சுப்ரமணியபுரம் ஸ்வாதியின் பரிதாபம்

பொதுவாக சினிமாவில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சில பேர் தான் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் ஒன்றிரண்டு படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். அதேநிலைமை தான் நடிகை ஸ்வாதியின் நிலை.

"சுப்ரமணியபுரம்" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்வாதி. மலையாளத்தை சேர்ந்த ஸ்வாதி அங்கு ஒரு டி.வி. ஷோவில் ஏதோ நிகழ்ச்சி நடத்தி வந்தார். அதை பார்த்த டைரக்டர் சசிக்குமார் "சுப்ரமணியபுரம்" படத்தில் நடிக்க வைத்தார்.

முதல்படத்திலேயே தன்னுடைய அழகிய கண்களால் ரசிகர்களை ஈர்த்தவர் ஸ்வாதி. சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் வந்தன.

ஆனால் அம்மணியோ நல்ல கதை, முன்னணி நடிகர்ளுடன் நடிப்பது, நிறைய சம்பளம் என்று ‌ஏகப்பட்ட கண்டிஷன் போட்டார்.

அதன் விளைவு அம்மணிக்கு ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மலையாளத்தில் டி.வி. நிகழ்ச்சியே பண்ண தொடங்கிவிட்டாராம்.

பாவம் ஸ்வாதி! உண்மையில் அவரது நிலைமை பரிதாபம் தான்!

3 இடியட்ஸ் - சூர்யா நடிக்கவில்லை

வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படம், `3 இடியட்ஸ்.' இந்த படத்தில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.

இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். படத்துக்கு, `மூவர்' என்று பெயர் சூட்டலாமா? என்று யோசித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார்.

பின்னர், விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்கு பதில், சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் `3 இடியட்ஸ்' படத்தின் கதாநாயகன் யார்? என்ற குழப்பம் தீர்ந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார்.

படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார்.

படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே `3 இடியட்ஸ்' படத்தின் கதை!

கமலுடன் இணையும் செல்வராகவன்

மன்மதன் அம்பு" படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இதனால் தலைவன் இருக்கிறான் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால் அவையாவும் உண்மையில்லை. செல்வா, தனது தம்பி தனுஷை வைத்து "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே கமலை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து கமல் இயக்க இருந்த "தலைவன் இருக்கிறான்" படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தபடத்திற்கான கதையை எழுதி கமலிடம் ‌‌கொடுத்ததாகவும், கமல் அதை படித்து பார்த்து, கமல்
ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இதற்கான அறிவிப்பை கமல் வெளியிடுவார் எனத் தெரிகிறது.

ஏப்ரலில் பில்லா 2 - அஜித் ஜோடி அனுஷ்கா

பில்லா 2 படத்தின் சூட்டிங் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த பில்லா ரீ-மேக் படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அஜித்தின் அதிரடி நடிப்பும், நயன்தாரா - நமீதாவின் கவர்ச்சியும், ஒளிப்பதிவும் படத்திற்கு வெற்றியை தேடித் தந்தது.

பில்லா வெற்றிக்கு பிறகு பில்லா பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அஜி்த அடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் பில்லா 2 தள்ளிப்போனது. இந்நிலையில் இப்போது மீண்டும் பில்லா பற்றிய பேச்சு எழுந்துள்ளது.

டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏப்ரல் மாதம் பில்லா 2 படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அஜித் ஜோடியாக நடிக‌ை அனுஷ்கா நடிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே பில்லா தெலுங்கு பதிப்பில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருது: இரு பிரிவுகளில் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் பரிந்துரை

இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இரு பிரிவுகளில் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

83-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா பிப்.27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் பின்னணி இசை மற்றும் பாடல் பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இடம்பெற்றிருக்கிறது. "127 ஹவர்ஸ்" படத்துக்கு இசையமைத்ததற்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.


2009-ம் ஆண்டில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இரு ஆஸ்கார் விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.


