மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

"புதுப்பேட்டை" படத்திற்கு அப்புறம், நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் அண்ணன் செல்வராகவனும், கதாநாயகன் தம்பி தனுஷூம் இணைந்திருக்கும் திரைப்படம் தான் "மயக்கம் என்ன"!

கதைப்படி வெவ்வேறு வேலைகள், லட்சியங்கள் உண்டென்றாலும், 24 மணிநேரமும் ஒன்றா‌கவே இருக்கும் நண்பர்கள் கார்த்திக், சுந்தர், சங்கர், ரம்யா, பத்மினி, மாதேஷ், ரமேஷ் உள்ளிட்டவர்கள்.

ஆண், பெண் இருபாலரும் உண்டென்பதால் இவர்களிடையே சிலருக்குள் காதலும், சிலரிடையே வெறும் சகோதரத்துவமும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பீரும், பிராந்தியுமாக தழைத்தோங்குகிறது.

ஒரு கட்டத்தில் யாமினி எனும் அழகிய யுவதியை சில நாட்கள் பழகி, பின் இருவருக்கும் ஒத்துப்போனால் தன் காதலியாக அடையும் எண்ணத்தில், தங்கள் டீமுக்கு அழைத்து வருகிறார் சுந்தர்.

ஆரம்பத்தில் யாமினியை, அந்த டீமில் சேர்த்து கொள்ள மறுத்து, கலாய்க்கும் டீமின் ஜீனியஸ் என்றழைக்கப்படும் கார்த்திக், பின் யாமினியின் கண் அசைவுகளிலும், காதல் வலையிலும் கவிழ்கிறார். நட்பு தப்பாய் போன வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், நட்பிற்காக காதலை விட்டுக்கொடுக்கும் சுந்தர், கார்த்திக்கின் மாஜி காதலிக்கும், வாழ்க்கை கொடுக்கிறார்


கார்த்திக்கும்-யாமினியும் கல்யாணம் கட்டிக்கொண்டு இல்லறத்தில் இனிமை காண்கின்றனர். சில வருடங்கள் உருண்டோடியதும், இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் சின்னதொரு விபத்து, கார்த்திக்கின் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வர, சிறந்த புகைப்பட கலைஞராக வர துடிக்கும் கார்த்திக், காதல் மனைவியை துன்புறுத்தும் சைக்கோவாக மாறுகிறார்.

கணவரின் சைக்கோ தனங்களை ‌பொறுத்துக் கொண்டு கார்த்திக்கின் மனைவி யாமினியும், சுந்தர் உள்ளிட்ட நண்பர்களும், கார்த்திக்கை உலகத்தின் நம்பர்-1 புகைப்பட கலைஞராக மாற்ற உறுதுணையாக இருப்பதே "மயக்கம் என்ன" படத்தின் மீதிக்கதை!

ஜூனியஸ் கார்த்திக்காக, தனுஷ் மெய்யாலுமே ஜீனியஸாக தன் நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டு நடித்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ். அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மட்டும், தம்பி தனுஷூக்கு ஒரு லுக் வழக்கம் போலவே இப்படத்திலும் கிடைத்திருக்கிறதென்றால் மிகையல்ல! என்னதான் மனநலம் பாதிக்கப்பட்டவர், கோபக்காரர் என்றாலும், ஆத்திரத்தில் மனைவியை தள்ளிவிட்டு, அவரது கரு கலையை காரணமாகும் தனுஷ், விபரம் புரிந்ததும் வருத்தம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்.

அவ்வாறு இல்லாமல் வீட்டில் படிந்திருக்கும் இரத்த கறையை துடைக்க உதவி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

யாமினியாக, நாயகி ரிச்சா கங்கோபாத்தியாயே நச் தேர்வு! கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் என இந்தகாலத்திலும் வாழும் மார்டன் யுவதி! சில இடங்களில் நடிப்பில் தனுஷையே ஓரங்கட்டி விடுகிறார் பலே! பலே!! நாயகன், நாயகி தவிர சுந்தராக வரும் சுந்தர், சங்கராக வரும் மதி, ரம்யா எனும் சோனி, பத்மினியாக-பூஜா பாலு, மாதேஷாக-ரவிபிரகாஷ், ரமேஷாக-ராஜிவ் சவுத்ரி உள்ளிட்டவர்களும் பிரமாதம்!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம்! அதிலும் ஜி.வி.பிரகாஷின் இசையில், தனுஷ் பாடியிருக்கும் "ஓட, ஓட..." பாடலும், "காதல் என் காதல்..." உள்ளிட்ட படத்தின் ஆறு பாடல்களுமே காதிற்கினிய கானங்கள்!

பாடல்கள் அனைத்தையும் எழுதியது போன்றே, படத்தையும் கவித்துமாக எழுதி, இயக்கி இருக்கிறார் செல்வராகவன்! போலித்தனம் இல்லாமல், இன்றைய சமூகத்தை அபட்டமாக படம் பிடித்து காட்டியிருக்கும் செல்வராகவன், அதை இன்னும் சற்றே, விறுவிறுப்பாக சொல்லி இருந்திருந்தார் என்றால் "மயக்கம் என்ன"! தயக்கம் இல்லாமல் "பி" மற்றும் "சி" சென்டர்களையும் கவர்ந்திருக்கும்!

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்... நன்றி நண்பரே!...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...