல் கார்த்திக்ராஜாவும் சில படங்களுக்கு இசையமைத்தும், பவதாரணி பல பாடல்களையும் பாடியுள்ளார்.

இளையராஜாவின் மனைவி ஜீவாவிற்கு, கடந்த சில நாட்களாகவே வைரஸ் காய்ச்சலும், லேசான நெஞ்சுவலியும் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு நெஞ்சுவலி அதிகமாகவே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் இறந்துவிட்டார். தெலுங்கு படத்தின் இசையமைப்புக்காக இளையராஜா ஐதராபாத் சென்று இருந்தார். தகவல் அறிந்து உடன் அவர் சென்னை திரும்பிவிட்டார். ஏற்கனவே இரண்டு முறை இருதய சிகிச்சை மேற்கொண்ட ஜீவாவுக்கு, இது மூன்றாவது ஹார்ட் அட்டாக் ஆகும்.

மறைந்த ஜீவாவின் உடன் சென்னை டி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் மனைவி ஜீவாவின் மரண செய்தி கேட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின், பஞ்சு அருணாச்சலம், டைரக்டர்கள் வெங்கட்பிரபு, பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, வஸந்த், சந்தானபாரதி, மகேந்திரன், நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, விஷால், நடிகைகள் குஷ்பூ, அபர்ணா, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, ஸ்ரீகாந்த் வேதா, உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே மறைந்த ஜீவாவின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகேயுள்ள பண்ணபுரத்தில் நாளை(02.11.11) அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...