இந்த ஆண்டின் சிறந்த படங்களுக்கான பட்டியலில் பிளாஸ் ஸ்வான், தி ஃபைட்டர், இன்செப்சன், தி கிட்ஸ் ஆர் ஆல்ரைட், தி கிங்ஸ் ஸ்பீச், 127 ஹவர்ஸ், தி சோஷியல் நெட்வொர்க், தி சோஷியல் நெட்வொர்க், டாய் ஸ்டோரி 3, ட்ரூ கிரிட், விண்டர்ஸ் போன் ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கின்றன

சிம்புவுக்கு திடீர் ஆபரேஷன்

"வானம்" பட சூட்டிங்கின் போது நடிகர் சிம்புவுக்கு காலில் அடிபட்டதால் அவருக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது.


இந்த ஆண்டு கைநிறைய படங்கள் வைத்துள்ள சிம்பு தற்போது வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தை காதலர் தினம் அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.


அதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூட்டிங்கின் போது சிம்புக்கு காலில் ஆணி பாய்ந்தது.


அந்த வலியுடன் நடித்து வந்தார் சிம்பு. வலி அதிகரிக்க மருத்துவரிடம் அனுகினார். டாக்டரோ ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஓரிரு நாளில் சிம்புவுக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது.


ஆபரேஷன் செய்த பின்னர் இரண்டு வாரம் ரெஸ்ட் எடுக்க டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து சிம்புவின் அனைத்து சூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


சூட்டிங் ரத்தாவதால் வானம் படத்தின் ரிலீஸ் தள்ளிபோகலாம் என்று கூறப்படுகிறது.

மன்மதன் அம்பு சுமாரான படம்தான் : மாதவன்

மன்மதன் அம்பு படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை ; அது சுமாரான படம்தான் என்று நடிகர் மாத‌வன் கூறியுள்ளார்.

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா உள்ளிட்டோர் நடித்த படம் மன்மதன் அம்பு. ரெட்ஜெயண்‌ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார்.

இந்த படம் ரீலிசுக்கு முன்பே கமல்ஹாசனின் கவிதைப் பாடல் மூலம் சர்ச்சையை சந்தித்தது. பின்னர் அந்த கவிதைப் பாடல் நீக்கப்பட்டது.

பல‌கோடி செலவில் வெளிநாட்டு கப்பலில் படமாக்கப்பட்ட மன்மதன் அம்பு எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை என்று அப்படத்தின் நாயகர்களில் ஒருவரான நடிகர் மாதவன் இப்போது தெரிவித்துள்ளார்.


அவர் தனது பேட்டியொன்றில், சில நேரங்களில் எல்லாம் சரியாக செய்தாலும் ஏதோ ஒரு தவறால் தோல்வி ஏற்பட்டு விடும். மன்மதன் அம்பிலும் அதுதான் நடந்தது.

பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம் சாதிக்காது என்பது தெரியும். இது ஒரு சுமாரான படம். ஓரளவு வசூல் இருந்தது என்பதே உண்மை.

இந்தப் படத்தில் எனது வேடம் மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான், என்று கூறியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சக்திகள்

சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் அரசியலுக்கு வருவதை சில சக்திகள் தடுக்கின்றன.

அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்பமோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :


விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை.

அதனால் தடுக்க வழி தேடுகிறார்கள். அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம்.

ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை. பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.


எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்? விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி.


இவ்வாறு சந்திரசேகர் கூறினார். விஜய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. சந்திரசேகர் சொல்வதைப் பார்த்தால் இன்னும் 3 வருடங்களுக்கு பிறகுதான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் போலிருக்கிறது.

மீண்டும் ஒரு காதலுக்கு மரியாதை

டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் அழகர் சாமியின் குதிரை. வெண்ணிலா கபடிக்குழு மூலம் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன், நான் மகான் அல்ல படத்தைத் தொடர்ந்து அழகர் சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார்.


