ரசிகர்களின் ரசனைதான் என்னை உயர்த்துகிறது - கமல்

நடிகர் கமல்ஹாசன் இன்று(07.11.11) 58-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் மூலம் ரத்ததானம், உடல் உறுப்புகள் தானம் மற்றும் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு விடுக்கும் செய்தி என்னவென்று கேட்கிறார்கள். ரசனையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுதான் முக்கியம் உங்களுக்கு நல்ல ரசனை இருக்க வேண்டும். அப்போதுதான் என் தொழில் நல்ல தொழிலாக இருக்கும். உங்கள் ரசனை உயர உயர நானும் உயர்வேன்.

என்னுடைய தனிப்பட்ட கூட்டம் ஒன்றுள்ளது. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், சினிமா, நடிகன், நட்சத்திரம், அந்தஸ்து என்பதெல்லாம் தற்காலிகமானது என்று திண்ணமாக நம்புபவன் நான்.

அதையும் தாண்டி, ஒரு நிலையை நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சின்னமாக, நாம் வாழ்ந்ததற்கான சாயல்களை வடுவாக இல்லாமல் சின்னமாக விட்டுச் செல்ல வேண்டுமானால், அது வரும் சந்ததியினர் - சமுதாயம், நாம் வாழ்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருப்பது போன்றவைதான்.

அதைத்தான் என் சகோதரர்களுக்கு, நானும் கற்றுக் கொண்டு அவர்களுக்கும் கற்றுத் தர முயற்சித்து வருகிறேன்.

முடிந்தவரை என் வாழ்க்கையை அப்படி வாழ்வதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களையும் ஈடுபடுத்துகிறேன். இதான் நான் என் ரசிகர்களுக்கு சொல்லுவது. நானும் என் ரசிகன்தான்.

என்னுடைய கடுமையான விமர்சகனும்கூட. அப்படித்தான் நீங்களும் இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை நான் நடிகன், கலைஞன். மலர் போன்றவன். அதனால் அதை எப்படிப் பாதுகாக்கணுமோ அப்படி பாதுகாத்துக் கொள்வேன்.

விமர்சனங்களை மெலிதாகச் சொல்லி, வாடிவிடாமல் இருக்க அவ்வப்போது பாராட்டு தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க வேண்டும். அதைத்தான் நானும் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...