நான் நிஜவாழ்வில் நடிக்காதவன் - கமல்ஹாசன்

சினிமாவில் தான் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நான் நடிக்காதவன் என்று, பேராசிரியர்.ஞானசம்பந்தனின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தமின் "இலக்கியச் சாரல்", "ஜெயிக்கப்போவது நீதான்", "மேடைப் பயணங்கள்", "சந்தித்ததும் சிந்தித்ததும்", "சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்" ஆகிய 5 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது, நானும், ஞானசம்பந்தமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் ஞானசம்பந்தம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதில் இருந்து நண்பர்களாகிவிட்ட நாங்கள் அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் பேசுவோம்.

சந்திக்க முடியவில்லை என்றால் தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு பேசுவோம். சொல்லப்போனால், நான் ஒரு வகையில் சுயநலவாதியும் கூட. எனக்கும் ஒரு சுயநலம் உண்டு. கற்றறிந்தவர்கள், ஞானம் உள்ளவர்களுடன் பேசிப் பழகி அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சுயநலம். நானும், ஞானசம்பந்தமும் பல ஆண்டுகளாக நண்பர்கள்.

அவரிடம் நான் பல அறிவுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.


ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி கையை ஆட்டாமலேயே அனைவரையும் சிரிக்கை வைப்பார். நாகேஷோ தன் பாடி லாங்குவேஜால் அனைவரையும் சிரிக்க வைப்பார்.

அதுபோல, ஞானசம்பந்தமுக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி. அவருடைய நகைச்சுவை இயல்பாக இருக்கும். தான் அறிந்த விஷயங்களை, புலமையை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இயல்பான நகைச்சுவையில் தெரிவித்துவிடுவார்.

இந்த புத்தகங்களிலும் அந்த எளிமை உள்ளது. அதனால் இவை நிச்சயம் மக்களைச் சென்றடையும்.

நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து நாடக மேதை டி.கே.எஸ்.சண்முகத்திடம் பல முறை கேட்டிருக்கிறேன். அது தெரிந்தால் நீ பெரிய நடிகனாகிவிடுவாய் என்று கூறிய அவர் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்துள்ளார்.

பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காததால் தான் நான் இன்னும் என்னை ஒரு மாணவனாகவே கருதி பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். பள்ளிப் படிப்பை முடித்திருந்தால் இந்த கற்கும் ஆர்வம் இருந்திருக்குமோ, இல்லையோ? ஆத்திகம், நாத்திகம் பேசுவர்களிடம் நான் பேசியிருக்கிறேன்.

அவ்வாறு பேசும்போது எனக்குத் தேவையான விஷயங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். நான் சினிமாவில் கடவுள் பக்தன், குள்ளன் போன்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நடித்ததில்லை.

இவ்வாறு கமல் பேசினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...