வெண்ணிலா கபடிக்குழுவில் க்ளைமாக்ஸ் சரியில்லை; நான் மகான் அல்ல படத்தில் வன்முறை காட்சிள் அதிகம் ‌ஆகிய விமர்சனங்களை சந்தித்த டைரக்டர் சுசீந்திரன், தனது அழகர்சாமியின் குதிரை படத்தில் இதுபோல விமர்சனங்களுக்கு வாய்ப்பே இருக்காது என்கிறார்.


தனது புதிய படம் குறித்து அவர் கூறுகையில், எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அழகர்சாமியின் குதிரை இருக்கும் என நம்புகிறேன். முன்பாதி நகைச்சுவை, பின் பாதி உணர்ச்சிகளை காட்டும் வகையிலும் காட்சிகள் அமைந்துள்ளன.


வெண்ணிலா கபடிக்குழுவில் நடித்த அபு்பு, சரண்யா மோகன் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர 60 புதுமுகங்களையும் நடிக்க வைத்துள்ளோம். இளையராஜா இசையில் காதலுக்கு மரியாதை படப் பாடல்கள் போல பாடல்கள் அருமையாக வந்துள்ளன.


பொம்மிநாயக்கன்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கியுள்ளோம். குதிரை மீது கேமராக்களை ஏற்றி பல காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.


இந்த மாதிரி படம் மறுபடியும் கிடைக்குமா என்பது தெரியாது. இப்படத்தை இயக்கியதில் மகிழ்ச்சியடைகிறேன், என்றார்.


அழகர்சாமியின் குதிரை படம் ஏப்ரல் மாத விடுமுறையில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அடுத்தடுத்து பட இயக்கத்தில் பிஸியாக இருக்கும் சுசீந்திரன் விரைவில் அப்பா ஆகப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.

சிறுத்தை - விமர்சனம்

பருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை ‌‌வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல்.

(இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)!


திருட்டையே தொழிலாக கொண்டவர் ஒரு கார்த்தி. அவர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கொண்டு வரும் ‌‌பெட்டியை நிறைய நகையும், பணமும் இருக்குமென்ற எண்ணத்தில் களவாடுகிறார். ஆனால் அதை திறந்தால் உள்ளே ஒரு அழகிய குழந்தை. திருட்டு ராஜாவான கார்த்தியை அந்த குழந்தை அப்பா என அழைக்க., கார்த்திக்கு தூக்கி வாரிப்போடுகிறது.

அப்புறம்? அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அதை வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி!.


குழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட! ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா?

போலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா? குழந்‌தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார்? தமன்னா - திருட்டு கார்த்தி இடையே காதல் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தெலுங்கு படங்களின் பாணியில் திகட்ட திகட்ட விடையளிக்கிறது மீதிக்கதை!


சகல திருட்டுக்ளிலும் கைதேர்ந்தவராக வரும் திருட்டு ராஜா கார்த்தியும் சரி, பிளாஷ் பேக்கில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டும் கார்த்தியும் சரி... நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர். அதிலும் திருட்டு ‌கார்த்தி, போலீஸ் கார்த்தியை பல இடங்களில் ஓவர்டேக் செய்து தியேட்டரை அதிர வைக்கிறார் என்றால் மிகையல்ல.

சந்தானத்துடன் பண்ணும் காமெடியில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகிறார் அவர். வாழ்க்கையில் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன்... இப்படி மெடிக்கல் ஷாப்பில் திருட ‌வச்சிட்டியேடா... என கார்த்தியிடம் சந்தானம் பண்ணும் அலப்பறையும், ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே... அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா? என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ்! தியேட்டரே சிரிப்பில் குளோஸ்!!


தமன்னா, கார்த்திக்கு ‌பொருத்தமான ஜோடி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதல் பண்ணும் காட்சிகள் செம கலகலப்பு!


ஆந்திர கிராமம், மூன்று தாதா... அடிமை கிராமம் என போலீஸ் கார்த்திக்காக விரியும் பிளாஷ் பேக்கும், போலீஸ் அதிகாரியை தீர்த்துக் கட்டும் ஆந்திர ரவுடிகள், திருடன் கார்த்தியிடம் மண்ணை கவ்வுவதும் தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே.! தமிழுக்கு?!


