இளையராஜாவின் மனைவி மரணம்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

இசைஞானி எனும் பட்டத்தை உடைய இவருக்கு ஜீவா எனும் மனைவியும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

அப்பாவை போல யுவன் சங்கர் ராஜாவும் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். அதேபோல் கார்த்திக்ராஜாவும் சில படங்களுக்கு இசையமைத்தும், பவதாரணி பல பாடல்களையும் பாடியுள்ளார்.

இளையராஜாவின் மனைவி ஜீவாவிற்கு, கடந்த சில நாட்களாகவே வைரஸ் காய்ச்சலும், லேசான நெஞ்சுவலியும் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு நெஞ்சுவலி அதிகமாகவே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் இறந்துவிட்டார். தெலுங்கு படத்தின் இசையமைப்புக்காக இளையராஜா ஐதராபாத் சென்று இருந்தார். தகவல் அறிந்து உடன் அவர் சென்னை திரும்பிவிட்டார். ஏற்கனவே இரண்டு முறை இருதய சிகிச்சை மேற்கொண்ட ஜீவாவுக்கு, இது மூன்றாவது ஹார்ட் அட்டாக் ஆகும்.

மறைந்த ஜீவாவின் உடன் சென்னை டி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் மனைவி ஜீவாவின் மரண செய்தி கேட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின், பஞ்சு அருணாச்சலம், டைரக்டர்கள் வெங்கட்பிரபு, பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, வஸந்த், சந்தானபாரதி, மகேந்திரன், நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, விஷால், நடிகைகள் குஷ்பூ, அபர்ணா, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, ஸ்ரீகாந்த் வேதா, உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே மறைந்த ஜீவாவின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகேயுள்ள பண்ணபுரத்தில் நாளை(02.11.11) அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...