வித்யாசாகரின் வித்தியாச இசை, க.வேல்ராஜின் பிரமாண்ட பளிச் ஒளிப்பதிவு என ஆயிரம் வசதிகள் இருந்தும் சிவாவின் இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாததால் தை முதல்நாளில் வெளிவந்திருக்கும் சிறுத்தை கவரவில்லை கருத்தை!

நயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்

பிரபுதேவாவை திருமணம் செய்யவிருக்கும் நயன்தாரா விவகாரத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவரது முன்னாள் காதலன் சிம்பு - இன்னாள் காதலன் பிரபுதேவா இடையே மோதல் வெடித்துள்ளது.


வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக ஹோட்டலில் அறை எடுத்து தங்கும் அளவுக்கு ‌மிக நெருக்கமாக பழகினார்கள்.

இந்நிலையில் சிம்பு விதித்த சில நிபந்தனைகளை நயன்தாரா ஏற்க மறுத்ததால் அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. அதே நேரம் சிம்புவும், நயன்தாராம் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட முத்தம் கொடுப்பது போன்ற ஸ்டில்கள் உள்ளிட்ட மிக நெருக்கமான ஸ்டில்கள் வெளியாயின.

அதை பார்த்து டென்ஷன் ஆன நயன்தாரா, சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகி இருக்க விரும்புவதாக கூறி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.


அதன் பின்னர்தான் பிரபுதேவா இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாகி கசிந்துருகியது. இருவரும் பொதுவிழாக்களில் ஜோடியாக பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவது என கள்ளக்காதல் தொடர்ந்தது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு தெரியவர... பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா.

இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே ‌தொடங்கி விட்டன.


இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தனக்கும், நயன்தாராவுக்கும் இடை‌யயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தன் நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.

இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகி போன பிரபுதேவா, சிம்புவை அழைத்து எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிமேல் நயன்தாரா பற்றி பேச வேண்டாம் என்றும் முடிஞ்சது முடிஞ்சுப்போச்சு...

நீ ஒண்ணும் வாய் திறக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறாராம் நடனப்புயல். சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

கோல்டன் குளோப் விருதை தவறவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டாவது முறையாக ‌கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மயிரிழையில் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.


டைரக்டர் டேனி போயல் இயக்கத்தில் உருவாகியுள்ள 127 ஹவர்ஸ் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருது மற்றும், கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்தன.


அதேபோல் இந்தாண்டும் 127 ஹவர்ஸ் படமும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஹ்மானுக்கு இந்த விருது கிடைக்கவில்லை. அதற்குபதிலாக சோஷியல் நெட்வொர்க் என்ற படத்திற்கு கிடைத்தது.


இரண்டாவது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.


இருப்பினும் 127 ஹவர்ஸ் படத்தில் இடம்பெற்ற இப் ஐ ரைஸ் என்ற பாடலுக்கு அமெரிக்காவின் கிரிடிக் சாய்ஸ் எனப்படும் விமர்சகர்கள் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தான்.

காவலன் படத்துக்கு போலி டிக்கெட் அச்சடிப்பு

காவலன் படத்துக்கு போலி ரசிகர்கள் ஷோ டிக்கெட் அச்சடிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் அசின் நடித்த காவலன் படம் 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகிறது. திருச்சியில் கலையரங்கம், மெகா ஸ்டார், திருவானைக்காவல் வெங்கடேஷ்வரா ஆகிய தியேட்டர்களில் ரீலிஸ் ஆகிறது.

காவலன், படம் ரீலிஸ் ஆவதையொட்டி திருச்சி தியேட்டர்கள் முன்பு திருச்சி மாவட்ட தலைவர் ராஜா, திருச்சி மாவட்ட விஜய் நற்பணி மன்ற இளைஞரணி தலைவர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நடிகர் விஜய் ரசிகர்கள், பேனர்கள், தோரணங்கள் கட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும், விஜய் படம் ரிலீஸ் ஆகும் போதும் விஜய் ரசிகர்களுக்கு என ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுக்கள் விநியோகிக்கப்படும். இதற்காக தியேட்டர் உரிமையாளர் அனுமதி பெற்ற டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படவது வழக்கம்.

அந்த டிக்கெட்டுகள், ரசிகர்களுக்கு வழங்கப்படும். இதற்கான மொத்த தொகையை தியேட்டர்காரர்களுக்கு ரசிகர்மன்றத்தினர் செலுத்தி விடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று திருச்சியில் ஒரு அச்சகத்தில் விஜய் ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை சிலர் ரசிகர் மன்ற அனுமதியின்றி தியேட்டர்காரர்கள் அனுமதியின்றி, அச்சடிக்கப்படுவதாக புகார் வந்தது. இதை விஜய் ரசிகர்கள் தியேட்டர் மேலாளரிடம் தெரிவித்தனர்.

போலி டிக்கெட்டுகள், விநியோகிக்கப்பட்டால் ரசிகர்கள் ஷோவில் குழப்பம் ஏற்படும் என்பதால் இது குறித்து தியேட்டர் நிர்வாகம் ரசிகர்கள் மன்றம் சார்பில் கண்டோன்மெண்டு உதவி கமிஷனர், காந்தியிடம் புகார் கொடுக்கப்பட்டது.

டிக்கெட் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் விசாரித்த போது கோவை, பல்லடம், முகவரி, செல்போன் நெம்பர்களை அந்த நபர் கொடுத்து சென்றாராம்.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவலன் வெறும் படம் மட்டுமல்ல

பொங்கலுங்கு ரிலீசாகும் படங்களில் காவலன் படமும் ஒன்று, ஆனால் காவலன் படத்த்தை வெளியிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.


டைரக்டர் சித்திக் இயக்கத்தில் விஜய்-அசின் நடித்துள்ள படம் காவலன். இப்படத்தை ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிடுகிறார். காவலன் படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. டிசம்பர் மாதமே காவலன் பட வெளியாக இருந்தது.

ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது பொங்கலும் வந்துவிட்டது. ஆனால் பிரச்சனை தீர்ந்த பாடில்ல‌ை. நடிகர் விஜய்க்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையிலான பிரச்னை, இப்போது திசை மாறி தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையேயான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வருவ‌தை பார்த்து கொதிப்படைந்த விஜய் நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். இதுவெறும் படம் மட்டுமல்ல என்னுடைய பிரஸ்டீஜ் என்று ஓப்பனாக பேசிவிட்டார். எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்று அதிரடியாக கூறிவிட்டார்.

அதன் விளைவு, படத்தை அவரே நேரடியாக வெளியிட இருக்கிறார். ஷக்தி சிதம்பரத்திற்கு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து படத்தை வாங்கி விஜய்யும், பிரபல பைனான்ஸியர் ஒருவரும் சேர்ந்து வெளியிட இருக்கின்றனர்.


இதனையடுத்து காவலன் படம் இந்த பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீசாக உள்ளது. படத்தை நாளை வெளியிடாமல் பொங்கல் அன்று (15ம் தேதி) வெளியிடுகின்றனர்.

தமிழில் மீண்டும் திலகன்

மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், கேரளாவில் மேடை நாடகங்களில் நடித்து வரும் திலகன். தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்க வருகிறார்.


மலையாளத்தில் பிரபல நடிகர் திலகன். வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற திலகன், மலையாள திரைப்படத்துறை சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் அவர் மலையாள திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மேடை நாடகங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார்.


"உயிரின் எடை 21 அயிரி" என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்தபடத்தை கதை, திரைக்கதை, இசை, இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று ஹீரோவாகவும் நடிக்கிறார் இ.எல்.இந்திரஜித்.


படம்குறித்து இந்திரஜித் கூறியதாவது: "1908ல் டாக்டர் டங்கன் மெக்கடஹல் என்பவர் உயிரின் எடை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ச்சி செய்தார். இறப்பிற்கு பின்னர் மனித எடையில் இருந்து 21கிராம் குறைவதாக நிரூபித்தார்.

அதுவே உயிரின் எடை, இதை படத்தின் கதையுடன் சேர்த்து இருக்கிறேன். படத்தில் தாதவாக திலகன் நடிக்கிறார். அவருடைய அடியாளாக நான் நடிக்கிறேன்.


புதுமுகம் வினிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் கதை என்னைச்சு‌ற்றியே நகரும். வழக்கமான படங்களை போல் இல்லாமல் இந்தபடம் சற்று வித்தியாசமாக இருக்கும்" என்றார்

பொங்கலுக்கு 6 படங்கள் ரிலீஸ்

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 15-ந்தேதி ஆறு புதுப்படங்கள் ரிலீசாகின்றன.

“காவலன்”, “ஆடுகளம்”, “சிறுத்தை”, “இளைஞன்” ஆகிய பெரிய பட்ஜெட் படங்களும் “சொல்லித்தரவா”, “கறுத்த கண்ணன் ரேக்ளாரேஸ்” ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் பொங்கலுக்கு வருகிறது.

“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்துள்ளனர். சித்திக் இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெளியான “பாடிகார்ட்” படத்தின் ரீமேக்கே இப்படம்.

“ஆடுகளம்” படத்தில் தனுஷ் கோழி வளர்த்து போட்டிக்கு விடும் கேரக்டரில் வருகிறார். இதனால் அவருக்கும் எதிர் கோஷ்டிக்கும் நடக்கும் சண்டை சச்சரவுகளே படத்தின் கதை. நாயகியாக டாப்சி வருகிறார். வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இவர் தனுசின் முந்தைய படமான “பொல்லாதவன்” படத்தை டைரக்டு செய்தவர்.

“சிறுத்தை” படத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ளார். போலீஸ் அதிகாரி, பிக்பாக்கெட் திருடன் என இரு வேடத்தில் கார்த்திக் நடித்துள்ளார்.

“இளைஞன்” படம் கலைஞர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ளது. கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரு இளைஞன் பற்றிய கதையே இப்படம்.

காவலன் - படம் பி‌டிக்கலன்னா பணம் வாபஸ்

நடிகர் விஜய்க்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையிலான பிரச்னை இப்போது திசை மாறி தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையேயான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

பொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆகவிருக்கும் காவலன் படத்தினை வெளியிடுவதற்கு தியேட்டர் தியேட்டர் அதிபர்கள் சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். விஜய் நடித்த சுறா படம் ‌தோல்வி அடைந்ததால், அதனால் ஏற்பட்ட நஷ்‌டத்தை ஈடு செய்தால்தான் காவலனை திரையிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் விநியோகஸ்தர்கள் சங்கம் களமிறங்கியிருக்கிறது.


இதுதொடர்பாக விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், செயலாளர் மதுரை செல்வின் ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :


தமிழ் திரைப்பட தொழிலில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விதமாக திருச்சியில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கொடுத்த அறிக்கையை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தொழில் என்றால் நஷ்டமும் உண்டு. லாபமும் உண்டு. யாரையும் கட்டாயப்படுத்தி பொருளை விற்க முடியாது.

அப்படி விற்றால் அது வியாபாரமாகாது. இஷ்டப்பட்டுத்தான் வியாபாரங்கள் நடக்கின்றன. லாபம் எனக்கு. நஷ்டம் உனக்கு என்று கோரிக்கை வைப்பது தொழில் அடிப்படையை தகர்க்கும் செயல்.


தயாரிப்பாளர்கள் படத்தை எம்.ஜி. முறையிலோ அவுட்ரேட் முறையிலோ வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்க முடியாது. விநியோகஸ்தர்களும் அதே முறையில் வாங்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது இல்லை.

நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கேட்பதுபோல் ரசிகர்களும் படம் பிடிக்கவில்லை என பணத்தை திருப்பிக்கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா?

காவலன் திரைப்படம் வாயிலாக எங்கள் விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு எதிரான முரண்பாடான அறிக்கை கொடுப்பதை இனியும் நாங்கள் பொறுக்க முடியாது.

திரைப்பட புகைவண்டி தடம் புரளாமல் ஓட துணை புரிய வேண்டுமேயின்றி தடம் புரள காரணமாக இருக்கக்கூடாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அஜீத்-விஜய் சந்திப்பு

எப்போதும் வெளியில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தலயும், தளபதியும் கூடிக் குலவி நட்பு பாராட்டி வருகின்றனர்.


இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரம் ஒன்றும் சரியாக இல்லை. பற்றாக்குறைக்கு அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவை.


அதற்காக அஜீத்தும், விஜய்யும் படுபிஸியாக நடித்து வருகின்றனர். அஜீத் மங்காத்தா சூட்டிங்கிலும், விஜய் வேலாயுதம் சூட்டிங்கிலும் பிஸியாக இருக்கின்றனர்.


இருவரது படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையின்போது, திடீரென்று அஜீத்தும், விஜய்யும் சந்தித்துக் கொண்டனர்.


இருவரும் அவர்களது படம்குறித்து விசாரித்துக் கொண்டனர். இவர்களுடன் மங்காத்தா பட இயக்குநர் வெங்கட்பிரபுவும் உடனிருந்தார்.

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு

காவலன் படத்தினை பார்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் கண் கலங்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர் கிடைக்காத கவலையில் இருக்கும் தயாரிப்பு தரப்பிற்கு இந்த செய்தி சற்று மன ஆறுதலைக் கொடுத்திருக்கிறது.

விஜய் - அசின் நடிப்பில் சித்திக் இயக்கியிருக்கும் காவலன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை குறைந்தது 600 தியேட்டர்களிலாவது திரையிட வேண்டும் என்பது தயாரிப்பாளரின் ஆசை.

ஆனால் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் முன்கூட்டியே தியேட்டர்களை புக் செய்து விட்டதால் இதுவரை 100 தியேட்டர்கள்தான் உறுதியாகி இருக்கிறது.

மேலும் 100 தியேட்டர்களுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் ரொம்பவே டென்ஷனாக இருக்கும் படக்குழுவினர் காவலனை சென்சார் போர்டுக்கு அனுப்பினார்கள்.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு ‌கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது.

க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்.

அஜீத், சிம்பு, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா - புத்தாண்டு விருந்துகள்

நடிகர், நடிகைகள் நட்சத்திர ஓட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு பண்டிகையை தடபுடலாக கொண்டாடிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் பிரியதர்ஷன் மனைவி லிசியுடன் கடற்கரை ஓரம் உள்ள புது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

ரம்யாகிருஷ்ணன், நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் புத்தாண்டு விருந்து கொடுத்தார். இந்த விருந்து விடிய விடிய நடந்ததாம். திரிஷா, ஜெகபதிபாபு, அர்ஜூன், சோனியா அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

மணிரத்னமும் சுகாசினியும் நட்சத்திர ஓட்டலில் பெரிய விருந்து அளித்தனர். இதில் மலையாள நடிகர் மோகன்லால் பங்கேற்றார். வால்மீகி நகரில் உள்ள அஜீத் வீட்டில் நடந்த விருந்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் “மங்காத்தா” படக்குழுவினரும் பங்கேற்றனர்.

ஸ்ரேயாவும் ரீமாசென்னும் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினர். விஜய் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொட்டிவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் புத்தாண்டை கொண்டாடினார். ஆர்யாவும் விஷாலும் தேனியில் படப்பிடிப்புக்காக தங்கி இருந்த ஓட்டலில் கொண்டாடினர்.

பிரகாஷ்ராஜ் மனைவி போனிவர்மாவுடன் மகாபலிபுரத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்து புத்தாண்டை கொண்டாடினார். அங்கு நடந்த விருந்துக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து இருந்தனர்.

மும்பையில் தமன்னாவும் ஹன்சிகாவும் ஓட்டலில் நெருங்கியவர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடினர்.
Related Posts Plugin for WordPress, Blogger...